மக்கள் தொண்டர்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு!

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக அரசாங்கத்தினால் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ் அரசியல் வாதிகள் சிலருக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 30 விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு அண்மையில் முன்னாள் விடுதலைப் புலிகள் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும், அவரது பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு அரசாங்கத்தினால் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களின் பின்னர் தற்போது உள்ளூராட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில், தனக்கு மாத்திரம் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படவில்லையெனவும், வேறுபல அமைச்சர்களுக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளதுடன், தனக்கு மக்களினால் உயிரச்சுறுத்தல் ஏற்படவில்லையெனவும், கொழும்பிலுள்ள அரசியல்வாதிகளாலேயே உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மக்களுக்கு தொண்டு செய்வதற்கு இதயசுத்தியுடன் செயற்படும் எந்தவொரு அரசியல்வாதியும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பைக் கோரமாட்டார்கள் என்பதே நிதர்சனம். இலங்கையைப் பொறுத்தமட்டில், எந்தவொரு அரசியல்வாதியும் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கில் பதவிக்கு வருவதில்லை. மாறாக தம்மையும், தமது குடும்பத்தினரினதும் நலன் கருதி, பணம், புகழுக்காக மாத்திரமே அரசியலுக்கு வருகின்றமை கண்கூடே.

2018 புத்தாண்டுச் செய்தி…

உலகத்தை மீண்டும் ஒருமுறை இரத்தத்தால் குளிப்பாட்டிய கொடிய ஆண்டாக 2017 கடந்து போய்விட்டது. எங்கு பார்த்தாலும் யுத்த வெறி, கொலை, குண்டுத் தாக்குதல்கள் என்று அப்பாவி மக்கள் பலியெடுக்கப்பட்டனர். ஜனநாயகத்தின் பெயராலும், மனிதாபிமானத்தின் பெயராலும், மதங்களின் பெயராலும், அடையாளங்களின் பெயரிலும் வர்த்தக வெறி போர் முழக்கமிட்டது. இந்த உலகம் சாமானிய மனிதர்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்றது என அதிகாரவர்க்கம் கற்றுத் தந்தது. வாழ்வதற்காக ஒவ்வோர் முனையிலும் மனிதர்கள் போராடுவதத் தவிர வேறு மாற்றுக் கிடையாது என அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இயற்கையைக் கூட சுரண்டிப் பணமாக்கிக்கொண்ட வர்த்தக வெறி மக்களை வெள்ளத்தாலும், புயலாலும், நஞ்சு கலந்து வளங்களாலும் கொன்று போட்டது.

இவை எல்லாவற்றையும் எதிர்கொள்ள மக்கள் கூட்டங்கள் கிளர்ந்தெழும் போதெல்லாம் அவர்களைத் தவறாக வழி நடத்த போலித் தலைமகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஜோர்ஜியன் கலண்டர் புத்தாண்டை அறிவிப்பது உலகமயமானது போன்றே, யுத்த வெறி உலகமயமாகிவிட்டது.

இவை அனைத்தையும் மீறி, 2017 மக்களுக்குப் பாடம் கற்பித்திருக்கிறது. அனைத்தையும் கேள்விகேட்கும் புதிய முன்னேறிய மக்கள் பிரிவு ஒன்று தோற்றம் பெற்றுள்ளது. மகிழ்ச்சி என்பது பண வெறி மட்டுமல்ல என்று உணர்ந்துகொண்ட இளைஞர் குழாம் ஒன்று தோற்றம் பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டு மக்களின் வெற்றிக்கான ஆரம்பமாக அமைவதற்கு இவைகளே நம்பிக்கைக் கீற்றுக்கள். மக்கள் சார்ந்த புதிய சிந்தனையை தோற்றுவிப்பதற்கும் போராடுவதற்கும் இணைப்பேற்படுத்திக்கொள்ள இனியொரு…வின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

குற்றச் செயல்களும் போலிஸ் படையும் இல்லாத அதிசய நகரம்!

