All posts by இனியொரு...

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ஆரம்பித்துவிட்டது!

உலகின் மிகப்பெரும் மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களாக அல் கயிதா போன்ற ஜிகாத் அமைப்புக்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட்டாலும், உலகின் மிகப்பெரும் பயங்கரவாத மத அடிப்படைவாத இயக்கம் ராஷ்தியா சுயம் சேவக் சங் (RSS) என்ற அமைப்பே. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கைலும் ஐரோப்பிய நாடுகளிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் ஆ.எஸ்.எஸ் இந்தியாவில் நான்குமுறை தடைசெய்யப்பட்டது.

ஐரோப்பிய பாசிச அமைப்புக்களால் கவரப்பட்டு 1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஹிட்லர். முசோலீனி போன்ற மனிதக் கொலையாளிகளை பின்பற்றுவதாக தனது அரசியல் திட்ட முன்மொழிவிலேயே கூறும் ஆர்.எஸ்.எஸ் இந்திய மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரதும் எதிரி.

இந்தியா முழுவதும் தனது பயங்கரவாதப் பயிற்சி முகம்களை நடத்திவந்த ஆர்.எஸ்.எஸ் இன் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரே இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஆளும் பாரதீய ஜனதா கட்சியைத் தனது முன் முகமாகப் பயன்படுத்திவந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, 1985 ஆம் ஆண்டு தனது ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான நன்கு பயிற்றப்பட்ட நரேந்திர மோடியை பாரதீய ஜனதாவிற்கு அனுப்பிவைத்தது. பார்பனீய இந்துத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் முன்முகமாக பாரதீய ஜனதாவும் செயற்படுகின்றன.

இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதப் பயிற்சி முகம்களைக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று உலகின் நான்காவது பெரிய இராணுவ பலத்தைக் கொண்டிருக்கும் இந்தியா என்ற நாட்டையே ஆட்சி செய்து வருகிறது.

உலகின் பல நாடுகளிலிருந்து திரட்டப்படும் பணம் தன்னார்வ நிறுவனங்களின் முகமூடியில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சென்றடைகிறது. SEWA, Childline,India Development and Relief Fund போன்ற பெயர்களில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுகின்றன. இந்த அமைப்புக்களின் பின்னணியில் இந்தியாவிற்கு வெளியில் வாழும் பார்பனீய மத அடிப்படைவாதிகள் இயங்கினாலும் சில மர்மமான நிதி வழங்குனர்கள் நாசி அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் என்ற தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

India Development and Relief Fund என்ற நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஜேர்மனிய நாடுகளில் இயங்கிவருகின்றது. இந்த நிறுவனம் CISCO என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனத்திடமிருந்தும் மேலும் பல நிறுவனங்களிடமிருந்தும் நிதி திரட்டியதற்கான ஆதரங்கள் வெளியாகின.

உலகின் மிகப்பெரிய அரசு ஒன்றை சடவிரோத பயங்கரவாத அமைப்பு ஒன்றே நடத்திவருகிறது என்றாலும் அதற்கான எதிர்ப்புக்குரல்கள் இந்தியாவிற்கும் அதற்கு வெளியிலும் கேட்பதில்லை.
மக்களை மத அடிப்படைவாதத்தினுள் அமிழ்த்திவிட்டு அவர்களை ஒட்டச் சுரண்டுவதற்காக அதிகாரவர்க்கம் அடிப்படைவாதத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது.

இந்துத்துவ பயங்கரவாதத்தின் நிழல் கூடப்படாமலிருந்து தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் ஆர்.எஸ்.எஸ் வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

மதவாத அமைப்புக்கள், ஆச்சிரமங்கள், ஆர்.எஸ்.எஸ் குண்டர்படைகள், ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்ற ஹெச்.ராஜ சர்மா போன்ற தலைவர்கள் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான காட்சி ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ் இன் பிரச்சார அங்கமாக இயங்கி வருகின்றன. ஹெச்.ராஜா என்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி ஒருவர் சினிமாக் கவிஞரான வைரமுத்துவை பொதுவெளியில் மிரட்டிய பின்னரும், ஹெச்.ராஜாவைப் பற்றிப் பேசாத ஊடகங்கள் வைரமுத்து சரியா தவறா என விவாதங்களை நடத்திவருகின்றமை, ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் தனது பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டமைக்கன அறிகுறிகள்.

