நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்!

தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைகளில் சைவ சமயம் கற்பிக்கப்படுவதில்லை.

அதற்குப் பதிலாக இஸ்லாம் சமய பாடமே கற்பிக்கப்படுகின்றது. அத்துடன், சைவ சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் இந்து சமய மாணவர்கள் அடக்குமுறைக்குள்ளிருந்தே கல்வி கற்று வருகின்றனர்.

 

அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு மரியாதை வழங்காத வயதான காவலாளி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவமானகரமான சம்பவமொன்று யாழ். மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் யாழ். மேலதிக செயலாளரின் அலுவலகத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அங்கிருந்த காவலாளி அனந்தியைக் கவனிக்காததுபோல் கதிரையில் அமர்ந்திருந்தார்.

இதனை அவதானித்த அனந்தி, காவலாளியைப் பார்த்து , ‘ஐயா என்னை உங்களுக்குத் தெரிகிறதா என வினவியுள்ளார்’. அதற்கு அந்தக் காவலாளி ‘இல்லைப்பிள்ளை, எனக்குத் தெரியாது. நீ யாரம்மா? என வினவியுள்ளார்.

அதற்கு அனந்தி இவ்வாறான இடங்களில் வேலைசெய்யும் நீங்கள் பத்திரிகைகள் வாசித்து உங்களதுபொது அறிவினை வளர்த்துக்கொள்ளவேண்டுமெனத் தெரிவித்துவிட்டு அலுவலகத்திற்குள்ளே சென்றுவிட்டார்.

குறித்த காவலாளி தொடர்பாக அனந்தி பிரதம செயலாளரிடம் முறையிட்டதையடுத்து குறித்த காவலாளி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அனந்தி கருத்துத் தெரிவிக்கையில், குறித்த காவலாளி மரியாதையில்லாமல் என்னுடன் நீயெனக் கதைத்தார் . ஆகையால் நான் குறித்த பிரச்சனை தொடர்பாக பிரதம செயலாளரின் கவனத்திற்குக் கொண்டுசென்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு இன்னொருவர் மரியாதை செலுத்துவது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. அனந்தி அமைச்சர் என்ற காரணத்திற்காக காவலாளி எழுந்துநின்று மரியாதை செலுத்தவேண்டுமென்ற தேவையெதுவுமில்லை. அனந்திக்காக காவலாளியை வேலையை விட்டு நீக்கியது பிரதம செயலாளரின் தவறே.

முல்லைத்தீவில் மர்மக் காய்ச்சலால் 20 நாட்களுக்குள் 9பேர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம், முல்லைத்தீவு நகரத்தில் வேகமாகப் பரவிவரும் ஒருவித காய்ச்சலால் கடந்த 20 நாட்களுக்குள் 9பேர் பலியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பில் கொழும்பு சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு, காய்ச்சலுக்கான காரணத்தை ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து மருத்துவக் குழுவொன்று முல்லைத்தீவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதுடன் தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் கேதீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், இக்காய்ச்சல் தொடர்பாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு நாம், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவரும் நிலையில், கொழும்பு சுகாதாரத் திணைக்களத்திற்கும் அறிவித்திருந்தோம்.

எமது மருத்துவக் குழுக்கள் இணைந்து இக்காய்ச்சலுக்கான வைரஸை இனங்காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

மலையகப் பாடசாலைகளுக்கு இந்திய ஆசிரியர்களை நியமிப்பதற்கு வேலையில்லா படடதாரிகள் எதிர்ப்பு!

மலையகப் பாடசாலைகளில், விஞ்ஞானம், கணித பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து பந்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர்  கடந்த 12ஆம் நாள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மலையகப் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்கு வடக்குக் கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளிலிருந்து தகுதியானவர்களை நியமிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பொ.இராதா கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் மேடைகளில் கூறி வந்தாரே தவிர அதற்கான எந்தவித நடவடிக்கையையும் அவர் முன்னெடுக்கவில்லை.

நாடு தழுவிய ரீதியில் 50ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். யுத்தத்தினால் பாதிப்படைந்த வடக்குக் கிழக்கில் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். இவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருவதுடன், பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே, மலையகப் பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

நாட்டில் 53ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் வேலை தேடி இன்னல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதன் பின்னணி என்ன? என்ற கேள்வியே மக்கள் மத்தியில் தொக்கி நிற்கின்றது.

