கழிவெண்ணெய் கலந்த நீருக்குத் தீர்வென்ன?

உலக நீர் தினத்தை முன்னிட்டு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் மக்களிடையே சுன்னாகம் கழிவு ஒயில் பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரம்

Leaflet 01கழிவெண்ணெய் கலந்த நீருக்குத் தீர்வென்ன? மத்திய அரசே – மாகாண சபையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில் கூறு! என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள அப் பிரசுரத்தில்

மேலும், நன்னீர் வளமும் விவசாயத்துக்கான சிறந்த மண் வளமும் உடைய யாழ்ப்பாணத்தின் மையப் பகுதியான சுன்னாகத்தில்; பெருலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட பல்தேசிய நிறுவனத்தினதும், அரசினதும், அரசியல்வாதிகளதும், அரச அதிகாரிகளதும் பொறுப்பற்ற தன்மையால் நிலத்தடி நீருடன் கழிவு எண்ணெய், கிரீஸ் என்பன கலக்க வகை செய்யப்பட்டு வலிகாமத்து நன்னீர்ப்படுக்கை நஞ்சாக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் ஆரம்பத்தில் புறக்கணிக்கப்பட்டன.

2008 இல் சுன்னாகம் தெற்கு விசாயிகள் சம்மேளனம் தமது தோட்டக் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது பற்றி அப்போதைய அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் முறையிட்டிருந்தது. இது தொடர்பில் அரசாங்க அதிபரால் சுன்னாகம் மின் நிலைய முகாமையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனினும் எழுச்சியடைந்த மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் சுகாதார அமைச்சு, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபை ஆகியன மேற்கொண்ட ஆய்வில் தெல்லிப்பளை, உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் நீரில் கழிவெண்ணெய் கலந்திருப்பது கண்டறியப்பட்டு, அந் நீர் உடல் நலத்துக்கு தீங்கானது எனத் தடை செய்யப்பட்டது. இப் பிரதேசக் கிணறுகளில் 73% இற்கும் அதிகமானவற்றில் அதிகளவு எண்ணெயும், பார உலோகங்களும் கலந்திருக்கலாமென இவ் ஆய்வுகள் சுட்டின. அன்றிலிருந்து மக்கள் காலங்காலமாகத் தமது தாகத்துக்கு அமிர்தமாக எண்ணிப் பருகிய அவர்களது கிணற்று நீரை நஞ்சாக ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன், அன்றிலிருந்து தற்காலிக நீர் தொட்டிகளிலும், போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரிலும் தங்கி நிற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

தொடர்ச்சியாக, மக்கள் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக இவ் விடயம் நீதிமன்றம் வரை சென்றது. சுன்னாகம் மின்னிலைய வளாகத்தில இலங்கை மின்சார சபைக்காக ‘நொதேர்ண் பவர்’ என்ற மின்னுற்பத்தி செய்யும் பல்தேசியக் கம்பனியின் கிளை மீது கழிவு எண்ணெய்க் கலப்புச் சந்தேகம் எழுப்பப்பட்டு அக் கம்பனியின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இது மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

2015 பெப்பிரவரியில் சுகாதார அமைச்சு உடுவில், தெல்லிப்பழை, கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய 4 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுகளுக்கு உட்பட்ட 30 கிணறுகளின் நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில், 30 இலும் கழிவு எண்ணெய் அதிகளவில் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.

பின்னர் வட மாகாண சபை அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை நிலத்தடி நீரில் கழிவெண்ணெய்க் கலப்பு இல்லை என கூறியது. மேலும், நிபுணர் குழுவின் அறிக்கையில் மலத்தொற்றும், உரப் பாவனை அதிகரிப்பால் நைற்றேற்றும் நீரில் கலந்துள்ளது எனக் கூறப் பட்டுள்ளது. ஆனால் அவற்றின் அடர்த்தியும் ஆபத்துக்களும் பற்றிய தகவல்கள் எதுவும் தரப்படவில்லை. ஊடகங்களில் வெளிவந்த தகவல்களில், நிபுணர் குழுவின் அறிக்கையானது சுன்னாகம் நிலத்தடி நீரின் தன்மை பற்றிப் பேசுவதைக் குறைத்து முழுக் குடாநாட்டு நிலத்தடி நீரையும் பற்றியே பேசுகிறது. ஆய்வின் முழு விபரங்களும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படாத அவ்வறிக்கையின் பின்னரும் மாகாண சபையோ, மத்திய அரசோ வழமைபோல மக்கள் அச்சமின்றித் தத்தமது கிணற்று நீரைப் பருகலாம் என உறுதி வழங்கவில்லை.