ஆர்.எஸ்.எஸ் இன் பயங்கரவாத நடவடிக்கைகளிருந்து தற்காத்துக்கொள்வதற்கான அரசியல் செயற்பாடுகள் எல்லத் தளத்திலும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மக்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் முன்னெடுபதற்கான அவசியம் அவசரமானது.

இந்தியச் சூழலிலில் லெனினின் தேசிய இன விடுதலைக் கோட்பாடு

உலகின் வெவ்வேறு பகுதிகளில்,வெவ்வேறு காலங்களில் மனித இனம் பரிணமித்து வளர்ந்து இருக்கிறது. அப்படிப் பரிணமிக்கும் பொழுது, ஒவ்வவொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழியைப் பேசினர்; ஒவ்வொரு பண்பாட்டுப் பின்னணியுடன் இருந்தனர். இவ்வாறு மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்று பட்டு இருப்பது தேசிய இனம் எனப்படுகிறது.

ஒவ்வொரு இனத்தின் உணவு, உடை, இருப்பிடத் தேவைகள்அவரவர்களுடைய பாரம்பரியப் பின்னணியைப் பொறுத்தும், சமூகச் சூழலைப் பொறுத்தும் மாறுபடும். ஆகவே பொருள் உற்பத்தியையும், பொருள் உற்பத்தி முறையையும் தீர்மானிக்கும் அரசியல் அதிகாரம் அந்தந்த இன மக்களுக்கே இருப்பது தான் சமூக இயக்கம் உராய்தல் இன்றி நடைபெற ஏதுவாக இருக்கும். இவ்வாறு தங்கள் அரசியலைத் தீர்மானிக்கும் உரிமை, ஒவ்வொரு இன மக்களுக்கும் இருக்க வேண்டும் என்பது தான் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை அல்லது தேசிய இன விடுதலை எனப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் மொழி வழியான பிரிவுகளின் அடிப்படையில் மக்களின் தேவைகள் மாறுபடுவது மட்டும் அல்லாமல் வருண / சாதி அடிப்படையிலும் தேவைகள் மாறுபடுகின்றன. சொல்லப் போனால் மொழி வழிப் பிரிவினர்களிடையே உள்ள தேவைகளின் மாறுதல்களை விட வருண / சாதி வழிப் பிரிவினர்களின் தேவைகளில் மிக அதிகமான மாற்றங்கள் உள்ளன.

எடுத்துக் காட்டாக, பார்ப்பனர்களில் கல்வி அறிவு இல்லாதவர்கள் ஒருவரும் இல்லை. ஆகவே அடிப்படைக் கல்வியை அறிமுகப்படுத்தும் தேவை அவர்களிடையே எழுவது இல்லை, பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களிடையே எழுத்தறிவு பெறாதோர் ஏராளமாக இருக்கின்றனர். எழுத்தறிவு உள்ளோர் என்று வகைப் படுத்தப் பட்டவர்களிலும் கணிசமானோர் தங்கள் பெயரைச் சித்திரம் போல் வரையத் தெரிந்தவர்களே. ஆகவே இம்மக்களிடையே அடிப்படைக் கல்வியை அறிமுகப் படுத்தும் தேவை மிக அழுத்தமாக இருக்கிறது.

மேலும், இந்திய சமூக, அரசியல் சூழ்நிலைகள் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானோரும் உயர்நிலை வேலைகளை எளிதில் அடையும் படியாகவும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளும் கீழ் நிலை வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திலும் உள்ளன. குறிப்பாகத் துப்புரவத் தொழிலில் இது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. துப்புரவுத் தொழிலைச் செய்யும் சாதியினர் எவ்வளவு தான் படித்தாலும், எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்களால் அத்தொழிலை விட்டு வெளியே வர முடியாத படியான இறுக்கமான சூழல் உள்ளது.