அடுத்த யாழ். மாவட்ட மாநகர முதல்வராக வித்தியாதரன்?

உள்ளூராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னொரு புறம் யாழ். மாநகரசபை முதல்வருக்கான தெரிவும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், யாழ். மாநகர சபையின் முதல்வராக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரே தெரிவுசெய்யப்படவேண்டும்.அதனை அவர்கள் மற்றயகட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.

யாழ். மாநகரசபை முதல்வர் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி, முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி உட்பட பல கட்சிகள் போட்டியிடவுள்ளன.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளிருந்து, ஆறுபேர் மாநகர முதல்வர் கதிரைக்குப் போட்டியிடுகின்றனர்.

இவர்களுள், யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரப் பிள்ளையும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிட மறுத்தாலும், இறுதியில் சம்மதித்துள்ளார்.

அடுத்ததாக, ராஜதேவன், இவர் முன்னாள் மாநகரசபை முதல்வர். வெளிநாட்டில் வசிக்கும் இவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளார்.

அத்துடன், வடமாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரனும் மாநகரசபையின் முதல்வராக வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜெயசேகரனை நியமிப்பதற்கு தமிழரசுக் கட்சியில் சிலர் விரும்பவில்லை.

அடுத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் மற்றும் ஆர்னோல்ட் ஆகிய இருவரில் சொலமன் சிறில் அரசியலில் பிரகாசிக்காதவராகையால், அவர் அனைவராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆர்னோல்டால் அதிக வாக்கினைப் பெறமுடியும். ஆர்னோல்ட் அதிக வாக்குகளைப் பெற்றாலும், அவர் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணி புரிகின்றார். இதனால் இவரை முதல்வராக நியமிப்பதற்கு கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இறுதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மச்சானான வித்தியாதரனை நியமிப்பதற்கு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு சரவணபவன் கடுமை எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரைச் சமாதானப்படுத்தி வித்தியாதரனை அடுத்த மாநகர முதல்வராக நியமிப்பதற்கு இரா.சம்பந்தன் முயற்சி எடுத்துள்ளார்.

இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் வித்தியாதரன் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக  நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் அடையாள அழிப்பை மேற்கொள்வதற்கு துணைபோகும் சிறிதரன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை எஸ்.கே. அறிவுச்சோலையாக பெயர் மாற்றம்செய்யப்பட்டு அடையாள அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடையாள அழிப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அனுசரணையுடன் நடந்தேறியுள்ளது.

1993ஆம் ஆண்டு, தனது பெற்றோரைச் சிறுவயதில் இழந்த மேஜர் காந்தரூபனின் வேண்டுகோளுக்கமைய,  பெற்றோரை இழந்த சிறுவர்களின் கல்விக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது காந்தரூபன் அறிவுச்சோலை.

2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் திருவையாறு 2ஆம் பகுதியில் விடுதலைப் புலிகளின் கணினிப் பிரிவு இயங்கிவந்த 14 ஏக்கர் காணியில் இச்சிறுவர் இல்லத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை எஸ்.கே. என அழைக்கப்படும் சுவிஸ் வர்த்தகரான கதிர்காமநாதன் அணுகியுள்ளார்.

குறித்த 14 ஏக்கர் காணிகளும் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதுடன்,  சிறுவர் இல்லம் அமைப்பதற்காக விடுதலைப் புலிகளினால் அக்காணிகளின் சொந்தக்காரர்களுக்கு பணம் கொடுத்துப் பெறப்பட்டது. அதன் பின்னர் குறித்த நிலப்பரப்பில் சிங்களப் பொறியியலாளர்கiளால் சிறுவர் இல்லங்களுக்கான கட்டடங்கள் அமைக்கப்பட்டது. இருப்பினும் அதில் குறித்த சிறுவர் இல்லம் இயங்கவில்லையென்பதுடன், விடுதலைப்புலிகளின் கணினிப்பிரிவு இயங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யுத்தம் நிறைவடைந்தபின், இக்காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அக்காணிகளைப் பெறுவதற்கு  காணி உரிமையாளர்களால் கரைச்சிப் பிரதேச சபையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த 14 ஏக்கர் நிலப்பரப்பும் கரைச்சிப் பிரதேச சபையினால் கதிர்காமநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிரதேச சபையினால் தனியொருவருக்கு 14 ஏக்கர் காணியை வழங்கமுடியாது. இதற்காக, அக்கிராமத்தில் சிறிதரனின் ஆதரவாளர்கள் சிலரின் பெயரை இணைத்து, தமது கிராமத்துக்கு சிறுவர் இல்லம் அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கோரி கரைச்சிப்  பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கதிர்காமநாதனூடாக அனுப்பிவைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், காணி உரிமையாளர்களில் இருவர் சிறிதரனிடம் முறையிட்டபோது, உங்களது காணிகளைப் பெற்றுத் தருவதாக இருந்தால், முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்கு தலா இரண்டு இலட்சம் ரூபா வழங்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் உங்கள் காணியைப் பெற்றுத் தரமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உரிமையாளர்களான கணபதிப்பிள்ளை சண்முகசுந்தரம் மற்றும் திருநாவுக்கரசு பொன்னம்பலம் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர், செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலைப் பிள்ளைகள் வவுனியாவில் இயங்கும் சிவன் ஆலயத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தனர். பின்னர் செஞ்சோலை சிறுவர் இல்லம் கிளிநொச்சியில், கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனால் இயக்கப்பட்டு வருகின்றது.