மக்களோடு நகரபிதா

ஸ்பெயின் நாடு முழுவதும் இளைய சந்ததியினர் பலரை தனது ஆளுமைக்கு உட்படுத்திய ரொபின் ஹூட் நகரபிதா என்று அழைக்கப்படும் மனுவல் சஞ்ஷே ஸ்பானிய அரசின் நவதாராளவாதக் கொள்கைகளுக்கு எதிரான கூட்டமைப்பில் கடந்தவாரம் உரையாற்றிய போது, நடப்ப்பிலுள்ள முதலாளித்துவ அமைப்பு அழிவதற்கு அதிக காலம் இல்லை என்றார்.

2010 ஆம் ஆண்டு பிரித்தானிய நாழிதளான ‘மிரர் ‘ மரினால்டா குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் ‘போலிஸ் இல்லாத, குற்றச் செயல்கள் அற்ற, அனைவருக்கும் தொழில் வாய்ப்புள்ள நகரம்’ எனக் குறிப்பிட்டிருந்தது.
மரினால்டாவில் கடந்த 37 வருடங்களாக ஒரே நகர பிதா போட்டியின்றி மக்களால்

தெரிவுசெய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஜோன் மனுவல் சஞ்ஷே என்ற அவர் தனது நகரத்தை ஸ்பெயினின் முதலாளித்துவ அமைப்பினுள் உருவாக்கப்பட்டுள்ள கம்யூனிச அமைப்பு என்கிறார்.
அங்கு அனைவருக்கும் வேலை கிடைக்கிறது.குறைந்தது 1200 யூரோக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது. கம்யூனிச அமைப்புக்களைப் போன்று கூட்டு உற்பத்தி நடைபெறுகின்றது, வீடு கட்டிக்கொள்ள மக்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. தன் நிறைவு பெற்ற நகரமாகிவிட்ட மரினால்டாவின் மக்கள் தொகை 3000 மட்டுமே. நகரபிதாவிற்கு ஸ்பனிஷ் ரொபின் ஹூட் என்ற பெயரும் உண்டு.

அனைவரும் தமது தேவைக்கேற்ப உழைக்கிறார்கள். இந்த நகரத்தில் மாத வீடு ஒன்றின் வாடகை 15 யூரோக்கள் மட்டுமே. தனது பிரதேசத்திலுள்ள ஏனைய நகரங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்ட நகர முதல்வர், பணி நீக்கங்களை நிறுத்தவும், அரச வரவுசெலவுத்திட்ட சிக்கனக் கோரிக்கைகளைப் புறக்கணிக்கவும், வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்கவும், ஏனைய நகர முதல்வர்களைக் கேட்டுக்கொண்டார்.

நகரத்தில் பொலீஸ் படை இல்லை. குற்றச் செயல்கள் இல்லை. நகரத்தின் அழகான வெள்ளைச் சுவர்களில் புரட்சிகர சுலோகங்கள் அந்த நகரத்திற்குச் செல்வோரை வரவேற்கும். தெருக்கள் அனைத்தும் லத்தீன் அமரிக்கப் புரட்சியாளார்களின் பெயர்களிலேயே காணப்படுகின்றன. மாதத்தில் சில ஞாயிற்றுக்கிழமைகளை சிவப்பு ஞாயிறாக நகரசபை அறிவிக்கும். அந்த நாட்களில் நகரத்தின் தொண்டர்கள் நகரத்தைச் சுத்திகரிப்பது உட்பட வேறு பணிகளில் ஈடுபடுவார்கள்.

மூவாயிரம் ஏக்கர் கூட்டுப்பண்ணை உற்பத்தியே நகரத்தின் பிரதான வருவாய். அங்குள்ள மக்கள் இந்தக் கூட்டுப்பண்ணையிலேயே வேலைசெய்கிறார்கள்.
15 யூரோக்களை நகரசபைக்கு மாதவாடகையாக்ச் செலுத்தும் குடியிருப்பாளர்களுக்கு சில காலங்களில் வீடு உரித்தாகிவிடுகிறது.

