தமிழ் மக்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு பாதுகாப்பு படையினரால்
பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றமை இனவாத அடிப்படையிலான செயலாகுமெனவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் முன்வர வேண்டுமெனவும் நாம் இலங்கையர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் குறித்து நாம் இலங்கையர் அமைப்பு பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
வடக்கில் ஒரு குடும்பத்திடம் பாதுகாப்பு படையினர் 4 புகைப்படங்களை எடுப்பதாக நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினர் உதுல் பிரேமரட்னவின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் கிராம சேவகர், பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் வீட்டுரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
வீட்டுக்கு வழங்கப்பட்ட புகைப்படம் இராணுவத்தினர் கேட்கும்போது வழங்கும் வகையல் முன் சுவரில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக நாம் இலங்கையர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு புகைப்படம் வைத்திருக்காவிட்டால் அவர்கள் அந்த வீட்டு உரிமையாளர்கள் அல்ல என கருதப்படுமென கூறப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் மாத்திரம் புகைப்படம் எடுத்து பதிவு செய்யப்படுகின்றமை அனைவரும் அனைவருக்கும் சமன் என்ற அடிப்படை உரிமை மீறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள நாம் இலங்கையர் அமைப்பு அது இனவாதத்தை தூண்டும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.