இந்தியவில் இப்படிப் பட்ட சூழல் உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் விதமாக, இன அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளைக் களைவதற்கான ஐக்கிய நாடுகள் அவையின் குழு (United Nations Committee for Elimination of Racial Discriminations)ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜெனிவா நகரில், உலக அளவில் இன ஒதுக்கலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்த கருத்தரங்கம் நடந்தது. இந்தியாவில் வருண / சாதி அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்படுவதைப் பற்றி இக்கருத்தரங்கில் விவாதிக்க வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட வகுப்புத் தோழர்கள் ஐக்கிய நாடுகள் அவையில் கோரிக்கை வைத்தனர். (பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் இது போல் செயல்பட வேண்டும் என்று தோன்றாமல் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தனர் / இருக்கின்றனர்.) இக்கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று இந்திய அரசு கடுமையாக எதிர்த்தது. ஆனால் கோரிக்கையில் உள்ள உண்மைத் தன்மையையும், நியாயத்தையும் கருதி ஐக்கிய நாடுகள் அவை அதை ஏற்றுக் கொண்டு விவாதித்தது. விவாதத்தின் முடிவில் 22.8.2002 அன்று தீர்மானம் எண் XXIXஇல் இந்தியவில் வருண / சாதி அடிப்படையில் மறுக்கப்படும் உரிமைகள் உலக அளவில் இன ஒதுக்கல் கொடுமைகளைப் போன்றதே என்று முடிவு செய்தது. அது மட்டும் அல்ல; இக்கொடுமைகளைக் களைய இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அத்தீர்மானம் வலியுறுத்தியது.

ஆனால் பார்ப்பன ஆதிக்க அரசான இந்திய அரசு ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தைக் கண்டு கொள்ளவே மறுத்தது; இன்றும் மறுத்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டும் அல்ல; இச்செய்தியை முழுமையாக இருட்டடிப்பு செய்தது. பெரிய ஊடகங்கள் (ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தும் ஊடகங்கள் உட்பட) அனைத்தும் பார்ப்பன ஆதிக்கப் பிடியில் இருப்பதால் இச்செய்தி வெளியில் பரவாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இப்பிரச்சினையை ஐக்கிய நாடுகள் அவைக்குக் கொண்டு சென்ற தோழர்கள் இச்செய்தியைத் தங்களால் இயன்ற மட்டும் மக்களிடைய கொண்டு சென்றனர். அவர்களுடைய முயற்சியினால் சமூக நீதி ஆர்வலர்களிடம் இச்செய்தி சென்றடைந்தது.

சரி! இந்திய அரசு பார்ப்பன ஆதிக்க அரசு. ஆகவே அது பார்பபன ஆதிக்கத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகள் அவையின் இத்தீர்மானத்தைக் கண்டு கொள்ளாதது மட்டும் அல்லாமல், செய்தியையே இருட்டடிப்பு செய்தது. ஆனால் எல்லா விதமான சுரண்டல்களையும்  முற்ற முழுக்க எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகள் என்ன செய்தன / செய்கின்றன?

லெனினுடைய காலத்தில் “தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை சோஷலிச சமூகத்திற்குப் பொருந்தாது. ஏனெனில் தேசிய இன ஒடுக்குமுறைக்குக் காரணமாக இருக்கும் வர்க்க நலன்களையே சோஷலிசம் ஒழித்து விடுவதால் எல்லா விதமான தேசிய ஒடுக்கு முறைகளையும் அது ஒழித்து விடுகிறது” என்று சிலர் கூறிக் கொண்டு இருந்தார்கள்.