அழகான மரினால்டா நகரத் தெருக்களின் சுவர்கள் எங்கும்..

பலவருடங்களாக ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்த இந்த சோசலிச நகரம், கடந்த வருடம் பலரலும் பேசப்பட்ட்டது. ஸ்பெயினின் தேசியச் செய்திகளில் இடம்பிடித்துக்கொண்டது. ஸ்பெயினின் மிகப்பிரதான பிரச்சனைகளுள் ஒன்றாக வீட்டு வாடகை மற்றும் வீட்டுக்கடன் பிரச்சனை உருவானபோது, மரினாலெடாவில் 15 யூரோவிற்கு வீடொ ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றதும் ஏனைய பகுதிகளின் பார்வை அங்கு திரும்பியது. அங்கு நிலவும் கூட்டு உழைப்பு, கூட்டுப்பண்ணை உற்பத்தி, மக்கள் அதிகாரம் என்பன குறித்தும் அந்த மக்களின் போராட்ட உணர்வு குறித்தும் ஏனைய பகுதி மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள்.

பல்தேசிய நிறுவனங்களால் செயற்படுத்தப்படும் ஸ்பானிய அதிகாரவர்க்கம் இந்த நகரத்தின் மீது தாக்குதலை ஆரம்பிக்கும் போது அதற்கு எதிராகத் தற்காப்பு யுத்தம் நடத்துவதற்கு அவர்களிடம் போதிய பலம் இல்லை. ஆக, சோசலிட அரசு என்பது உற்பத்தியைத் தனியர்களிடமிருந்து விடுவித்து மக்களிடம் ஒப்படைப்பது என்ற அடிப்படைக் கோட்பாட்டு மட்டுமே போதுமானதன்று. உலகின் மிகப்பெரும் மாபியாக்களின் போராட்டங்களை எதிர்கொள்ளும் பலமும் தேவையானது. மரினால்டவின் முன்னுதாரணம் மக்களை அந்த நிலையை நோக்கி இட்டுச் சேல்லும் என்பது உறுதி.

ஊழல் பெருச்சாளிகள் ஊழலுக்கு எதிரான கேலிக்கூத்து : மருத்துவ கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

சில தினங்களுக்கு முன்னர் வட  மாகாண முதலமைச்சர் உள்ளுராட்சி தேர்தலில் ஊழலற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தார். அதே போல அண்மையில் தமிழ் தேசியப் பேரவையும் ஊழலற்ற  தமிழ் தலைவர்களை நாடுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. தென் பகுதியில் தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிரான ஆர்வலர்களும் அமைப்புகளும் இயங்கி பல ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து ஊழல் செய்த மத்திய அமைச்சரைக் கூட மாற்றிய நிலையில் வட பகுதியில் உண்மையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்வதற்காகவே இந்தக் கட்டுரை வரையப்பட்டு இருக்கிறது.

