அகதிகள் நெருக்கடியும், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மனிதாபிமானமற்ற முகமும்

europeRefugeesசமீபத்திய வாரங்களில் பால்கன்கள் மற்றும் இத்தாலி வழியாக மத்திய ஐரோப்பாவில் புகலிடம் கோரிவந்த அகதிகள் கொடூரமாக கையாளப்பட்டமை, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் காட்டுமிராண்டித்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற முகத்தைக் காட்டுகிறது. மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவின் போர்-பாதித்த பிரதேசங்களிலிருந்து தங்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறி வரும் நிராதரவான மக்கள், ஒரு கொடூரமான அனுபவத்தை எதிர்கொள்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் புதிய புதிய அட்டூழியங்கள் வெளியாகின்றன: மத்தியதரைக் கடலில் சவங்கள் மிதக்கின்றன; அகதிகள் போதிய உணவோ தண்ணீரோ இல்லாமல் சகிக்கவியலாத கழிசடை நிலைமைகளில் ஒட்டுமொத்தமாக குவிக்கப்பட்டுள்ளனர்; சின்ன குழந்தைகளுடனான குடும்பங்கள் கூட நூறுக் கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே செல்ல நிர்பந்திக்கப்படுகின்றனர்; பொலிஸ் நிராயுதபாணியான புலம்பெயர்வோருக்கு எதிராக குறுந்தடிகள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை ஆயத்தப்படுத்தி உள்ளது; அகதிகளை பலவந்தமாக தடுக்க ஒவ்வொரு எல்லையும் தடைகளும், முள்வேலிகள் மற்றும் பாதுகாப்பு படைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

நேற்றே கூட, 500 புலம்பெயர்வோரைக் கொண்ட இரண்டு படகுகள் லிபிய கடற்பிரதேசத்திற்கு அருகே கவிழ்ந்து போனது, அதில் நூற்றுக் கணக்கானவர்கள் இறந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. அப்படகில் இருந்தவர்கள், ஊடக தகவல்களின்படி, சிரியா, பங்களதேஷ் மற்றும் பல ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களாவர்.

refugeeseuropeஇதற்கு முன்னதாக ஆஸ்திரிய நெடுஞ்சாலையில் ஒரு பாரவூர்தியில் 50 சிரிய அகதிகளின் உடல்கள் கண்டறியப்பட்டன. அவர்கள் பயணத்தின் போது மூச்சுமுட்டி இறந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. ஓரங்கட்டி நிறுத்தப்பட்டிருந்த அந்த பாரவூர்தியில் அழுகிய பிணங்களிலிருந்து நீர் கசிந்து வெளியேறிய போது, ஒரு நெடுஞ்சாலைத்துறை தொழிலாளர் அதை கண்டார்.

அந்த கொடூரமான கண்டுபிடிப்புக்கு வெறுமனே ஒருசில கிலோமீட்டர் தொலைவில், ரம்யமான வியன்னாவில், ஆஸ்திரியா, ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஆறு மேற்கத்திய பால்கன் நாடுகளது அரசாங்க தலைவர்களும் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிமார்களும், ஐரோப்பாவிற்கு தப்பியோடி வருபவர்களுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கைகளைக் கொண்டு விடையிறுத்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லை கூடுதலாக பலப்படுத்தப்பட உள்ளன மற்றும் மேற்கு பால்கன்கள் வழியாக வரும் அகதிகளது பாதைகளும் இன்னும் துல்லியமாக கண்காணிக்கப்படும். அவர்கள் அந்த பாரிய மரணங்களுக்கான பழியைக் “குற்றகரமாக ஆள்கடத்துபவர்கள்” மீது சுமத்தினர், அவர்களது வியாபாரம் ஐரோப்பிய சக்திகளின் தனித்தனியான கொள்கைகளால் தழைத்தோங்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியமானது சமாதானம், செல்வவளம் மற்றும் சர்வதேச புரிதலின் அமைவிடமாகும் என்ற வாதத்தை இந்த அகதிகள் நெருக்கடி அர்த்தமற்றதாக்குகிறது. அதன் எல்லைகளில் ஆயிரக் கணக்கானவர்கள் செத்து கொண்டிருக்கையில் ஐரோப்பாவை ஒரு கோட்டையரணாக மாற்றுவதற்கு அரசாங்கங்கள் ஒன்றுகூடி நெருக்கமாக இயங்குகின்ற போதினும், எந்த அரசால் மிக துல்லியமாக அகதிகளை அதைரியமூட்டி பின்வாங்க செய்ய முடியும் அல்லது அவர்களை சாத்தியமானளவிற்கு துரிதமாக வேறொரு நாட்டிற்கு அனுப்ப முடியும் என்பதன் மீது அவை குரூரமான போட்டியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, கவலைகொண்ட அரசியல் விமர்சகர்களோ, புதிய எல்லைகளின் உருவாக்கம் மற்றும் அகதிகள் ஒதுக்கீடு மீதான விவாதம் ஐரோப்பிய ஒன்றியத்தையே சிதறடித்துவிடுமென எச்சரித்து வருகின்றனர்.

