தெருச் சருகுகள் : எம்.ரிஷான் ஷெரீப்

fly-artபிணத்தை மடியில் வைத்துக் கொண்டு, அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும்? புஷ்பமாலா தனது கால்கள் விறைத்திருப்பது போல உணர்ந்தாள். காலை நீட்டவும் முடியாது, வேறு விதமாக உட்காரவும் முடியாது என்பதால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடுத்திருந்த அசுத்தமான சீத்தைத் துணி அவளை அக் குழந்தைக்குத் தாயாகக் காட்டியது. காலையில் வரும்போது குடித்த வெறும் தேனீருக்குப் பிறகு எதுவும் கிடையாது. மத்தியானப் பொழுதுக்கு வெயில் ஏறியிருந்தது. பசித்தது. ஏஜண்ட்காரன் எதையாவது சாப்பிடக் கொண்டுவருவான் என்ற மெல்லிய நம்பிக்கை மனதுக்குள் ஓடியது. ஆனால் நிச்சயமில்லை. விகாரையைத் தரிசிக்க வரும் யாராவது புண்ணியவான்கள் அவள் மேலோ அந்தக் குழந்தையின் மீதோ ஏதேனும் பரிதாபப்பட்டு உணவாக எதுவும் போட்டுவிட்டுப் போனால்தான் உண்டு. விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணியில் சில்லறைகள், பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்திருக்கின்றனதான். அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஏதாவது வாங்கி வந்து உண்ணும் நப்பாசையும் உள்ளுக்குள் எழுந்தது. சாத்தியமில்லை. ஏஜண்ட்காரன் எங்கிருந்தாவது நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனது பார்வையைத் தாண்டிப் போய் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு தைரியமில்லை. போன வாரம் இப்படித்தான். பணம் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறாளா என குமாரியின் ஆடையை அவிழ்த்துப் பார்த்தார்கள். அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. என்ன செய்ய முடியும்? வீரு வீரென்று பிரம்பால் அடிவாங்குவதை விடவும் ‘பாருய்யா பாரு..எங்கேயும் எதுவும் மறைச்சு வைக்கல’ என்று கத்தி அவளே உடுப்பை அவிழ்த்துக் காண்பித்தாள். அன்று முழுக்க அவள் எதுவும் சாப்பிடவில்லை. அழுது கொண்டே இருந்தாள்.

பிணத்தின் மீது இலையான்கள் மொய்த்துக் கொண்டே இருந்தன. அது பிணம் என்பது இலையான்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது. இலையான்களால் எப்படியும் ஒரு பிணத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இலையான்களால் மட்டுமல்ல. பிண வாடையை மோப்பம் பிடித்துத் தேடி வரும் நாய், பூனைகள் கூட பிணத்தை அடையாளம் கண்டு இழுத்துப் போக முயற்சிக்கும். அதனால்தான் புஷ்பமாலா பிணத்தைத் தனது மடியை விட்டு இறக்கவும் இல்லை. அங்கு இங்கென நகரவும் இல்லை. காசு போட்டுச் செல்லும் எவராலும் கூட அது பிணம்தான் என இன்னும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் சந்தேகப்படக் கூட இல்லை. வெறுமனே அசுத்தமான ஆடைகளைப் பார்த்துக் கொண்டு அசூசை பட்டுக்கொண்டு தூரத்திலிருந்து காசை விட்டெறிந்துவிட்டுச் செல்கிறார்கள். எவனாவது கண்டுபிடித்து விட்டால் அவளும் அவளது கூட்டமும் சிறையில் கம்பியெண்ண வேண்டியதுதான். அவள் இதற்கு முன்பும் சிறைக்குப் போயிருக்கிறாள். அப்பொழுது அவள் சிறுமி. கஞ்சா வைத்திருந்ததற்காக அவளது அப்பாவைக் கைது செய்து கொண்டு போயிருந்தார்கள். அம்மாவுடன் அவள் அப்பாவைப் பார்க்கப் போயிருக்கிறாள். பொலிஸார் அடித்து அப்பா செத்துப் போனதால் அப்பாவைப் பிணமாகத்தான் வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். புஷ்பமாலாவுக்கு எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது. அவளுக்கு அதுதான் பிரச்சினை. எதுவும் மறந்து தொலைய மாட்டேனென்கிறது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட நினைவிருக்கிறது. அவளும் பல விஷயங்களை மறந்துவிட தீராது முயற்சிக்கிறாள். ஒருபோதும் முடியவேயில்லை. முக்கியமாக மாதந்தோறும் அவளது வீட்டில் கிடக்கும் பிணங்கள். பல நாட்கள் இரவுகளில் அவள் தூங்காமல் விழித்திருந்திருக்கிறாள். என்னதான் அவர்களின் வாயில் அலறிவிடாமல் இருக்க பழந்துணியைத் திணித்து அடைத்திருந்த போதிலும் அவர்கள் வாய்க்குள்ளேயே கதறும் சப்தம் அவளது கனவில் கூடக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

புஷ்பமாலா சலிக்காது இலையான்களை விரட்டிக் கொண்டிருந்தாள். யாராவது அவர்களைப் பார்த்துக் கொண்டு வருவதைக் கண்டால் குழந்தையைப் படுக்க வைத்திருந்த தொடையினை ஆட்டி தாலாட்டுவது போல மெலிதாக வாய்க்குள் முணுமுணுத்தாள். பச்சை நிற பழைய சீலையொன்றால் சுற்றி பிணத்தை அவளிடம் கொடுத்திருந்தார்கள். பிணம் என்பதாலோ என்னவோ அது பெரிதாய்க் கனத்தது போல உணர்ந்தாள். முகத்தை மட்டும் திறந்து மற்ற எல்லாவற்றையும் முழுவதுமாகச் சுற்றி மறைத்திருந்தாள். ஏனைய நாட்களிலென்றால் அவளுக்குத் தரப்படும் குழந்தை அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறதா என அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். சாயத் தேனீர் வாங்கி போத்தலில் நிரப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். இன்று அந்தத் தொந்தரவு ஏதும் இல்லை. ஆனாலும் மனதுக்கு மிகவும் கஷ்டமாக உணர்ந்தாள். இன்றைக்கு தன் மடியிலிருக்கும் குழந்தைப் பிணம் நாளைக்கு எங்கிருக்குமோ? பிண வாடையை அவள் லேசாக உணர்ந்தாள். அதை அவளால் மட்டுமே உணர முடிந்தது. விகாரை வளவுக்குள் பரவலாகப் புகைந்து கொண்டிருந்த சந்தனத்திரி வாடையும், புத்தருக்குப் படைக்கப்பட்ட பூக்களின் நறுமணமும், பக்தர்களிடமிருந்து எழுந்த வாசனையும் பிண வாடையை எப்படியும் மறைத்துவிடக் கூடும் என்பதால் அவள் சற்று தைரியமாக இருந்தாள்.

புஷ்பமாலா குழந்தையைப் பார்த்தாள். அதன் சிவப்பு நிறம் கறுப்பாக மாறிக் கொண்டு வருவதைக் கவனித்தாள். தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. எப்படியும் அழுகி விடும். விடிகாலையில் செத்துப் போயிருக்கிறது. இரண்டு நாட்களாக வயிற்றோட்டமும், வாந்தியும், காய்ச்சலுமென அவஸ்தைப்பட்டு இன்று அதிகாலையில் உயிரை விட்ட எட்டு மாதக் குழந்தை. வழமையாக ஏஜண்ட்காரன் வாடகைக்கு எடுத்துவரும் குழந்தைதான். இவளுடன் இதற்கு முன்பும் பிச்சைக்கென இதே குழந்தையைக் கொண்டு வந்து தந்திருக்கிறார்கள். குழந்தைக்கு ஒரு நாள் வாடகை ஆயிரம் ரூபாய். எப்படியும் அதற்கு மேலேயே அது உழைத்துக் கொடுக்கும். அதற்காக மழையும், வெயிலும் பாராமல், ஒழுங்காக பால் கொடுக்காமல் தெருவில் காலை தொடக்கம் இரவு வரை வைத்திருந்தால் குழந்தை உடம்பு என்னவாகும்? அதிலும் அதனை அடிக்கடி அழ வைக்க வேண்டுமென்பதற்காக தூங்க விடாமல், வயிறு நிறைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் தாங்கும் குழந்தை? ஆனாலும் அவளுக்குக் கிடைக்கும் ஊதியத்தை விடவும் அதிகமாக அந்தக் குழந்தையை வாங்கும்போதே அதன் தாய்க்காரிக்கு குழந்தையின் ஒரு நாள் வாடகையாக முழுமையாக ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் அதன் தாய்க்காரி சண்டைக்கு வந்துவிடுவாள் என்று தெரியும். காசைக் கண்ணில் காட்டாமல் குழந்தையைக் கொடுக்கவும் மறுத்துவிடுவாள். இந்தக் காலத்தில் பிச்சையெடுக்கவென குழந்தைக்கு எங்கு போவது? பிச்சைக்காரியின் கையில் குழந்தையொன்றைப் பார்த்தால்தான் பரிதாபப்பட்டு கொஞ்சம் அதிகமாகப் பிச்சை போடுவார்கள். பிச்சை போடுபவர்களின் மனிதாபிமானத்தின் அளவும், அப்போதைய கையிருப்பின் அளவும்தான் போடப்படும் பிச்சைத் தொகையைத் தீர்மானிக்கிறது என்பதை புஷ்பமாலா அறிவாள். ஒருவரைப் பார்த்தவுடனேயே அவள் அவர் குறித்து மதிப்பிட்டுவிடுவாள். இவரிடம் பிச்சை தேறுமா, எவ்வளவு தேறும் என்பதையெல்லாம் அவளது அனுபவ உள்ளுணர்வு சொல்லிவிடும். அது ஒருபோதும் பிழையாகிப் போனதில்லை. அவளது கையில் குழந்தையொன்றிருந்தால் அன்று எப்படியும் நிறைய காசு தேறும். பிச்சை போடுபவர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அக் குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்து பரிதாபப்பட்டு எப்படியும் பிச்சை போட்டு விடுவார்கள்.

வெள்ளை உடுத்திக் கொண்டு விகாரைக்கு வந்த பக்தர் கூட்டமொன்று அவளை நோக்கி வருவதைக் கண்டாள். குழந்தையின் தலை வைத்திருந்த தொடையை ஆட்டிக் கொண்டே தாலாட்டொன்றை முணுமுணுத்தபடி, வந்த கூட்டத்திடம் கையை நீட்டி இறைஞ்சினாள். வந்தவர்கள் ஒவ்வொருவராக பத்து ரூபாய் நோட்டுக்களை அவள் விரித்திருந்த துணியில் போட்டுவிட்டுச் சென்றார்கள். அவள், அவர்கள் போகும்வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்படியும் இன்றைய வருமானம் ஐயாயிரத்தைத் தாண்டி விடும். காலையிலிருந்து எவ்வளவு பக்தர் கூட்டம்… எந்நாளும் இப்படியில்லை. வருடத்துக்குச் சில நாட்கள்தான். புத்தரின் பிறந்தநாள் வழிபாடுகளுக்காக அந்த விகாரை வருடந்தோறும் இந்த நாட்களில் எப்படியும் பக்தர்களால் நிறைந்துவிடும். வந்தவர்கள் தமது பாவங்களைக் கரைக்கவென்று உண்டியலிலும், பிச்சைக்காரர்களது தட்டுக்களிலும் காசுகளை இறைத்துக் கொண்டிருந்தார்கள். புஷ்பமாலா குழந்தையை அடுத்த தொடைக்கு மாற்றிக் கொண்டாள். எவ்வளவுதான் வெயிலடித்தபோதிலும், உஷ்ணமாக இருந்தபோதிலும் குழந்தை குளிர்ந்து விரைத்திருந்தது. வெள்ளைத் துணியில் சேர்ந்திருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து மடித்து, தான் உட்கார்ந்திருந்த துணியின் உள்மடிப்பில் செருகி வைத்தாள். விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணி நிறைய ரூபாய் நோட்டுக்களைப் பார்த்தால் எவரும் பிச்சை போட மாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

அவளிருந்த சேரியில் அனேகருக்கு பிச்சை எடுப்பது என்பது முக்கியமான ஒரு தொழில். ஊர் உலகத்தில் ஏதாவது பண்டிகை நெருங்கும்போது ஏஜண்ட்காரர்கள் அந்தச் சேரியைத்தான் தேடி வருவார்கள். அந்தச் சேரி ஏஜண்ட், ஆளுக்கு இவ்வளவுதான் என எவ்வளவு சொல்வானோ அதை எடுத்து வைத்துவிட்டு அந்த சேரி வயோதிபர்களையும், சிறுவர், சிறுமிகளையும் கூட்டிச் சென்றுவிடுவார்கள். வருபவர்கள் மத்தியில் பத்தொன்பது வயது புஷ்பமாலாவுக்கு எப்பொழுதும் கிராக்கி இருக்கும். கறுப்பு நிறமும், மூக்கு வரை பிளந்த மேலுதடும், வளைந்த ஒரு கையும் அவளுக்கான வாடகையை அதிகப்படுத்தியிருந்தது. சேரி ஏஜண்டிடம் அவளுக்கான வாடகையை மொத்தமாகக் கொடுத்துவிட்டு பண்டிகைக் காலங்களில் கண்டிக்கோ, அனுராதபுரத்துக்கோ, பொலன்னறுவைக்கோ அவளைக் கூட்டிக்கொண்டு செல்லும் ஏஜண்ட் அவளைத் திருப்பியனுப்பி வைக்கும்போது ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்து அனுப்புவான். ஒரு மாத காலத்துக்கும் மேலாக வெயிலிலும் மழையிலும் அவள் உழைத்ததற்கு அது மட்டும்தான் அவளிடம் எஞ்சும். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரும்போது அவளது அம்மாவிடம் சேரி ஏஜண்ட் அவளுக்காகக் கொடுத்த காசு முழுவதுமாகத் தீர்ந்து போயிருக்கும். அம்மா, இவளிடமிருப்பதை நச்சரித்துக் கேட்டு வாங்கிக் கொள்வாள். ஆனாலும் அம்மாவை புஷ்பமாலாவுக்கு மிகவும் பிடிக்கும்.