வட மாகாண சபை பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆளும் கட்சி உறுப்பினர்களினாலும் ஏனைய தரப்பினராலும்  சுமத்தப்பட்டு இருந்தது . கால தாமதம் ஆனாலும் முதலமைச்சர் தனது சொந்த அமைச்சர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுயாதீனமான குழு ஒன்றை அமைத்தபோது நல்லாட்சிக்கான முன்னுதாரணமாக நாட்டிலுள்ள அனைத்து மக்களாலும் வரவேற்கப்பட்டது. குற்றம் நிருபிக்கப்பட்ட  இரு அமைச்சர்களை பதவி நீக்கி ஏனைய இரு அமைச்சர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க புதிய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சூளுரைத்த போது அவரை  நீதி தேவதையின் மறு வடிவமாக மக்கள் பார்த்தார்கள். குறிப்பாக இந்தக் கால கட்டத்தில் இளைய தலைமுறையினரால்  ஊழலுக்கு எதிராக போராடக் கூடிய   ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக  முதலமைச்சரை கருதியதினால்  தமிழரசுக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத தீர்மானத்துக்கு எதிராக வீதியில் இறங்கி போராடத் துணிந்தனர். ஆனால் தமிழரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தனது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்த முதலமைச்சர் விசாரணையின் பின்னர் அமைச்சர்களை மாற்றினால் அவர்கள் குற்றம் செய்ததாக அர்த்தப்படாது என்று தெரிவித்த போது பதவிக்காக தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு சராசரி அரசியல்வாதியாக இனம்காட்டி நல்லாட்சியின் மீது மக்கள் கொண்டிருந்த  நம்பிக்கையை தகர்த்து சுக்குநூறாக்கினார். ஊழல் நிருபிக்கப்பட்ட அமைச்சர்கள் இருவர் மீதும் பதவி நீக்கத்தை தவிர வேறு எந்த நடவடிக்கை எடுக்காததும் ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுகளை சடுதியாக கைவிட்டதும் குறைந்த பட்சம் முதலமைச்சர் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவிடம் ஊழல் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து விரயமாக்கப்பட்ட பொதுமக்களின் வரிப்பணத்தை மீளப்பெற்று மக்களின் அபிவிருத்தியை மேம்படுத்த  உறுதியான நடவடிக்கை எடுப்பார் என்று எண்ணியிருந்தவர்களை  பலத்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கினார். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் முதலமைச்சரை பகிரங்கமாக அமைச்சர்களின் ஊழலை வெளிப்படுத்தினால் முதலமைச்சரின் ஊழல்களை வெளிப்படுத்துவேன் என்று மிரட்டியதில்   உண்மை இருக்கலாம் என்று பலரும் எண்ணத் தலைப்பட்டனர். அதற்கு வலு சேர்ப்பது போல முதலமைச்சரின் பிந்திய நடவடிக்கைகள் அமைந்து இருக்கின்றன.

உதாரணமாக சுண்ணாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் கலந்த   பிரச்சினையில், நீர்வழங்கல் மாகாணசபையின்  அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல என்றும் வடமாகாண முன்னாள்  விவசாய அமைச்சர் திரு ஜங்கரநேசன் தனக்கு சட்டபூர்வமாக அதிகாரமளிக்கப்படாதும், நிர்வாக ரீதியாக தொடர்பு அற்ற இவ்விடயத்தில் தலையிட்டு தன்னிச்சையாக 1.9 மில்லியன் செலவழித்து ஒரு குழுவை அமைத்து பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனத்திற்கு சாதகமான அறிக்கையை அக்குழுவின் மூலம் பெற்று அந்நிறுவனத்தை பாராட்டும் வகையிலேயே செயற்பட்டிருக்கிறார் என விசாரணைக்குழு தெளிவாக தெரிவித்திருக்கிறது, அமைச்சரின் மீதான குற்றச்சாட்டுகள்  நிருபிக்கப்பட்டு அவர் மாற்றப்பட்ட நிலையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை பாதிக்கும் இந்தப்  பாரதூரமான பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு முன்னர் வெளியிடப்பட்ட போலி நிபுணர் குழு அறிக்கையை மீளப் பெற்று இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசாங்கமே நீரில் கழிவு எண்ணெய் கலந்து இருப்பதை ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில் முதலமைச்சர் நேர்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையும் தீர்வையும் வழங்குமாறு மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகித்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை நீதிமன்றங்களிலும் ஏனைய உத்தியோகபூர்வ விடயங்களிலும் சுண்ணாகம் நீரில் கழிவு எண்ணெய் கலக்கவில்லை என்பதே வட மாகாண சபையின் நிலைப்பாடாக இருக்கிறது. சட்டத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட ஓய்வு பெற்ற சிரேஷ்ட நீதிபதியாக இருந்த முதலமைச்சர் மாகாண சபையின் அதிகார வரம்பை அறியாமலா  விவசாய அமைச்சரை நீர் வழங்கல் பிரச்சினையில் குழு அமைக்க அனுமதித்தார் என்ற கேள்வி எழுகிறது. இதைவிட இன்றுவரை அந்த அறிக்கையை மீளப்பெறாமல் இருப்பது திரு ஐங்கரநேசன் தனது சாட்சியத்தின் போது முதலமைச்சரின் சம்மதத்துடனேயே இந்த விடயத்தில் ஈடுபட்டதாக தெரிவித்ததை நிரூபிக்கும்  விதமாக இருப்பதுடன் முதலமைச்சரும் இந்த விடயத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் சார்பாக செயற்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.  ஊழலினால் ஏற்பட்ட பாதிப்புகளை உரிய முறையில்  நிவிர்த்திக்க தவறியுள்ள முதலமைச்சர் முன்னர்  ஊழல் விசாரணையை ஆரம்பித்தது அமைச்சர்களை காவு கொடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தனது நற்பெயரையும் விம்பத்தையும்  காப்பற்றுவதற்கு மேற்கொண்ட ஒரு முயற்சியே  என்பது தற்போது வெளிப்பட்டுவிட்டது  . இப்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உதட்டளவில் ஊழலுக்கு எதிராக பாவனை செய்து மீண்டும் தனது விம்பத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் பிரயத்தனம் செய்கிறார். பதவிக் கதிரைகளுக்காக குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டு இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு தன்னை நியமிக்காது என்ற யதார்த்தத்தை முதலமைச்சர் உணர்ந்து கடைசிவரை ஊழலுக்கு எதிராக நேர்மையாக போராடி இருந்தால் பதவி விலகி செல்லும்போது தமிழர் வரலாறில் ஒரு மதிப்புக்குரிய தலைவராக நிரந்தர இடத்தை பிடித்திருப்பார்.

