புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி பொட்டு அம்மான் உயிருடன் வாழ்கிறார்?

pottuசண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இயற்பெயருடைய புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாகவிருந்த பொட்டு அம்மான். பொட்டு அம்மான் உயிருடன் வாழ்வதாக இன்டர்போல் நிறுவனத்தை ஆதாரம் காட்டி தமிழகத்தின் பரப்பு ஊடகங்களில் ஒன்றான ஜூனியர் விகடன் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதனை தமது வரபிரசாதமாகக் கருதிய புலம்பெயர் ஊடகவியாபாரிகள் பொட்டு அம்மான் உயிருடன் வாழ்வதாகவும் கூடவே பிரபாகரனும் எங்காவது உயிருடன் வாழலாம் என்றும் தமது வழமையான புராணத்தை ஆரம்பித்துவிட்டன.

புலிகளின் அழிவிலிருந்து மீண்டும் போராட்ட இயக்கங்கள் தோன்றுவதைத் தடுப்பதற்காகவும், தமிழகத்தில் எழுச்சிகளைத் தடுப்பதற்காகவும் வன்னிப் படுகொலைகள் முடிந்த ஆரம்ப காலங்களில் பிரபாகரன் உயிருடன் வாழலாம் என்ற மயக்கமான ஊகத்தை இலங்கை இந்திய உளவு நிறுவனங்கள் இணைந்து ஏற்படுத்தின. அதையே தமக்குச் சார்பாக மாற்றிக்கொண்ட புலம்பெயர் பிழைப்புவாதிகள் பிரபாகரன் உயிருடன் வாழ்கிறார் என்றும் அவர் வெளியே வந்ததும் தம்மிடமுள்ள புலிகளின் சொத்துக்களை ஒப்படைப்பதாகவும் கூற ஆரம்பித்தனர்.

வெறுமனே வயிற்றுப் பிழைப்பிற்காகவே நடத்தப்படும் புலம்பெயர் இணைய ஊடகங்களும் பிரபாகரன் வாழ்கிறார் என ஒத்தூத ஆரம்பித்துவிட்டன.

இவை அனைத்தும் இணைந்து, பலர் பிரபாகரனின் வரவை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முழுமையாக அழிக்கப்பட்டு அமெரிக்க, இந்திய, இலங்கை உளவுத் துறைகளிடம் இலங்கை விற்பனை செய்யப்பட்டுவிட்டது.

கடந்த சில தினங்களாக ஜூனியர் விகடன் என்ற நாலம் தர தமிழகச் சஞ்சிகை பொட்டு அம்மான் உயிருடன் வாழ்வதாக இன்டர்போல் நிறுவனத்தை ஆதரம்காட்டி வெளியிட்ட செய்திகள் புலம்பெயர் ஊடங்களுக்கு மீண்டும் வியாபாரக் கருவியாகப் பயன்பட்டிருந்தது. இன்டர்போல் பொட்டு அம்மானை மீண்டும் தேடப்படுவோரின் பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் அதனால் அவர் உயிரோடு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் ஜூனியர்விகடனின் நிலாம்டீன் என்பவர் புலனாய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்டர்போல் எந்த இடத்திலும் பொட்டு அம்மான் என்பவர் இயற்பெயரையோ அல்லது அவரது புனை பெயரையோ குறிப்பிட்டு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பதுதான்.

இன்டர்போல் அவரைத் தேடுவதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

ஆக, முழுப் பூசணிக்காயை மட்டுமல்ல அதன் செடிகொடிகளையும் சேர்த்தே சோற்றுப் பருக்கைக்குள் புதைக்கும் இப் பொய்யர்களின் பின் புலத்திலுள்ள நோக்கம் என்பது ஆபத்தானது.

நக்கீரன், ஜூனியர் விகடன் போன்றவற்றோடு ஈழத் தமிழர்களின் கண்ணீரையும்ன் இரத்தத்தையும் விற்றுப் வாக்குப் பொறுக்கிக்கொள்ளும் சீமான், வை.கோ போன்ற வகையறாக்கள் இணைந்து தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதற்கு தம்மாலான அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் இந்திய உளவுத்துறையின் உள்ளூர் முகவர்களான தமிழ் இனவாதிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதும், இலங்கை ஆயுதமயப்படுத்துவதை நியாயப்படுத்துவதும் இவர்களின் நோக்கங்களில் பிரதானமானவை.

வயிற்றுப் பிழைப்பிற்காகவும், தமது சொந்த நலன்களுக்காகவும் புலம்பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் இணைய ஊடகங்களும், தென்னிந்திய ஊடகங்களும் இணைந்து கட்டவிழ்த்துவிட்ட மற்றொரு பொய் தான் பொட்டம்மான் உயிருடன் வாழ்கிறார் என்பதாகும். ஊடக சுதந்திரம் என்ற பெயரில் இப் பிரகிருதிகள் நடத்தும் சீரழிவு நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களைத் தொடர்ந்தும் அவலத்துள் வைத்திருப்பதற்கே துணை செல்கின்றன.

One thought on “புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி பொட்டு அம்மான் உயிருடன் வாழ்கிறார்?”

  1. புலம்பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் இணைய ஊடகங்கள் இந்திய இலங்கை புலனாய்வு அமைப்புகளால் இயக்கப் படுகின்றன என்கின்ற உண்மைகள் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளன.

Comments are closed.