இனவாத பாசிஸ்டுக்கள் : ஆறு ஒற்றுமைகள்

fascistஐரோப்பா அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளில் நிறவாத பாசிசக் கட்சிகளின் முன்னெப்போதுமில்லாதவாறு மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன. தமது இனம் சார்ந்த அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைக்கும் இக்கட்சிகளும் அவற்றின் தலைவர்களுக்கு எதிரிகள் அந்த நாடுகளில் வாழும் வெளிநாட்டுக் குடியேறிகளே. ஐரோப்பிய நாடுகளிலும், கனடா அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரந்து வாழும் ஈழத் தமிழர்களும் இவர்களின் தாக்குதல் வட்டத்தினுள்ளேயே வாழ்கின்றனர்.

இவ்வாறான பாசிசக் கட்சிகளின் கருத்துக்கள் மக்களின் ஒரு பிரிவினரை ஆட்கொண்டிருப்பதற்கு பொருளாதார நெருக்கடி பிரதான காரணமாகின்றது. ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டவர்கள் முழுமையான தொழிலாளர் உரிமையுடன் வேலை பெற்றுக்கொள்வதற்கு இக் கட்சிகள் பேசும் இனத் தூய்மைவாதம் பெரும் தடையாக மாறிவருகின்றது.

ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமன்றி இவ்வாறான இனத் தூய்மைவாதக் கருத்துக்கள் எமது கொல்லைப்புறத்திலேயே முன்வைக்கப்படுகின்றன. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் இலாப வெறிக்கு எதிராக மக்கள் எழுச்சி கொள்வதைத் தடுக்க உதவும் இச் சமூகவிரோதக் கருத்துக்களை முன்வைப்பவர்கள் இன்று முதன்மைப்படுத்தப்படுகின்றனர். தென்னிந்தியாவில் இனத் தூய்மைவாதம் பேசும் சீமான் போன்ற சமூகவிரோதிகளும் ஐரோப்பிய இன அடிப்படைவாதப் பாசிஸ்ட்டுக்களும் ஒரே நேர்கோட்டிலேயே பயணிக்கின்றனர்.

இன்றைய இனத் தூயமைவாதம் பேசும் பாசிஸ்டுக்களில் மரீன் லூபென் (பிரான்ஸ்), கிரீட் வில்டேர்ஸ்(நெதர்லாண்ட்ஸ்), நோபெர்ட் ஹொபர்(ஒஸ்ரியா), டொனால்ஸ் ரம்ப்(ஐக்கிய அமெரிக்கா). மத்தேயோ சப்வானி(இத்தாலி), சீமான்(தமிழ்நாடு), நைஜெல் பராஜ்(பிரித்தானியா) போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்களுள் சீமான் சற்று கோமாளித்தனமான ஒருவர் என்றாலும் ஏனைய அடிப்படைவாதிகளின் அதே கோட்பாடுகளையே தமிழ் நாட்டில் முன்வைக்கிறார்.

இவர்கள் அனைவரிடையும் உள்ள சில ஒற்றுமைகள்:

1. தாம் சார்ந்த இனமே நாட்டை ஆளவேண்டும், ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றும் ஏனைவர்கள் மீது வெறுப்பையும் உமிழ்வார்கள்.

2. தமது பகுதிகளில் வாழும் அப்பாவி வெளி நாட்டுத் தொழிலாளர்கள் மீதான உளவியல் யுத்தம் ஒன்றையே மேற்கொள்வார்கள்.

3. தமது இனத்திற்கு நீண்ட வரலாறு உள்ளதாகவும் அது ஏனைய இனக்குழுக்களைவிட மேலானதாகவும் கூறிக்கொள்வார்கள்.

4. தமது பழம்பெரும் அடையாளங்களை மீளமைத்து அவற்றைப் புனிதப்படுத்துவார்கள்

5. மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் போன்ற ஏனைய இனக்குழுக்களால் அழிக்கபடுவதாக மக்கள் மத்தியில் அச்சமூட்டுவார்கள்.

6. அவ்வப்போது பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிராகவும், தமது இனம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் தோற்றமளிக்கும் கருத்துக்களை முன்வைப்பார்கள்.

ஏனைய இனவாத பாசிஸ்டுக்களுக்கும் சீமானிற்கும் ஒரு வேறுபாடு உண்டு. சீமான் ஈழத் தமிழர்களின் கண்ணீரை தனது வாக்காகவும் பணமாகவும் மாற்றிக்கொள்ள முனைகின்ற ஒருவர்.

தாம் வாழும் நாடுகளிலேயே இனவாத பாசிஸ்ட் கட்சிகளின் வெளிநாட்டவர்கள் மீதான உளவியல் தாக்கத்தை எதிர்கொள்ளும் ஈழத் தமிழர்கள் பலர் சீமான் போன்றவர்கள் ஆதரிப்பது இங்கு வேடிக்கையானது.