அடுத்ததாக தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் தமிழ் மக்கள் பேரவையை எடுத்துக் கொள்வோம். இவர்கள் வடமாகாண சபை மற்றும் நாட்டில் ஊழல் பல இடம் பெற்றபோது கண்டும் காணாதது போல இருந்ததும் சுண்ணாகம் பிரச்சினை உட்பட தமிழர்களை  பாதிக்கும் பல போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டபோது அவற்றில் கலந்து கொள்ளாது வாளா இருந்ததும் குறைந்தபட்சம் ஆதரவு தெரிவிக்க கூட முன்வரவில்லை என்பதும்  அனைவரும் அறிந்ததே. முன்னைநாள் போராளிக் குழுக்களின்  கிரிமினல்களை  இணைத்தலைவர்களாகவும் முக்கிய உறுப்பினர்களாகவும் பேரவை இணைத்துக் கொண்டுள்ள  நிலையில் பேரவையின் ஊழலுக்கு எதிரான கோரிக்கை உள்ளக விமர்சனத்துக்கு உட்படாத அமைப்பாக தன்னை இனம் காட்டியுள்ளதுடன் “ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே ” என்ற பழமொழியை நினைவு படுத்தியுள்ளது. சிலதினங்களுக்கு முன்னர் முன்னைநாள் போராளிக்குழு ஓன்று இன்னமும் யாழ்ப்பாணத்தில் அடாத்தாக பொதுமக்களின் வீடுகளை பிடித்து  வைத்து இருப்பதும் ஆயுதங்களுடன் இரகசியமாக   மக்களை அச்சுறுத்துவதும்  அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டியது இந்த கிரிமினல் குழுக்களிடம் இருந்து என்பதை பேரவை உணர்ந்து கொள்ளவேண்டும். முதலில் இந்த ஆயுதக் குழுக்களை கடந்த காலத்தில் ஆயுதம் ஏந்தி செய்த தவறுகளுக்கும் அராஜகச் செயல்களுக்கும் மக்களிடம் மன்னிப்புக் கோரவும் அதே வேளையில் செய்த பாவங்களுக்காக பின்வரும் வழிகளில் பிராயச்சித்தமும் செய்ய பேரவை வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்கவேண்டும்.

1. கடந்த காலத்தில் இந்தக் குழுக்கள்  படுகொலை செய்த முக்கியமாக ஆயுதம் ஏந்தாத பொதுமக்களின் உறவினரிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கோரவேண்டும்.

