ஐ.நாவில் நடைபெறும் தில்லுமுல்லுகளின் பின்னணியில்…

unபோர்க்குற்ற விசாரணை கோரி புலம்பெயர் தமிழர்களின் திருவிழா ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் முன்னால் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கு இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் அரசியல்வாதிகள் குழுக்கள் முகாமிட்டுள்ளன. பீ.ரீ.எப், மக்களவை போன்ற போட்டித் தமிழ் நிறுவனங்கள், வேவ்வேறு பிளவுற்ற குழுக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி கோரி அதிகாரிகளைச் சந்தித்தும், ஊடகக் கூட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.

போட்டிக் குழுக்களிடையே நடைபெறும் அருவருப்பான கழுத்தறுப்பு நடவடிக்கைகள் சுவாரசியமான மற்றொரு பக்கம்.

Geneva protests 3இலங்கையில் இன்று நிலைமை சுமூகமாகிவிட்டது என்றும், அங்கு வாழும் தேசிய இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டதாகவும் சான்றிதழ் வழங்கி வருகிறது அமெரிக்க அரசு. இதே அமெரிக்க அரசு தான் வன்னியில் இனப்படுகொலை நடத்தி முடிப்பதற்கு பின்புலத்தில் செயற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்படையானவை. இன்றைய இலங்கை அரசை நடத்திவருவதும் அமெரிக்க ஏகபோக அரசே. மகிந்த ராஜபக்சவின் சரிவின் பின்னால் இலங்கையில் தனது முழுமையான அடியாள் அரசை உருவாக்கி அதனை வழி நடத்திவரும் அமெரிக்க அரசு இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டதாக பெருமைப்பட்டுக்கொள்கிறது.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து அமெரிக்க அதிகார மையத்தால் உருவாக்கப்பட்ட உலக அமைப்புக்களுள் ஐக்கிய நாடுகள் நிறுவனம் பிரதானமானது. மனித அழிவு ஆயுதங்கள் ஈராக்கில் காணப்படுகிறது என்ற தலையங்கத்தில் அந்த நாட்டை அமெரிக்கா உருக்குலைத்த போது ஐ.நா நிறுவனம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. அந்த நாட்டின் மீது படையெடுப்பதற்கு அமெரிக்க ஐ.நா சபையிடம் அனுமதி கூடப் பெற்றுக்கொள்ளாமல் சர்வதேசச் சட்டங்களை மீறியது. லிபியா மீது படையெடுத்து அந்த நாட்டை யுத்த பூமியாக மாற்றுவதற்கு ஐ.நா அமெரிக்க அணிக்குப் பச்சைக்கொடி காட்டியது.

லிபியா, உக்ரையின், சிரியா போன்றன எல்லாம் ஐ.நா சபையின் நயவஞ்சகத்தனத்தின் இன்றைய உதாரணங்கள். ஐ.நாவின் வரலாறு முழுவதும் அந்த அமைப்பு உலக சமாதானத்திற்கு ஊறு விழைவிப்பதாகவே நடந்துகொண்டிருக்கின்றது. அமெரிக்க அரசின் உப நிறுவனம் போன்றே நடந்துகொள்ளும் ஐ.நா சபையை அமெரிக்க தோற்றுவித்த வேளையிலேயே தனது போர் வெறிக்கு பச்சைகொடி காட்டுவதற்கான அமைப்பாகவே அத்திவாரமிட்டது.

இவ்வாறான ஐ.நா சபையிடம் போர்க்குற்ற விசாரணையையும், அதன் மூலகர்த்தாவான அமெரிக்காவிடம் போராட்டத்தையும் ஒப்படைத்துவிட்டு போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுவிட்டதாக மார்த்தட்டிக்கொள்ளும் புலம்பெயர் அமைப்புக்களிடையே புதிதாக முளைத்த காளான் அனைத்துலக மக்களவை.

இலங்கை அரசை அமெரிக்க நடத்துகிறது. அமெரிக்காவின் பின்னால் எமது புலம்பெயர் அமைப்புக்கள் அலைகின்றன. ஆக, இலங்கை அரசும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் இன்று ஓரணியில் திரண்டு மக்களை ஏமாற்றுகின்றன.

