இந்தியாவின் வளர்ப்பு மகன் வரதராஜப்பெருமாள் தனித்துப் போட்டி!

இந்தியாவின் வளர்ப்பு மகன் வரதராஜப் பெருமாளை தமிழரசுக் கட்சிக்குள் இணைத்து எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இணக்கம் காணப்பட்ட து.

இந்நிலையில், வரதராஜப்பெருமாளும் அவரது கட்சிக்காரர்களும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனித்துப் போட்டியிடுவதற்காக சாவகச்சேரி நகர சபையில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

தமிழர் சமூக ஜனநாயக கட்சியை தமிழரசுக் கட்சியுடன் இணைப்பதற்கு மாவை சேனாதிராஜா வரதராஜப்பெருமாளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.

பேச்சில் இணக்கம் காணப்பட்டநிலையில், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பட்டியலினை தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைக்குமாறு மாவை சேனாதிராஜா வரதராஜப்பெருமாளிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியிடமிருந்து 50பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் வரதராஜப்பெருமாள் மாவை சேனாதிராஜாவை பலமுறை தொடர்புகொண்டபோதிலும் மாவை சேனாதிராஜா பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 12ஆம் நாள் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்ததுடன், அதற்கான கட்டுப்பணத்தையும் கட்டியுள்ளனர்.

சங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்!

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் நியமனத்தில் சர்ச்சைகளும், அடிதடிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதிக்குள் சங்கானை பிரதேசம் வருவதால் அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக சரவணபவன் மாவை சேனாதிராஜாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியானது முதல் இரண்டு வருடங்களும் புளொட்டுக்கும், அடுத்த இரண்டு வருடங்களும் தமிழரசுக் கட்சிக்குமென தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் புளொட் அமைப்பிற்கு விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.

அதன்காரணமாக, வட்டுக்கோட்டைத் தொகுதியைத் தனக்குத் தராவிட்டால், சரவணபவனின் நாளிதழான உதயன் நாளிதழ் தமிழரசுக் கட்சிக்கு எதிராகச் செய்திகளை வெளியிடும் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, மாவைசேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனுடன் பேச்சு நடத்தியுள்ளார். இருப்பினும் இதற்கு சித்தார்த்தன் இணங்கியதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், யாழ். மாநகர முதல்வராக சி.வி.கே. சிவஞானத்தை போட்டியிடுமாறு மாவை சேனாதிராஜா அழுத்தம் கொடுத்ததற்கு சி.வி.கே.சிவஞானம் மறுப்புத் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆர்னோல்டை மாநகர முதல்வராக நியமிக்க சுமந்திரன் வற்புறுத்தி வருகின்றார்.

இந்நிலையில், ஜெயசேகரம் தன்னை யாழ். மாநகர முதல்வராக நியமிக்குமாறு தொடர்ச்சியாக வற்புறுத்தி வரும் நிலையில், ஆர்னோல்ட்டை நியமிக்கவே சம்பந்தன், சுமந்திரன் தரப்பு விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.

 

மலையகப் பாடசாலைகளுக்கு இந்திய ஆசிரியர்களை நியமிப்பதற்கு வேலையில்லா படடதாரிகள் எதிர்ப்பு!

மலையகப் பாடசாலைகளில், விஞ்ஞானம், கணித பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து பந்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர்  கடந்த 12ஆம் நாள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மலையகப் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்கு வடக்குக் கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளிலிருந்து தகுதியானவர்களை நியமிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பொ.இராதா கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் மேடைகளில் கூறி வந்தாரே தவிர அதற்கான எந்தவித நடவடிக்கையையும் அவர் முன்னெடுக்கவில்லை.

நாடு தழுவிய ரீதியில் 50ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். யுத்தத்தினால் பாதிப்படைந்த வடக்குக் கிழக்கில் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். இவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருவதுடன், பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே, மலையகப் பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

நாட்டில் 53ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் வேலை தேடி இன்னல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதன் பின்னணி என்ன? என்ற கேள்வியே மக்கள் மத்தியில் தொக்கி நிற்கின்றது.