2. பயமுறுத்தி மற்றும் படுகொலை செய்து சம்பாதித்த சொத்துக்களை மீளவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் அல்லது அவர்களின் உரித்துக் காரர்களிடம் கையளிக்க வேண்டும். தொடர்ந்தும் பொதுமக்களின் வீடுகளை அடாத்தாக பிடித்து வைத்திருப்பது இரகசியமாக ஆயுதங்களுடன் பயமுறுத்துவது போன்ற செயல்கள் இவர்கள்  இன்னமும் சட்டவிரோத செயல்களை நிறுத்தி ஜனநாயக வழியில் வர விரும்பவில்லை என்றே பொருள் படும் நிலையில் பேரவையில் இருந்து இவர்களை வெளியேற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டும்.

3. வரதராஜபெருமாள் போலல்லாது இந்தியாவிடம் பல உதவிகளை பெற்றுக் கொண்டு இந்திய நலன் காக்கும் 5 ம் படையாக செயல்படாமல் ஈழத்து தமிழ் மக்களின் நலன் காப்பதற்காக நேர்மையாக இதயசுத்தியுடன் இனியாவது செயற்படுவோம் என்ற உறுதிமொழியை அளிக்கவேண்டும். ஈழ மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக கடந்த காலத்தில் இந்தியாவிடம் பெற்றுக் கொண்ட உதவிகளை பகிரங்கப் படுத்த வேண்டும்.

4. கடந்த காலத்தை போலல்லாவது பொதுமக்களின் சொத்து மற்றும் வரிப்பணத்தில் ஊழல், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் நிதிமோசடியில் ஈடுபடமாட்டோம் என்று உறுதி அளிக்கவேண்டும்.

5. தேர்தலில் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் வேட்பாளர் இலங்கையிலும் புலத்திலும் தனது பெயரிலும் பினாமிகளின் பெயரிலும் இருக்கும் சொத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்துவது அவர்கள் ஊழல் மற்றும் நிதிமோசடியில் ஈடுபடமாட்டார்கள் என்னும் நம்பிக்கையை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட வேண்டுகோள்களை பேரவை வெளிப்படையாக முன்வைத்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்கும் தமிழ்ப்  பிரதேசங்களில் உண்மையான சனநாயகம், அராஜகம் மற்றும் ஊழலற்ற நல்லாட்சியை வழங்க முன்வருமா? தமிழர் நலன்களை பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் இலங்கையில் நலிந்துவரும் தமிழர் குடித்தொகையை அதிகரிப்பதற்குரிய செயல்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பேரவை செயல்பட்டிருக்கவேண்டும். இன்றுவரை அதைப்பற்றி எந்தவித கரிசனையும் இல்லாமல் தமிழ்  மக்களின் குடித்தொகைப் பலமே  தமிழருக்கு உரிமைகளை பெற்றுத்தரும் என்ற அடிப்படை உண்மையையும் உணராமல் அரசியல் யாப்பில் எவ்வாறு மாற்றங்களை செய்யவேண்டும் என்று விவாதிப்பது எந்தப் பயனையும் தமிழருக்கு ஏற்படுத்தாது.

அரசாங்கத்தின் அழுத்தத்தினால் யாழில் பெயரின்றி இயங்கும் அம்மாச்சி உணவகம்!

வடமாகாணத்தைச்சேர்ந்த ஐந்து மாவட்டங்களிலும், தமிழர்களின் கலாச்சாரத்துடன் கூடிய உணவகமொன்று ‘அம்மாச்சி’ என்ற பெயருடன் வடமாகாண விவசாய அமைச்சினால் திறந்துவைக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

குறித்த உணவகமானது, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் என்ற பெயர் பலகையுடனேயே இயங்கி வருகின்றது. ஆனால், யாழ். மாவட்டத்தில் மாத்திரம் எந்தவொரு பெயருமின்றி இயங்கி வருகின்றது.

