மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா? : வியாசன்

mahinda_rajapaksaஉலகின் மிகப்பெரும் இனப்படுகொலையை நிகழ்த்திவிட்டு ஐந்து வருடங்கள் எந்த அச்சமும் அவமானமுமின்றி ஆட்சி நடத்திய மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் மீண்டும் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் துருப்புச் சீட்டாக தேர்தலைப் பயன்படுத்த முயற்சிக்கிறார். மேற்கு ஏகாதிபத்தியங்களாலும் இந்திய பிராந்திய ஏகாதிபத்தியத்தாலும் இனப்படுகொலையை நிகழ்த்துவதற்காக நியமிக்கப்பட்ட முகவரே மகிந்த ராஜபக்ச.

மக்களைச் சாரிசாரியாக அழித்த பின்னர் எஞ்சியிருந்த ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் அழிப்பதற்கு அதிகாரவர்க்கத்திற்குத் துணை சென்ற மகிந்தவின் எஞ்சியிருந்த எதிரிகளையும் ஏகாதிபத்தியங்கள் உள்வாங்கிக்கொண்டன.

அழிப்பைத் தீவிரப்படுத்துமாறு மகிந்தவிற்குக் கட்டளையிட்ட அமெரிக்க அரசே அவரது அரசிற்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா வில் முன் மொழிந்தது. மகிந்தவின் எதிரிகளைப் பாதுகாத்து உள்வாங்கிகொண்டது. ஆக, மகிந்த ஆதரவு அணியும் எதிர்ப்பு அணியும் அமெரிக்க ஏகாதிபத்திய நலங்களின் பிரதிநிதிகளாயினர்.

இனவழிபின் பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட சுத்திகரிப்பில் மக்கள் பற்றுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் அழிக்கப்பட்டும், அமெரிக்க – ஐரோப்பிய அரசுகளால் உள்வாங்கப்பட்டு சிதைக்கபட்டும், இலங்கை ஏகாதிபத்தியப் பயன்பாட்டிற்கு உகந்த பிரதேசமாக மாற்றப்பட்டது.

இதற்காக சீனப் பூச்சண்டி காட்டப்பட்டது. பழமைவாத அரசியல் ஆய்வாளர்கள் இலங்கையில் நடப்பது சீன ஆதிக்கத்திற்கு எதிரான அமெரிக்க யுத்தமாகக் குறுகிய எல்லைகளுக்குள் தம்மை மட்டுப்படுத்திக்கொண்டனர்.
மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக மேற்கு நாடுகளில் பிரச்சாரம் மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிறுவனமான பெல் பொட்டிங்டரைக் கையாண்ட ராஜித சேனாரட்னவே மகிந்தவின் இன்றைய முதல் எதிரி. மகிந்தி எதிர்ப்புக் கூட்டணியில் முதலில் இணைந்துகொண்ட சுதந்திரக்கட்சி உறுப்பினர் ராஜிதவே.

ஆக, இரண்டு எதிர் எதிர்த் தரப்புக்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்ட அமெரிக்க அரசிற்கு இன்றையை ஏகாதிபத்தியச் சார்புச் சூழலின் நண்பன் மைத்திரிபால சிரிசேன.

தனக்கென்று நிரந்தர அரசியல் நண்பர்களையோ உறுதியான அரசியல் அணிகளையோ கொண்டிராத மைத்திரிபால சிரிசேன, தேவைப்படும் போது பயன்படுததப்பட்டு தேவையற்ற போது அழிக்கப்படக் கூடிய நிலையிலேயே காணப்படுகிறார்.

இனப்படுகொலையின் பின்னர் முழு இலங்கையையும் சூறையாடிய ராஜபக்ச குடும்பம் தெற்காசியாவின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்று. இன்றும் தனது கூட்டங்களில் ஆட்சேர்பதற்காக தலைக்கு இரண்டாயிரம் ரூபாய்களும் இலவச உணவுப் பொதியும் மகிந்த வழங்கிவருகிறார். குண்டுகளின் விளை நிலமாகவிருந்த தெற்கில் ‘அமைதியான அச்சமில்லாத வாழ்க்கையை’ ஏற்படுத்தித்தியவர் மகிந்த ராஜபக்சவே என அப்பாவி சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் கருதுகின்றனர். பயங்கரவாதத்தை அழித்து தமிழ் மக்களையும் சிங்க்ள மக்களையும் காப்பாற்றிய கதாநாயகன் மகிந்த ராஜபக்சவே என்று மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தை இன்றும் நம்பியிருக்கின்ற இன்னொரு பகுதியினர் மகிந்தவின் ஆதரவாளர்கள்:.

குறித்தவு மக்கள் செல்வாக்கு, பணபலம் என்ற இரண்டு கூரிய முனைகள் மட்டும் மகிந்த மீண்டும் பிரதமாராகி அதிகாரத்தைக் கையகப்படுத்தப் போதுமானவை அல்ல.
மகிந்த மைத்திரி ஆகிய இருவரும் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி இலங்கையில் நிறுவனமயமான இரண்டு கட்சிகளில் ஒன்று. கட்சிக்கான பாரம்பரிய வாக்குப் பலத்தை இழந்துள்ள மகிந்த ராஜபக்ச அதிக ஆதரவாளர்களைக் கொண்ட கட்சி ஒன்றில் பிரதமராகத் தெரிவு செயப்படுவதற்கான வாய்ப்புக்கள் அருகிப் போயுள்ளன

எது எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்சவைப் பொறுத்த வரையில் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மக்களிடமிருந்து சூறையாடிய பணத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்குமான இறுதிச் சந்தர்ப்பம் இது. தவிர போர்க்குற்ற மிரட்டல்களின் அச்சத்திலிருந்து விடுதலை பெறுவதற்கும் இதுவே கடைச் சந்தர்ப்பம்.