ஐரோப்பாவிற்குள் வரும் சிரிய அகதிகளில் வெறும் 1 சதவீதத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ள பிரிட்டன், கலேயில் உள்ள யூரோ சுரங்கப் பாதைக்குள் நுழைவதைத் தடுக்க மில்லியன் கணக்கில் செலவிட்டு வருகின்றது, அங்கே ஆயிரக் கணக்கான அகதிகள் படுமோசமான நிலைமையில் வாழ்கின்றனர், அதில் ஏற்கனவே 12 பேர் இறந்து போயுள்ளனர். அனுமதியில்லாமல் வேலை செய்யும் புலம்பெயர்வோர் மிகக் கடுமையான தண்டனைகளை முகங்கொடுக்கிறார்கள்.

மேற்கு பால்கன் பாதை வழியிலுள்ள ஒரு நாடான ஹங்கேரி, சேர்பியாவை ஒட்டிய ஐரோப்பிய ஒன்றிய வெளி எல்லையில் 3.5 மீட்டர் உயர முள்வேலி அமைத்துள்ளது, அத்துடன் சட்டவிரோதமாக எல்லைதாண்டி வருபவர்களை ஆண்டுக்கணக்கில் சிறையிலிட்டு தண்டிக்கும் நடவடிக்கைகளையும் பரிசீலித்து வருகிறது.

பல அகதிகளின் இலக்கில் உள்ள நாடுகளான ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா, காவல் மையங்களின் சகிக்கவியலாத நிலைமைகள், அதிகரிக்கப்பட்ட திருப்பியனுப்பும் நடைமுறைகள் மற்றும் சமூக உதவிகளைக் குறைப்பது ஆகியவற்றைக் கொண்டு அவர்களை துரத்தியடிக்க முயன்று வருகின்றன. குறிப்பாக ஜேர்மனி, பிரான்சுடன் சேர்ந்து, ஒரு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் அகதிகளை பகிர்ந்து கொள்ள ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அழுத்தமளித்து வருகிறது.

இந்த முன்மொழிவு, குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில், கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. போலந்து ஜனாதிபதி ஆன்ட்ர்செஜ் துதா, மேற்கொண்டு அகதிகளை ஏற்றுக்கொள்வதை ஆணித்தரமாக நிராகரித்தார். அவரது நிலைப்பாட்டை, ஏனையவற்றோடு சேர்ந்து, அவரது நாடு உக்ரேனிலிருந்து ஒரு புதிய அகதிகள் அலையை எதிர்பார்ப்பதாக கூறி நியாயப்படுத்தினார். அங்கே உக்ரேனில் உள்நாட்டு போர், மேற்கு-ஆதரவிலான பொறோஷென்கோ ஆட்சி மற்றும் ரஷ்ய-ஆதரவிலான கிளர்ச்சியாளர்களுக்கு இடையே தீவிரமடைந்துள்ளது.

செக் துணை பிரதம மந்திரியும் ஒரு கோடீஸ்வர தொழிலதிபருமான ஆண்ட்ரிஜ் பாபிஸ், “வெளியிலிருந்து உள்நுழையாதவாறு செங்கென் பகுதியை மூடுவதில்” நேட்டோ தலையிடுமாறு அழைப்புவிடுத்தார். அகதிகளின் உள்வரவை “ஐரோப்பாவிற்கான மிகப்பெரிய அபாயமாக” அவர் குறிப்பிடுகிறார்.

அகதிகளின் அவலநிலைக்கு பரந்த மக்கள் அடுக்குகளின் விடையிறுப்போ, ஆளும் உயரடுக்கின் பிற்போக்குத்தனத்திற்கு முற்றிலும் எதிர்முரணாக நிற்கிறது. மிக முக்கியமாக ஜேர்மனியில், அகதிகளுக்கு வெள்ளமென உதவிகள் கிடைத்துள்ளது, இது பிரதான அரசியல் வட்டாரங்களையே ஆச்சரியமூட்டி அதிர செய்தது.