அம்மாச்சி உணவகத்தில்,, இயற்கையான முறையில் அதிக சுகாதாரத்துடன் தயாரிக்கப்படும் உணவுகளை மிகவும் மலிவாகப் பெற்றுக்கொள்ளமுடியும். இதன்காரணமாக அம்மாச்சி என்ற உணவகத்தின் பெயர் பட்டிதொட்டியெல்லாம் அடிபட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

அத்துடன், இவ்வுணவகம் அமைந்துள்ள பிரதேசத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்புக்கள் குறைந்த தொகையினை வாடகையாகச் செலுத்திவிட்டு, இங்கு உணவுற்பத்தி செய்து தமது வருமானத்தைப் பெருக்கமுடியும்.

இதன்மூலம் தமிழ் மக்களின் பாரம்பரிய உணவுமுறைகளை தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கமுடியும் என்பதும் இதன் சிறப்பம்சம்.

இவ்வாறு நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பொறுக்கமுடியாத அரசாங்கம், யாழில் அமைக்கப்படும் அம்மாச்சி உணவகத்துக்கு ‘ஹெல போஜன’ எனப் பெயரிடுமாறும், அரசாங்கத்தின் நிதியுதவியில் இவ்வுணவகம் அமைக்கப்பட்டதால், இதனை விவசாய அமைச்சர் துமிந்த சில்வாவே திறந்துவைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும், இதற்கு அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததனால் இதன் திறப்புவிழாவும் காலந்தாழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தது. பின் ஐங்கரநேசன் பதவி இழந்ததும், வடமாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், தற்போதைய வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவ்வுணவகத்துக்கு எந்தவொரு பெயர்ப்பலகையையும் நிறுவாது மக்கள் முன்னிலையில் திறந்துவைத்துள்ளார்.

ஹெல போஜன திட்டத்தில் இலங்கை பாரம்பரிய உணவுகள்தான் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் தமிழ் பாரம்பரிய உணவுகளிற்கு இடமில்லை. ஹெல போஜனின் பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்யலாமென மத்திய அரசு கூறினாலும், அது தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகமே?

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கனடா தமிழ் காங்கிரசின் பொங்கல் நிகழ்வில் ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் சிறிலங்கா தூதருக்கு அழைப்பு!

கனடாவில் தமிழ் காங்கிரசினால் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் தமிழ் மக்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் நிகழ்வுக்கு ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் கனடாவுக்கான சிறிலங்கா தூதுவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யுத்த காலத்தில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களிடையே பல்வேறு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, பல அமைப்புக்கள் தாயக மக்களுக்கு உதவி செய்ததுடன், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு எதிராக ஒன்றிணைந்து போரடினர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபின்னர், இவ்வாறான அமைப்புக்களின் செயற்பாடுகள் அனைத்தும் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் தனது தந்திரோபாயத்தின்மூலம் இவ்வமைப்புக்களை வளைத்துப்போட்டு வருகின்றது.

இவ்வாறு சிறிலங்கா அரசாங்கத்தின் தந்திரோபாயத் திட்டத்திற்கு கனடாவின் தமிழ் காங்கிரசும் பலியாகியுள்ளது.

இச்செய்தியினை தமிழ் காங்கிரஸ் நிராகரித்ததுடன், தமிழ் காங்கிரசினால்  கொண்டாடப்படும் நிகழ்வை ஆவணமாக்குவதற்கு ரூபவாகினி கூட்டுத்தாபனம் தம்மிடம் அனுமதி கோரியதாகவும் தாம் அதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் தமிழ் காங்கிரஸ் அமைப்பு கூறிவருகின்றது.

ரூபவாகினி கூட்டுத் தாபனமானது சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம். இதில் பணியாற்றுபவர்களும் சிறிலங்கா அரசாங்கத்தின் கைக்கூலிகள்.

இவ்வாறிருக்கும் நிலையில், யுத்த காலப்பகுதியில் ரூபவாகினி உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு, மக்களை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.

