அகதியாக விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது சோகமாகத் தான் இருந்தேன். என்னை விசாரணை செய்த அதிகாரிக்கு தத்தித் தடுமாறி ஆங்கிலத்தில் பதிலளித்தேன். அம்மா திட்டித்திட்டி ஆங்கிலம் படிக்கச் சொன்ன போது நான் படிக்காமல் விட்டத்தன் வலியை முதல் தடவையாய் உணர்ந்தேன். ஏயர்போட்டில் வைத்து அம்மா பாசமும் பொத்துக்கொண்டு வந்து தொலைத்தது. அப்போது பார்த்து என்னை விசாரித்த வெள்ளை அதிகாரி எனது சிற்றியின் பெயர் என்ன என்று கேட்க நானோ மைதிலி என்றேன். இலங்கை வரைபடத்தை தேடிப்பார்த்த அவர் நான் இலங்கையிலிருந்து வரவில்லை அப்படி ஒரு சிற்றி இலங்கையில் இல்லை என்கிறார்.
அபோது தான் விளங்கியது அவர் சித்தியின் பெயரைக் கேட்கவில்லை எனது நகரத்தின்(City) பெயரைக் கேட்கிறார் என்று. மைதிலிச் சித்திக்கு இந்த கதையைச் சொல்லிச் சிரிக்க வேண்டும் என்றால் 25 வருசங்களை நேரமே இல்லாமல் ஓட்டி முடித்துவிட்டேன். இந்த சம்பவத்தை எனது குழந்தைகளுக்குச் சொன்னால் அப்பாவின் மனம் நோகக்கூடாது என்பதற்காக நாடகத் தனமாகச் சிரித்துவிட்டுப் போவதை நினைத்து அழுதுகொள்கிறேன். கலையும் கலாச்சாரமும் வாழும் சூழலோடு சம்பந்தப்பட்டது என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்.
25 வருடங்களில் கஸ்புஸ் என்று ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டேன். எனக்குப் பின்னால் கனடாவுக்குப் போக விமானம் ஏறிய சுரேஸ் ஜேர்மனியில் பிடிபட்டு பிரான்சுக்கு வந்துவிட்டான் அவனும் கஸ்புஸ் என்றே பிரஞ்சு மொழியில் பேசுவதாகச் சொல்லுகிறான். இருவருக்கும் மொழி விசயத்தில் கஸ்புஸ் தான் ஒற்றுமை. ஒவொரு வசனத்திலும் இலக்கணப் பிழை, சொல்லுப் பிழை, உச்சரிப்புப் பிழை என்று பல பிழைகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் சத்தியமாய் கஸ்புஸ் என்று தான் மொழிகளைப் பேசிக்கொள்கிறாம். இப்போது சிற்றி என்றால் ரொரன்டோ என்று ‘டனால்’ என்று சொல்லும் அளவுக்கு 25 வருட வளர்ச்சி இருக்கிறது என்பது பெருமைக்குரிய விடயம் தானே.
சுரேசின் கதையோ தனியானது. கனடாவுக்கு கனவுகளோடு கொழும்பில் விமானத்துக்குள் நுளைந்தவன் ட்ரான்சிட்டில் ஜேர்மனியில் இறங்கியிருக்கிறாரன். ஏயார்போட்டில் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்த சுரேசைப் பார்த்த குடிவரவு அதிகாரி எந்த நாடு என்று ஆங்கிலத்தில் வினவியிருக்கிறார். சுரேஸ் நெஞ்சை நிமிர்த்தி சிறீ லங்கா என்று சொல்லியிருக்கிறான். அதிகாரியோ அப்படியா, அரசியல் தஞ்சம் கேட்கத்தானே வந்திருக்கிறாய் என்றார். சுரேசோ இல்லை என்றிருக்கிறான். அதிகாரியோ நான் கம்யூனிஸ்ட், உங்கள் நாட்டுப் பிரச்சனை எனக்குத் தெரியும், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அகதியாக ஜேர்மனிக்குள் அனுமதிக்கிறேன் என்று ஆங்கிலத்தில் கூறியிருக்கிறார்.
