இந்தியாவில் பழங்குடி மக்களின் போராட்டத்திலிருந்து ஐரோப்பிய மக்களின் போராட்டங்கள் ஈறாக பிலிப்பைன்ஸ் மக்களின் போராட்டங்கள் வரை தமது சொந்த பலத்தில் தங்கி வெற்றியின் பாதையை வகுத்துக்கொண்டார்கள். சர்வதேசத்தைப் பிடித்து தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளைக் குறுக்கு வழிகளில் வென்றெடுத்துத் தருவதாக மக்களை ஏமாற்றும் வாக்குப் பொறுக்கிகள் கூட்டம் தமது பிழைப்பை முடுக்கிவிட்டுள்ள அதே வேளை ‘சரவதேசம்’ என்பது மைத்திரிபால மற்றும் ரனில் போன்ற பேரினவாதிகளின் அரசை நம்புமாறு மிரட்டுகிறது.
வாக்குப் பொறுக்கும் கூட்டம் தமது ஏமாற்று வேலைகளை ஆரம்பித்த வேளை கொழும்பில் ஒரு நிகழ்வு எதிர்கால அரசியலின் குறியீடாக அமைந்தது.
ஜூன் மாத ஆரம்பத்தில், மங்கள சமரவீர மற்றும் ரனில் விக்ரமசிங்க உட்பட பல ‘புள்ளிகள்’ புடைசூழ பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றதாக இலங்கை மேட்டுக்குடிகளின் சஞ்சிகையான HI magazine செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
பிறந்த நாள் கொண்டாடியவர் வேறு யாருமல்ல. பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவா(நிர்ஜ் தேவா என அறியப்பட்டவர்). சுன்னாகத்தில் கழிவு எண்ணையைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்து அதன் நச்சுக் கழிவுகளை மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றிய எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்க்ளின் இயக்குனர்.
முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற மிகப்பெரும் அழிவு சுன்னாகம் அனல் மின்னிலையத்திலேயே ஆரம்பித்தது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நச்சுக் கழிவுகள் திருநெல்வேலி, உடுவில், தெல்லிபளை, ஊரெழு போன்ற அனைத்துப் பகுதிகளின் நிரையும் நிலத்தையும் நச்சாக்கிவிட்டது.
வளம் கொழிக்கும் விவசாய மண்ணும், நிலக்கீழ் குடி நீரும் மக்கள் பாவனைக்கு ஒவ்வாததாக மாற்றப்பட்டுள்ளது.
போர்க்குற்றவாளிகளைத் தூக்கில் போடப்போவதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் போலித் தேசிய வாதிகள் இந்த அழிப்புக் குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை. சுன்னாகம் நஞ்சு மண்ணில் நடந்து சென்று வாக்குக் கேட்கும் இவர்களே கடந்த கால அழிவுகளதும் பொறுப்பாளிகள்.
தமிழ்ப் பேசும் மக்களின் போராடத்தைக் காட்டிக்கொடுத்து அழித்தவர்கள், இன்றும் அழிப்பிற்குத் துணை போகிறார்கள். தேர்தலில் சுய நிர்ணைய உரிமையைக் கேட்பதாகக் கூறும் இந்த வாக்குப் பொறுக்கிகள் சுன்னாகத்தில் நடைபெறும் அழிப்பிற்குத் துணை போகிறார்கள்.
ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வருமானத்தின் மூலங்களைத் தெரிவிக்க வேண்டும். நிரஞ்சன் தேவா தனக்கு 5 ஆயிரம் பவுண்ஸ்கள் சுன்னாகம் அனல் மின் நிலையத்தை நடத்தும் நிறுவனத்திலிருந்து கிடைப்பதாக எழுத்தில் அறிவித்துள்ளார்.
சுன்னாகம் பகுதியைச் சார்ந்த மக்கள் நிரஞ்சன் தேவா போன்ற சுற்றாடல் கிரிமினல்களால் மட்டுமல்ல, போலித் தேசியவாதிகளாலும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.