இதைப் போலவே இந்தியாவில் உள்ள பொதுவுடைமைக் கட்சிக்காரர்களும் சோஷலிச சமூகத்தில் சாதி அடிப்படையில் உரிமைகள் மறுப்பு இருக்க முடியாது என்று வாதாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

“ஒரு சோஷலிச சமூகத்தில் தேசிய இனமானது பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஒரு அங்கமாக நிலைத்து நிற்கும் என்று நம்புவதற்கு ஆதாரம் ஒன்றும் இல்லை. கலாச்சார ரீதிான, மொழி ரீதியான ஒரு அங்கமாக மட்டுமே அது இருக்கும் என்பது சாத்தியம். ஏனென்றால் ஒரு சோஷலிசக் கலாச்சாரப் பிராந்தியத்தை நாம் பிரிக்கிறோம் என்று வைத்துக் கொண்டால் உற்பத்தித் தேவைகளுக்கு உகந்ததாக மட்டுமே பிரிக்க முடியும்; மேலும் இத்தகைய பிரிவு பற்றிய பிரச்சினையானது, ஒவ்வொன்றும் முழு அரசுரிமை படைத்த தேசிய இனங்களால் தனித்தனியாகத் தீர்க்கப்படாது. அதில் அக்கறை உள்ள குடிமக்கள் எல்லோராலும் கூட்டாக நிர்ணயிக்கப்படும்,” என்று விளக்கும் லெனின் ஒரு தேசிய இனம் தன் அரசியலைத் தானே நிர்ணயம் செய்து கொள்ளும் சுய நிர்ணய உரிமை அல்லாமல் கூட்டு நிர்ணயம் என்பது அதை அடிமைத் தளையில் நிலைநிறுத்தும் உத்தியே என்று கூறுகிறார்.

இந்தியச் சூழலில் சோஷலிச சமுதாயம் அமைந்தால் அனைவருக்கும் கல்வியும், வேலை வாய்ப்பும் உறுதி ஆகி விடுவதாலும், தனி உடைமை ஒழிக்கப்பட்டு விடும் என்பதாலும், அனைத்து வகுப்பினருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைக்கும் என்றும், வருண / சாதி வேற்றுமை மறைந்து விடும் என்றும் கூறுகிறார்கள். ஆகவே இப்பொழுது நடைமுறையில் உள்ள மொழிவாரி மாநிலங்கள் அமைந்ததே போதும் என்ற மன நிறைவுடன் இருக்கிறார்கள்.

ஆனால் தேசிய இனப் பிரச்சினையில் வர்க்க நலன்களைப் பார்த்தால் போதும் என்று வாதாடிய எதிரிகளுக்கு லெனின் அளித்த விளக்கம் வருண / சாதிப் பிரச்சினைகளைக் கவனிக்க மறுப்பவர்களுக்கும் பொருந்தும். சோஷலிச அரசு அமைந்து அனைத்து முதலாளித்துவச் சொத்துடைமைகளும் பறிமுதல் செய்யப் படுவதாலேயே அனைத்து சாதியினரும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சம வாய்ப்பு பெறுவார்கள் என்று நம்புவதற்கு ஆதாரம் ஒன்றும் இல்லை. பார்ப்பனர்களில் உள்ள மிகக் குறைவான திறமை உடையவர்களும் தங்கள் பின் புலம் காரணமாக உயர் வாய்ப்புகளை அடைய முடியும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளும் தங்கள் பின் புலம் காரணமாக உயர்நிலைகளுக்குச் செல்ல முடியாமல் சறுக்க நேரிடும். இது பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளில் நிலைத்து நிற்பதற்கும், மற்றவர்கள் அடுத்த நிலை வேலைகளிலேயே அழுந்திக் கிடப்பதற்குமான நிலையை மாற்றாமல் நிரந்தரமாக்கவே வழி வகுக்கும். தனிச் சொத்துடைமை ஒழிந்த நிலையில் இவ் அமைப்பு வர்ணாசிரம அதர்ம அமைப்பையே ஒக்கும்.