பெரிய பெரிய ஆட்களெல்லாம் அவளது அம்மாவைத் தேடி வருவார்கள். ஒருமுறை ஒரு பிரபல நடிகையொருத்தி கூட அம்மாவைத் தேடி வந்திருந்தாள். கவனக்குறைவால் மூன்று மாத காலத்துக்கும் மேலாக வளர்ந்திருந்த கர்ப்பத்தை அம்மாதான் கலைத்து விட்டாள். சேரிக்குள் எல்லோருக்கும் இது தெரியும். யாரும் காட்டிக் கொடுக்கவில்லை. பொதுவாக அப்படி யாரும் காட்டிக் கொடுப்பதில்லை. சேரிக்குள் எல்லோருமே ஏதோவொரு தப்பான செயலைத்தான் தமது ஜீவனோபாயமாகச் செய்துவருகிறார்கள். நெருக்கமான வீடுகள், குறைந்த வசதிகள், தீய பழக்கவழக்கங்கள் காரணமாக ஒருவருக்கொருவர் சண்டை பிடித்துக் கொள்வார்கள்தான். கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்வார்கள்தான். ஆனால் அதற்காக காட்டிக் கொடுக்க முடியுமா? அம்மாவுக்கு, புஷ்பமாலாவின் அக்காக்கள் இருவரும் இந்த வேலைகளில் உதவி செய்வார்கள். எப்படியும் மாதத்துக்கு நான்கைந்து பெண்கள் அம்மாவைத் தேடி வந்துவிடுவார்கள். ஆளைப் பார்த்து எடை போட்டு அதற்கேற்ப காசு வாங்கிவிடுவாள் அம்மா. கல்லூரி மாணவிகள் நிறையப் பேர் வருவார்கள். ஒரு தடவை பள்ளிக்கூட மாணவியொருத்தியும் வந்திருந்தாள். புஷ்பமாலா வயதுதான் இருக்கும். ஆளை, வயதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? வரும்வரைக்கும் இலாபம். எப்படியும் இந்த வருடத்துக்குள் மூத்த அக்காவின் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென அவளது அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறாள். அதிர்ஷ்ட லாபச் சீட்டுகள் விற்கும் சைமன் ஒரு நாள் அம்மாவிடமே நேரடியாக அக்காவைப் பெண் கேட்டிருக்கிறான். அம்மா, அக்காவிடம் அவளது விருப்பம் பற்றி எதுவும் கேட்கவில்லை. ‘இந்த வருடத்துக்குள் அவனுடன் உனக்குக் கல்யாணம்’ என உத்தரவாகச் சொல்லி விட்டிருந்தாள். சைமனின் அம்மா எப்பொழுதும் குடித்துக் கொண்டேயிருப்பாள். அவளுடன் எப்படியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருக்க முடியாது. அதனால் அக்காவுக்கென்று தனிக்குடிசையொன்று வாடகைக்கு எடுக்கவேண்டுமென அம்மா தேடிக் கொண்டிருந்தாள். அது இந்தச் சேரியைத் தாண்டி வேறெங்காவது இருந்தால் நல்லது என ஒருநாள் அவளது தலையில் பேன் பார்த்துக் கொண்டிருக்கையில் புஷ்பமாலா கூறினாள். அக்காவுக்குக் கோபம் வந்துவிட்டது. அதுதான் அக்கா. அவளுக்கு திடீர் திடீரென கோபம் வரும். எதற்கென்றில்லை. அதனாலேயே ஒரு இடத்தில் வேலை பார்க்க முடியாது. முன்பு பங்களாக்களுக்கு வேலைக்குச் சென்றவளால் அங்கெல்லாம் ஒரு கிழமைக்குக் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்துவிட்டாள். அம்மா, அடி அடியென அப்படி அடிப்பாள். ஆனாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பாளேயொழிய கோபத்தைக் கட்டுப்படுத்த சிறிதும் முயற்சிக்க மாட்டாள். ‘எல்லோரும் சேர்ந்து என்னை இங்கிருந்து துரத்திடலாம்னு பார்க்குறீங்களா?’ என அக்கா கத்தினாள். சின்னக்கா ஓடி வந்து சமாதானப்படுத்தினாள்.

புஷ்பமாலாவுக்கு மூத்தவளை விடவும் சின்னக்காவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அவள்தான் இவளுக்கு தலைக்கு ரிப்பன், முகத்துக்கு பவுடர் எல்லாம் வாங்கி வந்து கொடுப்பாள். புஷ்பமாலா எப்பொழுதும் தன்னுடன் வைத்திருக்கும் பச்சை நிறச் சீப்பு அவள் வாங்கிவந்து கொடுத்ததுதான். அவளுக்குத்தான் அந்த வீட்டில் முதன்முதல் கல்யாணம் ஆனது. கல்யாணம் என்பது விழா எடுத்துச் செய்வது என்றால் இது அப்படியில்லை. தனது பதினாறு வயதிலேயே பஸ் கண்டக்டராக வேலை பார்க்கும் ஒருவனுடன் ஓடிப் போய்விட்டாள். அவனும் இந்தச் சேரிக்குள்தான் இருந்தான். இரண்டு நாள் கழித்து இருவரும் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு சேரிக்கு வந்தார்கள். அம்மா விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு அவர்களை அடிக்க ஓடினாள். ‘எங்களை ஏதாவது செஞ்சே..நாங்க ஒன் தொழிலப் பத்தி பொலிஸ்ல சொல்லிடுவோம்’ என்று அவன் மிரட்டினதும் அடங்கினாள். அம்மா எதற்கும் பயப்படுபவளில்லை. ஆனாலும் இந்த வார்த்தைகளுக்கு அவள் பயந்துதான் போனாள். ‘எக்கேடு கெட்டும் போ’ எனக் கத்திவிட்டு வீட்டுக்கு வந்தவள் அன்றைய நாள் முழுக்க வாசலில் துப்பிக் கொண்டே இருந்தாள். அசிங்கமாகிக் கூழான குழந்தைகளின் இரத்தக் கட்டிகளைப் பார்த்துக் கூட அவளுக்கு இதுவரை அப்படியொரு அறுவெறுப்பு தோன்றியதில்லை. புஷ்பமாலாவின் அப்பாவைப் புதைத்த அன்றுகூட அப்படித்தான். வந்திருந்த எல்லோரையும் தாண்டிப் போய் துப்பி விட்டு வந்து கொண்டிருந்தாள். ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை அவளுக்கு.

புஷ்பமாலாவுக்கும் அப்பாவைப் பிடிக்காது. எப்பவுமே போதையிலிருப்பவனை எவருக்குத்தான் பிடிக்கும்? அவளது அப்பாவுக்கு நிரந்தரத் தொழிலில்லை. கஞ்சா கடத்துவான், தெருவோரத்திலிருக்கும் வாகனங்களின் பாகங்களைத் திருடி விற்பான், தப்பான தொழில் செய்யும் பெண்களுக்கு ஆள் பிடித்துக் கொடுத்து கமிஷன் வாங்குவான். புஷ்பமாலாவை பிச்சைக்கார ஏஜண்டுக்கு முதன்முதலில் விற்றதும் அவன்தான். அப்பொழுது அவளுக்கு நான்கு வயது கூட பூர்த்தியாகியிருக்கவில்லை. கூட்டிப் போனவன் காலை முதல் மாலை வரை பேருந்துகளில் ஏற்றி பிச்சை எடுக்க வைத்தான். ‘அம்மா, அப்பா யாருமில்லை. பசிக்குது’ என அழுது பிச்சையெடுக்கச் சொன்னான். அவளுக்குச் சும்மாவே அழுகை வந்தது. ‘அம்மா, அம்மா’ என அரற்றினாள். முதல் நாளே நூறு ரூபாய்க்கும் மேலான வருமானத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டாள். ஒரு ராசியான பிச்சைக்காரியாக அவள் ஆனது அன்றிலிருந்துதான்.

செத்துப் போயிருந்த குழந்தையின் தாய் இவளை நம்பித்தான் குழந்தையைக் கொடுத்திருந்தாள். குழந்தையைக் கூட்டி வரவென விடிகாலையில் சக யாசகர்கள் எல்லோருடனும் வேனில் இவளும் போயிருந்தாள். யாரும் வேனை விட்டு இறங்கவில்லை. ஏஜண்ட் போய்ப் பார்த்துவிட்டு வந்து ‘அது செத்துப் போயிருக்கு’ என்றான். இவள் பதறிப் போய், வேனை விட்டு இறங்கிப் போய்ப் பார்த்தாள். நிலத்தில் கிடத்தப்பட்டிருந்த குழந்தைக்கருகில் சாய்ந்து படுத்திருந்த அதன் அம்மா இவளைக் கண்டதும் எழுந்து அழத் தொடங்கினாள். இவள் அருகில்போய் அந்த அம்மாவினது முதுகை தனது வளைந்த கையால் தடவிக் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு தந்தை இல்லை. ‘வளர்ந்து பெரியவளாகி விட்டிருந்தாலும் அதன் அம்மாவைப் போல தப்பான தொழிலுக்குப் போயிருக்கும். அப்படிப் போகவில்லையாயினும் ஊரும் உலகமும் என்னவெல்லாம் பேசி அதன் மனதை நோகடிக்கும். நல்ல விதியைக் கொண்டு பிறந்திருக்கிறது அது. அதனால்தான் கொஞ்சநாளிலேயே மண்ணுக்குப் போகும் அதிர்ஷ்டம் அதற்கு வாய்த்திருக்கிறது’ என புஷ்பமாலா நினைத்துக் கொண்டாள். ஏஜண்ட்காரன்தான் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தான். வெசாக் நாளும் அதுவுமாக குழந்தை இல்லாமல் பிச்சையெடுக்கப் போனால் காசு அதிகமாகத் தேறாது எனப் பொருமினான். ‘ரெண்டாயிரம் தந்துட்டு வேணும்னா புள்ளயக் கொண்டுபோ..அந்திக்கு கொண்டு வந்து கொடுத்துடு. நாறிப் போறதுக்கு முன்ன புதைச்சிறணும்…புதைக்கிற செலவுக்குக் கூடப் பணமில்ல’ என்று குழந்தையின் அம்மா சொன்னதும்தான் அவன் முகத்தில் ஒரு சாந்தம் தோன்றியது. அவன் அதனை எதிர்பார்க்கவில்லை. அந்த யோசனை அவனுக்குக் கூட வரவில்லை. இரண்டாயிரம்தானே? தங்க முட்டையிடும் வாத்து. கொடுத்துவிட்டால் போச்சு. அடிக்கடி துணி மாற்ற வேண்டாம். தேனீர் வாங்கிக் கொடுக்க வேண்டாம். எந்தத் தொந்தரவும் இருக்காது. பொம்மையைத் தூக்கிக் கொண்டு போய் திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பதுபோல கொடுத்து விடலாம். அதனை வைத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமாகவே உழைத்துவிடலாம். அழுது கொண்டிருப்பவளிடம் பேரம் கூடப் பேசவில்லை. பிணத்துக்கு மேலால் நிறைய வாசனைப் பவுடர் தூவி பழந்துணியால் நன்றாக சுற்றியெடுத்து புஷ்பமாலாவிடம் கொடுத்தான். அவள் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள். அந்தியானதும் குழந்தையைக் கொண்டு வந்து அதன் அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு அதைப் புதைக்கும்வரை கூடவே இருக்கவேண்டும் என தீர்மானித்துக் கொண்டாள்.

தூரத்தில் ஏஜண்ட்காரன் வருவது தெரிந்ததும் இன்னும் கடுமையாகப் பசித்தது. ஏஜண்ட்காரனைப் பார்த்ததுமே அவன் முகத்தில் இருக்கும் ஒரு அப்பாவித்தனம்தான் முதலில் தெரியும். ஆனால் பொல்லாதவன். முரடன். அப்படியிருக்காவிட்டால் அந்தப் பிச்சைக்காரர்களை கட்டிமேய்க்க முடியாதென்பதை அவன் அறிவான். ஆனாலும் புஷ்பமாலா மேல் அவனுக்கு தனிப்பட்ட பாசம் உண்டு. அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, கதிர்காமம், கெச்சிமலை என எல்லாப் புனித இடங்களுக்கும் அவனுடன் போயிருக்கிறாள். எல்லா இடங்களிலும் அவளைப் பரிவுடன்தான் கவனித்துக் கொண்டிருக்கிறான். ‘பன்சலை வாசல்ல தன்ஸல் கொடுக்குறாங்க.. ஆளுக்கு ஒரு பார்சல் சோறுதான் கொடுப்பாங்களாம். வரிசையில நிக்கணும்..பிள்ளையத் தூக்கிட்டு வா’ என்றான். புஷ்பமாலா மடியில் கனத்த பிணத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டு மெதுவாக எழுந்தாள். தான் உட்கார்ந்திருந்த துணியை, காசு எதுவும் கீழே விழுந்து விடாமல் பத்திரமாகச் சுற்றியெடுத்துக் கொள்ளும்படி சொன்னாள். அவன் அதனைச் சுற்றியெடுத்து, தான் கொண்டு வந்திருந்த பைக்குள் போட்டுக் கொண்டு முன்னே நடந்தான். அவனைத் தொடர்ந்த புஷ்பமாலாவுக்கு அவன் அவளது கணவன் போலவும், அந்தப் பிணம் அவர்களது குழந்தை போலவும் தோன்றியது. அவள் அப் பிணத்தை நெஞ்சோடு அணைத்தபடி தாலாட்டுப் பாடலை முணுமுணுத்தபடி நடந்தாள்.

– எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 02 : T .சௌந்தர்

பழமையுடன் இணைந்த இசைப்பெருக்கு :

இந்திய சினிமாவில் அதிக செல்வாக்கு செலுத்திய ஹிந்தி திரைப்படப்பாடல்களுக்கு நிகராக,தமிழ் பாடல்களும் வரவேண்டும் என்று ஆரம்பகால இசையமைப்பாளர்கள் ஓரளவு முனைப்புக் காட்டினார்கள்.ஆயினும் அன்றிருந்த மரபிசையின் செல்வாக்கிற்குள் நின்று தான் அவர்களால் புதுமையைக்காட்ட முடிந்தது.அதில் அவர்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளையும் கண்டார்கள்.

msvramamoorthyஆயினும் அவர்களில் வயதில் இளையவராக இருந்த சி.ஆர்.சுப்பராமன், மரபில் நின்றதுடன் புதுமை விரும்பியாகவும் தனது படைப்பை தர முயன்றார்.அவரது அகால மரணம், அவரது அடியொற்றி வந்த புதுமை நாட்டம் மிகுந்த ஒரு புதிய பரம்பரையினரை அரங்கேற்றியது. ஏ.எம்.ராஜா , டி.ஜி..லிங்கப்பா , டி.ஆர் .பாப்பா , எம்.எஸ்.விஸ்வநாதன் , டி.கே.ராமமூர்த்தி போன்றவர்கள் புதுமை காண விளைந்தனர். புதுமை சகாப்தம் சி.ஆர்.சுப்பராமனுடன் ஆரம்பித்தது என்பதை யாரும் ஏற்றுக்கொள்வர்.

மெல்லிசை உருவாக்கத்தில் தீவிர ஆர்வம் காட்டிய மெல்லிசைமன்னர்கள், ஹிந்தி திரையிசையை முன்மாதிரியாகக் கொண்ட அதே வேளையில் தங்கள் தனித்துவத்தைக் காண்பிக்கவும் , நாடக மரபில் வந்த மூத்த இசையமைப்பாளர்களைப்போல மரபையொட்டிய மெல்லிசையையும் ஆதர்சமாகக் கொண்டு பாடல்களைக் கொடுக்க முனைந்தனர்.

g.ramanathan
g.ramanathan

1950 களில் வெளிவந்த திரைப்படங்களை அவதானிக்கும் பொழுது ஜி.ராமநாதன் , ஜி. கோவிந்தராஜுலுனாயுடு , எஸ்,வி.வெங்கட்ராமன் ,ஆர்.சுதர்சனம் , எஸ்.எம். சுப்பையா நாயுடு ,எம்.எஸ்.ஞானமணி , பெண்டலாயா , எஸ்.ராஜேஸ்வரராவ் ,எஸ்.தட்சிணாமூர்த்தி , கண்டசாலா , சி.ஆர் சுப்பராமன் , லக்ஷ்மன் பிரதர்ஸ் ,ஆதி நாராயணராவ் , வி.நாகைய்யா , கே.வீ மகாதேவன் ,சி.என்.பாண்டுரங்கன் , ஏ. ராமராவ் ,எம்.டி.பார்த்தசாரதி சி.எஸ்.ஜெயராமன் , களிங்கராவ் , எச்.ஆர் .பத்மநாபசாஸ்திரி என பல இசையாளுமைகள் வெற்றிகரமாகக் களமாடிக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிகிறது.