எதிர்வரும் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், சிறீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மகிந்த குழுவின் ஆதரவு தேவை. அந்த நிலையில் மகிந்த பிரதமாரகும் நிபந்தனையுடனேயே ஆதரவு வழங்கப்படும்.

இலங்கை அரசியல் யாப்பின் அடிப்படையில் ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி மரணித்தால், பிரதமரே அடுத்த ஜனாதிபதியாவார்.

மைத்திரிபாலவினதும் ஆதரவாளர்களதும் அச்சம் இதனை அடிப்படையாகக் கொண்டதே.

இதனால், கட்சியிலுள்ள ஆதரவாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதும், தேர்தலில் போட்டியிட்டுப் பாராளுமன்றம் செல்வதுமே மகிந்தவின் முதல் நோக்கம். அது பெரும்பாலும் மகிந்த பிரதமாரவதற்கான கதவுகளைத் திறந்துவிடும் என்பது அவரது எதிர்பார்ப்பு,.
மேற்கு ஏகதிபத்தியங்கள் மகிந்த ராஜபக்சவின் எதிரிகள் அல்ல. மீண்டும் மகிந்த ஆட்சியமைத்தால் அவரைப் பயன்படுத்திக்கொள்ளவும் அவை தயங்கமாட்டா. இலங்கையில் தன்னைப் போலவே பல்தேசிய வியப்பார நிறுவனங்களையும் தடையின்றிச் சூறையாட அனுமதித்தால் மகிந்த ஏகாதிபத்தியங்களின் நண்பனாகிவிடுவார்.

இந்தக் கணிப்பின் அடிப்படையிலேயே இலங்கையின் அதிகாரவர்க்க அரசியல் இன்று நகர்கிறது.

தமிழ் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரையும் ஏகாதிபத்தியங்களின் நேரடி அடியாள் படைகள் போலவே செயற்படுகின்றன. மைத்திரி-ரனில் ஆதரவு அல்லது மகிந்த ஆதரவு என்ற இரண்டு துருவங்களே அரசியலாக வெளிப்படுகின்றது. மைத்திரி ஆட்சியில் கிடைத்த சிறிய ஜனநாயக இடைவெளியைக் கூட மக்களை அணிதிரட்டி மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராட மறுக்கும் வாக்குப் பொறுக்கும் அரசியல் தலைமைகளுக்கு இதனைத் தவிர வேறு அரசியல் வழிகள் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதனது உடையும் பிரிவுகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற அனைத்து அரசியல் சக்திகளும் ஏகாதிபத்தியங்களைச் சார்ந்துள்ள சிங்கள பௌத்த அரசியல் கட்சிகளைச் சார்ந்தே இயங்கிவருகின்றன. சுன்னாகத்தில் நடத்தப்படும் அழிப்பு, சம்பூர் அனல் மின் நிலையம், பல்தேசியச் சூறையாடல்கள் போன்ற எரியும் பிரச்சனைகளைக் கண்டுகொள்ள மறுக்கும் இக் கட்சிகள் அரசுகளுக்கு எதிரானவை அல்ல. மக்களின் எதிர்ப்புணர்வை வாக்குகளாக மாற்றும் வழிமுறையைத் தெரிந்து வைத்திருபவை.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தக் கையகப்படுத்துவதற்கான சாத்தியங்கள் முற்றாக அற்றுப் போய்விடவில்லை.

2 thoughts on “மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா? : வியாசன்”

 1. மகிந்த அமெரிக்க ஆதரவு ஆள் என்றால்
  1. மகிந்தவிற்கு எதிரான பிரச்சாரங்களிற்கு அமெரிக்க ஆதரவு இருந்தது ஏன்? இதனை மகிந்தவே சொன்னாரே?
  2. மைத்திரி வந்தவுடன் மிகுந்த ஆரவாரத்துடன் அமெரிக்க உயர் தலைவர்கள் விஜயம் செய்தது ஏன்?
  3. மகிந்தவால் ஆரம்பிக்கப்பட்ட சீன ஆதரவுடனான பல திட்டங்கள் இப்போது முடக்கப்படுவது ஏன்?
  மகிந்த காலத்தில் அமெரிக்கமுகாமால் தொடங்கப்பட்ட ஜிஎஸ்பி சலுகை ரத்து என்ற தடை இப்போது மீளாய்வு செய்யப்படுவது ஏன்?

 2. A Voter,
  மகிந்தவைப் பயன்படுத்தி இனப்படுகொலை நடத்தப்பட்டது
  மகிந்தவின் தேவை முடிந்த போது மைத்திரியைக் கொண்டு வந்தார்கள்.
  மகிந்தவை முற்றாக அழிக்க மாட்டார்கள், மைத்திரியை மிரட்ட மகிந்த தேவை.
  இதுவே கூறப்பட்டுள்ளது. தவிர, நீங்கள் கூறுவது போல சீனாவின் எந்த திட்டமும் நிறுத்தப்படவில்லை. போர்ட் சிட்டி தொடர இலங்கை அனுமதித்துள்ளது. சீனாவின் பட்டுப் பாதையில் இலங்கை சீன இராணுவங்கள் இணைந்து கடந்தவாரம் பயிற்சி நடத்தியுள்ளன.

Comments are closed.