சுரேஸ் இல்லை அகதியாக எல்லாம் வரவில்லை என்றதும், அதிகாரி ஒத்துக்கொள்ளவில்லை, மிகவும் அன்பாக நீ எனக்குத் தம்பி மாதிரி நான் உனக்கு எல்லா அலுவல்களையும் செய்து தருகிறேன் என்று ஒரு நீண்ட லெக்சர் அடித்திருக்கிறார். ஆங்கிலத்தில் எனக்கு நூறுக்கு முப்பது என்றால் சுரேசுக்கு 20 ஐத் தாண்டுவதில்ல்லை. அரை குறையாக விளங்கிக்கொண்ட சுரேஸ் யா, யா என்றிருக்கிறான். பாஸ்போர்ட்டை வாங்கிய அதிகாரி, அரசியல் அகதியாக்கி ஜேர்மனியில் ஒரு முகாமுக்கு அனுப்பிவிட்டார். விமான நிலையத்துக்கு வெளியால் சுரேஸ் போகும் போது மேலே கனேடிய விமானம் பறந்துகொண்டிருந்தது.
கண்ணீரும் கம்பலையுமாக ஜேர்மனிக்குள் நுளைந்த சுரேசுக்கு அதிகாரியின் மீது மட்டுமல்ல கம்யூனிசத்தின் மீதும் வெறுப்பு ஏற்பட்டது.
சுரேஸ் அங்கிருந்து பிரான்சுக்கு அவனது மச்சானை நோக்கிச் சென்றுவிட்டான். நானும் எனது பால்ய நண்பனும் மட்டுமல்ல, அக்கா, தங்கை என்று தொடர்ந்து வந்தவர்கள் எல்லாம் திக்குத் திக்காக சிதறிவிட்டோம். இப்போது தான் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாக அப்பப்ப இணைந்து கொள்கிறோம். பேஸ்புக், ஸ்கைப், வைபர் என 24 மணித்தியால தொடர்பு இருந்தாலும் கலாச்வ்சாரமே எம்மை இணைக்கிறது என்று சுரேஸ் சொல்வான். எனக்கு இன்னும் கலாச்சாரம் என்றால் என்னவென்று விளங்கவில்லை. மொழியை கஸ்புஸ் என்று கடினமில்லாமல் விளங்கப்படுத்தலாம். ஆனால் கலாச்சாரம் என்றால் எப்படி விளங்கப்படுத்துவது என்று தெரியாமல் முழிக்கிறேன்.
சுரேசின் கதையோ வேறு; பிரான்சில் குடும்பமான சில நாட்களுக்கு உள்ளாகவே தேங்காய்ச் சம்பல் தின்ன ஆசைப்பட்ட அளவுக்கு அவனுக்குக் கலாச்சாரப் பற்று இருந்தது. அதற்காக உரலும் உலக்க்கையும் வாங்கி அவன் குடியிருந்த நாலாம் மாடியில் வைத்து சம்பல் இடித்து மூன்றாம் மாடி வெள்ளைக்காரனை துண்டைகாணோம் துணியைக் காணோம் என குடியெழுப்பிய பெருமைக்குரியவன்.
இப்போ இரண்டு வருடமாக கொஞ்சம் உடைந்து போயிருக்கிறான். மகளுக்கு சாமத்தியவீடு நடத்த கடன்வாங்கி வங்கிக்கும், இன்னொரு மறத் தமிழனுக்கும் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறான். நீரழிவு வியாதியோடு கொலஸ்ரோல், மூலவருத்தம், மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, என்று பல்வகை வருத்தங்களின் இருப்பிடமாகிவிட்டான். புதிதாகப் பட்ட சாமத்தியவீட்டுக் கடன் கட்ட 16 மணித்தியாலம் வேலை வேறு.
அதற்குள் அவனுக்கு இன்னொரு கவலை. இன்னும் சில மாதங்களில் அவனுக்கு ஐம்பது வயதாகிறது. அதையும் அவன் கோலாகலமாகக் கொண்டாட நினைக்கிறான். கிட்டத்தட்ட 20 ஆயிரம் யூரோ செலவாகுமாம். பிரான்சில் வசிக்கும் தேசியச் செயற்பாட்டாளர் ஒருவரையும் அப்போது தூள் கடத்தி இப்போது தொழிலதிபராகியிருக்கும் ஒருவரையும் சீப் கெஸ்ட்களாக கூப்பிடப் போகிறானாம். 20 ஆயிரம் யூரோ திரட்ட வேண்டும் என்ற கவலையிலேயே ஐம்பது வயதுக்கு முதல் போய்விடுவானோ என்ற பயத்தில் எனது முகத்திலும் கலவலை.
