மணிக்பாம், கதிர்காமர் நிவாரணக்கிராமத்தில் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்க செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பொதுமக்கள் சமைத்து உண்பதற்கு அரிசி, பருப்பு, மா போன்ற பொருட்கள் வழங்கப்படுகின்றது. ஏனைய பொருட்களை வாங்குவதற்கு எம்மிடம் பணம் இல்லை. நாம் தொழிலும் செய்ய முடியாத நிலை உள்ளது. இடம் பெயர்ந்து வந்த எமக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவேண்டும். எமது பிள்ளைகள் கல்வி கற்பதற்கு அப்பியாசக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. ஒரு கொப்பிலேயே எட்டு பாடங்களையும் எழுதவேண்டிய நிலை காணப்படுகின்றது. பெருமளவானோர் தங்க வைக்கப்பட்டுள்ளமையால் குளிப்பதற்கு கூட பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. நாம் எங்கும் வெளியேற முடியாத நிலை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொதுமக்களின் கருத்துக்கள் குறித்து வவுனியா செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸிடம் வினவப்பட்ட போது இடம் பெயர்ந்த மக்களுக்கு ஆரம்பக்கட்டமாக தற்போது இத்தகைய வசதிகளை வழங்கியுள்ளோம். தற்போதைய நிலையில் அதிகபட்சமாக வழங்கிகூடியவற்றை நாம் வழங்கி வருகின்றோம் என்று தெரிவித்தார்.
வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மேலும் 40ஆயிரம் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 1000 ஏக்கர் நிலத்தினை நாம் ஏற்பாடு செய்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 2, 3 கிழமைகளுக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கின்றோம் என்றும் அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் கூறியுள்ளார்.
வவுனியாவில் இடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 13 நலன்புரி நிலையங்களிலும் போதியளவு சுகாதார வசதிகள் இல்லையெனவும் இங்கு தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதென்றும் மணிக்பாம் முகாமில் கடமையில் இருந்த வைத்திய உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். முகாம்களுக்கு செல்வோர் தொண்டை கரகரப்புடன் கூடிய காய்ச்சலுக்க உள்ளாவதாகவும் உரிய சிகிச்சைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.