அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஜனாதிபதிக்கு சந்தேகம் வலுக்கின்றது.
அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மீது ஜனாதிபதி பலத்த சந்தேகம் கொள்ளத் தொடங்கியிருப்பதாக அலரி மாளிகையின் உயரதிகாரியொருவர் மூலமாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போதைய நிலையில் அரசாங்கத்தில் இருக்கும் தனது குடும்ப உறுப்பினர்களில் பசில், நிரூபமா ஆகியோரைக் கூட நம்ப முடியாத நிலையில் ஜனாதிபதி இருந்து கொண்டிருப்பதாக குறித்த உயரதிகாரி தெரிவிக்கின்றார்.
தனக்குப் பின் நாமலைப் பதவிக்குக் கொண்டு வரும் திட்டத்துடன் செயற்படும் ஜனாதிபதி செயற்படுவதால் தற்போதைக்கு பசில் ராஜபக்ஷ பெரும்பாலும் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகியே நடந்து கொள்கின்றார்.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு கடல்நீர் நிரப்பும் உற்சவம், துறைமுகத் திறப்பு விழா போன்றவற்றில் கலந்து கொள்ளாது தனது அதிருப்தியை வெளிக்காட்டிய அவர், வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்களிப்புத் தினத்திலும் நாட்டில் இருக்கவில்லை.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அவ்வாறான செயற்பாடுகள் காரணமாக இதுவரை அடக்கி வாசித்துக் கொண்டிருந்த அரசாங்கத்தின் அமைச்சர்களும் தங்கள் அதிருப்தியை ஓரளவுக்கு பகிரங்கமாக வெளிக்காட்டும் துணிச்சலைப் பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போதைக்கு அரசாங்கத்தினுள் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் ஒரு தரப்பாகவும், அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிரூபமா ராஜபக்ஷ ஆகியோர் ஒரு தரப்பாகவும் செயற்படுகின்றனர். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வரும் ஊவா மாகாண சபையின் முதலமைச்சருமான சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் இதுவரை எந்தப் பக்கமும் சாராத நிலையில் இருந்தாலும், அண்மையில் ஹம்பாந்தோட்டையில் வைத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அரசாங்கத்தின் போக்குகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மறுபுறத்தில் அமைச்சர் பசிலின் ஏற்பாட்டில் இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து தங்களுக்கு ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி அண்மையில் ஹம்பாந்தோட்டை நகரில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் நடாத்தியிருந்தார்கள்.
இவ்வாறான நிலையில் அரசாங்கத் தரப்பின் உயர்மட்ட குடும்பத்தின் கருத்து மோதல்கள் பங்காளிக் கட்சிகளுக்கு மத்தியிலும் பிளவை ஏற்படுத்தும் நிலையில் வலுப்பட்டு வருவதையே அண்மைக்கால நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.
அமைச்சர் விமல் வீரவங்ச பாதுகாப்புச் செயலாளருடனான நெருக்கம் காரணமாக நாமல் அணியின் பிரச்சார பீரங்கியாக மாற, அவருடைய கட்சியின் அவரைத் தவிர்ந்த ஒரே பாராளுமன்ற உறுப்பினரான அசல சுரங்க ஜாகொட அமைச்சர் பசில் அணியில் இணைந்து கொண்டார். அதன் காரணமாக இருவரும் தற்போது தேசிய சுதந்திர முன்னணியைப் பிளவுபடுத்திக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் ஹக்கீம் தலைமையிலான ஒரு அணி நாமலுக்கு ஆதரவாகவும், அதன் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தலைமையிலான ஒரு அணி பசில் ராஜபக்ஷ சார்பாகவும் பிளவுபட்டுச் செயற்படுகின்றது. ஏனைய கட்சிகளின் நிலையும் அதுதான்.
அவ்வாறான நிலையில் தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை விமர்சிப்போர் மற்றும் அவற்றிலிருந்து ஒதுங்கியிருப்போர் தொடர்பில் ஜனாதிபதி கடும் அதிருப்தியும் பலத்த சந்தேகமும் கொண்டிருப்பதாக அலரி மாளிகையின் தகவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் உறுதிப்படுத்துகின்றார்.
அமைச்சர் பசிலுக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படும் அமைச்சர்கள், அதிருப்தியுற்றுள்ள சிரேஷ்ட அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள், ஆளுந்தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போர் தற்போது புலனாய்வுப் பிரிவின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் என்பவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட உயர்பதவிகளில் இருப்போரும் அதில் உள்ளடங்குகின்றனர்.
மேலும் சந்தேகத்துக்கிடமான சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஆளுந்தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களும் தற்போது பாதுகாப்பு அமைச்சின் தொடர்பாடல் பிரிவினால் தீவிரமாக ஒட்டுக் கேட்கப்படுகின்றதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
அதற்கு மேலதிகமாக எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக்கேட்கப்பட்டு அவர்களுக்கெதிரான தகவல்கள் திரட்டப்படுவதுடன், அதனைக் கொண்டே அவர்களை மிரட்டிப் பணிய வைக்கும் உத்தியையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அலரி மாளிகை அதிகாரி மேலும் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிகழ்வுகளை அவதானிக்கும் போது அரசாங்கத்துக்குள் நிலவும் முரண்பாடுகள் காரணமாக அரசாங்கம் இன்னும் இரண்டொரு வருடங்களில் தானாகவே கவிழ்ந்து விடும் என்று அண்மையில் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டது உண்மைதான் என்றே எண்ணத் தோன்றுகின்றது.








மகிந்த ராஜாவுக்கும் மிக விரைவில் முள்ளிவாய்க்கால் வந்து சேரும். பிரபாகரன் முப்பது வருடங்கள் சகித்துக் கொள்ளப்பட்டார். மகிந்த முப்பது மாதங்கள் கூட சகிக்கப்படமாட்டார்.
மகிந்த அம்பாந்தோட்டையில் கட்டிவைத்துள்ளார் ஒரு பெரிய வாய்க்கால். நீர் நிரப்பியாச்சு ஆள் தாளவேண்டியதுதான் பாக்கி. தானாக அல்லது தள்ளிவிட்டு தாளப்போவது நிச்சயம்.