கஜேந்திரகுமாரின் தோல்வி : புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்கு மக்களின் ஆணை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
 ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி : 1 நாடாளுமன்ற உறுப்பினர்
 ஐக்கிய தேசியக் கட்சி : 1 நாடாளுமன்ற உறுப்பினர்
 மொத்த வாக்காளர்கள் : 529, 239
 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் : 325, 805
 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : 25496
 ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் : 300, 309

jaffna_votes

வாக்குக்களின் அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதன் வேட்பாளர்களும் இணைந்து பெற்ற வாக்குக்களின் தொகை பதின் ஐந்தாயிரத்து இருபத்து இரண்டு மட்டுமே. அதிலும் ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை விடக் குறைவான வாக்குகளையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற்றுள்ளது.

வாக்களித்தவர்களில் பெருந்தொகையான முன்னை நாள் போராளிகள், வன்னியிலிருந்த புலிகளின் ஆதரவாளர்கள் போன்ற பலர் உள்ளடங்குவர். புலிகளின் தொடர்ச்சி எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட கஜேந்திரகுமர் பொன்னம்பலமும் அவரது கட்சியான அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும் மக்களின் கொல்லைப் புறத்தைக்கூட எட்டிப்பார்க்கவில்லை,

மாற்றத்திற்கான குரல் என்று கூறி பல மாதங்களுக்கு முன்பிருந்தே புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் அரசியல், இனக்கொலையாளி மகிந்தவின் கட்சியை விடக் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

மக்கள் மாற்றத்திற்கான குரலை விரும்புகிறார்களா இல்லையா என்பதைப் பரிசோதிப்பதற்கான களமாக இத் தேர்தல் அமையவில்லை, மாறாக மாற்றம் ஏற்படுத்தப் போவதாகக் கூறிய போலிகளை வீட்டுக்கு அனுப்புவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

புலிகளின் அரசியல் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதை விரும்பாத புலம்பெயர் பிழைப்புவாத வியாபாரிகள் கஜேந்திரகுமாரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காகப் பணம் சேர்க்க ஆரம்பித்து பல மாதங்கள் கடந்துவிட்டன. இறுதிப் போருக்காகப் பணம் சேர்த்த அதே குழுக்கள் அப்பணத்தை இன்னும் மக்கள் மயப்படுத்தவில்லை.

அவை தனியுடமையாக்கப்படுள்ளன. ஈழ மக்களின் அவலங்களை முன்வைத்துச் சொத்துச் சேர்த்துக்கொண்ட அதே குழுக்கள் இப்போது புலிகளின் பெயரால் மீண்டும் சொத்துச் சேர்க்க ஆரம்பித்திருந்தன. கஜேந்திரகுமார் சிறிய வெற்றி பெற்றிருந்தால் கூட இவர்களின் சூறையாடல் தொடர்ந்திருக்கும்.

புலம் பெயர் மக்கள் மத்தியிலுள்ள சிறிய குழுக்களே இவ்வாறான சூறையாடல்களில் ஈடுபடுகின்றன.

ஈழ மக்களின் நலனுக்காக நடைபெற்ற எந்தப் போராட்டத்திலும் பங்குபெறாத இக் குழுக்கள் பணம் சேர்ப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டவை.

இனிமேல் தங்களது பெயரால் பணம் சேர்க்க்க வேண்டாம் என இக் குழுக்களுக்கு மக்கள் இட்ட ஆணையே கஜேந்திரகுமாரின் படுதோல்வி.

One thought on “கஜேந்திரகுமாரின் தோல்வி : புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்கு மக்களின் ஆணை!”

  1. தேர்தல் படிப்பினைகள்: குருபரன் குமாரவடிவேலின் facebook இருந்து

    1. தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளடக்கம் முக்கியமில்லை அதன் வடிவம் (form) (அதை எந்தக் கட்சி பேசுகிறது என்பது) தான் முக்கியம் என்பதை இத்தேர்தல் உணர்த்தியிருக்கிறது. (உதாரணமாக அதிகாரப் பகிர்வு எதிர் தேச அங்கீகார அணுகுமுறை என்பது இத்தேர்தலின் பேசு பொருளாக இருக்கவில்லை). இது கவலை தருவது.

