இலங்கையில் சிவசேனாவும் இந்திய பார்ப்பனீய் ஊடகத்தின் கேலிச்சித்திரமும்

dainikஇலங்கையில் சிவ சேனா என்ற இந்து பாசிச அமைப்பை சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகிய இரண்டு பிழைப்புவாதிகள் இணைந்து உருவாக்கிய பின்னர், இந்திய இந்து பார்ப்பன ஊடகம் ஒன்று கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கிறீஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பௌத்தர்களும் இணைந்து இந்துக்களைத் தாக்குவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ள இச் சித்திரத்துடன், இலங்கையில் இந்துக் கோவில்கள் இடிக்கப்படுவதாக ஒரு கட்டுரையும் வெளியாகியுள்ளது. இலங்கை சிவசேனா அமைப்பின் அமைப்பாளர் சச்சிதானந்தம் இக் கட்டுரையையும். சித்திரங்களையும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பாலியல் சாமியார் பிரேமானந்தாவின் மேட்டுக்குடி சீடர்களில் ஒருவரான சீ.வி.விக்னேஸ்வரனுடன் ஆரம்பித்த இந்து பாசிச இந்தியத் தலையீடு, சிவசேனாவுடன் புதிதாக நிறுவனமயப்பட ஆரம்பித்துள்ளது என்பதுடன் இந்திய அரசின் ஆக்கிரமிப்பின் புதியவடிமாகவும் இது கருதப்பட வேண்டும்.

தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அழிப்பதற்கு இந்திய அரசு எண்பதுகளிலிருந்து செயற்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை போராட்ட இயக்கங்களைக் கையாண்ட இந்திய அரசு இன்று பல்வேறு வழிகளில் தனது ஆக்கிரமிப்பை உட்செலுத்தி வருகிறது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் தலையீடின்றி எந்த நிகழ்வும் நடைபெறுவதில்லை. அனைத்துச் செயற்பாடுகளிலும் இந்திய அரசு தனது துணைத் தூதரகத்திற்கு ஊடாக நேரடியாகச் செயற்படுகிறது.

தலித் அமைப்புக்கள் என்ற சாதிச் சங்கங்கள் ஊடாக சமூகத்தை அதன் ஒரு தளத்தில் பிளவுபடுத்தும் சீர்குலைவு வாதிகளின் மறுபக்கத்தில் சிவசேனாவின் தோற்றம் வட கிழக்கை மற்றொரு மாபெரும் அழிவிற்கு அழைத்துச் செல்வதற்கான ஆரம்பமாகும்.

சிவசேனா போன்ற அமைப்புக்கள் உலக மயமாதலின் பின்னரே இந்தியாவில் தீவிரமாக வளர்ச்சி பெற்றன. சமூகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் தீவிரமாக ஒடுக்குமுறைக்கு உள்ளான வர்க்கங்களின் எதிர்ப்புணர்வை பிளவுபடுத்தி புதிய சமூக சமரசத்தை அதிகாரவர்க்கம் சார்ந்து உருவாக்கவே சிவசேனா தோற்றம் பெற்றது. அதே போன்ற தயவு தாட்சண்யமற்ற சுரண்டல் சூழலில் இலங்கையில் உருவான சிவசேனா முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.