இவர்களுடன் புதிய சந்ததியினரான விஸ்வநாதனின் இளவட்ட சகபாடிகளான டி.ஜி..லிங்கப்பா , டி.ஆர்.பாப்பா , ஏ,எம்.ராஜா,டி.சலபதிராவ் ,ஆர்.கோவர்த்தனம் ,வேதா , பி.எஸ்.திவாகர் போன்ற பலரும் தனித்தனியான இசையமைப்பாளர்களாக அறிமுகமாகிக் கொண்டிருந்தார்கள்

1940 களில் ஏற்பட்ட வளர்ச்சியின் அடையாளமாக மரபு வழி வந்த நாடக இசையின் மைந்தர்களான ஜி.ராமநாதன் , எஸ்.வீ.வெங்கட்ராமன் , பாபநாசம் சிவன் , எஸ்.எம் சுப்பையாநாயுடு,ஆர்.சுதர்சனம் போன்றவர்கள் முன்னணிக்கு வந்துவிட்டார்களெனினும் நாடக இசையின் வட்டத்தைச் சார்ந்தும், அதிலிருந்து விடுபடவும் ஓரளவு முனைப்பு காட்டினர் 1950 களில் தியாகராஜா பாகவதர் , பி.யு.சின்னப்பா காலத்து பாடும் பாணி மாறி புதிய மெல்லிசைப்போக்கின் பயணம் தொடங்கியது.

பாடி நடித்து பெரும்புகழ் பெற்ற தியாகராஜா பாகவதர் , பி.யூ.சின்னப்பா போன்றோருடன் அந்த சகாப்தம் நிறைவுற்றாலும் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை பாடி நடிப்பதை பிடிவாதத்துடன் கடைப்பிடித்தவர்கள் டி.ஆர். மகாலிங்கம் மற்றும் கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரே ! பாடும் ஆற்றல் வாய்ந்த எஸ்.வரலட்சுயும் இறுதிவரை ஆங்காங்கே பாடி நடித்தவர்களில் ஒருவர்.

பாடி நடிக்காத புதிய நடிகர்களான எம்.கே ராதா , ரஞ்சன் போன்றோர் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.நடிகர் ரஞ்சன் ஒரு சில பாடல்களை பாடினாலும் ஒரு பாடகர் என்ற அளவுக்குப் புகழ் பெறவில்லை.

எஸ்.எஸ்.வாசனால் பெரும் செலவில் எடுக்கப்பட்ட அபூர்வ சகோதரர்கள் , மங்கம்மா சபதம் போன்ற படங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர்கள் எம்.கே ராதா , ரஞ்சன் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுடன் நடிகைகளான ருக்மணி [ நடிகை லட்சுமியின் தாயார் ] , டி.ஆர்.ராஜகுமாரி போன்றோரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.டி.ஆர்.ராஜகுமாரி பாடுவதிலும் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும் ருக்மணியால் வெற்றிபெறமுடியவில்லை.ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் ருக்மணி பாடினார் என்றும் பின்னர் இனிமை குறைவு எனக் கருதி பி.ஏ.பெரியநாயகியைப் பாட வைத்து டப் செய்தார்கள் என்கிறார் ஆய்வாளர் வாமனன்.

trmஇனிமையாகப்பாடுவதில் புகழடைந்த டி.ஆர்.மகாலிங்கம் அளவுக்கு இல்லை என்றாலும் பாடுவதில் கணிசமான அளவு வெற்றியடைந்தவர் “நடிப்பிசைப்புலவர்” என்று அழைக்கப்படட கே.ஆர் ராமசாமி. இவரது வெற்றிக்கு திராவிட இயக்கம் பெருமளவு உதவியது.சிறைவாசத்துடன் தொடங்கிய தியாகராஜபாகவதரின் வீழ்ச்சியை, ஏற்கனவே பாடி நடித்து புகழ் பெற்றுக்கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் , கே.ஆர் ராமசாமி போன்ற நடிகர்கள் நிரப்ப முனைந்தனர். ஆயினும் பாடி நடிக்கும் காலம் மெதுவாக மலையேறிக்கொண்டிருந்தது என்பதும் கவனத்திற்குரியது.

சி.ஆர்.சுப்பராமன் விட்டுச் சென்ற இசைப் பணிகளை முடித்துக்கொடுக்கும் வாய்ப்பு அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் , ராம்மூர்த்தியினருக்கு கிடைத்தது.ஆயினும் தனது இசையார்வத்தால் சி.ஆர்.சுப்பராமன் உயிருடன் இருந்த காலத்திலேயே தனித்து இசையமைக்க முயன்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

வளரத் துடிக்கும் விஸ்வநாதனை தனது புதிய படத்தில் அறிமுகம் செய்ய விரும்பிய மலையாளபடத் தயாரிப்பாளர் ஈப்பச்சன், எம்.ஜி.ஆரை வைத்து ஜெனோவா என்ற படத்தை எடுத்தார்.புதிய இசையமைப்பாளர் விஸ்வநாதன் பற்றி எம்.ஜி ஆர் அறிந்த போது ” ஆபீஸ் பையனாக இருந்தவனை இசையமைப்பாளனாகப் போட்டு என் படத்தை கெடுத்துவிடப் போகிறீர்கள் ” என்று மறுக்க ,விஸ்வநாதன் தான் இசையமைப்பாளர் என்பதில் உறுதியாக நின்ற தயாரிப்பாளர் ” அவர் போடும் பாட்டுக்களைக் கேளுங்கள்,இல்லை என்றால் மாற்றிவிடலாம் ” என்று கூற பாடல்களைக் கேட்ட எம்.ஜி.ஆர் நன்றாக இருக்கிறது,இன்னும் நன்றாக இசையமைக்க வேண்டும்,உனக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என்று பாராட்டினார் ” என மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் திரும்பிப்பார்க்கிறேன் என்ற ஜெயா டி.வி நிகழ்ச்சியில் தனது நினைவுகளை பகிர்கிறார்.

ஆனாலும் ஜெனோவா படத்தில் அக்கால இசையமைப்பாளர்களான எம்.எஸ்.ஞானமணி , டி.ஏ.கல்யாணம் போன்றோரும் இசையமைத்ததாக பட டைட்டில் தெரிவிக்கிறது.

காலமாற்றத்தின் விளைவாக திரைத்துறையில் வெவ்வேறு துறைகளிலும் புதியவர்களின் வருகையும் மெல்லிசைமன்னர்கள் அறிமுகமான காலத்தில் ஏற்படத்தொடங்கியது.

நடிப்பில் ……,,,,

எம்.ஜி.ஆர், [ராஜ குமாரி 1948 ,மந்திரி குமரி 1950 – மலைக்கள்ளன் 1953]
சிவாஜி, பராசக்தி [1952] ,,
பத்மினி ,வையந்திமாலா போன்றோரும்,

பாடகர்களில் ,,,

அபிமன்யூ [1948 ] படத்தில் திருச்சி லோகநாதன்
பாதாள பைரவி [1950 ] படத்தில் பி.லீலா
மந்திரி குமாரி [1950] படத்தில் டி.எம்.சௌந்தரராஜன்
மந்திரி குமாரி [1950] படத்தில் ஜிக்கி
சம்சாரம் [1951] படத்தில் ஏ.எம்.ராஜா
பெற்ற தாய் [1952] படத்தில் பி.சுசீலா
ஜாதகம் [1953] படத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸ்
பொன் வயல் [1954] படத்தில் சீர்காழி கோவிந்தராஜன்

போன்றோரும் ,இசையமைப்பில் மேற்குறிப்பிடட புதியவர்களும் அறிமுகமாகியிருந்தனர்.

பாடும் பாணியிலும் , இசையமைப்பிலும் புதிய முறை அரும்பிய காலம் என்பதை அக்காலப் பாடல்கள் சில நிரூபணம் செய்கின்றன.திரைப்படங்களில் சமூகக் கதையமைப்பு மாற்றமும் அதற்குத் தகுந்தற்போல இசையும் மெல்லிசைமாற்றம் பெறத் தொடங்கியது.பெரும்பாலும் அக்கால ஹிந்தி இசையை ஒட்டியே அவை அமைந்திருந்தன.

ஆயினும் ஹிந்திப்பாடல்களை தழுவாத வகையில் வாத்திய அமைப்பைக் கொண்ட பாடல்களும் ஆங்காங்கே வெளிவரவும் செய்தன.வலுவான ஹிந்தி இசையின் தாக்கத்தோடு போராடிய இசையமைப்பாளர்கள் காட்டிய சிறிய தனித்துவவீச்சுக்கள் தான் இவை என கருத வேண்டியுள்ளது.

ஆரம்ப காலத்தில் மெல்லிசைமன்னர்கள் ஒரு சில படங்களுக்கு இசையமைத்தவர்களாயினும் படைப்புத்திறனில் வீச்சைக் காண்பிக்க ஆர்வத்துடன் முனைந்து செயற்பட்டனர்.அபூர்வமான சில பாடல்களை அப்போதே தந்ததை இன்று அவதானிக்க முடிகிறது அவை இன்றும் ஆர்வத்துடன் கேட்கப்படுகிறது. எண்ணிக்கையில் குறைந்தளவு படங்களுக்கு இசையமைத்தமையும்,அதிக புகழ்பெறாமையும் இவர்களது தனித்துவம் வெளிப்படாத காலமும் இவையாகும்.

1950 களில் ஒருவகை மெல்லிசைப்போக்கு உருவாகியிருந்தது. பொதுவாக “மெல்லிசை ” என இங்கு குறிப்பிடப்படும் இசை என்பது பாடலமைப்பில் , பிரயோகங்களில் எளிமை என்றே கருதப்படுகிறது.அவை வெவ்வேறு காலங்களில் வாத்திய அளவில் கூடியும் , குறைந்தும் பயன்படுத்தப்பட்டிருந்தன.மெல்லிசையில் வாத்திய இசையின் பங்கு அல்லது அடிப்படை என்பதே மெட்டின் இசைப்பண்பை வாத்திய இசையால் மெருகூட்டுவது எனக்கருதப்படுகிறது .இது காலத்திற்கேற்ப உயிர்த்துடிப்புமிக்க இசையை தர முனையும் இசையமைப்பாளர்களது ஆற்றலையும் , தனிப்பாதையையும் காட்டி நிற்கும்.மெல்லிசை என்பது திரையிலும் ,வானொலியிலும் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாத்திய எண்ணிக்கையின் அளவிற்பார்பட்டதே என்பதையும் நாம் நினைவிற்கொள்ளவேண்டும்.
வானொலியில் எண்ணிக்கையில் குறைந்த வாத்திய அளவும் ,திரையில் அதிகமானஅளவிலும் பயன்பட்டிருக்கிறது என்பதும் அவதானத்திற்குரியது.

1953 இல் இசையமைக்க ஆரம்பித்த மெல்லிசைமன்னரின் சில பாடல்கள் சோடை போகவில்லை என்று சொல்லலாம்.அவர் அறிமுகமான ஜெனோவா படத்தில் வெளிவந்த சில பாடல்கள் அதற்கு சான்று பகர்கின்றன.

01 கண்ணுக்குள் மின்னல் காட்டிடும் காதல் ஜோதியே – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

02 தேடியே மனம் ஓடுதே அன்பே என் ஆருயிரே – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன

03 துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில் – – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

04 எண்ணாமலே கண்ணே நெற்று – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்:குழுவினர் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

05 புதுமலர் வனம்தனை – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

06 பரலோக மாதா பரிதாபமில்லையா – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்: பி.லீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

போன்ற பாடல்கள் இசைத்தட்டில் உள்ளன. இதில் “கண்ணுக்குள் மின்னல் காட்டும்” , மற்றும் “பரலோக மாதா பரிதாபமில்லையா” போன்ற பாடல்கள் இனிமையின் இலக்கை எட்டியிருக்கின்றன என்று சொல்லத் தோன்றுகிறது.

விஸ்வநாதனின் முன்னோடி இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றை இங்கே ஒப்பிட்டு பார்க்கும் போது மெல்லிசையின் இனிய தெறிப்புக்கள் பலவற்றை நாம் காண்கிறோம். ஜெனோவா படத்தில் பல பாடல்கள் இருப்பினும் ” கண்ணுக்குள் மின்னல் காட்டும் ” , ” பரிதாபம் இல்லையா பரலோக மாதா ” போன்ற பாடல்கள் இயல்பான நீரோடை போன்ற ஓட்டம் கொண்ட பாடல்களாக நம் நினைவில் நிலைத்து நிற்கின்றன.

அக்காலத்தில் வெளிவந்த திரைப்படப்பாடல்களோடு ஒப்பு நோக்கும் போது அதிபிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் காலத்தை ஒட்டிய இனிய பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை.

இத்தைய பின்னணியில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அறிமுகமான காலத்துக்கு முன்னர் வெளிவந்த பாடல்களை சற்று நோக்கினால் சிறந்த பல பாடல்கள் வெளிவந்ததை அவதானிக்கலாம்.

01 ஆகா ஆடுவேனே கீதம் பாடுவேனே – படம்:அபூர்வ சகோதரர்கள் 1949 – பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.பானுமதி – இசை :எஸ்.ராஜேஸ்வரராவ் .

02 மானும் மயிலும் ஆடும் சோலை – படம்:அபூர்வ சகோதரர்கள் 1949 – பாடியவர்கள்: பி.பானுமதி – இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்

03 பேரின்பமே வாழ்விலே – படம்:தேவகி 1952 – பாடியவர்கள்:திருச்சி லோகநாதன் + பி.லீலா – இசை :ஜி.ராமநாதன்

04 ஆசைக்கிளியை அழைத்து வாராய் தென்றலே – படம்:சின்னத்துரை 1951 – பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + பி.லீலா – இசை :டி.ஜி.லிங்கப்பா

03 வானுலாவும் தாரை நீ இதயகீதமே – படம்:இதயகீதம் 1950 – பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + டி.ஆர்.ராஜகுமாரி – இசை :எஸ்.வி.வெங்கட்ராமன்

04 பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா – படம்:சின்னத்துரை 1951 – பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் – இசை :டி.ஜி.லிங்கப்பா

05 ஒ..ஜெகமத்தில் இன்பம் தான் வருவது எதனாலே – படம்:சின்னத்துரை 1951 – பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + வரலட்சுமி – இசை :டி.ஜி.லிங்கப்பா

05 சம்சாரம் சம்சாரம் சலகதர்ம சாரம் – படம்:சம்சாரம் 1951 – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா – இசை :ஈமானி சங்கர சாஸ்திரி

06 அழியாத காதல் வாழ்வின் – படம்:குமாரி 1950 – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா – இசை :கே.வீ.மகாதேவன்

07 பேசும் யாழே பெண் மானே – படம்:நாம் 1951 – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா – இசை :சி.எஸ்.ஜெயராமன்

08 ஆடும் ஊஞ்சலைப் போலே அலை – படம்:என் தங்கை 1952 – பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.லீலா – இசை :சி.என்.பாண்டுரங்கன்

09 காதல் வாழ்விலே கவலை தவிர்ந்தோம் – படம்:என் தங்கை 1952 – பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.லீலா – இசை :சி.என்.- இசை :சி.என்.பாண்டுரங்கன்

10 புது ரோஜா போலே புவி மேலே வாழ்வோமே -படம்: ஆத்ம சாந்தி [1952]- பாடியவர்கள் : டி.ஏ.மோதி + பி.லீலா – இசை :

தந்தை பெரியாரின் சீர்திருத்தக்கருத்துக்கள் புகழ்பெறத்தொடங்கிய இக்காலத்தில் அதன் ஆதிக்கம் சினிமாவிலும் எதிரொலித்தது. பொருளற்ற புராணப்படங்களைப் பார்த்து சலிப்படைந்த மக்களை பாடல்களால் சோபையூட்டிக்கொண்டிருந்த சினிமாவில் சமூகக்கதைகளை கொண்ட விழிப்புணர்வு கருத்துக்கள் தலையெடுக்கவும் தொடங்கின.எதற்கெடுத்தாலும் பாடிக்கொண்டிருந்த சினிமாவை உரையாடல் பக்கம் திருப்பியவர்கள் திராவிட கழகத்தினரே!