இவ்வாறான ஒரு நிறுவனமே, ஒருபுறம் மக்களுக்காக உதவுவதாகக் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெறுவதுடன், அரசாங்கத்தின் சூழ்ச்சிக்கும் விலைபோய் வருகின்றது.

ஆனந்தசங்கரி, சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கிடையில் முரண்பாடு, உடைகிறதா தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு?

உள்ளூராட்சித் தேர்தலையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இடம்பெற்ற ஆசனப் பங்கீடுகளினால் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கூட்டணி உருவாகியது.

தற்போது தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈபிஆர்எல்எவ் இற்குமிடையில் ஆசனப் பங்கீட்டில் முரண்பாடு தோன்றியுள்ளது.

வவுனியா நகரசபைத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வேட்பாளர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மறுத்துவருகின்றார். இதனையடுத்து ஆனந்த சங்கரிக்கும், சிவசக்தி ஆனந்தனுக்குமிடையில் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பேச்சு இடம்பெற்றது.

சிவசக்தி ஆனந்தன் இணக்கம் தெரிவிக்காத நிலையில், கோபமடைந்த ஆனந்த சங்கரி, மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

எந்தப் பிரச்சனையால் ஈபிஆர்எல்எவ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகியதோ, அதையே தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து சுரேஸ்பிரேமச்சந்திரன் செய்து வருகின்றார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தமது சுயலாபத்துக்காகவே போட்டியிடுகின்றனர். இதில் சம்பந்தனுக்கு விதிவிலக்காக செயற்படுபவர்கள் எவருமேயில்லையென்பதே யதார்த்தம்.

 

ஒரே வீட்டில் சகோதரிகள் இருவர் இருவேறு கட்சிகளில் போட்டி!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் இருவேறு கட்சிகளில் போட்டியிடவுள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மதியரசன் சுலக்சனின் சகோதரிகள் இருவருமே இருவேறு கட்சிகளில் போட்டியிடவுள்ளனர்.

இரண்டு அரசியல் கட்சிகளின் தலையீடு காரணமாகவே இரண்டு சகோதரிகள் இரண்டு கட்சிகளுக்குமாக தேர்தலில் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது.

செப்ரெம்பர் மாதம் வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளினது வழக்கு விசாரணை நிறைவடையும் தறுவாயில் சாட்சிகளுக்கு வவுனியாவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனக் காரணம் கூறப்பட்டு மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டமை அனைவரும் அறிந்ததே.

இதனையடுத்து மூன்று அரசியல் கைதிகளும் தொடர் உணவுத் தவிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், குறித்த மூன்று அரசியல் கைதிகளையும் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள்  அவர்களின் பிரச்சனைகளைக் கையாண்டனர்.

இதேவேளை, ரெலோ அமைப்பு ஒருபடி மேல் சென்று அவ்வரசியல் கைதிகளை அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடியதுடன், முஸ்லிம் மற்றும் சிங்களச் சட்டத்தரணிகள்மூலம் இப்பிரச்சனையைக் கையாண்டனர்.

இருப்பினும், ரெலோ அமைப்பின் சிவாஜிலிங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணிகள் இருவரும் பணத்தினை வாங்கிவிட்டு, வழக்கிற்கு முன்னிலையாகவில்லை.

அத்துடன், சிவாஜிலிங்கத்தைச் சந்தித்த மைத்திரிபால சிறிசேன நல்ல முடிவு கிடைக்கும் எனத் தெரிவித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

வழக்கும் தொடர்ந்து நடைபெறவுமில்லை. அதற்கான தீர்ப்பும் வழங்கப்படவில்லை.

இவ்வாறிருக்கையில், மதியரசன் சுலக்சனின் குடும்பத்துடன் இரண்டு கட்சிகளும் நெருக்கமான தொடர்பைப் பேணிவந்தனர்.

இதன் விளைவாக, தற்போது சுலக்ஷனின் இரு சகோதரிகளும் கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேசசபை தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ரெலோ அமைப்பின் சார்ப்பில் போட்டியிடவுள்ளனர்.