இதைவிட, கிளிநொச்சியில், கருணா நிலையம், மகாதேவா சிறுவர் இல்லம், காந்தி நிலையம் போன்ற சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கிளிநொச்சியில் சிறுவர் இல்லம் ஒன்று அமைப்பதற்கு அவசியமேதுமில்லை.

அத்துடன், அரச சட்டத்தின்படி கண்டபடி சிறுவர் இல்லங்கள் அமைக்கமுடியாது. இந்நிலையிலேயே, சிறிதரன் அவர்கள் அரசாங்கத்திலுள்ள சில அதிகாரிகளுக்கூடாக, காந்தரூபன் அறிவுச்சோலை பதிவெண்ணில் எஸ்கே. அறிவுச்சோலைக்கான அனுமதியைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மக்களுக்கு தன்னையொரு விடுதலைப் புலிகளின் விசுவாசியெனக் காட்டுவதற்காக மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பவற்றைக் கொண்டாடிக்கொண்டு மறுபக்கம், இவ்வாறு அடையாள அழிப்புகள் செய்துவருகின்றமை கண்கூடு.

“நீட்” ஏன் வேண்டும்? :இராமியா

சூத்திரர்களுக்குக் கல்வி மறுக்கப் பட்டது; கல்வி முழுவதையும் பார்ப்பனர்களே கவர்ந்து வைத்துக் கொண்டு இருந்தார்கள்” என்று பொத்தாம் பொதுவாக நாம் அனைவரும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இது உண்மை தான். ஆனால் முழுமை அல்ல.

பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரக் கல்வியை மட்டுமே மற்றவர்கள் பெற்று விடக் கூடாது என்று எச்சரிக்கையுடனும், பிடிவாதத்துடனும் இருந்தனர். இப்போதும் அதற்காகவே போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

   சத்திரியர்களுக்குப் போர்க் கல்வியையும், சூத்திரர்களுக்குப் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் கல்வியையும், வைஷ்யர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தினர், அதாவது சூத்திரர்கள் உற்பத்தி செய்த பொருட்களை, அவாளுடைய அதிகாரப்படி மக்களிடையே விநியோகம் செய்யத் தேவைப் படும் கல்வியையும் திணித்து இருந்தனர்.

     இந்நிலையில் சூத்திரர்கள் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் அறிவியலை – அதாவது உண்மையான அறிவியலை – தங்களிடையே வளர்த்துக் கொண்டு இருந்தனர். என்னென்ன விதைகள் எந்தெந்தப் பருவத்தில் விளையும்? மழை பொய்த்துப் போனால் நிலைமையை எப்படிச் சமாளிக்க வேண்டும்? ஏரி குளங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்? கால்நடைகளுக்கு நோய் வந்தால் அவற்றிற்கு மருத்துவம் பார்ப்பது எப்படி? இன்னும் இவை போல்  மனித இன இயக்கத்திற்கு அவசியமான பல கல்விகளை எல்லாம் சூத்திரர்கள் கற்றே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர்களும் இக்கல்விகளில் கற்றுத் தேர்ந்த அறிஞர்களாக இருந்தார்கள்.