அத்துடன் இந் நிபுணர் குழு அரச இரசாயனப் பகுப்பாய்வாளர்களால் 2015 இல் செய்யப்பட்ட ஆய்வினைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. இதன் மூலம், நிபுணர் குழு யார் யாரையோ பாதுகாக்க முற்படுகின்றமை தெரிகின்றது. மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

இதனால், பாதிக்கப்பட்ட இரண்டரை லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மனங்களில் குழப்பம் ஏற்பட்டது. எனவே, மேலும் பரவலான தெளிவான ஆய்வை விரைவாக மேற்கொண்டு உரிய பதிலை வழங்குவதுடன், அதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீரும் உணவுத் தேவைகளுக்கான தரமான நீரும்; வழங்கலை தொடரவேண்டும் எனக் கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மக்களுடன் இணைந்து போராடியது.

அதேவேளை, 2012ஆம் ஆண்டில் இருந்து மேற்படி மாசடைந்த நீரில் உள்ள ஆபத்துக்கள் பற்றிக் கூறிவருகின்ற நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை அதற்குரிய காத்திரமான தீர்வு எதையும் இதுவரை முன்வைக்காததுடன், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நன்னீPரை விநியோகிப்பதிலும் அலட்சியப் போக்கைக் கொண்டுள்ளது.

யாழ்ப்பாண அரசாங்க அதிபர், வடமாகாண முதலமைச்சர் ஆகியோரை உள்ளடக்கி உருவான தூய நீருக்கான செயலணியும் இந் நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி மௌனம் சாதிப்பதுடன் ஆக்கபூர்வமான எந்தவொரு முன்னெடுப்பையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

மாகாண விவசாய அமைச்சரும், சுகாதார அமைச்சரும் நிபுணர் குழு அறிக்கை பற்றி எதுவும் கூறாதது போக, வட மாகாண விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வழங்கலுக்குப் பொறுப்பான அமைச்சர் தனக்கு இவ் விடயத்தில் எவ்வித தொடர்புமில்லையெனப் பின்வாங்குவது பெரும் ஏமாற்றுச் செயலாகவே அமைகின்றது.
நிலத்தடி நீரில் கரைந்துள்ள நச்சுப் பார உலோகங்களில் மிகவும் ஆபத்தானதான ஈயம், நிக்கல் ஆகியன கண்ணுக்குத் தெரியாததுடன், உடல் ஆரோக்கியத்துக்குப் பெரும் தீங்கு விளைவிப்பனவுமாகும். அவை சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்தல், மலட்டுத்தன்மை, புற்றுநோய் ஆகிய பாரதூரமான நோய்களை ஏற்படுத்தும்.