திராவிட இயக்கக் கருத்தோட்டம் முன்னணிக்கு வந்துகொண்டிருந்த இக்காலத்தில் ,அந்த இயக்கம் சார்ந்த கதாசிரியர்களான அண்ணாத்துரை , கருணாநிதி ,கண்ணதாசன் , நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன் , கே.ஆர் ராமசாமி ,எம்.ஜி.ராமசந்திரன் , சிவாஜி கணேசன் ,எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்கள் முன்னனிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

தங்கள் “இமேஜை ” மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், தங்கள் பிரபல்யமாவதற்கும் திராவிட இயக்கக் கருத்தை ஏற்றார்கள்.அது போலவே வளர்ந்து வரும் நடிகர்களின் புகழைக் காட்டி தமது இயக்கத்தை வளர்த்துவிட முடியும் என்று அரசியல் தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள்.அவர்களுக்குச் சாதகமாக அமைந்த சினிமாத்துறையை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள் இன உணர்வு ,தமிழுணர்வு போன்றவற்றை பயன்படுத்தி வெற்றிபெறத் துடித்தனர்.

புராண ,இதிகாசப் படங்களுடன் ,கைநழுவிப் போய்க்கொண்டிருந்த நிலமானியக்கருத்துக்களை மையமாகக் கொண்ட உணர்ச்சிமிக்க கதைகள் கருப்போருளாகின.கதைகளுக்கேற்ற பாத்திர வார்ப்புகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் நடித்துக் கொண்டிருந்தனர்.

தங்கள் அரசியல் கருத்துக்களை அலங்கார வசனங்களைக் கொண்டு கட்டமைத்ததைப் போல , இசையிலும் கட்டமைக்க முயன்றனர்.திராவிடக் கருத்துக்களுக்கு சார்பான கவிஞர்களுள் பாரதிதாசன் பரம்பரைகவிஞர்கள் உருவானார்கள்.அவர்களில் உடுமலை நாராயணகவி முடியரசன் ,சுரதா , ஐயாமுத்து ,விந்தன் போன்றோர் 1950 களின் முன்னோடிக்கவிஞர்களாக விளங்கினர்

எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன்[1953] படத்தில் மக்களன்பன் எழுதிய ” எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ” பாடல் தி.மு.க வினரின் அரசியல் கொள்கையை பிரதி பலித்தது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வசனகர்த்தாவாக வர விரும்பிய கண்ணதாசன் அதற்கு சரியான வைப்பு கிடைக்காததால் கன்னியின் காதலி [1949] படத்தில் பாடலாசியர் வாய்ப்பைப் பயன்படுத்தி அறிமுகமானார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கம்யூனிஸ்ட்கட்சி ஆதரவாளனாக தன்னை வெளிப்படுத்தி கொண்டார்.பாரதி , பாரதிதாசன் போன்ற பெருங்கவிகளின் கவிவீச்சைக் கொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1954 இல் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் வளர்ச்சி மெதுவாகவே நகர்ந்தது.1952 ஆம் ஆண்டிலிருந்து 1959 வரையான காலப்பகுதியில் சுமார் இருபது படங்களுக்கு இசையமைத்தார்கள்.அவர்களின் சமகால இசையமைப்பாளர்கள் பல சிறந்த பாடல்களைத் தந்துகொண்டிருந்த வேளையில் தங்களையும் பேசவைக்குமளவுக்கு ஆங்காங்கே நல்ல பாடல்களையும் தந்தார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.அவர்கள் சிருஷ்டித்துத் தந்த பாடல்கள் சில இன்றும் நம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளுபவையாக விளங்குகின்றன.

சொர்க்கவாசல் [1954] படத்தில் சில பாடல்கள் :

01 “கன்னித் தமிழ் சாலையோரம் ” என்று ஆரம்பமாகும் ஒரு பாடல் நாட்டுப்புறப்பாங்கில் அமைந்திருக்கிறது.இந்தப்பாடலில் திராவிட இயக்கக்கருத்துக்கள் முழுமையாக வெளிப்படுகின்றன.தமிழரின் பழம்பெருமையையும் சேரன் கல்லெடுத்து கண்ணகிக்கு சிலை வைத்த பெருமையையும் பறைசாற்றும் இனிமையான இந்தப்பாடலை தேஷ் ராகத்தில் அமைத்து நம்மைக் கனிய வைத்திருக்கிறார்கள்.இப்பாடலைப் பாடியவர் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி.

02 ” நிலவே நிலவே ஆட வா நீ அன்புடனே ஓடிவா ” என்ற பாடலையும் தேஷ் ராகத்தில் அமைத்து நெஞ்சில் இருக்க வைத்திருப்பார்கள்.குழந்தையை நிலவுக்கு ஒப்பிட்டு பாடுவதுடன் நிலவை விட குழந்தை அழகு என்பதாக அமைக்கப்பட்ட இந்தப்பாடலும் தேஷ் ராகத்திலேயே அமைக்கப்படுள்ளது.இப்பாடலைப் பாடியவர் கே.ஆர்.ராமசாமி.

03 ” ஆத்மீகம் எது நாத்தீகம் எது அறிந்து சொல்வீரே ” என்று ஆத்மா விசாரம் செய்யும் பாடல்

04 ” மொழி மீது விழி வைத்தே முடிமன்னர் ஆண்ட தமிழ் நாடு ” என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடலும் தமிழ் பெருமையும் , திராவிட பெருமையும் பேசுகின்ற பாடல்.

05 ” சந்தோசம் தேட வேணும் வாழ்விலே ” என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஒரு காதல்பாடல்.இனிமைக்கு குறைவில்லாமல் திருச்சி லோகநாதனும் டி.வி.ரத்தினமும் பாடிய பாடல்.

1955 இல் வெளிவந்த நீதிபதி படத்தில் வெளிவந்த சில பாடல்கள் :

01 ” தாயும் சேயும் பிரிந்தைப் பார் சதியதனாலே ” [ பாடியவர் :சி.எஸ்.ஜெயராமன் ] என்ற உணர்ச்சி
ததும்பும் துயர கீதம்.இந்தப்பாடலில் காலத்தை மீறியதாக, புதுமைமிக்க அமைந்த கோரஸ் பின்னணியில் ஒலிப்பதைக் கேட்கலாம்.

02 ” உருவம் கண்டு என் மனசு உருகுது மனசு உருகுது ” [பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + டி.எம்.சௌந்தரராஜன் ] என்று ஆரம்பிக்கும் நகைச்சுவைப் பாடல்.தங்குதடையற்ற நதியோட்டம் மிக்க பாடல்.கே.ஆர்.ராமசாமி , டி.எம்.சௌந்தரராஜன் இணைந்து பாடிய அபூர்வமான பாடல்.மெல்லிசைமன்னர்களின் இசையில் சௌந்தரராஜன் பாடிய இரண்டாவது பாடல் இது.

03 ” பறக்குது பார் பொறி பறக்குது பார் ” [ பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + ஏ.பி.கோமளா ] இந்தப்பாடலும் திராவிட இயக்கக் கருத்தை பறை சாற்றும் பாடல்.

04 ” வருவார் வருவார் என்று எதிர் பார்த்தேன் ” [ பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + ஏ.பி.கோமளா ] என்று தொடங்கும் நகைச்சுவைப்பாடல்.இருபக்க இசையாக ஒலிக்கும் இந்தப்பாடல் ஒரு இசைநாடகப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

1955 இல் வெளிவந்த குலேபகாவலி படத்தில் வெளிவந்த சில பாடல்கள் :

01 “வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே ” [ பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் + பி.லீலா ] இந்தப்பாடல் பன்மொழியில் அமைந்த ராகமாலிகைப்பாடல்.

02 ஆசையும் என் நேசமும் [ பாடியவர் : கே.ஜமுனாராணி ] லத்தீனமெரிக்க இசையின் வீச்சையும் ,வாத்திய அமைப்பின் புதிய போக்கையும் , கோரஸ் இசையுடன் மிக அருமையாக அமைத்திருப்பார்கள்.

03 “சொக்கா போட்ட நாவாப்பு ” – [பாடியவர் : ஜிக்கி ]

04 ” கண்ணாலே பேசும் பெண்ணாலே ” [பாடியவர் : ஜிக்கி ] மாயாலோகத்திற்கு அழைத்து செல்லும் உணர்வைத் தரும் கோரஸ் இசையுடன் அரேபிய இசையின் சாயலில் அமைக்கப்பட்டபாடலை ஜிக்கி வசீகர அதிர்வுடன் பாடிய பாடல்.

05 ” அநியாயம் இந்த ஆட்சியிலே ” [ பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் ] விஸ்வநாதன் இசையில் இவர் பாடிய முதல் பாடல் இதுவே.

06 ” நாயகமே நபி நாயகமே ” ;[ பாடியவர்கள்: எஸ்.சி.கிருஷ்ணன் + குழுவினர் ] இந்து – முஸ்லீம் ஒற்றுமை பற்றிய டைட்டில் பாடல்.எஸ்.சி.கிருஷ்ணன் உச்சஸ்தாயியில் அனாசாயமாகப் பாடிய பாடல்.

07 “மாயாவலையில் வீழ்ந்து மதியை இழந்து ” [ பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் ] ஜி.ராமநாதன் பாணியில் அமைந்த இந்தப்பாடல் கரகரப்ரியா ராகத்தில் முதற் பகுதியும் நாட்டுப்புறப்பாங்கில் பிற்பகுதியும் நிறைவுறும் பாடல்

1956 தெனாலிராமன்

01 உலகெலாம் உனதருளால் மலரும் [ பாடியவர் :பி.லீலா ] டைட்டில்பாடல் , சிந்துபைரவி ராகப்பாடல்
02 சிட்டுப் போல முல்லை மொட்டு [ பாடியவர் :ஏ.பி.கோமளா ]
03 ஆடும் கலை எல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கலையாகுமே பாடியவர் : பி.லீலா ] காம்போதி ராகம்
04 கண்களில் ஆடிடிடும் ,,,,கன்னம் இரண்டும் மின்னிடும் [ பாடியவர்;பி.பானுமதி ] அரேபிய பாணி .

05 பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள் [ பாடியவர் : பி.பானுமதி ] சன்முகப்ப்ரியா நாட்டியப்பாடல்
06 புத்திலெ பாம்பிருக்கும் ,,,கோட்டையிலே ஒரு காலத்திலேயே [ பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரரராஜன் + வி.என்.நாகையா
07 உல்லாசம் தேடும் எல்லோரும் ஒரு நாள் [ பாடியவர் : கண்டசாலா ]

1955 போட்டர் கந்தன்

01 வருந்தாதே மனமே வீணே வருந்தாதே மனமே – [ பாடியவர் : எஸ்.சி.கிருஷ்ணன் ]

1957 குடும்ப கௌரவம் [1957] படத்தில் ” சேரும் காலம் வந்தாச்சு ” [பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + கே.ஜமுனாராணி ]

1957 இல் வெளிவந்த மகாதேவி படம் மெல்லிசைமன்னர்களுக்கு மிக முக்கிய படமாக அமைந்தது.

மரபு ராகங்களில் அலங்காரம் செய்வதை அழகு பார்த்த அக்காலத்தில் ,அதன் வடிவத்திற்குள் உணர்ச்சிபாவம் கொப்பளிக்கும் அற்புதமான பாடல்களையும் தந்தார்கள்.

01 சிங்கார புன்னகை கண்ணாராக் கண்டாலே சங்கீத வீணையும் ஏத்துக்கம்மா- பாடியவர்கள்: எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதி தேவி + குழுவினர்

” பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் பேசாத சிற்பங்கள் ஏதுக்கமா” என்ற அருமையான கவி வரிகளை தாலாட்டில் அளித்த இந்தப்பாடல் தாலாட்டு மரபில் முன்பு வெளிவந்த பாடல்களை உடைத்து புதுமரபை ஏற்படுத்தியது.மென்மையும் , இனிமையும், தாய்மையும் ஒன்று குழைந்து வரும் இனிய குரல்களுடன் , மகிழ்வின் ஆரவாரத்தை வெளிக்காட்டிட கைதட்டல் போன்றவற்றை மிக லாவகமாகப் பயன்படுத்திய பாடல்..

கேட்கும் தருணங்களிலெல்லாம் மெய்சிலிர்ப்பும் , நெகிழ்வும் தருகின்ற பாடல்.இப்பாடலின் வெற்றியால் பின் வந்த காலங்களில் தாலாட்டு என்றால் ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணம் அமைத்துக் கொடுத்த பாடல் எனலாம்.இந்த பாடலின் வெற்றி “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ” பாடல் உருவானதின் பின்னணியில் இருந்தது என்று கூறலாம்.

“ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஓட்டுவோம் -” பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி + குழுவினர்
விவசாயிகள் பாடுவதாக அமைக்கப்பட்ட கொண்டாட்டமும் , களிப்பும் பொங்கும் பாடல்.பாடலில் கோரஸ், கைதட்டல் மிக அருமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.பாடலின் நடுவே காதலர்களின் உணர்வை வெளிப்படுத்தும் பாங்கில் ” மனசும் மனசும் ஒன்றா சேர்ந்தா மறக்க முடியுமா ” என்ற வரிகளில் கனிவும் , இனிமையும் பொங்கி வர செய்யும் இசை மனதை பறித்துச் செல்லும்!

காதல் பாடல்களிலும் மென்மையைக் காண்பிக்கும் “கண்மூடு வேளையிலும் காலை என்ன கலையே” , “சேவை செய்வதே ஆனந்தம்” போன்ற அழகான பாடல்களையும் , பட்டுக்கோட்டை க்கல்யாணசுந்தரம் எழுதிய கருத்துக் செறிந்த தத்துவப்பாடல்களான ” குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் “, ” தாயத்து தாயத்து ” போன்ற பாடல்களையும் அதனதன் இயல்புகளை வெளிப்படுத்தும் வகையில் அற்புதமாக இசையமைத்துள்ளார்கள்.

குறிப்பாக “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் ” என்ற பாடலில் பட்டுக்கோட்டையாரின் அற்புதவரிகளை எழுச்சியுடனும் நெகிழ்சசியுடனும் இசைத்து உணர்ச்சியின் உச்சத்தை தொடுகிறார்கள். இந்தப்பாடலுக்கு அவர்கள் தெரிந்தெடுத்த ராகம் அவர்களின் நுண்ணுணர்வைக் காட்டும்.

“காமுகர் நெஞ்சில் நீதியில்லை ” என்று தொடங்கும் ஜமுனாராணி பாடிய நெஞ்சை உருக்கும் பாடல். படத்தின் நாயகி துயரத்தின் எல்லையில் நின்று பாடும் சோகத்தால் மனதை துருவித் துளைக்கும் பாடல்.