 (இதைத் தான் “சாதியைச் சந்திக்காமல் புரட்சியைச் சந்திக்க முடியாது” என்றும் “சாதிப் பிரச்சினையைக் கணக்கில் கொள்ளாமல் புரட்சியைத் திணித்தால் அது அக்கணமே வீழ்ந்து விடும்” என்றும் மாமேதை அம்பேத்கர் கூறினார்)

     ஆகவே வர்க்கப் போராட்டத்தோடு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று லெனின் கூறியது போல, இந்தியச் சூழலில் வர்க்கப் போராட்டத்தோடு அனைத்து வருணத்தினரும் / சாதியினரும் அனைத்து நிலை வேலைகளிலும் அவரவர் மக்கள் தொகையின் விகிதத்தில் இருப்பதற்கான விகிதாச்சாரப் பங்கீடுப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும்.

இராமியா

இக்கட்டுரை சிந்தனைாயாளன் 2018ஆம் ஆண்டு பொங்கல் மலரில் வெளி வந்து உள்ளது.

ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை: வி.இ.குகநாதன்

சில நாட்களிற்கு முன் தினமணி செய்தித்தாளில் கவிஞர் வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள்” எனும் கட்டுரையில் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியம் இன்று தமிழக ஊடகப்பரப்பிலும், பொதுவெளியிலும் பெரும் கருத்துமோதலை ஏற்படுத்தியுள்ளது.  அதில் அவர் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியத்தில் ஆண்டாள் ஒரு தேவடியாள் எனக் குறிப்பிட்டதே இந்தக் குழப்பங்களிற்கெல்லாம் காரணம்.  இதனை இவர் ஒன்றும் சொந்தக்கருத்தாகக்கூறவில்லை, மாறாக அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement – some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது என மேற்கோளே காட்டியிருந்தார்.  உடனேயே ஆண்டாளினை வைரமுத்து கேவலப்படுத்திவிட்டார் என இந்துமதவாதிகள் பொங்கியெழுந்து அவரது தலையினை வெட்டவேண்டும் என தலிபான் அவதாரம் எடுத்துவிட்டார்கள். இன்று இவ்வாறு கூச்சலிடும் மதவாதிகளின் முன்னோர்களே இந்துமதத்தின் ஒரு சடங்காக தேவடியாள்/ தேவதாசி முறையினைப் பேணியவர்கள் என்பதுதான்  இங்கு வேடிக்கையானது.

தேவடியாள்(பரத்தை)வரலாறு:

இந்த விலைமகளிர் தொழிலே உலகின் முதற்தொழில் என வேடிக்கையாகக் கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் இந்த விலைமகளிரின் தோற்றம் என்பது வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்டது. வரலாற்றில் தாய்வழிச் சமுதாயமாக மனிதர்கள் இருந்தபோது எல்லோருமே பொதுமகளிராகவேயிருந்தார்கள்(1). அதே போன்று சங்ககாலத்திலும் இற் பரத்தை(ஒருவனிற்கு மட்டும்),நயப்புப் பரத்தை(பலருக்கும் நயப்பவள்) மருதநிலத்தில் இருந்ததாகக் குறிப்புக்கள் உண்டு. அதே போன்று சங்கமருவிய காலத்தில் பரத்தையர்முறைமை இருந்தற்கு தரவாக மாதவி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறார். இவ்வாறு காலகாலமாக பரத்தைமுறை காணப்பட்டாலும் அதனை மதச்சடங்காக மாற்றி கடவுளுடன் தொடர்புபடுத்தியது பார்ப்பன வைதீக(இன்றைய இந்து) மதமேயாகும்.  வைதீக மதமே தேவடியாள் (தே= தெய்வம்+அடியாள்= பணிபுரிபவள்) எனும் கருத்துருவாக்கத்தினை உருவாக்கி அதனை பொட்டுக்கட்டல் எனும் சடங்காக கோயிலிலேயே அந்தணர்களைக் கொண்டு நடாத்திவைத்தது.  இதனை பெருமளவிற்கு நிறுவனரீதியான நடைமுறைக்குள்ளாக்கியது இராசராச சோழன் ஆட்சியிலேயிலேயே இடம்பெற்றது என்பதற்கு தரவாக தஞ்சைப் பெருங்கோயில் கல்வெட்டுக்கள் (2)காணப்படுகின்றன. இராசராச சோழன் காலத்திலேயே இவ்வாறு தேவடியாள் முறை நிறுவனரீதியாக மதச் சடங்காக ஆக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே கோயில்களில் நிறுவனரீதியற்ற முறையில் பின்பற்றப்பட்டு வந்திருக்கலாம் என உய்த்துணரமுடிகிறது. அக் காலப்பகுதியிலேயே (குறிப்பாக எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ) ஆண்டாள் வாழ்ந்தாகக் கருதப்படுகிறது.