முன்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த நீர் விநியோகத்தைத் தற்போது பல இடங்களிலும் நிறுத்தியுள்ளமையால், பொதுமக்கள் மிகவும் அசௌகரியப்படுவதுடன் குடிநீருக்காகப் போத்தல்களுடன் அலையும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந் நிலை மாசடைந்த நீரைப் பயன்படுத்துமாறு மக்களை நிர்ப்பந்திக்கிறது. மாசடைந்த நீரை அருந்துவதுடன், குளிக்கவும் விவசாயத் தேவைகட்காகவும் பாவித்து வருகின்றமையால் அதன் தாக்கம் சந்ததி சந்ததியாகத் தொடரும் அபாயம் ஏற்படுகிறது.
இன்று உணவுச் செலவின் அளவிற்கு மருத்துவச் செலவும் அதிகரித்து வருகிறது. எனவே மக்களின் உயிர்வாழ்வுக்கு ஆதாரமான சுத்தமான நீரை எமது தேவைகளுக்காக மட்டுமன்றி எமது எதிர்காலச் சந்ததிக்காகவும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு மக்களிடம் மேலெழ வேண்டும். மக்கள் தமது தேவைகட்காகவும், நலன்கட்காகவும் ஒன்றுபட்டுப் போராடாமல் எதனையும் பெறமுடியாது. இதுவரை விலைபோகாதது என்று கருதி நாம் சுதந்திரமாக அள்ளிப் பருகிய நீர் இன்று விற்பனைப் பண்டமாகிப் பெருலாபமாக சிலரது கைகளில் குவிகிறது. இனியும் மக்களாகிய நாம் விழிப்படைய மாட்டோமேல், ‘பட்டுவேட்டிக் கனவில் இருந்தால், கட்டிய கோவணமும் களவுபோம்’ என்ற நிலைக்கே தள்ளப்படுவோம். சுய பொருளாதாரத்தையும் சுய உற்பத்தியையும் அழிப்பது என்பது தேசியத்தைச் சிதைப்பதற்கான இறுதிச் செயற்பாடாகும்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களும், தொடர்ந்து பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ள மக்களும், தூய நீருக்கான கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல அணிதிரளவேண்டும். மக்களை ஏமாற்றிக் கொம்பனியின் லாபத்திற்கும் பங்காளர்களின் பாதுகாப்பிற்கும் மக்களின் இயற்கை வளமான நன்னீரை நாசமாக்கும் சக்திகளையும் அவர்களது கபடத்தனங்களையும் அம்பலமாக்கி எதிர்த்து நிற்போம்.

முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் :
• பாதிக்கப்பட்ட நான்கு பிரதேச சபைகட்கு உட்பட்ட பிரதேசம் முழுவதற்கும் நன்னீர் விநியோகத்தை எத் தாமதமுமின்றித் தொடராக மேற்கொள்ளவேண்டும்.
• நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை இவ் அனர்த்தம் தொடர்பாக அதிகூடிய கவனமெடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்துக் கிணறுகளின் நீரையும் ஆய்வுக்குட்படுத்தி, அக் கிணறுகளின் உரிமையாளர்களுக்கு அவை பற்றித் தனித்தனி அறிவுறுத்தல்களை வழங்கப்படவேண்டும்.
• பாதிக்கப்பட்ட பிரதேச மக்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் உடலியல் பாதிப்புக்கான மருத்துவ நிவாரணத்தை உடனடியாக வழங்கவேண்டும்.
• இப் பாதிப்பிலிருந்து மண்ணையும், மக்களையும் காப்பதற்கான நிரந்தர செயற்திட்டம் உருவாக்கப்பட்டு, விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவெண்ணெயையும் பார உலோகங்களையும் முற்றாக அகற்றுவதற்கான செயற்திட்டமாக அது அமையவேண்டும். ஆபத்தான நச்சுப் பதார்த்தங்கள் கொண்ட எண்ணெய்க் கழிவுகள் புதைந்துள்ள இடங்களை அடையாளங் கண்டு அவற்றைப் பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
• பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கிணற்று நீரை வடிகட்ட தூண்டப்பட்ட காபன் நீர் வடிகட்டிகளை இலவசமாக வழங்க வேண்டும்.
• இப் பிரதேசத்தில் நீரியல் ஆய்வு மையம் ஒன்றினை நிறுவவேண்டும். தொடர்ச்சியான ஆய்வுகளைச் சரியான முறையில் விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
• இவ் இயற்கைப் பேரனர்த்தத்திற்குச் சரியான தீர்வு கிடைக்கும் வரையும், குற்றவாளிகளையும் அவர்கட்கு உடந்தையாகச் செயற்பட்டவர்களையும் இனங்கண்டு தண்டிக்கும் வரையும், ஏற்பட்ட பாதிப்புகட்கான சரியான நட்ட ஈட்டைப் பெறும்வரையும் மக்கள் அனைவரும் அணிதிரண்டு போராடவேண்டும்.