ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ – அருவருக்கும் தமிழ்த் திமிர்

IMG_1684லூசியம் உள்ளூராட்சி சபையின் வீட்டுவாரிய உத்தியோகத்தர் ஒருவரினை ‘ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ’ (‘Go Back To Africa’) என திரு. தம்பித்துரை உதயகாந்தன் என்ற ஈழத்தமிழர் ஒருவர் இனவாத ரீதியில் ஆங்கிலத்தில் திட்டி வார்த்தை துஷ்பிரயோகம் செய்தமை மிகவும் கண்டனத்துக்கு உள்ளாகியிருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறான வார்த்தைத் துஷ்பிரயோகங்களானது நாடுகடந்து வாழும் ஒவ்வொருவரையுமே இழிவுபடுத்துவதாக அமையும்.

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் தோற்றுவித்த சமூகச் சிந்தனை உரிமைக்கான அரசியலாக அமையாமல் இனவாத அரசியலாக்கப்பட்டதன் பின்னணியில் இக்குறித்த நபர் போன்ற நூற்றுக்கணக்கானவர்களைக் காணலாம்.

மேற்கூறிய சம்பவத்தை மிகத்துல்லியமாக ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்த சனல்-5 (Channel 5 TV) என்ற தொலைக்காட்சி நிறுவனத்தினர் கடந்த மாதம் 29ம் திகதி இரவு 9.00 மணிக்கு “கொடுங்கனவு குடியிருப்போர் மற்றும் சேரி நில உரிமையாளர்கள்” (Nightmare Tenants and Slum Landlords) என்ற சமகால உண்மை தொடர் நிகழ்வொன்றில் ஒளிபரப்பியதன் மூலம் இவரின் பலவிதமான மோசடி மற்றும் பல சமூகவிரோத செயல்கள் அம்பலமாகியுள்ளது.

இந்த நபரானவர், லூசியம் ஆஸ்பத்திரிக்கு அண்மித்திருக்கும் “ஸ்பைஸ் குரோவ்” (Spice Grove) என்ற கட்டிடத்தை தனக்கே உரித்தானதென போலியாக கூறிக்கொண்டு, உள்ளூராட்சி சட்ட தடை உத்தரவையும் மீறி, சட்டத்திற்கும் மனித நேயத்திற்கும் முற்றிலும் முரணாக வாழ்விட அடிப்படை வசதிகளெதுவுமற்ற நிலையில் சக தமிழர்கள் பலரையும் அங்கு குடியமர்த்தி, வாடகையாக பல இலட்சம் பவுண்ஸ் பணத்தை சூறையாடுவது தொடர்பாக விசாரிக்க சென்ற சமயமே குறிப்பிட்ட லூசியம் கவுன்சிலின் (உள்ளூராட்சி சபை) வீட்டுவாரிய பெண் உத்தியோகத்தரொருவர் இவரின் இனவாத வாய்வேட்டுக்கு உள்ளாகியமை ஒளிப்பதிவாகி ஒளிபரப்பப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு சொந்தமானதென கூறப்படும் லூசியம் வேயிலிருக்கும் (Lewisham Way) `Morleys` என்ற பெயரில் இயங்கும் ஒரு கோழி உணவகக் கட்டித்தின் மேல் மாடியிலும் அதற்கடுத்த கட்டிடத்திலும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் நிகழ்வதை விசாரிக்க சென்ற லூசியம் கவுன்சிலின் கூறப்பட்ட வீட்டுவாரிய பெண் உத்தியோகத்தர் அங்கு நிலவும் மோசமான வதிவிட நிலைமைகண்டு அதிர்ச்சியடைவதனையும், வதிவிட தடை உத்தரவொன்றினை உடன் பிறப்பிப்பதனையும் அதே தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடரில் காணக்கூடியதாகவுள்ளது.

மேற்குறித்தவர் புலம்பெயர் தமிழ்த் தேசியம் உருவாக்கிய பிழைப்புவாதிகளின் குறியீடே தவிர தனி நபரல்ல! அப்பாவித் தமிழர்களின் பணத்தைதை ‘தமிழ்த் தேசியத்தின்பெயரால் சூறையாடும் நூற்றுக்கணக்கான பிழைப்புவாதிகளின் சாம்ராஜ்யத்தின் உப பிரிவுகளின் ஒன்றே இவரும்.

மக்களின் சொத்தை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
http://www.channel5.com/shows/nightmare-tenants-slum-landlords/episodes/episode-6-572