எங்கேயோ ஹோல் எடுத்து இசைக்குழுவையும் கூப்பிட்டு, நாதஸ்வரம் தவில் கச்சேரி எல்லாம் போட்டு சாப்பாடும் சோமபானங்களும் பரிமாறி தனது விலாசத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறான். அக்தற்கிடையில் கடன்வாங்க வசதி கொடுக்குமாறு பிரான்ஸ் பிள்ளையார் கோவிலில் வேறு அர்ச்சனை செய்து வருகிறான்.
நாங்கள் எல்லாரும் சும்மா வரவில்லை. போராடப் போய், அடக்கு முறைக்கு முகம்கொடுத்து அடிபட்டு வந்தவர்கள். ஐரோப்பியக் கலாச்சாரத்தின் முற்போக்கானவற்றை உள்வாங்க்கதெரிந்தவர்கள் என்று நான் 20 வருசத்துக்கு முந்திப் பெருமையடித்தேன். அதெல்லாம் பொய் என்று சுரேஸ் சொல்லியிருக்கிறான். எங்களுக்கும் போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை; அதெல்லாம் ஒரு குசும்பு என்பது போல சுரேஸ் போன்ற நண்பர்களின் நடவடிக்க எண்ண வைக்கிறது.
இயக்கதில் வேலைசெய்த மைதிலிச் சித்தியின் மகள் தர்சினியை ஆமிக்காரன் திரும்பப் பிடித்துக்கொண்டு போய்விட்டான். எனக்கும்,சுரேசுக்கும், தர்சினிக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு. தர்சினியின் ஐம்பதாவது பிறந்த நாள் இராணுவ முகாமில் தான் நடக்குமோ என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி நடக்கத் தேவையில்லை; ஐம்பதாவது வயது பிறந்த நாள் விழவை பெண்கள் கொண்டாடுவதில்லையாம் ஆண்கள் மட்டும் தானாம் கொண்டாடுவார்களாம் என்று கடைசியாகக் கதைக்கும் போது சுரேஸ் சமாதானம் சொன்னான். சின்ன வயசில் ஆண்களுக்கு சாமத்திய வீடு கொண்டாடுவதில்லை என்பதால் முத்திப் போனதும் ஐம்பதாவது பிறந்த நாள் வைக்கிறார்கள் போலும். கிட்டத்தட்ட சாமத்திய வீடு மாதிரியே நடக்கும் இந்தக் கூத்து பெண்களுக்கு நடப்பதில்லை. ஆண்களுக்கு மட்டும் தான். இது முற்றிய ஆண்களுக்கான சாமத்திய வீடோ?. பூப்புனித நீராட்டு விழா(ஆண்கள் மட்டும்) என்று இந்த ஐம்பதாவது கூத்துக்குப் பெயர் சூட்டிக் கலாசார மயப்படுத்திக் கொள்ளலாம். இப்படி இசக்குப் பிசக்காகச் சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில் எனது மகள் தனது பதினெட்டாவது பிறந்த நாளை எங்கு கொண்டாடுவது என்று கேட்டு குழப்பிவிட்டாள்.
(யாவும் கற்பனையல்ல.. பெயர்களைத் தவிர….)
நீங்கள் குறிப்பிடும் சுரேஸ் என்ற நபர் மட்டுமல்ல 90 வீதமான எல்லோரும் 50 வது பிறந்த நாளை இப்படி தான் கொண்டாடுகிறார்கள். உங்கள் பணதிலையா இதை செய்கிறார்கள்? ஏனிந்த பொறாமை?
எள்ளலுடன் எழுதப்பட்ட சிந்திக்கத் தூண்டும் பதிவு. தவராஜாவிற்கு வாழ்த்துக்கள்.
மிக அண்மையில் இதனை அறிந்தேன். உண்மையா தெரியாது.
ஆண்கள் திருமணமாகும் போது அவர்களிற்கும் ஒரு நீராட்டு நடப்பது சம்பிரதாயமாம். அதற்குக் காரணம் அவர்களிற்குப் பூப்பனித நீராட்டு விழா முன்னர் நடைபெறாதது தானாம். (இன்னமும் பருவம் வராதவருக்கு திருமணம் நடாத்துவது முறையில்லை என்பதால் திருமணத்திற்கு முன்னர் குடும்பத்தினர் நடுவே “பூப்பனித நீராட்டு” விழாவில்லாமல் நடத்தப்படுகிறதாம்.
உண்மையா?