நீங்களும் துரோகியாகலாம் : என்.விமலதாசன்

appapillai-Amirthalingamமக்களும் போராளிகளும் லட்சக்கணக்கில் அழிந்து போனதெல்லாம் கொழும்பில் வாழும் மலேசிய ரப்பர் தோட்ட முதலாளியையும் குழுவையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைபதற்கா என்று விரக்தியோடு நண்பன் கேட்டான். வரலற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் இப்போது நடப்பதெல்லாம் வெறும் டுபாக்கூர்களின் கூத்தாட்டம் என்பது விளங்கிவிடும். நமது கஜேந்திரகுமாருக்கு சும்மா ஒரு தேசம் இரண்டு நாடு மட்டும் தானே.

அமெரிக்காவோடையும், இங்கிலாந்தோடையும் பேசி அடுத்த மாசிக்குள்ள தமிழீழமே பெற்றுத் தருவதாக முழங்கியவர்களை ரத்தப் பொட்டும் பிளேட்டுமா பார்லிமென்டுக்கு அனுப்பிவைத்த சமூகம் அல்லவா நாங்கள். மூசிப் பெய்த மாசி மழையோட வளவு நிறைய வெள்ளம் வந்ததே தவிர தமிழீழம் வரேல்ல.

அப்போ பாராளுமன்றத்தில் தமிழீழம் பிடித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின்ர பழுதாகிப் போன வடையை இப்போது பூஞ்சணம் தட்டி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விற்பனை செய்கிறது.

நாங்கள் தான் ஈழ மக்களின்ட பிரச்சனையை சர்வதேசத்தின்ட வாசல் வரைக்கும் கொண்டுபோய் நிறுத்தினன்னாங்கள் என்று பொன்னம்பலத்தார் சொல்லக் கேள்வி. வாசல்லை நீங்கள் கொண்டுபோய் நிறுத்தினதால தானே மைத்திரி தான் இனி உங்கட தேசியத் தலைவன் என்று உங்கட சர்வதேசம் சொல்லித் தருகுது?

இவ்வளவும் நடந்த பிறகும் நாங்க்ள் தான் வாசல்லை நிறுத்தியிருக்கிறம் இனி குசினி வரைகும் கூட்டிச் செல்லுவம் என்று நாக்கூசாமச் சொல்லுகினம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகி; சுமந்திரன் துரோகி என்றதால நாங்கள் தேர்தலில நிக்கிறம் பார்லிமென்டுக்குப் போகப்போறம் என்று குட்டிப் பொன்னம்பலமும் 40 பேரும் அடம்பிடிக்கினம்.

அவங்கள் துரோகிகளாகிட்டினம் நாங்கள் துரோகிகள் ஆக மட்டும் விடமாட்டியள் என்று பொன்னம்பலத்தாற்ற விசிறிகள் விலா வாரியா விளாசுறதை மக்கள் கேட்க ஆரம்பிச்சிருக்கினம்.

சரி விடுவம், நீங்களும் துரோகிகளா இருந்து பாருங்கோ… ஆனா அந்த ஒரு நாடு ரெண்டு தேசம்…

நேற்று உங்கட தங்கச்சி வேட்பாளர் ஒருவர் வாக்குக் கேட்டுக் கூட்டம் போட்டுட்டும் போனப்பிறகு பக்கத்துவீட்டு ஆச்சி வந்து எனக்கு ஒரே தொல்லை. யாரிந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இவ்வளவு காலமும் எங்க இருந்தவை, வெளி நாட்டுகுப் போன எங்கட பிள்ளையள் திரும்ப வந்து எலக்சன்ல நிக்கினமே என்று கேட்டு துளைச்சு எடுத்துப்போட்டா.
எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறு தான்.

இல்லையண முந்தி அமிர்தலிங்கம் பாராளுமன்றம் போய் தமிழீழம் பிடிச்ச மாதிரி இவையும் ஒரு நாடு ரெண்டு தேசம் பிடிக்கப் போகினமாம் என்று நான் ஆரம்பிச்சதும் ஆச்சிக்கு ஆர்வமே போயிட்டுது.

அதுசரி மைத்திரிட்ட கேட்டு ஒரு நாடு இரண்டு தேசம் எடுத்தால் எனக்கும் ஒரு துண்டுக் காணி தரவேணும் சொல்லிப் போட்டன்.

குறைஞ்சது பொன்னம்ப்லத்தார் கொழும்பு குயின்ஸ் ரோட் விட்டுக்கு குடிபோனபிறகாவது அவற்ற அல்வாய் வீட்டுக் காணியை எனக்கு எழுதித் தருவியளே?

அதுக்கு ஒத்துக்கொண்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போல நீங்கள் துரோகியாகிறதுக்கு நான் ஓ.கே.

One thought on “நீங்களும் துரோகியாகலாம் : என்.விமலதாசன்”

  1. புலம்பெயர் நாடுகளில் பணச்சேகரிப்புக்குத் தயார். கஐனும் சில புலம்பெயர் அமைப்புக்களும் பங்குபிரிப்பிற்குத்தயார்.

    நேற்று டான் ரீவியில் தேர்தல்நிகழ்ச்சியில் கஐேந்திரகுமாரிடம் உங்களது கட்சியின் பொருளாதாரக்கொள்கை என்ன ?என்பது கேள்வி
    அதற்கான உண்மையான பதில் திறந்தபொருளாதாரமா அல்லது மூடிய சுய பொருளாதாரமா அல்லது கட்டுப்பாடுகளுடன் கூடிய திறந்தபொருளாதாரமா மற்றும் தனிியார்மயமாக்கல், பல்தேசியக்கம்பனிகளிற்கான சந்தை அனுமதி, வேலைவாய்ப்பு,சமூகநலன் தொடர்பான கொள்கைகள் .
    இவைபற்றி எதுவுமே கூறாமல் புலம்பெயர் தமிழர்களிடம் அங்குள்ள அமைப்பக்களினூடாக பணம் சேர்த்து தாயகத்திலுள்ளவர்களிற்கு உதவுவதே தங்களின் பொருளாதாரக்கொள்கை என பதில் வழங்கினார். பாருங்கள் ஐிஐி யின் பேரனின் அறிவினை. கலெக்சன் ரெடி, இனி சிலர் காட்டில் மழைதான்.

Comments are closed.