பரபரப்பு ஊடக வியாபாரிகளும் ஆய்வாளர் கோமாளிகளும் : வியாசன்

mediacownsவன்னி இனப்படுகொலை நிறைவடைந்த நாளிலிருந்து இன்று வரை ஈழப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுவிட்டது என மக்களை ஏமாற்றிய கோமாளிகள் இன்று தம்மைச் சுதாகரித்துக்கொள்ள முற்படுகின்றனர். ‘சர்வதேசம்’ என்ற அடைமொழிக்குள் உலகம் முழுவதும் எப்படி அழிக்கப்பட்டு நிர்மூலமாக்கபடுகிறது போன்ற அடிப்படைகளை முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்தே பலர் கூறிவந்த போதும் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆய்வு என்ற பெயரில் அழிவுகளுக்கு முன்னுரை வழங்கிய தமிழ் ஆய்வாளர் கோமாளிகள் இப்போது மைத்திரி – ரனில் அரசு வந்துவிட்டதால் தமது எஜமானர்களான மேற்கு ஏகபோக நாடுகள் தமது கடைக்கண் பார்வையை தம்மீது திருப்பவில்லை என அங்காலய்த்துக்கொள்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை விடுதலை என்பது மக்கள் சார்ந்த எழுச்சி அல்ல, மாறாக யாரையாவது எங்காவது வால்பிடித்து குறுக்கு வழிகளில் சம்பாதித்துகொள்ளும் ஒரு வகையான வஸ்து. தாம் இதுவரை மக்களிடம் கூறிவந்த பொய்கள் புஸ்வாணமாகிவிட இப்போது புதிய பொய்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் தாம் நம்பியிருந்த அமெரிக்காவின் யுத்தக்கப்பல் இலங்கை சென்று அந்த நாட்டின் கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டுத் திரும்பியிருக்கிறது. பயிற்சி முடிவில் உரை நிகழ்த்திய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், இலங்கை ‘சர்வதேசத்திற்கு’ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதே இதற்கான காரணம் எனத் தெரிவித்துள்ளார். ஆக, லட்சம் லட்சமாகப் பணம் செலவு செய்து புலம்பெயர் பினாமிகள் ஜெனீவாவில் நடத்திய கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள். யாழ்ப்பாணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியல் வாதிகளின் வெற்றுப் பேச்சுகளும், புலம்பெயர் அமைப்புக்கள் வழங்கிய போலி நம்பிக்கைகளும் பலனற்றுப் போயின.

இலங்கையில் அச்சம் கலந்த நிச்சயமற்ற சூழலில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றொரு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படலாம். மீண்டும் சுற்றிவழைத்து கைதுசெய்யும் நடவடிக்கை ஆரம்பமாகலாம், இலங்கை அரசிற்கு எதிரானவர்கள் தீவிரவாதிகள் என அழிக்கப்படலாம். இவ்வாறான அச்சம் கலந்த நாளாந்த வாழ்க்கைக்கு மக்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசைப் பொறுத்தவரை போராளிகள் புனர்வாழ்வு என்ற அடிப்படையில் ‘சமூகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்’. இனப்படுகொலை நடத்திய கிரிமினல் இராணுவம் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் நிலைகொண்டிருக்கிறது. இன்று புனர்வாழ்விற்கும் தண்டனைக்கும் உட்படுத்தப்பட வேண்டியவர்கள் இராணுவத்தினரே.
இந்த அடிப்படை உண்மையைக் கூட தமிழ் சிங்கள் மற்றும் முஸ்லீம் மக்களிடம் கூறுவதற்குப் பதிலாக உணர்ச்சிவசப்படுத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர் கோமாளிகளும் ஊடகங்களும் ஆபத்தானவை.

இதனை எதிர்கொள்வது எவ்வாறு?

இதற்கான மக்கள் சார்ந்த வழிமுறை என்பது அன்னிய நாடுகளை வால்பிடிப்பதல்ல.

வாக்குப் பொறுக்கும் கட்சிகளை நிராகரித்து மக்களை அணிதிரட்டும் அரசியல் பொறிமுறையை அறிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு அரசியலுக்கும் முன் தொடர்ச்சியான வரலாறு உண்டு.