    2. தமிழ் தேசிய அரசியல் செய்பவர்களில் யாரை நம்புவது (trust worthy) என்பது யார் அந்த வடிவத்தை (கட்சியை) உருவாக்கினார்கள் என்பதை பொறுத்தது என்று மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்…. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் யாரை நம்புவது என்பது தான் தமிழ் மக்களுக்கு பெரிய பிரச்சனை. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை நம்புவோம் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளால் 2004 தேர்தலில் தனது நேரடிப் பிரதிநிதிகளாக முன்னிறுத்தப்பட்ட மூவரும் அந்தக் கட்சியில் இல்லை என்பது இந்தத் தெரிவில் (2010 இலும் 2015 இலும்) பாதிப்பை ஏற்படுத்தவில்லை. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த போது அரசாங்கத்தோடு 2010 வரை செயற்பட்டுக் கொண்டிருத்த கட்சியின் தலைவர் அமோகமாக மக்களின் விருப்பு வாக்குகளை இத்தேர்தலில் பெற்றுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கூட்டமைப்பு என்ற அடையாளம் யாரையும் புனிதராக்கும். தமிழ் தேசிய அரசியலில் ஆணை பெறப்பட்டு அது தமிழ் தேசிய அரசியல் நீக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என்பது தான் சோகம். தமிழ் தேசிய அரசியல் நீக்கத்திற்காக பாடுபட்ட, கூட்டமைப்பிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக இருந்த பலர் கூட்டமைப்பின் குறிப்பிட்ட ஒருவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய வினோதத்தையும் இந்த தேர்தலில் கண்டோம்.

    3. உள்ளடக்கம் சார்ந்த அரசியல் விவாதமாக இத்தேர்தல் களம் மாறாமைக்கு காரணம்: அ) மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு இல்லை. (இதில் விடுதலைப் புலிகளுக்கும் பங்குண்டு). ஆ) கூட்டமைப்பு அல்லாத தமிழ் தேசிய கட்சி மீது (தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீது) அவர்களின் நம்பத்தகு தன்மை தொடர்பில் தமது கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மூலம் நடத்தப்பட்ட பெருமெடுப்பிலான பொய்ப் பிரச்சாரம். இதை சமூக வலைத்தளம் மூலமாக எதிர் கொண்டமை போதாது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துவிட்டன. இ) தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் இந்த பெரும் பலம் மிக்க பிரச்சாரத்திற்கப்பால் மக்கள் மத்தியில் சென்று சேரும் அளவிற்கு வலிமை இல்லாமை ஈ) எவ்வளவு தான் விளக்கம் கொடுத்தாலும் திருப்பி திருப்பி புதுக் கதைகளை சரியான கால இடைவெளி விட்டு வெளிக் கொணர்ந்த கூட்டமைப்பு தேர்தல் முகாமையாளர்களின் சாமர்த்தியம்.

    4. தமிழ் தேசிய அரசியல் மேலெழுந்தவாரியாக சிங்கள பௌத்த அரசியலின் வலிமையால் இன்னும் கொஞ்ச காலம் நிண்டு பிடிக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் இது தான் ‘புதுத் தமிழ் தேசிய அரசியல்’ என்ற வியாக்கியானத்தில் தமிழ் தேசிய அரசியலை அதன் அடிப்படைகளில் இருந்து மீள்விவரணம் கொடுக்க முயற்சி நடக்கும். எமது பிரதிநிதிகளை பொறுப்புக் கூற வைப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால் முயற்சியை விட முடியாது. தமிழ் தேசிய அரசியலின் சமூகக் கட்டமைப்புக்களை பலப்படுத்துவது, மக்களை அரசியல்மயப்படுத்துவது தான் இன்று நாம் செய்ய வேண்டியவை என்பதை இந்தத் தேர்தல்கள் உணர்த்துகின்றன.

Comments are closed.