       ஆண்டாள் உண்மையிலேயே தேவடியாளா (தேவதாசியா) என்றால் அது விவாதத்திற்குரியது. இந்துமத விளக்கத்தின்படி தெய்வத்திற்கே (தே) பணிபுரிபவள்(அடியாள்) என்றவகையில் தேவடியாள் எனத் துணிந்து கூறலாம். மறுபுறத்தில் பொதுவழக்கிலுள்ள தேவதாசி என்ற சொல்லிற்கான விளக்கத்தின்படி பொதுமகளா எனப் பார்த்தால், அதற்கான நேரடித்தரவுகள் எதுவுமில்லை.  மேலே குறிக்கப்பட்ட இண்டியானா பல்கலை ஆய்வானது ஆண்டாளின் பாடல்களில் காணப்படும் பாலியல் விடுதலைத் தன்மையினை அடிப்படையாகக்கொண்டே குறித்த முடிவிற்கு வந்திருக்கலாம். அதாவது பெண்களின் விடுதலை பெருமளவிற்கு அடக்கிவைக்கப்பட்டிருந்த அன்றைய நிலையில் ஒரு இளம்பெண் இவ்வாறு பாலியல் வேட்கை சொட்ட சொட்ட பாடல்களைப் பாடியிருக்க முடியுமா என்ற கேள்வியின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டிருக்கலாம். அது முடிந்த முடிவல்ல என்பது உண்மையே.

ஆண்டாள் அவமானக் குறியீடா?

ஒரு வாதத்திற்காக ஆண்டாள் அவ்வாறு பரத்தையாகவிருந்திருந்தாலும்கூட, அது அவரிற்கான அவமானமல்ல, மாறாக அது அந்த மதப் பிற்போக்குத்தன மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானமாகவே கருதப்படவேண்டும்.  ஆண்டாளின் பாடல்கள் கூட ஒரு பெண்ணின் பாலியல் விடுதலை உணர்வின் வெளிப்பாடாகவே கருதப்படவேண்டும்.  அதே போல ஆண்டாளின் தமிழ்ப் புலமையும், தமிழே வழிபாட்டு மொழியாகக் கருதப்படவேண்டும் என்ற மொழியுணர்வும் போற்றப்படவேண்டும். இதனால்தானோ என்னவோ  வைணவத் தென்கலை  சித்தாந்தத்தின் படி  ஆழ்வார்கள் பத்து  பேர் மட்டுமே (ஆண்டாள் , மதுரகவி ஆகியோரிற்கு இடமில்லை) . பின்பு ஆழ்வார்கள் பன்னிரண்டாக அதிகரிக்கப்பட்டாலும், சில வைணவர் ஆண்டாளையும், மதுரகவியினையும் இன்றும் ஏற்றுக்கொள்வதில்லை.  அதே போன்று ஆண்டாள் என்பதே ஒரு கற்பனைப் படைப்பு என ஏற்கனவே ராஜாஜி கூறியபோது (3) எதுவுமே பேசாதிருந்த மதவாதிகள், பா.ராகவன் ஆண்டாளைப் பற்றி ஏற்கனவே கிழக்குப் பதிப்பகத்தின் பெயரில் இதனைவிட கடுமையாக விமர்சித்து நூல் வெளியிட்டபோது மவுனமாகவிருந்த  மத வாதிகள் இப்போது பொங்குவதன் நோக்கம் கவனித்திற்கொள்ளப்படவேண்டும்.

