எம்வீசன்சீ கப்பல் மூலம் கனடாவுக்குள் வந்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
முன்னை நாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரை நாடுகடத்தும் தீர்மானம் குறித்து புலி ஆதரவு அமைப்புக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த இதுவரை முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
32 வயதுடைய குறித்த தமிழ் அகதி 1991ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் புலியில் இருந்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகளை கனடா பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்தள்ளதால் இந் நபர் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் அவருக்கான அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த அகதி இவ் நிராகரிப்பினை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அவ்வழக்கிலும் அவர் தோல்வி அடைந்தமையைத் தொடர்ந்தே இவர் நாடுகடத்தப்படவுள்ளார்.
இந் நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாமல் இருப்பதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கனேடிய தமிழ் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாலப்பிள்ளை அவர்கள், விடுதலைப் புலிகளின் கீழ் மட்ட உறுப்பினராக இருந்த குறிப்பிட்ட இந்த நபரால் கனடாவின் பாதுகாப்புக்கு பங்கம் வருமா என கேள்வியெழுப்பியுள்ளார். பிரஸ்தாப நபரை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் அவருக்கு உயிராபத்து இருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