     விவசாயம் மட்டும் அல்லாமல், நெய்தல், வீடு கட்டுதல், தச்சுப் பட்டறை, கொல்லன் பட்டறை வேலைகள், மருத்துவம் போன்ற மனித குல வளர்ச்சிக்கும் சீரான இயக்கத்திற்கும் தேவைப்படும் அனைத்துத் தொழில்களும், அத்தொழில்களைச் சார்ந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வியும் சூத்திரர்களின் வசமே இருந்தன. இத்தொழில்களில் அவர்கள் வல்லுநர்களாக இருப்பதால் ஒருவனுகு மற்ற மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வசதியோ வலிமையோ கிடைக்கவில்லை.

     தொழிற் புரட்சி காரணமாக, தொழில்கள் எல்லாம் இயந்திர மயமாக்கப் பட்ட பின், இத்தொழில்களில் நிபுணத்துவம் பெறுவதும், மேலாண்மை செய்யும் நிலையைப் பெறுவதும் சக மனிதர்களைக் கட்டி ஆளும் வசதியையும், வலிமையையும் அளித்தது. இது வரைக்கும் இத்தொழில்களைப் பற்றி நினைப்பதே தீட்டு என்றும் பாவம் என்றும் இருந்த பார்ப்பனர்கள் இயந்திர ஆளுகையைப் பற்றிக் கற்க முனைந்தார்கள். அப்படிக் கற்கத் தொடங்கியவர்கள், சூத்திரர்கள் இந்த நவீனக் கல்வியில் நுழைந்து விடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கைாகவும் இருந்தார்கள்.

 இப்படியாக, ஆங்கிலக் கல்வியைக் கற்கத் தொடங்கி, இது வரைக்கும் பொருள் உற்பத்திக் கல்வியில் அக்கறையே கொள்ளாத பார்ப்பனர்கள், நவீனமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையில் அக்கறை காட்டத் தொடங்கினர். ஆனால் அதிலும் நாட்டாமை செய்யும் பகுதியை மட்டும் தங்கள் வசம் வைத்துக் கொண்டு உழைக்கும் பகுதியை ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடமே இருக்குமாறு விட்டு விட்டனர்.

இந்த வகையில் தான் பார்ப்பனர்கள் மருத்துவத் துறையில் நுழைந்தனர். புராதன மருத்தவக் கல்வியில் புலமை அடைவதால் அதிகாரப் பிடிப்பு எதுவும் கிடைப்பது இல்லை. ஆகவே அத்தொழில் பெரும்பாலும் சூத்திரர்களிடமே, அதிலும் முக்கியமாக மருத்துவ (முடி திருத்துவோர்) வகுப்பினரிடையே வழங்கிக் கொண்டு இருந்தது. ஆனால் தொழிற் புரட்சிக்குப் பின், இந்தியாவில் அறிமுகமான ஆங்கில மருத்துவக் கல்வி மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் பொருள் வசதியையும், அதிகார வலிமையையும் தரும் தன்மையதாக இருந்தது. இதைக் கண்ட பார்ப்பனர்கள் ஆங்கில மருத்துவக் கல்வியைக் கற்கத் தொடங்கினர். ஏற்கனவே மருத்துவர்களாக இருந்த மருத்துவ வகுப்பினர் இதில் நுழைந்து விடா வண்ணமும் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.

     காலப் போக்கில் ஆங்கில மருத்துவக் கல்வியை மற்ற வகுப்பினர் யாரும் பெற்று விடமல் தடுக்கும் நோக்கத்துடன், மருத்துவக் கல்வியைப் பெறுவதற்கு சமஸ்கிருதம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற விதியை வலிந்து திணித்தனர். ஆனால் 1920களில் நீதிக் கட்சியின் சார்பில் சென்னை இராஜதானியின் முதல்வராக இருந்த பனகல் அரசர் பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்புகளைத் தன் அறிவாற்றலால் தவிடு பொடி ஆக்கி இவ்விதியை நீக்கினார். அதன் விளைவாகப் பார்ப்பனர் அல்லாதோர் பலர் நவீன மருத்துவக் கல்வியைக் கற்க முடிந்தது. இது பூ.பழனியப்பன், வடமலையான், ஏ.ஏ.ஆசீர்வாதம், கே.என்.வாசுதேவன் போன்ற இன்னும் பல மருத்துவ மாமேதைகளை நாட்டிற்கு அளித்தது.

     ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு, ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பெருந்தலைவர் காமராசர் ஆகியோரின் தலைமையில் செயல் படுத்தப் பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கையினால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் பலர் மருத்துவக் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றனர். பெரும் எண்ணிக்கையில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் மருத்துவர்களாக உருவாயினர்.