உணர்ச்சிமிக்க பாடல்களுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக ஜெ.பி.சந்திரபாபு பாடிய ” தந்தானா பட்டு பாடணும் ” , “உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு ” போன்ற பாடல்களையும் நாம் கேட்கலாம்

ஆரம்ப காலங்களில் மெல்லிசைமன்னர்கள் ஒருசில படங்களுக்கு இசையமைத்தாலும் படைப்புத் திறனில் வீச்சைக் காண்பிக்க முனைந்து செயல்பட்டனர் என்பதை உணரக்கூடியதாகவே உள்ளது.
மெல்ல மெல்ல தங்கள் தனித்துவத்தை காட்ட தலைப்பட்டதை இக்காலங்களில் காண்கிறோம்.

1959 இலிருந்து அவர்களது இசைப்பயணம் மெல்லிசையின் புது வண்ணத் தேடல்களை நோக்கிப் பயணித்தது.புதிய வாத்தியங்களும் , அவற்றில் எழும் நுண்ணிய ஒலியலைகளை கலையழகுடன் துணிகரமாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.

மேலைத்தேய இசையின் தலையீடு ஏற்படத் தொடங்கியவுடன் சினிமா இசையிலும் புதிய புதிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.மேலைத்தேய இசையின் தாக்கம் உள்ளடக்கத்திலும் ம்மாற்றங்களை ஏற்படுத்தியது.ஆயினும் அவர்களது இசை மரபிசையின் பண்புகளுடனேயே இசைந்து வெளிப்பட்டது.

“பக்கமேளம்” என்று ஜி.ராமநாதனால் வர்ணிக்கப்பட்ட வாத்திய இசைச் சேர்ப்பு இவர்கள் காலத்திலேயே புதிய நிலையை எட்டியது.புதிய , புதிய வாத்தியக்கருவிகளின் தனித்துவக் கூறுகள் அக்கால வழக்கில் இருந்த ஒலியமைப்பிலிருந்து வேறுபடுத்திக்காட்டியது.

காலாவதியாகிப் போன மந்திர , மாயாஜாலக் கதைகளும் , புராணக்கதைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தமிழ்சினிமாவில் 1950 களில் சமூகக்கதைகள் அரும்பத் தொடங்கின.அவை துரிதகதியில் முன்னேறி 1950 களின் நடுப்பகுதியில் தீவிரம் பெற்று வளந்தது இக்கால திரையிசையை அவதானிப்பவர்கள் செவ்வியலிசையின் பாரிய தாக்கத்தையும் தயங்கி நின்ற மெல்லிசையையும் அவதானிப்பர்.

ஆயினும் ஐம்பதுகளில் அரும்பிய மெல்லிசை ஐம்பதுகளின் இறுதியில் பெருகி அறுபதுகளில் பெரும் பாய்ச்சலைக்காட்டுகிறது.இந்தப்போக்கின், புதிய வாரிசுகளாக மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினை நாம் கருதவேண்டியுள்ளது.மெல்லிசை இயக்கத்தை செயலில் காட்ட உத்வேகத்துடன் செயல்பட்டனர்.

இசை என்பது கலை என்ற அம்சத்தில் திரை இசையின் கலைப்பெறுமானம் முக்கியமானதாக நோக்கற்படவேண்டும் என்பதும் புதிய வாத்தியக்கருவிகள் கலையம்சத்துடன் பயன்படுத்த வேண்டும் என்கிற சீரியபார்வையும் இவர்களிடமிருந்தது என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.

ஹிந்தி திரையிசையின் நவீனமும் , இனிமையுமிக்க இசை இந்தியாவெங்கும் மக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் ,அது பற்றிப்பிடித்த வாத்திய இசைக்கோர்வைக்கு நிகராக தாங்களும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தததையும் மெல்லிசைமன்னர்களிடம் காண்கிறோம்.

msv2_2473796fஇவர்களது முன்னோடி இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன், சுப்பைய்யாநாயுடு, எஸ் .வி. வெங்கட்ராமன் மற்றும் அக்காலத்திலிருந்த , பல இசை ஜாம்பவான்கள் தந்த இனிய பாடல்களுக்கு மத்தியில் இவர்களது மெல்லிசை முயற்ச்சிகள் அரும்பின.

தமிழ் திரைப்படத்தின் பொற்காலப் பாடல்கள் என்று அக்காலத்திய பாடல்களைச் சிலர் சொல்லுமளவுக்கு தமிழ் செவ்விசை சார்ந்த மெல்லிசைப்பாடல்கள் வெளிவந்து கொண்டிருந்த காலமது.அவர்களின் ஆதிக்கத்தை எங்கனம் மீறினார்கள் என்பதும் சிந்திக்க வைக்கும் ஒன்றாகும்.

அக்காலத்தில் வெளிவந்த சில பாடல்களை நாம் உற்று நோக்கும் போது அப்பாடல்களின் வலிமையை நாம் உணரும் அதே நேரம் இவர்கள் எதிர் கொண்ட நெருக்கடியையும் விளங்கிக்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு 1956 ம் ஆண்டு வெளிவந்த சில பாடல்கள் :

பூவா மரமும் பூத்ததே -படம்: நான் பெற்ற செல்வம் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி – இசை :ஜி.ராமாநாதன்

இனிதாய் நாமே இணைந்திருப்போமே -படம்: காலம் மாறிபோச்சு [1956]- பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் + ஜிக்கி – இசை :மாஸ்டர் வேணு

அழகோடையில் நீந்தும் இள அன்னம் -படம்: கோகிலவாணி [1956]- பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் + ஜிக்கி – இசை :ஜி.ராமநாதன்

திரை போட்டு நாமே மறைத்தாலும் -படம்: ராஜா ராணி [1956]- பாடியவர்கள் : ஏ .எம்.ராஜா + ஜிக்கி – இசை :டி.ஆர் பாப்பா

ஆகா நம் ஆசை நிறைவேறுமா -படம்: தாய்க்குப் பின் தாரம் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.பானுமதி – இசை :கே.வி மகாதேவன்

நாடகம் எல்லாம் கண்டேன் -படம்: மதுரைவீரன் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி – இசை :ஜி.ராமாநாதன்

1956 ம் ஆண்டு வெளிவந்த, மெல்லிசைமன்னர்களின் சில பாடல்கள் :

1956 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் பாசவலை , தென்னாலிராமன் ஆகிய இரண்டு படங்களுக்கு மேல்லிசைமன்னர்கள் இசையமைத்தார்கள்.

பாசவலையில் ” உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் “, ” அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை “. போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் இணைந்த முதல் படம் பாசவலை ஆகும்.

தென்னாலி ராமன் படத்தில் இடம் பெற்ற ” ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர் ” என்ற செவ்வியலிசைப்பாடலும், ” உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் ” என்ற பாடலும் , ” அலை பாயும் கண்கள் அங்கும் இங்கும் ” என்று பானுமதி பாடும் அரேபிய பாணியிலமைந்த பாடலும் , ” சிட்டு போலே முல்லை மொட்டுப்போலே ” என்று ஏ.பி.கோமளா பாடிய பாடலும் குறிப்பிடத்தக்கன.

1957 ம் ஆண்டு வெளிவந்த சில பாடல்கள்

*** வாடா மலரே தமிழ் தேனே -படம்: அம்பிகாபதி [1957]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.பானுமதி – இசை :ஜி.ராமாநாதன்

*** ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா -படம்: மக்களைப் பெற்ற மகராசி [1957]- பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + சரோஜினி – இசை :கே.வி. மகாதேவன்

*** கம கமவென நறுமலர் மணம் வீசுதே -படம்: சமய சஞ்சீவி [1957]- பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + ஜிக்கி – இசை :ஜி.ராமாநாதன்

*** தேசுலாவுதே தென் மலராலே -படம்: மணாளனே மங்கையின் பாக்கியம் [1957]- பாடியவர்கள் : கண்டசாலா + பி.சுசீலா – இசை :ஆதி நாராயணராவ்

1957 ம் வருடம் வெளிவந்த இன்னும் சில பாடல்களை உற்று நோக்குவது பொருத்தமாக இருக்கும்

** பூவா மரமும் பூத்ததே பொன்னும் மணியும் விளைந்ததே – படம் :நான் பெற்ற செல்வம் [1957] -இசை :ஜி.ராமாநாதன்
** இன்பம் வந்து சேருமா – படம் :நான் பெற்ற செல்வம் [1957] – இசை :ஜி.ராமாநாதன்
** இக லோகமே இனிதாகுமே – படம் :தங்கமலை ரகசியம் [1957] -டி.ஜி.லிங்கப்பா
** அமுதைப்பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ – படம் :தங்கமலை ரகசியம் [1957]
** இதய வானிலே உதயமானது – படம் :கற்புக்கரசி [1957] – இசை :ஜி.ராமாநாதன்
** கனியோ பாகோ கற்கண்டோ – படம் :கற்புக்கரசி [1957] – இசை :ஜி.ராமாநாதன்
** நிலவோடு வான் முகில் விளையாடதே – படம் :ராஜா ராணி [1957] – இசை :கே.வி. மகாதேவன்
** வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே – படம் :மல்லிகா [1957] -டி.ஆர்.பாபபா
** வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே – படம் :கோமதியின் காதலன் [1957] – இசை :ஜி.ராமாநாதன்
** மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி – படம் :கோமதியின் காதலன் [1957] – இசை :ஜி.ராமாநாதன்

மரபுணர்வு மேலோங்கிய இசையமைப்பாளர்களை ஒட்டியே மெல்லிசை மன்னர்களும் பாடல்களைத் தரமுனைந்ததை 1950 களின் இறுதிவரையில் காண்கிறோம்.கதையின் போக்கு மற்றும் பாத்திரங்களின் தன்மைகளுக்கு ஏற்ப வகைமாதிரியான பாடல்களைக் கொடுத்த முன்னையவர்கள் காட்டிய வழி தடத்திலேயே தங்கள் இசைப்பயணத்தை மேற்கொண்டு வாய்ப்புகளைத் தம் வசமாக்கினர்.

புதியவர்களுக்குரிய உத்வேகத்தையும் கற்பனை வீச்சையும் அக்காலப்பாடல்களில் நாம் காணவும் செய்கிறோம்.மரபு வழியில் நின்று கொண்டே தமது புதுமைக்கண்ணோடடத்தையும் மெதுவாக நகர்த்திய வண்ணமுமிருந்தனர்.

[ தொடரும் ]

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 01 – T .சௌந்தர்

பூனையாகிய நான்… : தக்ஷிலா ஸ்வர்ணமாலி

கவிதை பற்றிய மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

ஆதி முதல், யுத்த களத்துக்கு நெடுந்தூரம் பயணம் செய்யும் போர் வீரர்கள், வழியில் பூனையைக் கண்டால், அருகிலொரு மக்கள் குடியிருப்பு இருக்கிறதென அறிந்து கொண்டனர். பூனைகள் எப்போதும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவை. அவ்வாறே பெண்களையும் கருதுகின்றனர். பெண்களையும் பூனைகளுக்கு ஒப்பிடுகின்றனர்.

பெண்களிடம் கூறப்படும் ‘பூனைக் குட்டியைப் போல அழகாக இருக்கிறாய்’, ‘பூனை நடை’, ‘பூனையைப் போல மிருது’, ‘பூனையைப் போல மின்னும் கண்கள்’ போன்ற வர்ணனை வார்த்தைகளைப் போலவே ‘பூனையின் குறுக்குப் புத்தி’, ‘மாறிக் கொண்டேயிருக்கும் பூனைக் குணம்’ ‘பூனையைப் போல சோம்பேறி’, ‘பூனையைப் போல பாவனை’ போன்ற வசவு வார்த்தைகளும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து அவர்களை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

பெண்கள் பூனைகளாகின்றனர்; பூனைகள் பெண்களாகின்றனர். ஆண்களின் சந்தர்ப்பங்களும், உணர்வுகளுமே அதையும் தீர்மானிக்கின்றன. கீழுள்ள கவிதையின் தலைப்பை ‘அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அக உணர்வு’ எனக் கருதினாலும், கவிதையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் அவர்களுக்கும் எப்பொழுதும் பொருந்தக் கூடியன. இக் கவிதையை பெண்ணின் மன உணர்விலிருந்து வாசித்துப் பார்க்கலாம். பெண்களை வெறுப்பவர்கள், தாம் இஷ்டப்பட்ட பிராணியைத் தலைப்பிலாக்கி, கவிதையோடு பொருத்தி வாசித்துக் கொள்ளலாம்.

- எம்.ரிஷான் ஷெரீப்

சிங்கள மொழிக் கவிதை

பூனையாகிய நான்…
– தக்ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது
உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் அழ இயலாது

உங்களிடம் கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
உங்களிடம் என்னால் அவற்றைக் கூறி விட இயலவில்லை
உங்களைப் போலவே எனக்கும் வலிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் பசிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
உங்களைப் போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை

உங்களைப் போல என்னால் உரிமைகளுக்காகப் போரிட இயலவில்லையெனினும்
உங்களைப் போலவே நானும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருக்கிறேன்
உங்களைப் போல என்னால் அவற்றை வர்ணித்துக் கூற இயலவில்லையாதலால்
உங்களை விடவும் நான் நேர்மையாக இருக்கிறேன்

******

கவிஞர் பற்றிய குறிப்பு

Thakshila Swarnamali 6தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி : சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் கவிஞர். ஒரு ஆசிரியையாகக் கடமையாற்றி வரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு சிறுவர் இலக்கியப் பிரதிகள், இரண்டு சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல் என இதுவரையில் பத்து தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

வாசிப்பு – ஒரு கலை ! : எம்.ரிஷான் ஷெரீப்

edwin-louis-cole‘வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்’ என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கும். அது ‘வாசிக்கும் கலை’ எனப்படுகிறது.

வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R (எஸ்.க்யூ.த்ரீ.ஆர்) முறை பிரபலமான ஒரு முறை. இங்கு SQ3R முறையின் கீழ் புத்தகமொன்றை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

S – Survey ( தேடிப் பார்த்தல்)
Q – Question ( கேள்வி எழுப்புதல்)
R – Read (வாசித்தல்)
R – Retrive ( மீளவும் பார்த்தல்)
R – Review (விமர்சித்தல்)

இங்கு முதல் படிமுறை S – Survey ( தேடிப் பார்த்தல்) ஆகும். தேடிப்பார்ப்பதில் நூலின் பெயர், நூலாசிரியர், பிரசுரிக்கப்பட்டுள்ள ஆண்டு, முன்னுரை மற்றும் அறிமுகம், பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமாகும். நூல் குறித்த கேள்விகளை எழுப்புவது இரண்டாவது படிமுறையாகும்.

‘இந்த நூலை வாசிப்பதால் எனக்குப் பயனிருக்குமா?’

‘இதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் என்னென்ன?’

போன்ற கேள்விகளை எழுப்பி விடை கண்டுகொள்வது அவசியமாகும். அவ்வாறு விடைகளைக் கண்டுகொண்ட பிற்பாடு, அந் நூலை வாசிக்க ஆரம்பிப்பது மூன்றாவது படிமுறை. மிகுந்த அவதானத்தோடு புத்தகங்களை வாசிப்பது மிக முக்கியமானது. அவ்வாறு அவதானத்துடன் வாசிப்பதோடு, வாசித்த விடயங்களை மீளவும் மனதிற்குள் மீட்டிப் பார்ப்பது நான்காவது படிமுறை. இவ்வாறு செய்யும்போது நீங்களே அந் நூல் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். அடுத்ததாக இங்கு ஐந்தாவது படிமுறையானது, முழுமையாக நூலை வாசித்து முடித்த பிற்பாடு, அந் நூல் குறித்து விமர்சிப்பதாகும்.