இன்று ஊடடங்கள் என்ற பெயரில் இணையங்களில் வெளியாகும் பரபரப்புச் செய்திகள் வெறுமனே நுகர்வை நோக்கமாகக் கொண்டவை. செய்திகளை வைத்து வர்த்தகமாக்கிக் கொள்வதே அவர்களின் நோக்கம். வடக்கில் எங்காவது ஒருவரை மரணித்துவிட்டால், அது இராணுவம் அடித்த ஊசியினால் நடந்தது என்று உணர்ச்சிவசப்படுத்த முளைத்திருக்கும் பரபரப்புக் கூட்டங்கள் தெரிந்தோ தெரியாமலோ இராணுவத்தை நியாயப்படுத்துகின்றனர். இலங்கையில் அச்சம் தரும் சூழலில் வாழும் மக்களதும். போராளிகளதும் அடிப்படைப் பாதுகாப்பைக்கூடக் கருத்தில்கொள்ளாது இவர்கள் பரப்பும் வதந்திகளின் அடிப்படை நோக்கம் புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி, அந்த உணர்ச்சியில் வர்த்ககம் செய்வதே என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

உலகின் மிகக் கொடூரமான இராணுவங்களில் இலங்கை இராணுவத்திற்குப் பிரதான இடமுண்டு. இலங்கை இராணுவம் மிகப்பெரும் மனிதப் படுகொலையை நடத்திவிட்டு யுத்தக் கிரிமினல்களுடன் மக்கள் குடியிருப்புகளில் நிலைகொண்டுள்ள அபாயத்தை மூடிமறைக்கும் பணியை இப் பரபப்பு வியாபாரிகள் செய்து முடிக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டின் பின்ன ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் அரசியல் தலைமை வெற்றிடமாகவே காணப்படுகின்றது. அதனை வாக்குப் பொறுக்கும் கட்சிகள் தற்காலிகமாகப் பிரதியிட்டுள்ளன. ஆய்வாளர்களதும், ஊடகங்களதும் நுகர்வு அரசியலுக்கு அப்பால் புதிய மக்கள் சார்ந்த அரசியல் முன்வைக்கப்படும் வரை அழிவுகள் மட்டுப்படுத்தப்பட மாட்டாது.

2 thoughts on “பரபரப்பு ஊடக வியாபாரிகளும் ஆய்வாளர் கோமாளிகளும் : வியாசன்”

  1. பத்திாிகையிஸம் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவே இல்லாத பரதேசிகளெல்லாம் இணையத்தளங்களை உருவாக்கி சாதாரண செய்திகளைக்கூட திாிவுபடுத்தி பரபரப்பு நிறைந்ததாக எழுதி பாா்ப்பவா்களை கிளிக் செய்யவைத்து பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக வாழ்கின்றாா்கள். அதிஸ்டவசமாக பிரபல்யமான லங்காசிறி போன்ற இணையத்தளங்களும் அதனுன் தம்மை இணைத்துள்ள அத்தனை தளங்களும் இதில் அடக்கம்.

    நமது மக்களோ இவா்கள் எழுதுவதை அப்படியே நம்பிக்கொண்டு இன்னும் இன்னும் அப்பாவிகளாக சுய சிந்தனையோ எதையும் அலசிப்பாா்க்கும் திறனோ அற்றவா்களாக வாழ்வதால் இந்த வியாபாாிகளுக்கு நல்ல யோகம்.

  2. நிங்கள் சொல்வது மிகச் சரி, உசுப்பேத்தி உசுப்பேத்தி அந்த உசுப்பிலேயே உயிர்வாழப் பழகிக்கொண்டவர்கள் பிணங்களை வைத்து வியாபாரம் நடத்துவதற்கு ஈடானவர்கள். அவர்கள் கூறுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. முடிந்தவரை உசுப்பேத்திவிட்டு அப்படியே கைவிட்டு விடுவார்கள். கேட்டால் தமிழன்டா என்கிறார்கள்.

Comments are closed.