     இந்த நிகழ்வு, அதாவது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்ககள் மருத்துவர்களாக உருவாவது வட மாநிலங்களில் நடக்கவில்லை. அங்கு இட ஒதுக்கீடு முறை ஒழுங்காகச் செயல்படுத்தப் படாததால், உயர்சாதிக் கும்பலினருக்கே மருத்துவர்களாகும் வாய்ப்பு கிடைத்தது.

     எந்த ஒரு வகுப்பிலும் அனைவரும் திறமைசாலிகளாக இருப்பதோ அல்லது அனைவரும் திறமைக் குறைவானவர்களாக இருப்பதோ இயற்கை நியதிக்கு முற்றிலும் எதிரானது ஆகும். அனைத்து வகுப்பிலும் அனைத்து நிலைத் திறமை உடையவர்கள் இருப்பது என்பது தவிர்க்க முடியாத / மாற்ற முடியாத இயற்கை நியதி. ஆகவே ஒரு வகுப்பில் இருந்து மட்டுமே ஆட்களைத் தேர்வு செய்தால் திறமைக் குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்க்க முடியாமல் போகிறது. இது தான் வட மாநிலங்களில் நடந்து உள்ளது.

     அனைத்து வகுப்பில் இருந்தும் ஆட்களைத் தேர்ந்தெடுத்தால், அந்தந்த வகுப்பில் உள்ள திறமைசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுவது எளிதாகி விடுகிறது; திறமைக் குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. இது தான் தமிழ் நாட்டில் நடந்து உள்ளது.

     இதன் வெளிப்பாடாக, மருத்துவச் சேவை / மருத்துவத் தொழில் தமிழ் நாட்டில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் பிற பாகங்களில் இருந்து மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் இருந்தும் மருத்துவச் சிகிச்சை பெற மக்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். உயர்சாதிக் கும்பலினரே மருத்துவர்களாக நிரம்பி உள்ள வட மாநிலங்களில் இந்த நிகழ்வு நடைபெறவில்லை.

     இதைக் கண்ணுறும் யாருமே என்ன முடிவுக்கு வர வேண்டும்? “பொதுப் போட்டி முறையால் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை; இட ஒதுக்கீட்டுனால் மட்டுமே திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்க முடிகிறது.” என்ற முடிவுக்கு வந்து இருக்க வேண்டும் அல்லவா? அதன் தொடர்ச்சியாக இட ஒதுக்கீடு முறையை இன்னும் விரிவு படுத்தி விகிதாச்சாரப் பங்கீடு முறையைக் கொண்டு வர வேண்டும் என்ற முடிவுக்கும் வந்து இருக்க வேண்டும் அல்லவா? இவ்விதமாக யோசிப்பதற்குச் சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதுமே?

     ஆனால் என்ன நடந்தது / நடக்கிறது? இட ஒதுக்கீடு முறையினால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் அவாளை விடத் திறமைசாலிகள் என்று பட்டவர்த்தனமாக வெளிப்படுவதைக் கண்ட உயர்சாதிக் கும்பலினர் அரண்டு போய் விட்டனர். அவாளைப் பொறுத்த மட்டில் திறமைசாலிகள் உயர்நிலைகளில் இருக்க வேண்டும் என்பதை விட, உயர்சாதிக் கும்பலினரே உயர்நிலைகளில் இருக்க வேண்டும். அதனால் நிர்வாகம் நாசமானாலும், மனித உயிர்கள் காவு வாங்கப் பட்டாலும் கவலை இல்லை.

     ஆகவே திறமைசாலிகள் வாய்ப்பு பெறுவதைத் தடுக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தனர். அதில் ஒன்று கல்வியை வணிகமயம் ஆக்கியது. அப்படி ஆக்கி விட்டு அதற்கு எதிராக அவாளே கூப்பாடு போடவும் செய்தனர் / செய்து கொண்டும் இருக்கின்றனர். கல்வி வணிகமயம் ஆகி விட்டதால் தங்களால் படிக்க முடியாமல் போய் விட்டது என்று அழுது புலம்பி கண்ணீர் விட்டும் காட்டுகின்றனர். அவாளது நடிப்பைக் கண்ட ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் சில அதிமேதாவிகளும் அவாள் மீது இரக்கம் காட்டுகின்றனர். “அரசதிகாரம் அனைத்தும் அவாளிடம் தானே உள்ளது? கல்வி வணிகமயம் ஆவதைத் தடுக்கலாமே?” என்றோ “இந்த வணிகமயமாக்கலினால் கல்வியில் அவாளது எண்ணிக்கை அதிகரித்துத் தானே இருக்கிறது? குறையவில்லையே?” என்றோ கேட்க வேண்டும் என்று எந்த அதிமேதாவிக்கும் தோன்றவில்லை. வணிகமயமாக்கம் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைத் தான் பாதித்து இருக்கிறது என்பதையும் உணரவில்லை.

