யாழ் மாநகர சபையில் பெண் ஊழியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட 28 லட்சம் ரூபா பெறுமதியான மோசடியைத் தொடர்ந்து ஊழல் விசாரணையைத் துரிதப்படுத்துமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் இலங்கை அரச அதிகாரத்தின் கீழுள்ள பல்வேறு உறுப்புக்களில் ஊழலும் லஞ்சமும் மலிந்துவருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். மாகாண சபையின் ஆரம்பத்திலேயே அதன் அமைச்சர்கள் பெரும் ஊழலில் ஈடுபடுவதையும், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊழலின் பங்குதாரர்களாக மாறி வருவதையும் நிர்வாக ஊழியர்களும் இளைஞர்களும் அறியாதவர்கள் அல்ல.
வன்னிப் படுகொலைகளின் பின்பு நிறுவனமயப்படுத்தப்பட்ட அழிவிற்கு உட்படுத்தப்பட்ட சுன்னாகம் சார்ந்த ஐந்து மைல் சுற்றுவட்டப் பகுதியில் ஆரம்பித்து யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதி அழிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுன்னாகம் நிலக்கீழ் நீரை நஞ்சாக்கிய நிறுவனம் இப்போது மீண்டும் சுன்னாகம் அனல் மின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்க அனுமதி கோரி வருகிறது.
அந்த அழிவு தொடர்பாக தமிழ்த் தேசியவாதிகள் மூச்சுகூட விட்டதில்லை. தமது பிழைப்பிற்குப் பயன்படக்கூடிய விக்னேஸ்வரனும், ஐங்கரநேசனும் ஊழலில் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதாக ஆதாரபூர்வமாக நிறுவப்ப்பட்ட பின்னரும் தமிழ்த் தேசியவாதிகள் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் விதேசிகள் தேசம் அழிவது குறித்து குறைந்தபட்ச நடவடிக்கைகளைக்கூட மேற்கொண்டதில்லை.
வட மாகாண சபையின் முதலமைச்சரின் ஆதரவுடன் அவரது சகாவான ஐங்கரநேசன் மேற்கொண்ட அந்த ஊழல் ஊடாகவே வட மாகாணசபையின் ஊழல் பேரரசின் கூறுகள் வளர்ந்து விருட்சமாக ஆரம்பித்துள்ளன.
ஊழலைத் தனது காலடியில் வைத்துக்கொண்டு அதற்கு எதிராகச் செயற்படக் கோரும் விக்னேஸ்வரனின் நடவடிக்கை கேலிக்கூத்தானது.