வைரமுத்து எதிர்ப்பு அரசியலின் பின்னனி:

மேலே குறிப்பிடப்பட்ட பா.ராகவனும், ராஜாஜி ஆகியோர் பிரமணராகவிருந்தபடியால் அப்போது மவுனம் காத்த மதவாதிகள் இப்போது தமது மனுதர்மத்தின்படி பிரமணரல்லாத வைரமுத்து மேற்கோள் காட்டியதற்கே அவரது தலையினைக் காவு கேட்கிறார்கள். இன்னும் சில மிதவாதிகளோ(?) சன்னதியில் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறார்கள்.  வைரமுத்துவோ யாராவது தனது மேற்கோளைத் தவறாக புரிந்து துன்புற்றிருப்பார்களேயானால் அதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். இதற்குப் பின்னும் மதவாதம் அடங்கியபாடில்லை.  இங்குள்ள நகைமுரண் என்னவெனில் இன்று வைரமுத்து இந்து மதத்தினை புண்படுத்திவிட்டதாக கூறும் மதவாதிகள்தான் அன்று தேவடியாள் முறையினை ஆதரித்து அதற்காக வாதிட, மறுபுறத்தே வைரமுத்துவின் கருத்துரிமைக்காகப் போராடும் பகுத்தறிவாளர்களே அன்று தேவடியாள் முறையினை ஒழிக்கப்போராடியிருந்தார்கள். குறிப்பாக சட்சபையில் தேவதாசி முறையினை ஆதரித்த இந்துமதக் காவலரான   சத்தியமூர்த்தி ஐயரினை எதிர்த்து சுப்புலட்சுமி ரெட்டி முன்வைத்த வாதம் (படம் காண்க) மிகவும் பரவலடைந்திருந்தது. தேவதாசி முறை ஒழிப்பில் டாக்டர் முத்துலட்சுமி, ராமாமிர்தம் அம்மையார், தந்தை பெரியார், அமிகம்மிகாயேல் என்ற கிறிஸ்தவ பெண் போதகர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பு அளப்பெரியது.

          வைரமுத்து மீதான வன்மத்திற்கு மற்றொரு காரணமும்  உண்டு.  வைரமுத்துவின் இந்தக் கட்டுரையினை ஒரு தொடராகவே வெளியிட்டுவருகிறார். இதற்கு முந்திய ஒரு வள்ளலார் பற்றிய கட்டுரையில் வள்ளலாரின் மறைவு பற்றிய உண்மைத்தன்மையினை வெளிக்கொண்டுவந்திருந்தார்.  அதாவது வள்ளலாரின் பார்ப்பனய எதிர்ப்பு ஆன்மீகத்தில் கலங்கிப்போன மதவாதிகள் இறுதிக்காலத்தில் வள்ளலாரை தனிமைப்படுத்தி அவரினை எரித்துக்கொன்றுவிட்டு, அருட்பெரும் சோதியில் கலந்துவிட்டார் (நந்தனை எரித்துவிட்டு கூறியது போன்று)எனக் கதைகட்டிவிட்டிருந்ததனைக் கேள்விக்கு உட்படுத்தியிருந்தார். அப்போது கூச்சல் போட்டு தாம் அம்பலப்பட்டுப்போவதனை விரும்பாத பார்பனியம் இப்போது ஆண்டாள் விடயத்தினை முன்வைத்து தமது வன்மத்தை வெளிக்காட்டுகிறது. இவையே வைரமுத்து மீதான வன்மத்திற்கு காரணங்களே தவிர, அவர்களிற்கு ஆண்டாள் மீதான பற்றுக் காரணமில்லை.

