தேர்தலை ஒட்டி தமிழ்த் தேசிய வியாபாரம் சூடுபிடித்துள்ளது: சுன்னாகம் நச்சுக்களோடு விக்கி சுற்றுப்பயணம்

electionஇலங்கைப் பராளுமன்ற அரசியலில் மகிந்த மைத்திரி நாடகம் இன்னும் முடிவுக்கு வரதா நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆசனப் பகிர்வுக் கூட்டத்தை நிறைவு செய்துகொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளட்,தமிழரசுக் கட்சி மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் பாராளுமன்றம் என்ற பன்றித் தொழுவத்தில் அமர்ந்து சலுகைகளை அனுபவிப்பதற்காகான மோதல் இக் கூட்டத்தில் நிறைவிற்கு வந்தது.

ஈழத் தமிழர்களின் அவலம் என்பது மேற்கே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழ் நாடு உட்பட இலங்கை வரை இன்னும் இலாபம் தரும் வியாபாரமாகவே காணப்படுகிறது. தேசியம் என்பதன் அடிப்படை உள்ளர்த்தங்களுக்கே எதிரானவர்கள் தம்மைத் தேசியவாதிகள் என அழைத்துக்கொள்ளும் அருவருப்பான அரசியல் சூழலில் மக்கள் வாழப் பழகிக்கொண்டனர்.

இதனிடையே முன்னை நாள் அதிகாரத் தரகர்களில் (Power Broker) ஒருவரான வித்தியாதரன் தமிழ்த் தேசிய வியாபாரத்தில் புதிய உக்திகளைக் கையாள ஆரம்பித்துள்ளார். முன்னை நாள் போராளிகள் என்ற தனியான சமூகத்தை உருவாக்கி அதனூடாக ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியை உருவாக்கியுள்ள வித்தியாதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பாராளுமன்ற ஆசனங்களுக்காகப் பேரம் பேச ஆரம்பித்துள்ளார்.

மரணம் இராணுவமாகி துப்பாக்கிகளுடன் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கும் போதெல்லாம் வித்தியாதரன் அதிகரத் தரகராகவே செயற்பட்டார். இன்று அதனை நிறுவனமயமாக்கி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளிலிருந்த சில போராளிகளை இணைத்து பேரம்பேச முனைகிறார்.

அவரது தொழிலின் புதிய பரிமாணமே புதிய கட்சி.

இதற்கிடையே பாராளுமன்றத்திற்கு தான் பிரவேசித்தால் மட்டுமே தேசியம் வளரும் என நாமல் ராஜபக்சவின் நண்பரான ரங்கா என்பவருடன் இணைந்து அனந்தி சசிதரன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் உள்ளேயே புலம்பெயர் கனவு தேசம் ஒன்றை உருவாக்கி மக்களின் பிரச்சனைகளிலிருந்து அன்னியமாகி அமெரிக்காவை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் தேர்தல்கள் அண்மிக்கும் போது கனவுலகத்திலிருந்து சற்று இறங்கிவருவதுண்டு.

அவரை வாழவைத்த தெய்வங்களான புலம்பெயர் விதேசிகள் சூறாவளியாக இல்லையெனினினும் தென்றலாகப் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

புலிகள் இருந்ததால் அரசியலில் ஈடுபட முடியாமல் அச்சுறுத்தல் இருந்தாகக் கூறிய விக்னேஸ்வரன் இன்று புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியச் சுற்றுபயணம் செய்கிறார். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளுக்கு இணையாக தீர்மானம் நிறைவேற்றிய ஒரே காரணத்திற்காக புலம்பெயர் தேசிய வியாபாரிகளின் கண்களை உறுத்திய விக்னேஸ்வரன் சுன்னாகத்திலிருந்து வெளியேறிய நச்சுப் பதார்த்தங்களுடனேயே புலம்பெயர் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். 2015 இன் கோடைக்காலத்தின் கொதி நிலை தேர்தலால் அதிகரித்துள்ளது.