இந்த வழிமுறையில் புத்தகமொன்றை வாசித்து முடித்த பின்பு, உங்கள் அறிவு விருத்தியாகியிருப்பதோடு, மனதும் மகிழ்வுடன் இருக்கும். இதனால் வாசிக்கும் ஆர்வமும் அதிகரித்து, நேரமும் பயனுள்ள முறையில் கழியும்.

மாணவர்கள் பரீட்சைகள் எழுதிவிட்டு, பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலகட்டமானது தரமான புத்தகங்களை வாசிப்பதற்கென உகந்த காலம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களது நேரத்தைப் பயனுள்ளதாக்குவதோடு, நல்லதொரு வழிகாட்டியையும் அவர்களுடனேயே இருக்க வைப்பது போலாகும்.

சிந்திப்போம் !

– எம்.ரிஷான் ஷெரீப்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 01 – T .சௌந்தர்

நினைவில் விழும் அருவி :

msv`1காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும் பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார்.

பாடலின் வரியையும் அதன் மெட்டையும் அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார். மகனோ தன் போக்கில் பாடலை முழுமையாகப் பாடி முடித்தான்.தனது பேரபிமானத்திற்குரிய மகாகவி பாரதியின் பாடலை மகன் பாடியதால் தந்தையார் பேருவகையடைந்தார்.தனது அண்ணனைப் போல ஒரு இசைக்கலைஞனாக வருவான் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

” சிந்துநதியின்மிசை நிலவினிலே ” என்ற அந்த.பாரதிபாடலைப் பாடிய அந்த குழந்தை வேறுயாருமல்ல, இந்தக்கட்டுரையாளர் தான்! இந்தப்பாடலின் வரிகளை இன்று கேட்டாலும் சொல்ல முடியும் என்று சொல்லுமளவுக்கு மனதில் பதிந்துவிட்ட பாடல் அது.

இந்த சம்பவம் சாதாரணமானது என்றாலும் தமிழ் சினிமாஇசையின் மெல்லிசை மலர்ந்து கொண்டிருந்த காலமொன்றைச் சேர்ந்த இனிய பாடல் என்பதை நினைவுறுத்தும் பொருட்டு சொல்கிறேன்.மூன்று வயது பையன் ஒருவன் பாடலின் பொருள் தெரிந்தா பாடியிருப்பான்? பாடலின் இசைதான்அதை சாத்தியமாக்கியிருக்கும் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இங்கில்லை!

நமது வாழ்க்கையோட்டத்தில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியினரின் பாடல்கள் விதையாகி ,செழித்து வளர்ந்தது இவ்விதமே.

கடந்து போன காலங்களை நினைக்கையில் இதயத்துடன் பிணைந்த பாடல்களின் வாசம் நம் நெஞ்சங்களை நிறைக்கும். பிஞ்சுமனங்களில் வேரூன்றி, பற்றிப்படர்ந்து , நெஞ்சின் அடியாழத்தின் உள்ளுறைகளில் புதைந்த பாடல்களை நம்மால் இலகுவாக மறக்கமுடிவதில்லை.

Music and Rythm find their way in to the secret places of the Soul – என்பார் பிளேட்டோ.

கடந்து கால நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கு இசை ஒரு இலகுவான சாதனம். பழையபாடல்களைக் கேட்கும் போது எந்தெந்தப்பாடல்களைக் எங்கெல்லாம் கேட்டோம், எந்தச் சூழ்நிலையில் அவற்றைக்கேட்டோம் என்பதெல்லாம் விரல் சொடுக்கில் வந்து விழுந்துவிடுகின்றன. வாழ்வின் மகிழ்ச்சிகரமான சம்பவங்களிலும் , துக்ககரமான சம்பவங்களிலும் இசை கலந்தே இருக்கிறது.!

நினைவுகளின் ஓடையாக இசை விளங்குகிறது.இசையுடன் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.ஒவ்வொரு பாடலும் நம்முடன் உரையாடல்களை நிகழ்த்தியே வந்துள்ளது.இசையின் முருகு இளம்வயது பருவத்தில் நம்மை ஆட்கொள்கிறது.இனிய வாத்திய இசையுடன் அதை பருகும் போது மனம் எழிலடைகிறது.உணர்ச்சி நிறைந்த இசை உள்ளத்தில் சிறு பொறியைத் தோற்றுவித்து நுண்ணறிவில் சுவாலையை ஏற்படுத்துகிறது இதனால் எழும் அறிவார்வத்திற்கு உயிர் கொடுக்கிறது.

வானலைகளில் நீந்தி ,காற்றுவெளியில் மிதக்கும் இசையலைகள் மனிதனின் காதுகளில் புகுந்து அவனோடு ரகசியம் பேசவும் , பலவித கற்பனைகளையும் ,உணர்வுகளையும் கிளர்த்துகின்றன.

காரண காரியங்கள் தெரியாமல் , காலகாலமாய் நாம் இசையைக் கேட்டு ரசித்து மகிழ்ந்திருக்கின்றோம்.பிறந்து வளர்ந்த காலம் தொட்டு இசையில் லயித்து வந்த நாம் எங்களுக்குப் பழக்கமான பாடல்களைக் கொண்டாடியும் வந்திருக்கின்றோம்.இன்பம் தரும் பல இசைவகைகளின் சுமைதாங்கியாகவும் நாம் இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் வாழ்வில் இரண்டறக்கலந்த பாடல்கள் என்றால் அது திரையிசைப்பாடல்களே ! ஒலிப்பதிவு செய்யப்பட்ட இப்பாடல்கள் மீண்டும், மீண்டும் கேட்க வழிவகுத்தன.

வாழையடி வாழையாய் வந்த ராகங்களில் அமைந்த பலவிதமான பாடல் வகைகள் ,அவற்றில் மெல்லியதாய் நுழைந்து , நமக்கு அறிமுகமில்லாத இசைவகைகளையும் ,வாத்தியங்களையும் இசையமைப்பாளர்கள் கலாபூர்வமாக இணைத்து தந்த பாடல்களால் நம் உணர்வுகள் கிளரப்பட்டிருக்கின்றன.

இவ்விதம் தமிழ் திரையிசைக்கு ஜீவசத்துமிக்க பாடல்களைத்தந்த முன்னோடிகளில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்!

மரபு வழியின் தடம்பற்றி திரையிசையின் மெல்லிசையில் பரவசமும் , புதுமையும் ,உணர்ச்சி வெளிப்பாட்டில் மிகச் சிறந்த பாடல்களையும் தந்து மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

பழமைக்கும் புதுமைக்கும் நிகழ்ந்த போராட்டத்தில் புதுமையின் கை ஒங்க வைத்த பெருமை இவர்களையே சேரும். படத்திற்குப் படம் இனிமையான பாடல்களைப் பொழிந்தார்கள்.

அவர்கள் தந்த பாடல்களில் தான் எத்தனை உணர்வுகள் , எத்தனை பாவங்கள்..!

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே- வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே….

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே

இந்தப்பாடல் வரிகளை வாசிக்கும் போதே எத்தனை பரவசம் ஏற்படுகிறது.பாடலின் ஒலிநயம் உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்த அதனுடன் இணைந்த இசையோ நம்மை நெகிழ வைக்கிறது.

அழகுணர்ச்சியையும் ,மன எழுச்சியையும் தூண்ட நுட்பமும் ,செறிவும் ஒன்றிணைந்து கலாப்பூர்வமாக வெளிப்படும் கவிதை அதை இனிதே எடுத்துச் செல்லும் தன்னிகரில்லாத இசை.இனிமையான குரல்களில் வரும் இனிமையும் , சோகமும் கலந்த அற்புதமான தாலாட்டு.

தங்களது குடும்பநிலை , உறவுகளின் பெருமை,மற்றும் பலவிதமான நிலை என தாலாட்டு மரபின் அத்தனை அம்சங்களையும் உயர்வளித்து சொன்ன பாடல் அது!

இது போன்று கதையின் சூழலை கவிதையின் உயர்வான நடையில் பல பாடல்களில் கேட்டிருக்கின்றோம்.

வானாடும் நிலவோடு கொஞ்சும்
விண்மீன்கள் உனைக்கண்டு அஞ்சும் – எழில்
வளமூட்டும் வினை மின்னல்
உனைக்கண்டு அஞ்சும்

என்று கவிஞர் வில்லிபுத்தன் எழுதிய ” மாலாஒரு மங்கல் விளக்கு ” பாடலை நாம் உதாரணமாக இங்கே தந்தாலும் ,அந்தப்பாடல் மிக அருமையான மெட்டமைப்பைக் கொண்ட பாடல் தானெனினும் , “மலர்ந்தும் மலராத” பாடல் அளவுக்கு வெகுமக்களிடம் சென்று வெற்றியடையவில்லை என்பதே உண்மை.மிகப்பெரிய வெற்றிப்படமான பாசமலர் படத்தின் வெற்றியும் இந்தப்பாடல் அதிக புகழ்பெற்றமைக்கான காரணமாகும்.

எனினும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்த இனிய மெட்டல்லவா அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது ! இது போன்ற பல இசைவார்ப்புகள் நம்மைக் கொள்ளை கொண்டு சென்றன.நெஞ்சை ஆட்சி செய்யும் வளமிக்க பாடல்கள் அவை !

Viswanathanஇனிய இசையின் வெற்றி என்பதே இது தான்! அந்த இனிய இசைக்கு என்ன வரிகளை வைத்தாலும் இசை வென்று விடும் என்பதே உண்மை.ஆனால் உயிர்த்துடிப்புமிக்க வரிகள் இணையும் போது நெஞ்சைப் பறி கொடுக்கும் ரசவாதம் பிறந்து விடுகிறது.

தமது அமரத்துவக் கானங்களால் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் அழகுலகைக் காட்டியதில் பெரும் பங்கு தமிழ் திரையிசையமைப்பாளர்களுக்கு உண்டு.அதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லதகுந்த தனித்தன்மைமிக்கவர்கள் தான் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எத்தனை வகை , வகையான, எண்ணற்ற இனிய பாடல்களால் தமிழ் இசை ரசிகர்களை இன்பத்தில் திணறடிக்க வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.

பின்னாளில் எத்தனையோ புகழாரங்களை மெல்லிசைமன்னர்கள் பெற்றாலும் , அதில் அதியுயர் பாராட்டாக, அதே துறையில் யாரும் எட்டாத சிகரங்களைத் தொட்ட இசைஞானி இளையராஜா ,மெல்லிசைமன்னர்களின் இசை எவ்விதம் தன்னை பாதித்தது என்பதை விளக்க முனைந்தமை சிறந்த பாராட்டாக அமைந்தது

” நான் ஒரு இசைக்கலைஞனாக இந்த உலகத்தில் நடமாடிக்கொண்டிருப்பதன் முக்கியமான காரணம் அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் , மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி அவர்களுமே ! ஏனென்றால் நான் பிறந்த கிராமத்திலே இசை கற்றுக் கொள்ள விரும்பினாலும் அங்கே சொல்லிக் கொடுக்க யாருமில்லை.அந்தக் கிராமத்திலே அவர்களுடைய பாடல்கள் ஒலிக்காத நாளெல்லாம் விடியாத நாள் என்று தான் எங்கள் பொழுதுகள் கழிந்தன……உணர்வுமயமான அவர்களது நாதம் என்னுடைய நாடி , நரம்பில், இரத்தத்தில் உடம்பில் எல்லாம் ஊறிப்போனதால் தான் !

இது தான் மெல்லிசைமன்னர்கள் பெற்ற அதியுயர் பாராட்டு என்பேன்.அவர்களின் இசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பது அவர்களது இசை, ஒரு மாபெரும் கலைஞனை உருவாக்குவதில் எவ்விதம் பங்காற்றியிருக்கிறது என்பதே!

பழைய பாடல்கள் என்றதுமே கருப்பு வெள்ளைப் படங்களும் , வானொலிப்பெட்டியும் நம் நினைவுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாகும்.வானொலி நம்மை தன்னுடன் இறுக அணைத்துக் கொண்ட சாதனமாகும்.இதயத்தோடு இணைந்த எத்தனையோ பாடல்களைத் தந்து உணர்வு மிகுதியில் நம்மைத் திளைக்க வைத்ததிருக்கிறது.இசையில்நம்மை தாலாட்டி வளர்த்த தாய்வீடு வானொலியே என்று சொல்லி கொள்வதற்குக் காரணமாயிருந்தவர்களில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

விருது பெறுவதால் மட்டும் ஒருவரின் திறமை அளவிடப்படும் இன்றைய விசித்திர சூழ்நிலையில் ,தனது திறமைக்கு கிடைக்க வேண்டிய குறிப்பிடத் தகுந்த விருதுகளும் பெறாமல் மறைந்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அவர் இசையமைத்த பாடல்கள் சில தேசிய அளவில் விருதுகள் பெற்றாலும் அவருக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் விருதுகளுக்கு அப்பால் நல்லிசை ரகிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டிருப்பவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் !

தனது படைப்புக்கள் பேசப்பட வேண்டும் என்றோ , விருகள் பெற வேண்டுமென்றோ முனைப்புக்காட்டாத அவர்,மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற சினிமா இசை மூலம் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்துப்பார்க்க முடியாத காலத்து மனிதராக வாழ்ந்து மறைந்தார். ஆயினும் அந்த ஆதங்கம் அவரிடம் வெளிப்பட்டுமிருக்கிறது.”உழைக்கத் தெரிந்தது ,பிழைக்கத் தெரியவில்லை” என்பார்!

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் இசைப்பாரம்பரியமற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் புதியதொரு பரிமாணத்தை நிகழ்த்திய மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன்.

தமிழின் சகோதர மொழியான மலயாளம் தந்த ஈடு இணையற்ற இசையமைப்பாளனை தமிழ்த்திரையுலகம் தத்தெடுத்துக் கொண்டது.

அதற்கு கைமாறாக அவர் தந்த இசை,தமிழ்ப்பாடல்களை பிற மொழியினர் வியந்து பார்க்க வைத்தன.1940 களிலேயே கொடிகட்டி பறந்த ஹிந்தியின் மெல்லிசை , அதன் ஈர்ப்பால் 1950 களில் வீசிய தெலுங்கு மெல்லிசை அலை போல 1960 களில் தமிழில் வீசியடித்த மெல்லிசை வீச்சின் சொந்தக்காரர் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.

1952 இலிருந்து 1965 வரை ஒன்றிணைந்து இயங்கிய அவர்கள் மனது மறக்காத பல பாடல்களைத் தமிழ்மக்களுக்கு விட்டுச் சென்றார்கள்.அழகியல் நோக்கில் பல இனிமையான பாடல்களைத் தந்தவர்களின் பிரிவு பற்றிய துல்லியமான காரணிகள் யாராலும் பேசப்படவில்லை.அவர்களும் அது குறித்து பேசியதில்லை.இசை வேட்கை மிகுந்த இரு மேதைகளின் பிரிவு தமிழ் திரை இசைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்பதை விட நல்லிசை ரசிகர்களுக்கு பேரிழப்பு என்பதே பொருத்தமானதாகும்.

