கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் போர்க் குற்ற விசாரணைகள் குறித்து சர்வதேச சமூகம் கூறும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.அத்துடன், ஐ.நா.தலைமை அலுவலகத்தின் 30 ஆவது மாடியில் இடம் பெற்ற இரகசியச் சந்திப்பு குறித்தோ அல்லது அதில் கலந்து கொண்டவர்கள் குறித்தோ தனக்கு தெரியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மகிந்த சமரசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.அமைச்சர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் முழுமை அடையும் இறுதித் தருணத்தில் உள்ளது.
ஆனாலும் அதற்கு முன்னர் அத்திட்டம் குறித்து நாம் சிவில் சமூக அமைப்புகள், புலமையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி வருகின்றோம்.அதேவேளை சர்வதேச அளவிலும் தேசிய செயற்பாட்டு திட்டங்களின் அனுபவங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.தேசிய செயற்பாட்டு திட்டத்தினை அமுல்படுத்தும் உள்ளக முகவர் குழுவிற்கு பொலிஸ்மா அதிபர் தலைமை வகிப்பார். அத்துடன் பல்வேறு அமைச்சர்களின் பிரதிநிதிகள் இக்குழுவில் அங்கம் வகிப்பர்.
தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் முதல்வரைபு வடிவமைக்கப்பட்டு வருகின்றது. இது குறித்த சந்திப்பொன்று இந்தவார இறுதியில் நடைபெறவுள்ளது.அந்த உயர்மட்டச் சந்திப்பின் பின்னர் திட்ட முதல்வரைபு அமைச்சரவையின் அனுமதிக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்.இதன் பின்னர் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு ஏனைய அமைச்சுகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை.
தேசிய செயற்பாட்டுத் திட்டமானது அமுல்படுத்தப்பட்ட பின்னர் அதன் செயற்பாடுகள் தேசிய குழு ஒன்றினால் கண்காணிக்கப்படும்.அத்துடன் இதன் செயற்பாடுகள் குறித்து ஜெனீவாவிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிரமமாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சுயாதீனமற்றவையென சர்வதேசத்தினால் கூறப்படும் குற்றச் சாட்டுகளை நாம் மறுக்கின்றோம்.
இலங்கையின் இறுதிக்கட்ட மோதல்களின் போது போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனால் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும் சிலர் கூறுகின்றனர்.சர்வதேசம் எனும் போது 188 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. சபையினைத்தான் நாம் கருத்தில் கொள்ள முடியும்.
இந்நிலையில் தளர்வுப் போக்ககாக ஒருசிலர் கூறும் கருத்துகளை நாம் கவனத்தில் கொள்ள முடியாது. இருந்தாலும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்கள் தொடரும் நிலையில் நாம் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.
இவ்விடயம் குறித்து ஐ.நா.பாதுகாப்புச் சபையில் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகளுடன் நான் கலந்துரையாடி அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளேன்.
அத்துடன் உள்ளூர் விசாரணை (கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு) குறித்தும் நான் விளக்கி கூறியுள்ளேன். அது குறித்து ஐ.நா.பாதுகாப்புச் சபையின் பிரதி நிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்படுதற்கு முன்னர் அதன் செயற்பாடு குறித்து சர்வதேச சமூகம் விமர்சிப்பது தவறான விடயமாகும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பில் மட்டும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. வட பகுதிக்கு சென்றனர், கிழக்கில் விசாரணைகளை மேற்கொண்டனர் தெற்கிற்கு சென்றனர்.
இவ்வாறு பரந்தளவிலான விசாரணைகளை மேற்கொள்ளும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நாம் அமுல்படுத்துவோம். அது மிகவும் முக்கியமானது.
இதேவேளை ஐ.நா.பாதுகாப்புச் சபையில் நான் நேரடியாக அரசியல் தீர்வு குறித்து பேசவில்லை. ஆனால் வடக்கு கிழக்கின் பொருளாதார அபிவிருத்தி, அரசுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுகள் குறித்து அங்கு விளக்கியுள்ளேன்.
சர்வதேச அளவில் செயற்பட்டுவரும் பயங்கரவாத எச்சங்களை அழிப்பதற்கு நாம் இருமுறைகளை பின்பற்றுகின்றோம்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் அதேநேரம் நாடுகளின் அரசுகளுடனும் நெருங்கிய உறவை பேணிவருகின்றோம்.
புலம்பெயர் தமிழ்களை அழைத்து இதுகுறித்து நாம் விளக்கம் அளித்துள்ளோம்.அத்துடன் தொடர்ந்து அவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றோம்.
சில இடங்களில் இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றது.அந்நாட்டுச் சட்டத்தின்படி அவ்வாறான ஆர்ப்பாட்டங்களை தடுக்க முடியாது.
இதேவேளை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சிலர் தற்பொழுதும் வெளிநாடுகளில் செயற்பட்டுக்கொண்டுதான் உள்ளனர்.அவர்கள் பணம் சேகரித்து ஆயுதக் கொள்வளவில் ஈடுபடுவதாக நாம் அறிகின்றோம்.
ஐரோப்பாவின் சில நாடுகளில் புலிகளுக்கு ஆதரவான சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து நாம் அறிகின்றோம். நோர்வேயில் கைதுசெய்யப்பட்ட இருவர் மீது யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் சர்வதேசத்திலுள்ள புலம்பெயர் தமிழர்களுடன் நாம் நெருங்கிய உறவைப் பேணுவதுடன், அவர்களை சமூகத்துடன் இணையுமாறு அழைக்கின்றோம்.
கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் இன்று எவ்வாறு பணிகளை மேற்கொள்கின்றார் என்பது அனைவருக்கும் தெரியும். இதேபோல ஜோர்ஜ் மற்றும் தயா மாஸ்ரர் ஆகியோரும் சமூகத்துடன் இணைந்து செயற்பட முடியும். அதற்கான சந்தர்ப்பத்தினை நாம் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில்,சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவொன்று ஐ.நா. செயலரையும் இலங்கை மீதான போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. செயலருக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவையும் சந்தித்தாகக் கூறப்படுவது குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டபோது அமைச்சர் அதற்கு பதிலளிக்கையில்;
ஐ.நா. செயலகத்தின் 30 ஆவது மாடியில்தான் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு நடைபெற்ற இரகசியச் சந்திப்புக் குறித்தோ அதில் எவர் கலந்துகொண்டனர் என்பது குறித்து எனக்குத் தெரியாது. வேண்டுமென்றால் சட்டமா அதிபரிடம் அது குறித்த தகவல்களைப் பெற முடியும் எனத் தெரிவித்தார்.







