உடல்களை வைத்துக் ‘கொண்டாடப்பட்ட’ செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள்!

sencholai3இலங்கைப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறை கலாச்சார, பொருளாதார, மொழி ஒடுக்குமுறையாகவும் நிலப்பறிப்பாகவும் இன்றும் தொடர்கிறது. முன்னைப் போலன்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி நிகழ்ச்சி நிரலைப் பூர்த்திசெய்யும் நோக்கில் அதன் துணையுடன் சிறுபான்மைத் தேசிய இனங்கள் சிதைக்கப்படுகின்றன. வடக்கும் கிழக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்கள் என்பதற்கான அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் சூறையாடலால் பல் வேறு பிரதேசங்கள் குறிவைத்து நாசப்படுத்தப்படுகின்றன.

இவை போன்ற அனைத்து அழிவுகளுக்கு எதிராக இலங்கை அரச பாசிசத்தால் பாதிக்கப்படும் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும், மக்களையும் அணிதிரட்டி திட்டமிட்ட போராட்டங்களை நடத்துவதற்கு இலங்கையில் அரசியல் தலைமைகள் இல்லை. அதற்கான வெற்றிடத்தை வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்கும் குழுக்கள் நிரப்பிக்கொள்கின்றன.

தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்ள மக்களை உணர்சிவசப்படுத்துவது எப்படி என்பதைத் திட்டமிடுவதிலேயே அரசியல் கட்சிகள் தமது காலத்தை விரையமாக்கிக்கொள்கின்றன.

ஒரு தேசம் இரண்டு நாடு என எழுமாறான முழக்கத்தை முன்வைத்துக் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப் பொறுக்கும் பந்தயத்தில் தோற்றுப்போன தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று செஞ்சோலைப் படுகொலை நினைவு நாளை நடத்தியிருக்கிறது.

எப்போதும் மீண்டும் நடக்கலாம் என்று இன்றும் மக்கள் அச்சம் கொள்ளும் இராணுவ ஒடுக்குமுறையின் கோரமான குறியீடாகக் கருதப்படும் செஞ்சோலைப் படுகொலை நினைவு நாளை மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ‘கொண்டாடியிருக்கிறது’.

எழுச்சிகுப் பதில் உணர்ர்சிப் பரவசத்தை அங்கு காணக்கூடியதாகவிருந்தது.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவிகளை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பொது நூலகத்திற்கு அருகில் நடைபெற்ற போது 64 உடல்கள் போன்று வெள்ளை நிறத் துணிகளால் சுற்றப்பட்ட உருவங்களை வைத்து உருவேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தமது குடும்ப உறுப்பினர்கள் மரணித்திருந்தால் இந்த வாக்குப் பொறுக்கி அரசியல் வாதிகள் அவர்களின் உடல்களை நினைவுறுத்தும் வகையில் சடங்குகளை நடத்துவார்களா?

sencholai2தமிழ்த் தேசியமும் உணர்ச்சி முழக்கங்களும் தீர்மானங்களும் மட்டுமே இலங்கை அரசிற்கு எதிரானது என நம்பவைக்கப்பட்ட அவலம் மிக்க சூழலில் யாழ்பாணத்தின் ஒரு பகுதியையே அழிப்பதற்குத் துணை சென்ற விவசாய அமைச்சரான ஐங்கரநேசன் என்ற நபர் இந்தக் கொண்டாட்டத்தில் முக்கிய அதிதியாகக் கலந்துகொண்டார்.

இன்றும் எரியும் பிரச்சனையாகத் தொடரும் சுன்னாகம் நிலக்கீழ் நீரை மாசுபடுத்திய அழிவில் ஈடுபட்ட நிறுவனத்தைக் காப்பாற்றிய ஐங்கரநேசன் போன்றவர்களைக் காப்பாற்ற செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளையும் கூடத் துணைக்கழைக்க வேண்டுமா?

இன்று இலங்கை அரசின் ஊது குழலாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்திருப்பதற்கு இக் கட்சிகள் துணை செல்கின்றன.

இவை அனைத்தையும் மீறி புதிய மக்கள் சார்ந்த அரசியல் தலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

3 thoughts on “உடல்களை வைத்துக் ‘கொண்டாடப்பட்ட’ செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள்!”

 1. (மீண்டும் செஞ்சோலையாக மாறிய பயிற்சி முகாம்.)
  புலிகளின் சிவில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக விளங்கிய பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் மகிளீர் அரசியல் துறை பொறுப்பாளரின் ஏற்பாட்டில் அவருடைய உதவியாளர்களால் கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட இம்மாணவிகள் இப்போது கொத்துக்கொத்தாக மடிந்து கிடந்தனர். பலர் கண்களுக்கு எட்டிய பக்கங்களில் எல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாக பெரும் காயமடைந்து ஈனக்குரலில் முனங்கிக்கொண்டிருந்தார்கள். ஏனையோர் மீண்டும் ஒரு தடவை விமானத்தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சி உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தனர்.