பியர் விலைக்குறைப்பால், கள்ளு விற்பனையில் வீழ்ச்சி!

பியர் விலைக் குறைப்பினால் நாட்டில் கள்ளுவிற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக வடமாகாண பனை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் 50 வீதமான கள்ளுப்போத்தல்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடப்பதாகவும் அக்கூட்டுறவுச் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொர்பாக பனை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வலிகாமப் பிரதேசத்தின் தலைவர் செல்வராசா தெரிவிக்கையில்,

பியரின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளதால் உள்ளூர் உற்பத்திக் கள்ளின் நுகர்வு குறைவடைந்துள்ளதுடன், தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த கள்ளின் அளவும் குறைவடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இதனால் கள்ளு இறக்கி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பல குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன ‘போதையற்ற நாட்டினை ‘ உருவாக்குவோம் எனக் கூறிக்கொண்டு நாடுபூராகவும் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றார்.

ஆனால் மறுபுறம் வரவு-செலவுத் திட்டத்தில் பியரின் விலைiயைக் குறைக்கின்றது அரசாங்கம்.

ஒருபுறம் மக்களுக்கு போதையற்ற நாட்டை உருவாக்குவதற்கு தாம் போராடுவதாகக் காட்டிக்கொண்டு மறுபுறம் பியரின் விலையைக் குறைத்து மக்களை போதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

நாட்டைக் கடனில் தள்ளிய அரசாங்கம், ஒருபுறம் மக்களின் பணத்தினைக் கொள்ளையடித்து, மக்களை போதைக்கு அடிமையாக்குவதுடன், ஆட்சியிலுள்ளவர்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சொத்துக்களைக் கொள்ளையடிப்பதுடன், கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக நாடுதழுவிய ரீதியில் பல மதுபான உற்பத்தி நிலையங்களைத் திறந்து வருகின்றனர் என்பது வெளிப்படை.

அத்துடன், உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கள்ளுக்கு வரி விதிக்கும் அரசாங்கம், இயற்கையான கள்ளுக்கு தடைவிதித்து அத்தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களை மேலும் வறுமைக்கோட்டுக்குப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

வித்தியாதரனை யாழ். மாநகர முதல்வராக்கினால் உதயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகச் செய்தி வெளியிடும் – சரவணபவன்!

வித்தியாதரனை யாழ். மாநகரசபையின் முதல்வராக்கினால் யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழ் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு எதிராகச் செய்தி வெளியிடும் என அப்பத்திரிகையின் ஸ்தாபகரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் இரா.சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலின் ஆசனப் பங்கீட்டுப் பிரச்சனை ஓரளவு தீர்த்தபின்னர், தற்போது, யாழ். மாநகர முதல்வர், தெரிவில் வித்தியாதரனுக்கு எதிராக அவரது மைத்துனரான சரவணபவன் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு வித்தியாதரன் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இதனால், அவர் முன்னாள் போராளிகள் என சிலரை இணைத்து ஜனநாயகப் போராளிகள் கட்சியை உருவாக்கி அதில் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்திருந்தார்.

இந்நிலையில், வித்தியாதரனை யாழ். மாநகர முதல்வராக நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும்சுமந்திரன் ஆகியோர் விருப்பம் தெரிவித்த நிலையிலேயே சரவணபவன் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இதனால் வித்தியாதரனின் யாழ். மாநகர முதல்வராகும் கனவும் பொய்த்துப்போய்விட்டது.

யாழ். கோட்டையில் இராணுவத்தின் மாபெரும் உணவுத் திருவிழா!

யாழ். கோட்டையில் எதிர்வரும் 15ஆம் நாள் தொடக்கம் 17ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத்தினரால் மிகவும் பிரம்மாண்டமாக உணவுத் திருவிழா நடாத்தப்படவுள்ளது.