மெல்லிசைக்கு புதுக்கட்டியங் கூறிய இரட்டையர்களின் கூட்டு குறிப்பாக இறுதி 5 ஆண்டுகளில் [1960 – 1965 ] உச்சம் பெற்றது.ஒளிவீசிக் கொண்டிருந்த நட்சத்திரம் உதிரும் போது ஒளியைப் பாய்ச்சி மறைவது போல , நல்ல பல பாடல்களை அள்ளிக் கொட்டியவர்கள் பிரிந்து சென்றனர்.

நம் வாழ்வின் நீண்ட பாதையில் அவர்களது பாடல்களுடன் நாம் பயணித்திருக்கின்றோம்.
வானொலியில் பிறந்து காற்றலைகளில் மிதந்த அவர்களது பாடல்கள் நம் நெஞ்சங்களில் கலந்து நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.

ஆரம்பநாளில் மெல்லிசைமன்னர் இசையமைத்த “வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே ” , “கூவாமல் கூவும் கோகிலம் ” , “தென்றலடிக்குது என்னை மயக்குது , “கண்ணில் தோன்றும் காடசி யாவும்” ,”கசக்குமா இல்லை ருசிக்குமா” போன்ற பாடல்களை நினைக்கும் போதே மனம் ஒருவித போதையில் ஆழ்கிறது.நினைவு திரையில் மறைந்த உறவுகளும் , நினைவுகளும் , கழிந்து போன நாட்களும் நம்மை வருத்தம் தந்து வருடிச் செல்லும்.மெல்லிசையில் ஒரு துலக்கத்தை அந்தக் காலத்திலேயே காண்பித்திருப்பதையும் அவரது திறமமையையும் எண்ணி வியக்கவும் வைக்கிறது .

மெல்லிசைமன்னர்கள் திரைப்படத்தில் நுழைந்து முன்னுக்கு வந்த காலத்தைக் கவனத்தில் எடுத்தல் தேவையாகிறது. கர்னாடக செவ்வியலிசையின் கட்டுக்கள் தளர்ந்து மெல்லிசையின் துளிர்கள் அரும்பிக்கொண்டிருந்த காலம் என்பதை திரையிசையை நோக்குபவர்கள் உணர்வார்கள்.மெல்லிசைக்கான முகிழ்ப்புக்கு , நாடக மரபில் வந்த மூத்த இசையமைப்பாளர்களைப்போல மரபையொட்டிய மெல்லிசையையும் ஹிந்தி திரை இசையையும் ஆதர்சமாகக் கொண்டு பாடல்களைக் கொடுக்க முனைந்தனர்.

1952 ஆம் வருடம் பணம் படத்தின் மூலம் ஒன்றிணைந்த மெல்லிசைமன்னர்களுக்கு
முன்னிருந்த சவால் என்பது , அவர்களுக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்களையும் , அவர்களது சமகால இசையமைப்பாளர்களையும் தாண்டிப் புதுமை செய்வதென்பதே!

[தொடரும்]

தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்…………….

தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்…………….! ‪

cargo-shortஇனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.!

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க..
(அவங்க சுத்தமாம்!)

2) அங்கு இருந்து “toilet tissu” வோட வருவாங்க..
(அவங்க சுகாதாரமாம்!)

3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)

4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).

5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!! 6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)

7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).

8) கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்………
‪#‎நம்ம_கிறுக்கு_பயபுள்ளைங்க‬

stussy9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று……ஆனால் நிலமை வேற கண்ணா………!

10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும்.

https://www.facebook.com/hashtag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95

இனியொரு முள்ளிவாய்கால் வாராது போகட்டும்!! : விஜி(லண்டன்)

mullivaikkalமான்களையும் மயில்களையும் சிறகுகள் பிய்த்து கொன்று விட்டு

வளம் செய்யும் தேனீக்களையும் மண்புழுக்களையும் தீயிட்டு எரித்து விட்டு

வான்முகில் பொழிய நினைத்த மழை நீரை தடுத்து விட்டு
அழகும் வாசமும் தர வீடு விரைந்த பூக்களை காலடியில் மிதித்து விட்டு

ஒளி நிறைந்த கண்களும் மனங்களும் கொண்டு
பால் வடியும் குழந்தை முகங்களோடு வந்தவர்களை
துரோகிகளாய் கொன்று போட விட்டு விட்டு
கடைசியாய் முள்ளிவாய்க்காலாய் பெயரிட்டு
மே பதினெட்டே நமது அறுவடை!

வரலாற்றை தேடாதவரும் அதை கல்லாதவரும்
கல் தோன்றி மண் தோன்றா காலத்து
மூத்த குடியென மடமை பேசுவோரும்
தொடங்கும் போதே தோற்று விட்டதை அறியாதவரும்
இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தாலும்
முள்ளிவாய்க்கால் கரையோரம் அழுது புலம்பவே காலம் பணிக்கும் !

திசை தேடி அலைகிறோம்
பயணம் எங்கென்று தெரியவில்லை
புத்துணர்வு பாய
புதிய வழி வேண்டும்
அது ஒடுங்கிய மக்களின் முதல் காலடிகளில் தொடங்கும்

விலங்குகள் நொறுங்க
விடுதலை சூரியன் ஒளிர்வதை காண
இருப்போமோ இல்லையோ தெரியாது
ஆனாலும்
தெருக்களில் களனிகளில் நெருப்புக் கூடங்களில்
வாடும் மனிதருடன்
புத்தன் சிலையின் நிழலில் ஒதுங்கி
நீர்வற்றிய குளத்தின் கரையில்
தம்பசியாற
தாமரை கிழங்கினை கிளறும்
சுகுமாவதிகள் உடன்வர
எமை சூழ்ந்த
நுண்இழை அதிகாரங்கள் திகைத்துப் போக

நிலமும் காற்றும் நீரும் ஒளியும்
நெடு வானமும் பார்த்திருக்க

இயைந்து வாழ்ந்திடும்
ஒரு காலம் தொடர்ந்திடும்!

மகிழ்வும் நிம்மதியும் வேர் விடும் பூமியில்
எமக்கான வாழ்வும் எமக்கான இருப்பும் அங்கு நிலைத்திடும்!

‘பொன் மணி’ உங்கள் மகளின் கதையாகலாம் : தம்பி ஐயா தேவதாஸ்

14.3அது 1976ஆம் ஆண்டு. இலங்கையில் ஒரு தமிழ் இளைஞரிடம் சிறு தொகைப்பணம் இருந்தது. மூன்று இலட்சம் ரூபா அளவு பணம் அது. அந்த இளைஞர் கொழும்பில் ஒரு ஹோட்டல் கட்டலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இவருக்கு ஒரு மைத்துனர் இருந்தார். அவர் புகழ்பெற்ற எழுத்தாளர், வானொலி அறிவிப்பாளர், பெயர் பெற்ற விளம்பர நிர்வாகி, இவருக்கும் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டுமென்று நீண்ட நாள் ஆசை.

இளைஞரும் மைத்துனரும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள். மைத்துனர் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கலாம் என்று ‘ஐடியா’ கொடுத்தார். இளைஞருக்கும் ஆசை வந்துவிட்டது. சர்வதேசத் தரத்துக்கு ஒரு தமிழ்ப் படம் தயாரித்தால் அதை வெளிநாடுகளுக்கு விற்றே அதிக பணமும் புகழும் பெறலாம் என்று ஆசைப்பட்டார் இளைஞர்.

ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தார்கள். அந்த இளைஞரின் பெயர்தான் காவலூர் ராஜதுரை. அவர்கள் இருவரும் தயாரித்த படத்தின் பெயர்தான் ‘பொன்மணி’

டைரக்டராக பத்திராஜா தெரிவு செய்யப்பட்டார். சிங்களத் திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்கிய டொனால்ட் கருணாரட்ண ஒளிப்பதிவாளராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

படைப்பாற்றல் திறமை உள்ளவர்களை நடிகர்களாகத் தெரிவுசெய்யலாம் என்று இயக்குநரும் காவலூர் ராஜதுரையும் முடிவு செய்தார்கள். முதலில் திருமதி. சர்வமங்களம் கைலாசபதி தெரிவு செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பல அறிஞர்களும் நடிக்க ஒப்புக்கொண்டார்கள்.

14.2மருத்துவத் துறையில் புகழ்பெற்ற டொக்டர் சிவஞானசுந்தரம் (நந்தி), மின் பொறியியலாளர் திருநாவுக்கரசு, வித்யோதய பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி பவானி திருநாவுக்கரசு, ஓய்வுபெற்ற மாவட்ட நீதவான் எஸ். யோகநாதன், ஓய்வுபெற்ற மாநகரசபை ஆணையாளர் எல்.ஆர். அழகரெத்தினம், முன்னாள் நகர சபை அங்கத்தவர் மன்மதராயர், தகவல் திணைக்களத்தைச் சேர்ந்த செல்வி. கமலா தம்பிராஜா, யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி சித்திரலேகா, மௌனகுரு, எம்.எஸ். பத்மநாதன், எம். சண்முகலிங்கம், ஆர். ராஜசிங்கம், எஸ். ரமேஸியஸ், ராஜேஸ் கதிரவேல், லடிஸ் வீரமணி ஆகியோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அரசாங்க ஊழியரான கே. பாலசந்திரன் கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் ஊதியமின்றி நடித்துத் தருவதாக ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். இதற்கு முன் ‘சுமதி எங்கே’, ‘நான் உங்கள் தோழன்’ போன்ற படங்களில் நடித்திருந்த சுபாஷினி இப்படத்தில் கதாநாயகியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

‘பொன்மணி’யின் ஆரம்ப விழா 22.8.76இல் கொழும்பில் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் ஆர். பியசேனாவின் தலைமையில் நடைபெற்றது. முதலாவது படப்பிடிப்பு யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலில் நடைபெற்றது. தொடர்ந்து காரைநகர், பாஷையூர், மண்ணாத்தலைதீவு, பண்ணைக்கடல், நாச்சிமார் கோயில் ஆகிய இடங்களில் இடம்பெற்றது. படப்பிடிப்பு அரைவாசி முடிந்துவிட்டது. கதாநாயகன் பிரச்சினை கொடுக்க ஆரம்பித்தார். படத்தை அரைவாசியில் நிறுத்திவிடுவோமா என்ற எண்ணம்கூட ராஜதுரைக்கு ஏற்பட்டதாம். ‘ஒருசதமும் ஊதியமாக வேண்டாம் என்று சொன்ன கதாநாயகன் 5000 ரூபா பெற்றுக்கொண்ட பின்பே படத்தை முடித்துக்கொடுத்தார். படத்தின் தயாரிப்பு நிர்வாகி பிரபல விளம்பர வாக்கியமொன்றை எழுதியிருந்தார்…. ‘உங்கள் மகளின் கதையாகலாம்’ என்பதே அவ்விளம்பர வாக்கியம்.

14.1ஒரு யாழ்ப்பாண இந்துக் குடும்பத்தில் கடைசிப் பெண் பொன்மணி. திருமணப் பருவம் வந்தபோது தன் அக்காவின் திருமணம் எப்போது நிறைவேறும் என்று காத்திருந்தாள். இவள் தாழ்ந்த குலக் கிறிஸ்தவனைக் காதலித்தாள். குடும்பத்தவருக்கும் தன் சொந்த, எதிர்காலத்துக்கும் இடையில் அவள் ஒரு முடிவு எடுக்கவேண்டியிருந்தது. அவள் தன் காதலனுடன் ஓடிவிடுகிறாள். இவர்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் திருமணம் நடைபெறுகிறது. பொன்மணிக்கு ஏற்கனவே பேசிய ஒருவனின் கையாளால் அவள் சுடப்படுகிறாள். பிரேத ஊர்வலத்துடன் கதை முடிகிறது. இதுதான் பொன்மணி திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

எம். றொக்சாமி இசை அமைத்த பாடல்கள் சிறந்து விளங்கின. கமலினி செல்வராஜன், இயற்றிய பாடல் ஒன்று பெண்களின் மன உணர்வை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது. அதை சக்திதேவி குருநாதபிள்ளை உருக்கமாகப் பாடியிருந்தார்.

எடுக்கும் இளம் தோளில் மணமாலையே
மிடுக்கு நடைபோடத் தடைபோடுமே
மன்னவன் வருவான் மையல்தருவான்
வருமெனில் வராதோ நாணமே

ஒருநாள் வாழ்வின் திருநாள் சுவைநாள்
காதல் சுகநாள் இரவு இனிக்கும் திருநாள்
வருமெனில் வராதோ நாணமே

முழவோ தாளம் பொழிய
குழலோ கீதம் பிழிய
நிலா தேன்தரும் நாள்
வருமெனில் வராதோ நாணமே

தோழி கேலி மொழிய
சுற்றல் ஆசி சொரிய
கனா பலித்திடும் நாள்
வருமெனில் வராதோ நாணமே.

இதுவே அந்தப் பாடலின் வரிகள். மற்றப் பாடல்களைச் சில்லையூர் செல்வராஜன் எழுதியிருந்தார். அவற்றில் பின்வரும் பாடல் கருத்துச் செறிவுடன் விளங்கியது.

‘பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்
பார்த்திருப்பார் கண்ணனை காத்திருப்பார்
காதலினால் அல்ல கண்ணனிலே உள்ள
போதையினாலல்ல

உண்டிடத் தீனியும் மேனிமூடிட
ஒரு முழம் சேலையும் தந்துவிட்ட
ஒரு நொண்டியும் கண்ணனே’

என்று அமைந்தது அந்தப் பாடல்.

எஸ்.கே. பரராஜசிங்கமும் ஜெகதேவியும் பாடிய இன்னுமொரு பாடலும் இனிமையாக விளங்கியது.

‘வானில் கலகலவென இருபறவைகள் திரியுது
மேலில் தழுவிய கொடிமலர் குறுநகை புரியுது
தேன் நிலவினிலே ஒன்றாகுவோம்
சிங்காரத் தெய்வீகப் பண்பாடுவோம்’ என்று

ஆரம்பமாகிறது அந்தப் பாடல். மற்றப் பாடல்களை ரஜனி, ராகினி, சாந்தி, ஜனதா ஆகியோர் பாடினர்.

பெரும் விளம்பரத்தோடு திரையிடப்பட்ட பொன்மணி, திரைகளில் ஒரு வாரம் மட்டுமே காட்சியளித்தது. ஆனாலும், வேறு எந்த இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கும் இல்லாத அளவுக்குப் பலர் விமர்சனம் எழுதினர். அவைகள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவந்தன.

14.4தினகரனில் (15.04.77) எச்.எம்.பி. மொஹிதீன் இப் படத்தைப்பற்றிச் சிறு குறிப்பு எழுதினார். ‘பிரபல தமிழ் எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் கதையாக்கத்தில் உருவான, அதிகம் பிரபல்யப்படுத்தப்பட்ட ‘பொன்மணி’ இப்பொழுது திரையிடப்பட்டிருக்கிறது. ஏனோ இப்படத்துக்குக் கூட்டத்தைக் காணவில்லை. இயக்குநர் பரீட்சியம் மிக்கவர். ஒளிப்பதிவாளரும் திறமைசாலியே. எழுத்தாளரும் நல்லவரே. நடிகர்களோ சமுதாயத்தின் உயர்மட்டப் பெரியவர்கள். இத்தனைபேரும் கூட்டுமொத்தமாகத் தலைபோட்டும் கூட்டம் வராததை புதுமையைத் தருகிறது. நானும் படத்தைப் பார்த்தேன். பொறுமையோடு பார்க்கமுடிந்தது. ரசிக்கமுடியவில்லை….’ என்று தன் எண்ணத்தை எழுதினார்.