     மதநம்பிக்கைகள் கேள்விக்கோ ஆய்விற்கோ அப்பாற்பட்டவை  என்று கருதுவோமாயின் இன்றைக்கும் பூமி தட்டை என்று நம்பிக்கொண்டும், கணவன் இறந்தவுடன் மனைவியினை எரித்துக்கொண்டும் இருக்கவேண்டியிருந்திருக்கும்.  எனவே வள்ளலார் அருட்சோதியில் எவ்வாறு கலக்கச்செய்யப்பட்டார் என்பது மட்டுமல்லாமல் ஆண்டாள் எவ்வாறு காற்றுடன் கலந்து காணமாற்போனார் எனவும் ஆய்வு செய்யப்படவேண்டும்.  துணைநின்றவை

  1. குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் (தமிழாக்கம்) (page7) -பிரடெரிக் எங்கல்ஸ்
  2. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்(p.137) – க. கைலாசபதி
  3. “வாடாத மலர் ஆண்டாள்” – the tamil hindu.com (1-1-2015)

வடக்கில் வாக்குச் சேர்க்கும் கட்சிகளின் வறுமை!

மக்கள் கூட்டத்தைக் கண்டால் அவர்களை வாக்குகளாக மாற்றுவது எவ்வாறு என்பதை மட்டுமே சிந்திக்கும் வாக்குப் பொறுக்கும் கட்சிகள் உலகம் முழுவதும் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்படுகின்றன. மக்கள் புதிய வழிகளைத் தேடிக்கொள்கிறார்கள். நாற்பது ஆண்டுகால் போராட்ட வரலாற்றின் எச்சங்களைக்கூட அழிப்பதற்கான நிகழ்ழ்சி நிரலில் வாக்குக் கட்சிகள் செயற்படுவதை மக்கள் நிச்சயமாக இனம்கண்டுகொள்வார்கள்.

வன்னி இனப்படுகொலையின் பின்னர் பருந்துகள் போல மக்களைச் சூறையாடும் வாக்குக் கட்சிகளில் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு/தமிழரசுக் கட்சி இலங்கைப் பேரினவாத அரசின் ஊதுகுழலாக வெளிப்படையாகவே செயற்படும் நிலையில் விரக்தியடைந்த மக்களை உள்வாங்கிக்கொள்ள ஏனைய கட்சிகள் முயற்சிகின்றன. யாழ் மையாவாதத்தின் நேரடி முகவர்களான தமிழரசுக் கட்சியின் அழிவிலிருந்தே மக்கள் சார்ந்த கட்சிகள் தோற்றம்பெறுவது சாத்தியமானது. அந்த அழிவின் வெற்றிடத்தை வாக்குக் கடசிகள் நிரப்பிவிட முடியாது,

வாக்குச் சேர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழர்களைப் பிடித்துவந்து வடக்கை அபிவிருத்தி செய்யப்போவதாகவும் அதற்காக உள்ளூராட்சித் தேர்தலில் தம்மை வெற்றிபெறச் செய்யுமாறும் கோருகின்றனர்.

சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் வட மாகாண சபை இலங்கை அரசின் ஒதுக்கீட்டில் கிடைத்த மில்லியன்களை பயன்படுத்தாமல் திருப்பியனுப்பிய வேளைகளில் மூச்சுக்கூட விடாத ‘அகில இலங்கைத்’ தமிழ் காங்கிரஸ்/தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இன்று தேர்தல் அண்மிக்கும் நேரத்தில் புலம்பெயர் நாடுகளிலிருந்து அழைத்து வருவதாகக் கூறுவது வேடிக்கையானது.

போரின் வடுகளிலிருந்து மீண்டுவரும் மக்களின் வாழ்வாதாரத்தை புலம்பெயர் வியாபாரிகளிடம் ஒப்படைபதைக் கூடத் தேர்தல் பிரச்சாரமாக முன்வைக்கும் அளவிற்கு அரசியலின் வறுமை தாழ்ந்துவிட்டது.