     நமது மவுடீகமான அமைதியைக் கண்ட உயர்சாதிக் கும்பலினர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளனர். அது தான் தேசிய தகுதி நுழைவுத் தேர்வின் (NEET) திணிப்பு. இதற்குக் காரணமாக அவாளும் அவாளுடைய அடிமைகளும் கூறுவது, மருத்துவத் தொழில் என்பது மக்களின் உயிர் காக்கும் தொழில் என்றும், இதில் திறமையின்மைக்கு இம்மியும் இடம் கொடுத்து விடலாகாது என்றும் தான். ஆனால் தகுதி நுழைவுத் தேர்வில் திறமையைச் சோதிப்பதற்கான / கண்டு பிடிப்பதற்கான ஒரு கூறும் இல்லை என்பது மட்டும் அல்ல; பகுப்பாயும் திறனுக்கு முற்றிலும் எதிரான குருட்டு மனப்பாடம் செய்யும் ஆற்றல் உடையவர்களுக்கு வழி விடும் கூறுகள் மட்டுமே உள்ளன. ஆகவே மருத்துவச் சேவைக்குத் தேவைப்படும் அறிவுத் திறன் உடையவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவதை விட, இயந்திரத்தனமான அறிவு உடையவர்களே இத்தேர்வில் வெற்றி பெற முடியும்.

     அப்படி என்றால் அரசு இம்முறையை ஏன் வலிந்து திணிக்கிறது? இந்திய அரசு பார்ப்பன ஆதிக்க அரசு. பார்ப்பனர்களைப் பொறுத்த மட்டில், திறமை இருக்கிறதோ இல்லையோ பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள். அதனால் சமூக நலன் கெடுவதைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாதவர்கள். அது மட்டும் அல்ல; தங்கள ஆதிக்கம் தளராமல் இருப்பதற்காக, தங்களுடைய சில பொருளாயத, உடல் நல சவுகரியங்களையும் தியாகம் செய்யவும் தயங்காதவர்கள். ஆகவே தான் தகுதி நுழைவுத் தேர்வு வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

இதற்குத் தான் “நீட்” தேவைப்படுகிறது.

     இதை முன்னிட்டே உயர் கல்வி நிலையங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு என்ற முறையைப் புகுத்தினார்கள். பெரியார், அம்பேத்கர் இயக்கங்களால் எழுச்சி பெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் நுழைவுத் தேர்வின் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டு, அதில் வெற்றி பெறத் தொடங்கிய உடன், நுழைவுத் தேர்வின் மூலம்    ஒருவனுடைய திறமையைக் கண்டறிய முடியாது என்று குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறி சென்னை, இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் (I.I.T) 21.9.2008 அன்று ஒரு குழுவை அமைத்தனர். ஆனால் நுழைவுத் தேர்வு முறை பயனற்றது என்று கருத்து வெளிப்படும் அதே காலத்தில் (26.9.2008 அன்று) உச்ச நீதிமன்றம் பழங்குடி மக்களுக்கு நுழைவுத் தேர்வு எழுதப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று அரசுக்குக் கூறியது.

     அதாவது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் முயன்று பெற்ற திறமைகளைக் காலாவதி ஆக்க வேண்டும் என்பதும், காலாவதி ஆகிப் போன வழிமுறைகளைப் பின் பற்ற வைத்து, அவாளே வெற்றி வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதுமே அவாளுடைய திட்டமாக இருக்கிறது.

