முன்னை நாள் அப்பாவிப் போராளிகள் மீது போர்க்குற்றம் சுமத்தும் பிரித்தானிய அரசு

warcrimerefusalபுலிகள் அமைப்பில் பிரச்சாரப்பிரிவிலும் புலனாய்வு அமைப்பிலும் செயற்பட்ட காரணத்தை முன்வைத்து போர்குற்றவாளி எனக் குற்றம் சுமத்தி ஈழத் தமிழர்களின் வதிவிடக் கோரிக்கை பிரித்தானிய அரசால் படுகிறது. புலிகள் அமைப்பு 2000 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதால் அக்காலப்பகுதியில் அந்த அமைப்பில் இணைந்து செயற்பட்ட ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இராணுவ ஒடுக்குமுறைகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நோக்கத்துடன் ஆயிரக்கணக்கானவர்கள் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டனர்.

அவர்களின் பெரும்பாலனவர்களின் நோக்கம் இராணுவ ஒடுக்குமுறையிலிருந்து தற்காத்துக்கொள்வதே தவிர போர்க்குற்றங்களில் ஈடுபடுவதல்ல.

1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் பிரச்சாரப் பிரிவில் செயற்பட்டதை ஒரு விண்ணப்பதாரி தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்காலப்பகுதியில் குழந்தைப் போராளிகளை இணைத்துக்க்கொள்ளும் போர்க்குற்ற நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட்டமையால் போர்க்குற்றத்தில் பங்காற்றினார் என விண்ணப்பதாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆக, ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளிவரும் போது புலிகள் அமைப்பில் தற்காத்துக்கொள்வதற்காகச் செயற்பட்ட அப்பாவிப் போராளிகள் பலர் தண்டிக்கப்படுவதற்கான முன்னுரையாகவே நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் கருதப்பட வேண்டும்.

ஐ.நாவிடமும் மேற்கு நாடுகளிடமும் நிபந்தனையின்றி தமிழ்ப் பேசும் மக்களின் தலைவிதியைக் கையளித்து போராளிகளையும் பொதுமக்களையும் காட்டிக்கொடுத்த தலைமைகள் போர்க்குற்றம் சுமத்தப்படும் அப்பாவிகளை எப்படிப் பாதுக்கக்கப் போகின்றன?

ஒரு புறத்தில் மேற்கு ஏகாதிபத்தியங்களின் நிதி வளத்தில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களும், தனி நபர்களும் குழந்தைப் போராளிகள் என்ற மேற்கின் கருத்தை சர்வதேச மயப்படுத்தி அப்பாவிப் போராளிகளைத் தண்டிப்பதற்கான வழிகளைத் திறந்துவிட்டனர்.

சோபாசக்தியின் கெரில்லா நாவலே குழந்தைப் போராளிகள் தொடர்பாக முதலில் ஆங்கிலத்தில் வெளிவந்த ஆவணம். குழைந்தைப் போராளிகள் என்பதற்கான மேற்கின் விதிமுறைகளை ஈழத்தைச் சார்ந்து பிரச்சாரப்படுத்திய செயற்பாட்டின் விளைபலன் அப்பாவிப் போராளிகளின் வாழ்க்கை என்பதை இப்போது காண்கிறோம்.

குழந்தைகள் கொத்துக்கொத்தாகக் கொலை செய்யப்படும் போது தம்மைத் தற்காத்துக்கொள்வதைக் கூட போர்க்குற்றம் எனக் கூறும் நயவஞ்சகத்தனமான மேற்கின் பிரச்சாரம் ஈழப் போராட்டத்தைப் பயன்படுத்தியும் மேற்கொள்ளப்பட்டது.

ஈழப் போராட்டத்தில் புலிகளின் தவறுகளை அவர்களின் அரசியல் வழிமுறையின் தவறுகள் என சுய விமர்சனத்திற்கு உட்படுத்தத் தவறிய தமிழ் தலைமைகள் புலிகளைப் புனிதமாகவும், பிரபாகரனைக் கடவுகளாகவும் மாற்றிப் பிழைப்பு நடத்தின. புலிகளின் அரசியலின் தவறான பக்கங்களை விமர்சிக்கவும் சரியான பக்கங்களை ஏற்றுக்கொள்ளவும் தவறிய துதிபாடிகள் புலிகள் மீதான தீர்ப்பை மேற்கு ஏகாதிபத்திய நாடுகளிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிக்கொண்டனர்.

தேசியத் தலைவர், தாயகக் கோட்பாடு, தமிழீழம், தேசியம், இனப்படுகொலை போன்ற சொல்லாடல்களை மந்திரம் போல உச்சரிக்கும் இத் தலைமைகள் இறுதியில் மேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்தி தமது உரிமைகளை வென்றெடுப்போம் என மக்களை ஏமாற்றினர்.

அண்மையில் கஜேந்திரகுமார் மற்றும் சுமந்திரன் ஆகியோரிடையே நடைபெற்ற விவாதம் ஒன்றின் கருப் பொருள் மேற்கு நாடுகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதே. சுமந்திரன் மேற்கு நாடுகளைக் கையாளத் தவறிவிட்டார் எனக் கஜேந்திரகுமார் குற்றம் சுமத்த சுமந்திரன் அதனை நிராகரிக்க விவாதம் கோமாளித்தனமாக நடைபெற்றது.

மேற்கு நாடுகளையெல்லாம் பயன்படுத்த முடியாது என்றும் மக்கள் சார்ந்த அரசியல் மூலோபாயம் தேவை என்று பலர் கோரியபோது தமிழ்த் தலைமைகள் அதனை நிராகரித்தன. இன்று வரை அதே தலைமைகளே இலங்கை அரசியலிலும் புலம்பெயர் அரசியலிலும் மக்களை ஏமாற்றுகின்றன.

புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் இவர்கள் போராளிகளையும் மக்களையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு தமது வயிற்றுப் பிழைப்பை நடத்துகின்றனர்.

ஐ.நாவில் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டதே தமது முயற்சியால் எனக் கூறும் புலம்பெயர் அமைப்புக்க்ள் புலிகள் மீது போர்க்குற்றம் சுமத்தி அப்பாவிப் போராளிகள் தண்டிக்கப்படும் போது என்ன செய்யப்போகிறார்கள்?

இதைவிட்டால் வேறு வழி கிடையாது என்று கூறி ஒரே தவறை மிண்டும் இழைக்கும் இவர்கள் புதிய வழிமுறைகள் குறித்தும் மக்கள் சார்ந்த அரசியல் குறித்தும் சிந்திப்பதில்லை. மக்கள் சார்ந்த போராட்ட அரசியல் தமது பிழைப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மட்டும் அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.