  சற்று நேரத்தில் நிலைமை கைமீறி சென்றுவிட்டத்தை புரிந்துகொண்ட புலிகள் உடனடியாகவே அதனை சமாளிக்க முயன்றனர். இந்த மாணவிகளை கட்டாய ஆயுத பயிற்சிக்கு அழைத்துச்சென்றிருந்த புலிகளின் அரசியல் துறையினர் விரைவாக இயங்கத்தொடங்கினர். அங்கு சென்ற புலிகளின்மகிளீர் அரசியல் குழுவினர் ஆயுத பயிற்சி நடைபெற்றமைக்கான சான்றுகளை அப்புறப்படுத்தி விட்டு மேஜர் பாரதி பயிற்சி பள்ளி என அழைக்கப்பட்ட முகாமை மீண்டும் செஞ்சோலையாக மாற்றத்தொடங்கினர்
  ஒருகாலத்தில் புலிகளின் மூத்த தளபதியாக இருந்த கருணாவின் கட்டுப்பாடில் இருந்த இந்த இடம் பின்பு செஞ்சோலையாக மாற்றப்பட்டு 2006 ஜனவரி நடுப்பகுதிவரை போரில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளை பராமரிக்கும் இடமாகவே இருந்தது வந்தது. அதன் பின்பு புளிகளின் மகளீர் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில் மேஜர் பாரதி பயிற்சி பள்ளி என பெயர் சூட்டப்பட்டு பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.

  அப்போது சமாதான காலமாக இருந்தமையால் இந்த இடம் இராணுவ தேவைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. பின்னாட்களில் நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே இந்த மாணவிகளை புலிகள் ஆயுத பயிற்சி வழங்கும் முகமாக அங்கு அழைத்துச்சென்றிருந்தனர். இது ஒரு ஆயுத பயிற்சி முகாமாக தொழிற்பட தொடங்கியிருந்தாலும் முழுமையான புலிகளின் போர் பயிற்சி முகாம்களைவிட குறைந்த நிலை பயிற்சி முகாமாகவே இருந்தது.
  செஞ்சோலை என்பது புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக பிரபாகரன் பணிப்புரையின் பேரில் 1991 அக்டோபர் 23ம் நாள் யாழ்ப்பானம் சண்டிலிப்பாயில் புலிகளால் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும். 1995 யாழ்ப்பாண இடம்பெயர்வின்போது கிளிநொச்சிக்கு இடம்மாற்றப்பட்டு பின் கிளிநொச்சி இடம்பெயர்வின் போது பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு பின்பு இந்த வள்ளிபுனம் பகுதியில் இயங்கத்தொடங்கியது. சமாதான சூழலில் ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையால் கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அருகாமையில் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு செல்லும் வீதியில் ஒருபகுதியாகவும் இயங்கத்தொடங்கியது.

  கிளிநொச்சி சமூக சேவைகள் திணைக்களத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக செயற்பட தொடங்கிய செஞ்சோலைக்கான நிரந்தர வளாகத்தை கிளிநொச்சியிலேயே புலிகள் அமைத்து இயக்கத்தொடங்கியிருந்தனர்.

  2003 ஜூனில் இதன் கட்டுமானப்பணிகளை தொடங்கிய அவர்கள் 18 மாதங்களில் மிக அழகான அதிக வசதிகள் கொண்ட வளாகமாக அதனை அமைத்திருந்தனர். மூன்று வயது தொடக்கம் வயதுக்கு வந்த பிள்ளைகள் என 245 பெண்பிள்ளைகளுக்காக் 11 வதிவிட கட்டடத்தொகுதிகளையும் ஒரு விசேட சிசு பராமரிபு நிலையம், கற்றல் செயற்பாட்டு நிலையங்கள், இரண்டு சமையல் கூடங்கள், உணவு உண்ணும் இடம் என்பவற்றையும் கட்டியிருந்தனர்.

  அத்துடன் ஒரு நிர்வாக கட்டடத்தொகுதி, ஒரு திறன்விருத்தி நிலையம், ஒரு கலாச்சார மண்டபம், ஒரு சுகாதார பராமரிப்பு நிலையம், மற்றும் ஒரு நூலகத்தினையும் இந்த புதிய செஞ்சோலை வளாகம் கொண்டிருந்த்தது. ஒரு பூங்காவை அமைப்பதன் மூலம் அருகில் இருந்த ஆண்களுக்கான காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்து செஞ்சோலையை தனியாக பராமரிக்கும் திட்டத்தையும் புலிகள் கொண்டிருந்தனர். கணணி கூடம், ஒலி-ஒளி காட்சியமைப்பையும் அங்கு நிறுவ புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

  கிளிநொச்சியில் அமைந்த இந்த புதிய செஞ்சோலை வளாகத்தை பிரபாகரன் 2006 ஜனவரி 15ல் திறந்து வைத்து செஞ்சோலை பிள்ளைகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கியிருந்தார். சுதர்மகள் என அழைக்கப்பட்ட ஜனனி செஞ்சோலையின் பொறுப்பாளராக இருந்தார்.

  https://www.facebook.com/photo.php?fbid=1304592206247879&set=a.516193038421137.20613346.100000913370172&type=3&theater

 2. சரி இதை எழுதும் நீங்கள் கொல்லப்பட்ட சிறுமிகளுக்காக ஏதாவது புடுங்கிருக்கிறீங்களா? சும்மா குறை மட்டும் சொல்லத் தெரியும்.

 3. எழுதியவரது உறவுகளுமல்ல இறந்திருப்பது. இறந்த பிறகு புடுங்க என்ன இருக்கிறது.

Comments are closed.