அப்பொழுது யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பகுதித் தலைவராகப் பேராசிரியர் சுச்சரித்த கம்லத் கடமையாற்றினார். அவரும் ‘பொன்மணி’ பற்றி சிங்களப் பத்திரிகையில் (தினமின) விமர்சனம் எழுதினார். நான் அந்தக் கட்டுரையை மொழிபெயர்த்தேன். அது தினகரனில் வெளியாகியது.

‘……தமிழ்மக்கள் மத்தியில் வாழ்ந்து வருபவரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் சிறந்த நெறியாளருமான தர்மசேன பத்திராஜா பொன்மணியை நெறிப்படுத்தியுள்ளார். சாதி, சீதனப் பிரச்சினைகள் பற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது…… ரசிகர்களின் இதயங்களை ஊடறுத்துச் சென்று அறிவுக் கண்களை, இளையவர்களின் பிரச்சினைகளை நோக்கித் திரும்பும் வண்ணம் படம் அமைந்துள்ளது. ஆனாலும், இப்படம் தோல்வி அடைந்ததற்குக் காரணம் என்ன?

முதலாளித்துவ அமைப்பினால் வேண்டுமென்றே புகுத்தப்பட்ட வர்க்க முரண்பாடுகள் இதன் தோல்விக்கு இன்னுமொரு காரணமாகும். ……தியேட்டர் உரிமையாளர்களே இரசிகர்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் சிலர் வேண்டுமென்றே விளம்பரம் செய்யாமல் விட்டிருக்கிறார்கள்….. தமிழ் ரசிகர்களின் தென்னிந்திய சினிமா மோகமே இதன் தோல்விக்குக் காரணமாகும். தர்மசேன பத்திராஜா தமிழ் ரசிகர்களை அந்த மாயலோகத்திலிருந்து பிரித்து அவர்கள் வாழுகின்ற உண்மை உலகம் இதுதான் என்று காட்டினார்.

‘….. தென் இலங்கையில் எழுச்சிபெறும் கலை, வியாபார ரீதியான தோல்விகளைப் பொருட்படுத்தாதது போல வடக்கிலும் இந்த நிலை உயர்ந்து செல்லவேண்டும்’ என்று அமைந்திருந்தது அந்த விமர்சனம்.

கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி ‘பொன்மணி’ பற்றி தினகரனில் (24.04.77) நீண்ட விமர்சனம் எழுதினார்.

‘இலங்கைத் திரைப்பட வரலாற்றில் பொன்மணி, தென்னிந்தியத் திரைப்பட அமைப்பிலிருந்து வேறுபடும் முதல் முயற்சியாகும். தொழில்நுட்ப அழகியல் அம்சங்களைக் காத்திரமான முறையில் அறிந்து உணர்த்தும் உள்ளூர்க் கலைஞர்கள், எழுத்தாளர்களின் இணைப்பு முயற்சியால் தோன்றியது இப் படம். ஆனாலும், இதன் தோல்வி காத்திரமாக ஆய்வு செய்யப்படுவது அத்தியாவசியமாகும்.

…..பொன்மணி, சாதாரண தமிழ்ப் படங்களைவிட வேறுபாடானது. கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மிதமிஞ்சி சிருங்காரப்படுத்தாமலும், மிகையுணர்ச்சி படக்காட்டாமல் யதார்த்தமாக இயங்கக்கூடியளவு உள்ளவாறே காட்டியுள்ளார் பத்திராஜா.

….. கதை அமைப்பைப் பொறுத்தவரை முக்கியப் பாத்திரங்கள் கணேசும் தாயுமே. இப் பாத்திரங்கள் மீது முழு அவதானமும் விழுந்துள்ளமைக்குக் காரணம், இப் பாத்திரங்களில் நடித்த சண்முகலிங்கம், பவானி திருநாவுக்கரசு ஆகியோரது நடிப்பேயாகும்.

…யாழ்ப்பாண இந்துத் தமிழ்க் குடும்பத் தலைவியின் ஏக்கங்களையும், தாபங்களையும் வெகு இயல்பாகப் பவானி திருநாவுக்கரசு பிரதிபலித்துள்ளார்….

‘…. பாடல்களில் ‘பாதையில் எத்தனை ராதைகள்’ வெற்றியீட்டியுள்ளது. கதையின் செல்நெறியை விளக்க அப் பாடல் ஆதாரமாக அமைக்கப்பட்டுள்ளது. ‘வானில் கலகலவென’ என்னும் பாடலில் ஒலிப்பதிவின் தெளிவின்மை காரணமாக பரராஜசிங்கத்தின் திறமை வீணடிக்கப்பட்டுள்ளது. றொக்சாமியின் திறமை, பாடல்களுக்கான மெட்டமைவுடன் வரையறை பெற்றுவிடுகிறது…… பொன்மணி ஜனரஞ்சகப் படமாகவும் இல்லாது, இலக்கணச் சுத்தமான, யதார்த்தப் படமாகவும் இல்லாது நிற்கிறது…’ என்று எழுதினார்.

விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் ‘டெயிலிமிரர்’, ‘தினகரன்’ போன்ற பத்திரிகைகளில் விமர்சனம் எழுதினார்.

‘…..முழுப்படத்திலும், சுமார் 60 வசனங்களையே பாத்திரங்கள் பேசுகின்றன. துரதிஷ்டவசமாக அந்த வசனங்கள் தர்க்கரீதியாக அமையவில்லை. இரண்டு பாத்திரங்கள் பேசும்போதுகூட இடைவெளி அதிகம். சில பாத்திரங்கள் புத்தகத் தமிழ் பேசுகின்றன. சில பாத்திரங்கள் கொச்சைத் தமிழ் பேசுகின்றன. நடிப்புதான் இல்லாவிட்டாலும் குரல் அமைப்பில்கூட கவனம் செலுத்தப்படவில்லை. ….. படத்தை முழுமையாக ரசிப்பதற்குத் தடையாக இருப்பவை, படத்தின் மந்தகதியும் நாடகத் தன்மையுமாகும்.

….. இப்படத்தின் சிறப்பான அம்சம் இசையாகும். செல்வராஜனின் பாடல்கள் தனிச்சிறப்பானவை…. படத்தின் முக்கியச் செய்தி என்ன? என்னைப் பொறுத்தவரை அங்கு செய்தியைக் காண முடியவில்லை’ என்று எழுதினார்.

தினகரனில் (2.6.77) விமர்சனம் எழுதிய இன்னுமொருவர் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஏ. நுஃமான்.

‘…..இலங்கையில் இதுவரை வெளிவந்த வேறு எந்தத் தமிழ்ப்படம் பற்றியும் இத்தகைய காத்திரமான விமர்சனங்கள் வெளிவரவில்லை. இந்த உண்மை ஒன்றே ‘பொன்மணி’ மற்றப் படங்களிலிருந்து வேறுபடுகிறது என்பதற்கு நல்ல உதாரணம். ‘பொன்மணி’யின் கதை, நடிப்பு, படப்பிடிப்பு, இசை அமைப்பு, படத்தொகுப்பு போன்றவற்றில் உள்ள குறைபாடுகளே தோல்விக்குக்காரணம் என்று கூறுவதற்கில்லை. தென்னிந்தியத் தமிழ்ப் படங்களே நமது படங்களின் தோல்விக்கான அடிப்படைக் காரணங்களாகும்.’ என்று அவர் குறிப்பிட்டார்.

இரா. சிவச்சந்திரனும் தினகரனில் (5.5.77) விமர்சனம் எழுதினார். ‘காவலூர் ராஜதுரையின் ‘பொன்மணி’ திரையிடப்பட்டு ஒரு வார காலத்துக்குள்ளேயே மறைந்து விட்டமை இலங்கைச் சினிமா அபிமானிகளுக்கு மனத்தாங்கலான சம்பவமே… பத்திராஜா சினிமாவில் புகழ்பெற்றவர். அப்படிப்பட்டவர் இங்கே ஏன் தவறிழைத்தார் என்று விளங்கவில்லை. மொழி விளங்காமை, யாழ்ப்பாணத்து சமுதாய அமைப்பையும் இயக்கங்களையும் முறையாகப் புரிந்துகொள்ளாமை போன்றவையே தோல்விக்கு முக்கியக் காரணம்போல் தோன்றுகிறது…. டொக்டர் நந்தியின் தோற்றம் நடிப்பு வசன உச்சரிப்பு என்பன இயல்பாக அமைந்துள்ளன….’ என்று எழுதினார்.

வீரகேசரியில் (10.4.77) ‘மண்மகள்’ விமர்சனம் எழுதினார். யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் வாழ்க்கை, கலை, கலாசாரம், பழக்கவழக்கம் ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுகிறது பொன்மணி… சிறந்த கேரள, வங்காளப் படங்களைப் போல் சிறப்பு அம்சங்களுடன் இப்படம் விளங்குகிறது’ என்று அவர் புகழ்ந்து எழுதினார்.

இப்படி எல்லாம் பெரிய விமர்சனங்கள் கிடைத்த ‘பொன்மணி’ திரையிடப்பட்ட எல்லாத் தியேட்டர்களிலும் எண்ணி எட்டு நாட்களே நின்று பிடித்தது.

பொன்மணியின் பொறுப்பாளர் காவலூர் ராஜதுரை என்ன சொன்னார் தெரியுமா? ‘தயாரிப்பாளர் என்னை நம்பிப் பணத்தைத் தந்தார். நான் இயக்குநரை நம்பிப் பணத்தையும் கதையையும் கொடுத்தேன். நடிகர்கள் இயக்குநரின் புகழுக்குப் பயந்து சொன்னதைச் செய்தார்கள். இதனால் படம் இந்த நிலைக்கு வந்தது’ என்று சொன்னார்.

1978ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பொன்மணி’ பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது. அப்பொழுது பிரபல்யமான சினிமாச் சஞ்சிகையான ‘பொம்மையும்’ விமர்சனம் எழுதியது.

‘…… காதல் திருமணத்தை வலியுறுத்தும் இப் படம் இலங்கையில் பெரும் சர்ச்சைக்கு உட்பட்டது. பல பத்திரிகைகளில் ‘பொன்மணி’ பற்றிய விவாதப் பத்திகள் வெளியாயின. இலங்கையின் இயற்கை எழிலில் தயாரிக்கப்பட்ட இப் படம் இலங்கையின் திரைப்பட வளர்ச்சியில் ஒரு மைல்கல். ராஜ்குமார் பிலிம் சார்பில் பத்திராஜா இயக்கிய இப் படத்தின் கதை வசனத்தை எழுதியவர் இலங்கை வானொலியில் பணியாற்றும் காவலூர் ராஜதுரை’ என்று சுருக்கமாக எழுதியது.

சென்னையிலிருந்து வெளிவரும் ‘தினமணிக்கதிர்’ என்னும் சஞ்சிகையும் (27.1.78) விமர்சனம் எழுதியது.

‘இலங்கையிலிருந்து சர்வதேச திரைப்பட விழாவுக்கு வந்திருக்கும் தமிழ்படம் ‘பொன்மணி’ ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி ஒருவரின் மகள் பொன்மணி, வீட்டை விட்டு ஓடி ஒரு மீனவனை மணந்து கொள்கின்ற கதை. கதாநாயகியாக நடித்திருக்கு சுபாஷினி நமது ஊர் தமிழ்ப்படக் கதாநாயகியைப் போல கவர்ச்சியாக இல்லை என்றாலும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். கதாநாயகனின் பெயர் பாலச்சந்திரன். சாதாரண சட்டையைப் போட்டுக்கொண்டு படம் முழுவதும் அதுவே போதும் என்று திருப்தி அடைந்திருக்கும் பரம சாது. நமக்குத் திருப்தி-கண்ணுக்குக் குளிர்ச்சியான இயற்கைக் காட்சிகள். திருப்தியில்லாதது பேசும் தமிழ்.

அதாவது கேரளீய சிங்களம், பாதிப் படத்துக்கு மேல், உட்கார்ந்திருக்க முடியவில்லை’ என்று தினமணி கதிர் எழுதியது. இதில் ‘கேரளீய சிங்களம்’ என்றால் என்ன என்று பலருக்கும் புரியவில்லை.

‘பொன்மணி’ இலங்கையில் அதிக தினங்கள் ஓடாவிட்டாலும், அதீத பெயர் பெற்றுவிட்டது. அதனால், அப்படத்தை மீண்டும் சுருக்கி எடிட் செய்திருந்தார் காவலூர் ராஜதுரை.

இலங்கைத் தொலைக்காட்சியில் (ரூபாவாஹினியில்) முதன் முதலில் காட்டப்பட்ட இலங்கைத் தமிழ்ப்படம் ‘பொன்மணி’ தான். 9.5.84இல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. பொன்மணியை இரண்டாவது முறையும் (21.3.85) ஒளிபரப்பினார்கள்.

ponmaniஅப்பொழுது வெளி வந்து கொண்டிருந்த ‘சிந்தாமணி’யில் ‘சஞ்சயன்’ பின்வருமாறு எழுதினார். ‘இலங்கைப் படமான’ பொன்மணியைப் பார்க்கும் வாய்ப்பு 21.3.85 இல் ரூபவாஹினி ரசிகர்களுக்குக் கிடைத்தது. இலங்கைப் படந்தானே என்று முன்பு சலித்துக்கொண்டவர்கள் கூட, பின்பு ‘பரவாயில்லை படம் நன்றாகவே இருக்கிறது’ என்று கூறக் கேட்டபோது ஈழத்துத் தமிழ் ரசிகர்களின் ரசனையில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது. இப்படம் பல வருடங்களுக்கு முன் இலங்கையில் தயாரிக்கப்பட்டது. வெளிப்புறக் காட்சிகள் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டன. தென்னிந்தியப் படங்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த கால கட்டத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட துணிகர முயற்சி. தொழில் நுட்பத் துறையில் முன்னேறியிருந்த தமிழ்நாட்டுப் படங்களின் முன்னே அன்று ‘பொன்மணி’ எடுபடவில்லை.

….தமிழ்நாட்டுப் பாரதிராஜா, பாக்கியராஜாக்கள் தரும் இப்போதைய பாணியை என்றோ ‘பொன்மணி’ மூலம் தந்துவிட்டார் ஈழத்துப் பத்திராஜா…. தமிழகத்திலிருந்து புதுமைப் படைப்புகள் என்று இங்கு வரும் திரைப்படங்களைப் பார்க்கும்பொழுது இப்படங்களுக்கெல்லாம் முன்னோடி ‘பொன்மணி’ என்றே சொல்லவேண்டும்.

….அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஜாதி, மதம் இரண்டையுமே காதலுக்காக அறுத்தெறிந்து வெற்றிபெறும் இளம் ஜோடியைக் கண்டோம். ‘பொன்மணி’யிலோ ஜாதி, மத வெறிக்குப் பொன்மணி பலியாவதன் மூலம் ஜாதி, மத வெறியர்கள் வெற்றிபெறுவதைக் கண்டோம்…’

இவ்வாறு ‘பொன்மணி’யின் மையக் கருத்து அமைந்திருந்தது. எது எப்படியாயினும் இப்படியான புதுமைப்படைப்பு உருவாகக் காரணமாயிருந்த காவலூர் ராஜதுரையும் முத்தையா ராஜசிங்கமும் பாராட்டுக்குரியவர்களே.

‘பொன்மணி’ திரைப்படம் பின்பு பல வெளிநாடுகளின் காண்பிக்கப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அப் படத்தை விருப்பத்துடன் பார்த்து வருகின்றனர்.

– தம்பி ஐயா தேவதாஸ்,
இலங்கை

http://inioru.com/1975-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-2/