மக்க்கள் ஒரு புறத்தில் ஏமாற்ற நிலையில் பேணப்பட மறுபுறத்தில் தேசிய இனங்களின் தேசியத்தன்மை அழிக்கப்படுகின்றது. போர்க்குற்ற விசாரணை என்ற பூச்சாண்டி இன்னும் ஐந்து வருடங்களுக்கு காட்டப்படும் கால இடைவெளிக்குள் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்ப்பேசும் மக்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிடுவார்கள்.

நமது காலத்திலேயே தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிவிலிருந்து மீண்டெழுந்து நடத்திய பல்வேறு அமைப்புக்களைக் காண்கிறோம். எம்மைப் பொறுத்தவரை இப் புலம்பெயர் அமைப்புக்கள் அவ்வாறான மீட்சியைத் தடுப்பதற்கான தடுப்பாக அமெரிக்கா போன்ற பயங்கரவாத அரசுகளால் பயன்படுத்தப்படுகின்றன.

ஐ.நாவையும் அமெரிக்காவையும் ஏனைய மக்களை ஒடுக்கும் அனைத்து நாடுகளையும் வால் பிடித்துக் குறுக்கு வழிகளில் விடுதலை பெற்றுத் தருகிறோம் என மக்களை ஏமாற்றும் அனைத்துத் தரப்பும் இலங்கைப் பேரினவாத பாசிச அரசின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணை செல்பவர்க்ளே.

இதற்கிடையே, ஐரோப்பா முழுவதிலிருந்தும் ஐ.நா முன்னறலில் கூடும் அப்பாவிப் புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்கும் ஒரே முழக்கம் ‘எங்கள் தலைவன் பிரபாகரன், எமது நாடு தமிழீழம்’ என்பதாகும். இவர்களை வழி நடத்தும் வியாபாரிகள் இந்த மக்கள் எந்த வகையிலும் எழுச்சி கொள்ளாதவாறு பார்த்துக்கொள்கின்றனர்.

PASUMAIஅமெரிக்காவைப் பிடித்து தமிழீழம் பிடித்துத்தருவதாகக் கூறிவரும் மக்களவை உட்பட எந்த அமைப்புக்களுக்கும் ஐ.நாவின் உள்ளே நுளைவதற்குக் கூட அனுமதி கிடையாது என்பது பலருக்கும் மறைக்கப்படும் உண்மை. அங்கு நுளௌவதற்கு தென்னிந்தியாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தன்னார்வ நிறுவனமான பசுமைத் தாயகம் என்ற அமைப்பிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பே புலம்பெயர் தமிழ் வியாபாரிகளுக்கு அனுமதி அட்டை வழங்கிவருகிறது. புதிதாக முளைக்கும் மக்களவை போன்ற அமைப்புக்களிடமிருந்து ஒவ்வொரு இருக்கைக்கும் பணம் பெற்றுக்கொண்டே பசுமைத் தாயகம் அனுமதி அட்டைகளை வழங்கி வருகின்றது.

தன்னார்வ நிறுவனங்கள் தொடர்பான இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் வெளி நாட்டு நிதியில் இயங்கும் அமைப்புக்களில் ஒன்றாக பசுமைத் தாயகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 75901175 என்ற இலக்கத்தின் கீழ் பசுமைத் தாயகம் அன்னிய நிதியில் இயங்கும் நிறுவனமாக இந்திய அரச ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பசுமைத் தாயகம் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் தன்னார்வ நிறுவன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உலக சுகாதார நிறுவனத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மனித நேயமுள்ளவர்களும், ஜனநாயக வாதிகளும், மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் அஞ்சும் போராட்ட அமைப்புக்களும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து அன்னிய நிதியில் இயங்கும் அமைப்புக்களை அழிக்கும் நிறுவனங்களாகவே காண்கின்றனர். ஈழப் போராட்ட அமைப்புக்களோ இவ்வாறான அமைப்புக்களின் வால்களாக தொங்குகின்றன. இதனால் தான் ஈழப் போராட்டத்தை ஏகாதிபத்திய நாடுகளால் தூண்டிவிடப்பட்ட நாசகார நடவடிக்க்கையாக உலக மக்களில் பெரும்பாலனவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு திட்டமிட்டு அன்னியப்படுத்தப்பட்ட போராட்டம் சீமான், வைகோ, ராமதாஸ் போன்ற இனவாதிகளதும் சாதி வெறியர்களதும் பிடிக்குள் முடங்கிப்போனது.

