இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜயரத்ன கூறியிருப்பது எந்தவித ஆதாரமற்ற தகவல் என்றும் இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என, இந்திய வெளியுறவு துறையின் பேச்சாளர் சிறிவிஷ்ணு பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்துள்ள காங்கிரஸ் ஆட்சி இலங்கையுடன் முரண்படுவதான தோற்றப்பாட்டை உருவாக்குதல் தேர்தல்கால கூட்டு நாடகமோ என பரவலான கருத்து நிலவுகிறது. வன்னிப்படுகொலைகளின் போது இவ்வாறான பல நாடகங்களை இலங்கை இந்திய – அரசுகள் பின்னதாக ஒப்புக்கொண்டமை தெரிந்தததே.
“இலங்கை அரசு தெரிவித்துள்ளது போல், தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் எதுவும் செயல்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்துள்ள தகவலை உறுதியாக மறுக்கிறோம். இது தொடர்பான தகவல் எதையும், இந்தியாவுடன், இலங்கை பகிர்ந்து கொள்ளவில்லை.எனவே, ஊகத்தின் அடிப்படையில் ஆதாரமற்ற இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை, சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும்” என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார்.
இதேவேளை தமிழக காவல்துறை ஆணையாளர் லத்திகா சரணும் சிறிலங்கா தலைமையை அமைச்சரின் கூற்றை முற்றாக மறுத்திருந்தார்.
இலங்கையின் பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கூற்றுத் தொடர்பாக இந்தியா உத்தியோகபூர்வமாக தமது மறுப்பையும் ஆட்சேபனையும் தெரிவித்திருப்பதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.