     இன்றும் தகுதி நுழைவுத் தேர்வை எதிர்ப்பதை விட்டு விட்டு அதற்குப் பழகிக் கொள்ளுங்கள் என்று அவாளும், அவாளுடைய அடிமைகளும் நமக்கு அறிவுரை கூறுகிறார்கள். அவர்களின் அறிவுரையைப் பின் பற்றி, பயிற்சி பெற்று, வெற்றி பெறும் நிலைக்கு முதிர்ச்சி அடையும் பொழுது, நுழைவுத் தேர்வு திறமையைக் கண்டறியும் முறை அல்ல என்று கூறி, அவாளால் மட்டுமே வெற்றி பெற முடியக் கூடிய வேறொரு முறையைப் புகுத்துவார்கள். அந்த முறையில் நாம் முதிர்ச்சி அடைந்தால் வேறொரு முறையைப் புகுத்துவார்கள். இப்படியே நமக்கு உரிய பங்கு நிரந்தரமாகவே கிடைக்காதபடியான வழிமுறைகளைக் கடைப்பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.

     ஆகவே நம் முன் உள் கடமை என்ன? அனைத்து நிலை அறிவுத் திறனும் அனைத்து வகுப்பு மக்களுக்கும் உள்ளது என்ற இயற்கை நியதியை  மக்களிடையே உணர்த்தி விழிப்பணர்வையும், பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டும்.

     ஒடுக்கப்பட்ட வகுப்பு மருத்துவர்கள் நிறைந்து உள்ள தமிழ் நாடு மருத்துவத் துறையில் முன்னணியில் இருப்பதையும், உயர்சாதிக் கும்பலினரே மருத்துவர்களாக உள்ள வட மாநிலங்கள் சிறப்பாக இல்லாததையும் எடுத்துக் காட்டி, அனைத்து வகுப்பு மக்களும்  அனைத்து நிலை வேலைகளிலும் வாய்ப்பு பெற வேண்டும் என்ற விழிப்புணர்வையும், பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டும்.

    அதைச் செயல்படுத்தும் கொள்கையான விகிதாச்சாரப் பங்கீடு முறையை வென்றெடுக்க மக்களிடையே விழிப்புணர்வையும், பொதுக் கருத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

ஆசனப் பங்கீட்டு மோதலால் தனிமரமாகிப்போன தமிழரசுக் கட்சியும், இந்தியாவின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியும்!

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்குள் இடம்பெற்ற முரண்பாடினால், தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தமிழத் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, ஆனந்தசங்கரியின் தலைமையிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துள்ளன.

இதனால் தனிமரமாகிப்போன தமிழரசுக் கட்சி, தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அங்கத்துவக் கட்சிகளில், மக்களின் செல்வாக்கினைப் பெற்றுள்ள உறுப்பினர்களைத் தமிழரசுக் கட்சிக்குள் இணைப்பதற்கு வெளிப்படையாகவே பேரம்பேசி வருகின்றது.

இதற்குச் சான்றாக அண்மையில் ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்தவரும், முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தமிழரசுக் கட்சியின் சலுகைகளுக்கு விலைபோய் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

இந்த அற்ப சலுiகைகளை மறைப்பதற்காக ‘தலைவர் பிரபாகரன் கைகாட்டிய கட்சியைவிட்டு விலகுவதற்கு தான் தயாரில்லையெனவும் அறிக்கையும் விடுத்திருந்தார்.

இலங்கை அரசியலில் தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகளே பேசுபொருள். அதற்கமையவே ரவிகரனும் தனது சுயலாபத்துக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரiனை ஓர் ஆயுதமாகக் கையாண்டுள்ளார்.

இந்நிலையில், தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எதேச்சதிகாரப் போக்குடன் செயற்படுவதாகவும், அக்கட்சியின் கொள்கையான வடக்குக் கிழக்கு இணைப்பு, சமஷ்டியாட்சி முறை என்பவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டு, அரசாங்கத்தின் நலனுக்காக செயற்படுகின்றது எனக் குற்றம சாட்டிய அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியின்கீழ் அணிதிரண்டுள்ளனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கையாக ஒற்றையாட்சியின்கீழ், 13ஆவது அரசியலமைப்பின்படி ஆட்சியமைப்பதே. இதனைத்தான் 1990ஆம் ஆண்டு இந்தியா தமிழ் மக்கள் மீது திணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் எந்த உரிமைக்காக காலம் காலமாகப் போராடினார்களோ, அவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டு, தற்போது ஆரம்ப கட்டத்திற்கே  அரசியல்வாதிகள் மக்களை இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் ஆதாயமடைவது இந்தியாவும், சிறிலங்கா அரசுமேயொழிய, தமிழ் மக்கள் இல்லையென்பதை இந்த அரசியல்வாதிகள் புரிந்துகொள்வார்களா?