ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கச் செல்லும் வடபகுதி தமிழ் மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுவதுடன் இராணுவத்தினர் விசாரணை நடத்திய பின்னரே சாட்சியளிக்க அனுமதிக்கப்படுவதாக நாம் இலங்கையர் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.
வடபகுதி தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கச் செல்லும் போது, சாட்சியமளிப்பதற்கு முன்னர் அவர்களை இராணுவத்தினர் பலவந்தமாக புகைப்படம் எடுப்பதும், அவர்களிடம் விசாரணை நடத்துவதும் பாரதூரமான தவறு என நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உந்துல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
மருதானை சீ.எஸ்.ஆர். மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு உரையாற்றிய உந்துல் பிரேமரத்ன,
நாம் இலங்கையர் என்ற அமைப்பு நாட்டில் தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்த பொது சக்தியாகும். யுத்தத்தின் பின்னர் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய குறுகியகால, நீண்டகால செயல்திட்டங்கள் தொடர்பாக நாம் கருத்து வெளியிட்டிருந்தோம்.
முக்கியமாக வடக்கு மக்களின் பிரச்சனைகள், மீள்குடியமர்த்தல், வடபகுதியில் அழிக்கப்பட்ட பாடசாலைகள், தமிழ் அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள் ஆகிய விடயங்களை கையாளும் முறையிலுள்ள அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை குறித்து நாம் கருத்து வெளியிட்டிருந்தோம்.
யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற போதிலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வும் கிட்டவில்லை. அதேபோல், இலங்கையின் தேசிய சிக்கலுக்கான தீர்வைக் கண்டறிய நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தற்போது பாரதூசிக்கல்கள் உருவாகியுள்ளன. ஆணைக்குழு தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையிலான பல சம்பவங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. இவை சீரற்ற விடயங்களாகவே நாங்கள் பார்க்கிறோம்.
உதாரணமாக சில தினங்களுக்கு முன்னர் பூசா முகாமில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட போது அந்த சாட்சியப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க ஊடகங்களுக்கு இடமளிக்கப்படவில்லை. இதனைவிட பாரதூரமான விடயம் கடந்த 9 ஆம் திகதி மன்னார் மாவட்ட சாட்சிப் பதிவின்போது இடம்பெற்றது. மன்னார் மாவட்ட செயலகம், மாந்தை பிரதேச செயலகம், பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் இடம்பெற்றன. சாட்சியமளிக்க 1200இற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். 9ஆம் திகதி பண்டிவிரிச்சான் பிரதேசத்தில் நடைபெற்ற சாட்சிப் பதிவின் போது சாட்சிமயளிக்க வந்திருந்த மக்களை இராணுவத்தினர் பலவந்தமாக புகைப்படம் எடுத்துள்ளனர். அத்துடன், அவர்களது முகவரி, ஆணைக்குழுவில் எதனைக் கூறப் போகின்றீர்கள் போன்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
காணாமல் போன பிள்ளைகள் தொடர்பாகவும், தீர்க்கப்படாத தமது பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆணைக்குழுவில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க வந்திருந்த அப்பாவித் தமிழ் மக்களை இவ்வாறு பலவந்தப்படுத்துவது எந்தளவு நியாயமானது? இவ்வாறு அச்சுறுத்தப்பட்ட பின்னர் நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
இவை மாத்திரமல்ல. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பல கொலைகள் இடம்பெற்றன. இந்தக் கொலைகள் குறித்து இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இவ்வாறான நிலைமையில் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சிமளிக்கச் சென்ற மக்களை இராணுவத்தினர் இவ்வாறு விசாரிப்பதானது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
இதனால் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்கள் பகிரங்கமாக சொல்வதற்கு இடமளிக்க வேண்டும் எனவும், தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்க வேண்டாம் எனவும் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை அச்சுறுத்த வேண்டாம் எனவும் நாம் இலங்கையர் அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது எனவும் உந்துல் பிரேமரத்ன இதன்போது தெரிவித்தார்.