வடமாகாண விடுதிகள் சங்கத்துடன் இணைந்து இவ்வுணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

யாழ். கோட்டைக்கு முன்பாக நடைபெறவுள்ள இத்திருவிழாவில், இராணுவத்தின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மாகாணம் எங்கும் ஏ-9 வீதியை அண்டி இராணுவம் பல உணவு விடுதிகளைத் திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன், மக்களின் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இராணுவத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு பல்வேறு மட்டங்களிலிருந்து எதிர்ப்புக்களை வெளியிட்டாலும், இராணுவமோ வடக்கு மாகாணத்தில் திட்டமிட்டு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

அத்துடன், முடி திருத்துமிடம், தையலகம் போன்றவற்றையும் இராணுவம் நடத்தி வருவதினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கெதிராக மக்கள் போராடியும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்னிலையில், தற்போது உணவுத் திருவிழாவை ஆரம்பிப்பதுடன், இசைநிகழ்வினையும் இராணுவத்தினர் நடத்தவுள்ளனர்.

 

தேர்தலில் போட்டியிட வரதராஜப் பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை!

வடக்குக் கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பத்மநாபா அணியின் தலைவருமான வரதராஜப் பெருமாளுக்கு நேற்று இலங்கை அரசாங்கத்தினால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடக்கூடியவாறு இக்குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டாலும், வரதராஜப்பெருமாளை மீண்டும் வடக்கின் முதலமைச்சராக நியமிப்பதில் இந்தியா திரைமறைவில் காய்களை நகர்த்திவருவதாக தகவல்கள் கசிந்தது.

இந்நிலையிலேயே, வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் தமிழர் பிரதேசங்களான வடக்குக் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்துக்கு முதலமைச்சராக நியமிக்கப்பட்டவரே வரதராஜப்பெருமாள்.

பின்னர், இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியபின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்த வரதராஜப் பெருமாளுக்கு இந்திய அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியது.

சுமார் 28 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்துவந்த வரதராஜப்பெருமாள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்தார்.

கடந்த வருடம் இலங்கைக் குடியுரிமையைப் பெற விண்ணப்பித்திருந்த வரதராஜப் பெருமாளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் அழுத்தத்தினால் தற்போது அவருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

அடுத்த யாழ். மாவட்ட மாநகர முதல்வராக வித்தியாதரன்?

உள்ளூராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னொரு புறம் யாழ். மாநகரசபை முதல்வருக்கான தெரிவும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், யாழ். மாநகர சபையின் முதல்வராக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரே தெரிவுசெய்யப்படவேண்டும்.அதனை அவர்கள் மற்றயகட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.

யாழ். மாநகரசபை முதல்வர் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி, முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி உட்பட பல கட்சிகள் போட்டியிடவுள்ளன.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளிருந்து, ஆறுபேர் மாநகர முதல்வர் கதிரைக்குப் போட்டியிடுகின்றனர்.

இவர்களுள், யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரப் பிள்ளையும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிட மறுத்தாலும், இறுதியில் சம்மதித்துள்ளார்.

அடுத்ததாக, ராஜதேவன், இவர் முன்னாள் மாநகரசபை முதல்வர். வெளிநாட்டில் வசிக்கும் இவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளார்.

அத்துடன், வடமாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரனும் மாநகரசபையின் முதல்வராக வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜெயசேகரனை நியமிப்பதற்கு தமிழரசுக் கட்சியில் சிலர் விரும்பவில்லை.

அடுத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் மற்றும் ஆர்னோல்ட் ஆகிய இருவரில் சொலமன் சிறில் அரசியலில் பிரகாசிக்காதவராகையால், அவர் அனைவராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆர்னோல்டால் அதிக வாக்கினைப் பெறமுடியும். ஆர்னோல்ட் அதிக வாக்குகளைப் பெற்றாலும், அவர் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணி புரிகின்றார். இதனால் இவரை முதல்வராக நியமிப்பதற்கு கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இறுதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மச்சானான வித்தியாதரனை நியமிப்பதற்கு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு சரவணபவன் கடுமை எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரைச் சமாதானப்படுத்தி வித்தியாதரனை அடுத்த மாநகர முதல்வராக நியமிப்பதற்கு இரா.சம்பந்தன் முயற்சி எடுத்துள்ளார்.

இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் வித்தியாதரன் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக  நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.