எலி வேட்டைக்காக இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் புலம்பெயர் கும்பல்கள்

ratsஇலங்கையில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் மேற்கு புதிய அதிகாரவர்க்கச் ‘சொல்லாடல்களான’ நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, ஊழல் ஒழிப்பு போன்றவற்றுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிரிசேன அரசு பாராளுமன்றத்திற்கான தேர்தலை எந்த நேரத்திலும் நடத்தலாம் என்று அறிவித்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணைய உரிமைக்கான கோரிக்கை இப்போது பாராளுமன்ற தேர்தல் அரசியலை மட்டுமே சுற்றி வருகின்றது.
தேர்தல் அரசியல் என்பது மக்களுக்கானதல்ல என்பதை 80 களின் ஆரம்பத்திலேயே மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர். அதன் பின்னர் அன்னிய எடுபிடிகள் போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரை நகர்த்தி வந்து நத்திக்கடலோடு இரத்தமும் சதையுமாகக் கரைத்துவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் தேர்தல் அரசியலையும் வாக்குப் பொறுக்கும் கட்சிகளையும் தவிர தமிழ்த் தலைமைகளிடம் வேறு அரசியல் திட்டங்கள் இல்லை.

கடந்தகாலத்தில் பிரபாகரனுக்கு ஒளிவட்டம்கட்டி, கடவுளாக்கி முள்ளிவாய்க்காலில் முடக்கி அழித்த அத்தனை பேரும் இன்று பாராளுமன்ற அரசியல் சகதிக்குள் சுய நிர்ணைய உரிமையைத் தேடியலைகின்றனர்.

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் கும்பலில் அரசியலுக்கு மாற்றாக அவர்களின் அதே அரசியலை முன்வைக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மாற்றாக முன்வைக்கின்றனர். சமூகத்தின் இழப்புக்களையும் தியாகங்களையும் வாக்குகளாக மாற்றி அதிகாரவர்க்கத்தோடு ஒட்டிக்கொள்ள புலம்பெயர் அரசியல்வாதிகளும் துணை செல்கின்றனர். மக்களின் அன்றாட வாழ்நிலை, அவர்கள் முகம்கொள்ளும் பிரச்சனைகள், அவர்கள் மத்தியில் சிறுகச் சிறுக முளைவிடும் சமூகப்பற்றுள்ள புதிய சக்த்திகள் என்ற அனைத்தையும் பின் தள்ளிவிட்டு பாராளுமன்றம் என்ற பன்றித் தொழுவத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு மக்களைக் கோருகின்றனர்.

இதுவரையில் ஏற்படுத்திய மனிதப் பேரழிவுகளுக்கு பொறுப்புக்கூறும் அளவிற்கு இத் தலைமைகள் பெருந்தன்மையுடன அல்ல. ஆனால் இன்னும் அழிவுகளை நோக்கி மக்களை அழைத்துச் செல்லவும் புதிய மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகளின் தோற்றத்தை முடக்க புலம்பெயர் நாடுகளிலிருந்து இவர்கள் நடத்தும் அரசியல் மக்களின் வலிமையையும் போராடும் தகமையையும் சிறுகச் சிறுக அழித்துக்கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாற்றுத் துரோகம் மக்கள் அறியாத ஒன்றல்ல, அதற்கு எதிராக அதே அரசியலைக் முன்வைக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும், அனந்தி சசீதரனையும், விக்னேஸ்வரனையும் தேசியவாதிகளாக்கும் புலம்பெயர் பிழைப்புவாதிகள் சுமந்திரனுக்கும் சமந்தனுக்கும் எந்தவகையிலும் மேலானவர்கள் அல்ல.
புதிதாக தேசியம் செய்கிறோம் எனக் கூறும் இப் புலம்பெயர் அமைப்புக்கள் தமது சாதனை என மக்களிடம் கூறக் கூடியவை அழிவுகள் மட்டுமே.

ஆயிரமாயிரமாய் மக்களை இலங்கை அரச பாசிச இராணுவத்திற்குப் பலிகொடுத்த அதே கும்பல்கள் எந்தக் கூச்ச உணர்வுமின்றி தம்மை நம்புமாறு மக்களிடம் கோருகின்றனர்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அழிவுகளுக்குத் துணை சென்ற பலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான ஆதரவுப் பிரச்சாரத்தை புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

மலையைத் தகர்க்கும் மகத்துவம் கொண்ட மக்களை எலி வேட்டைக்காக இணைப்பு ஏற்படுத்துங்கள் என்று கூச்சலிடும் இக் கும்பல்கள் ஆபத்தான அரசியல் பின்புலம் கொண்டவை.