உலகில் மக்கள் போராடங்களை சிதைத்து அதிகாரவர்க்கத்தின் அரசியலை நிறுவும் நோக்கத்துடன் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஏகாதிபத்தியக் கூறுகளே தன்னார்வ நிறுவனங்கள். .
அந்தப் பட்டியலில் பசுமைத் தாயகம் முதலாவது இடத்திலுள்ளது. ராமதாசின் மகனும் இந்திய காங்கிரஸ் அரசில் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியவருமான அன்புமணி ராமதாஸ் இந்த நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தார். ஈழப் போராட்டத்தை அழித்துச் சிதைத்ததில் அன்னிய நிதியில் இயங்கிய தன்னார்வ நிறுவனங்களுக்கும் பெரும் பங்குண்டு.

வன்னி இனப்படுகொலை முடிந்த பின்னரான காலப்பகுதி முழுவதும் என்.ஜீ.ஓ களிம் ஆதிக்கத்திற்கான காலப்பகுதியாகும்.

கடந்த 7 வருடங்களில் ஈழப் போராட்டம் உலக மக்கள் மத்தியிலிருந்தும், ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்தும் திட்டமிட்டு அன்னியப்படுத்தப்பட்டு இப்போது சேடமிழுத்துக்கொண்டிருக்கிறது.

இனிமேல் இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு முழுத் தமிழினமும் அழிக்கப்பட்டாலும், புலம் பெயர்கள் கைதட்டி விசிலடிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை. தாம் இழைத்த தவறுகளையும் தமிழ்ப் பேசும் மக்களை ஏகாதிபத்தியங்களின் அடிமைகளாக மாற்றி போராட்டத்தை அழித்துச் சிதைத்தமைக்காகவும் புலம்பெயர் அமைப்புக்கள் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.

spyஏகாதிபத்தியங்களின் ஐந்தாம் படையாகச் செயற்பட்டு அழிக்கப்பட்ட போராட்டத்தை மீட்டெடுக்க வேண்டுமானால் புதிய அரசியல் மக்கள் மத்தியில் முன்வைக்கபட வேண்டும்., ஈழப் போராட்டம் காட்டிக்கொடுக்கும் ஏகாதிபத்திய அடியாட்படைகளால் முன்னெடுக்கப்படும் நாசகார நடவடிக்கை அல்ல என உலக மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். தவறினால், புலம்பெயர் அமைப்புக்களும் இலங்கை அரசும், அமெரிக்க இந்திய அரசுகளும் கூட்டிணைந்து எஞ்சியிருக்கும் சுய நிர்ணைய உரிமைக்கான நியாயத்தின் எச்ச சொச்சங்களையும் அழிக்கும்.

One thought on “ஐ.நாவில் நடைபெறும் தில்லுமுல்லுகளின் பின்னணியில்…”

  1. TRUE. ONLY INDIAN THAT TOO A TAMILIAN FOUGHT INSIDE THE UNO FOR THE TAMILS IN SRI LANKA.OTHERS ARE EITHER CHEATING ALL OR THEY THEMSELVES ARE THE WAR CRIMINALS NOT CAUGHT SO FAR. BUT HISTORY WOULD REVEAL WHAT THEY ARE THE WORLD LEADERS OF FALSE STATE MENTS .A TAMILIAN IS AN HIMALAYAN CORRUPT AND ALSO THE WORLD LEADER OF LIARS.

Comments are closed.