ஹம்பேர்க்கில், கடந்த இரண்டு வாரங்களில் சிரியா மற்றும் எரித்திரியாவிலிருந்து வந்த 1,100 அகதிகளுக்கு புகலிடம் கொடுத்த ஒரு கண்காட்சி மண்டபத்திற்கு டன் கணக்கான உதவிகள் அனுப்பப்பட்டன. ஆயிரக் கணக்கான உள்ளூர் பிரஜைகள் துணிகள், பொம்மைகள், போர்வைகள் அல்லது அவசர தேவை சுகாதார பராமரிப்பு பொருட்களை வாங்கி வழங்கினர். அதிகாரிகள் அகதிகளைத் துன்புறுத்துவதோடு, சங்கிலித்தொடர் போன்றதொரு நன்கொடை-அளிப்பு மையங்களை உண்டாக்கி உள்ள நூறு ஆயிரக் கணக்கான தன்னார்வலர்கள் மீது “கூடுதல் வரிவிதிக்கப்படும்” என்று கூறி தங்களது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வந்தாலும், அவை ஜேர்மனி எங்கிலும் உதவிப்பொருட்களை வினியோகிப்பதுடன், மொழி பயிற்சிகள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பையும் ஒழுங்குபடுத்துகின்றன.

அதுபோன்ற நடவடிக்கைகளை ஊடங்கள் அவ்வபோது மட்டுந்தான் அறிவிக்கின்றன, அதற்கு பதிலாக அவை அவற்றின் தலைப்புகளை நவ-நாஜி குழுக்களின் வெளிநாட்டவர் விரோத ஆர்ப்பாட்டங்களையும், உளவு சேவைகளின் ஊடுருவல், மறைந்திருந்து தீமூட்டும் இரவுநேர நடவடிக்கைகளைக் கொண்டும் நிரப்புகின்றன. இத்தகைய ஆத்திரமூட்டல்களுக்கு விடையிறுப்பாக, உதவி மற்றும் ஆதரவு அலை தீவிரமடைந்து மட்டுமே உள்ளது.

அகதிகளுக்கு ஆதரவு நீண்டிருப்பது வெறுமனே அடிப்படை மனிதாபிமானத்தின் ஒரு வெளிப்பாடு மட்டுமல்ல. அகதிகள் ஒரு சமூக அமைப்புமுறையால் பாதிக்கப்பட்டவர்கள், அதே அமைப்புமுறை தங்களின் சொந்த வாழ்வையும் அச்சுறுத்தி வருகிறது என்பதை பலர் உள்ளுணர்வாக உணர்ந்துள்ளனர்.

ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் ஏகாதிபத்திய போர்களுக்கு மக்களிடையே ஆதரவில்லை, அவை ஒட்டுமொத்த சமூகங்களையும் அழித்துள்ளதுடன், அதுவே அகதிகளின் அலைக்கு மூலகாரணங்களாகும். ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் பல ஆண்டுகளாக சரிந்து வந்துள்ள அதேவேளையில், சமூகத்தின் ஒரு சிறிய சிறுபான்மை உயரடுக்கு பாரியளவில் தன்னைத்தானே செழிப்பாக்கி கொண்டுள்ளது.

இந்த அகதிகள் நெருக்கடியானது, மனிதயினத்தின் பாரிய பெரும்பான்மையினரது மிக அடிப்படை தேவைகளோடு இனியும் பொருந்தாத ஒரு சமூக அமைப்புமுறை நெருக்கடியின் மிக வியத்தகு வெளிப்பாடாகும்.

1940 இல், இரண்டாம் உலக போர் தொடங்கிய போது, நான்காம் அகிலம் அறிவித்தது: “சிதைந்துவரும் முதலாளித்துவ உலகம் அழுகி நாற்றமெடுத்துள்ளது. ஒரு நூறு அகதிகளை கூடுதலாக அனுமதிப்பதும் கூட, அமெரிக்கா போன்ற உலக சக்திக்கு ஒரு பெரும் பிரச்சினையாகி விடுகிறது. விமானச்சேவைகள், தபால்தந்தி, தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் ஒரு சகாப்தத்தில், நாட்டிற்கும் நாட்டிற்கும் இடையிலான பயணம் கடவுச்சீட்டுக்கள் மற்றும் நுழைவுஅனுமதி ஒப்புதல்களால் முடக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வர்த்தகத்தின் இழப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தின் வீழ்ச்சி என இவற்றின் காலகட்டம், அதேநேரத்தில் மிகக்கொடூரமான பேரினவாதம் மற்றும் குறிப்பாக யூத-எதிர்ப்புவாதம் தீவிரப்படும் காலகட்டமாகவும் விளங்குகிறது.”

இந்த வார்த்தைகள் இன்று எரியூட்டும் நடைமுறையாக உள்ளன. உற்பத்திக் கருவிகளின் தனிச்சொத்துடைமை மற்றும் பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நிதியியல் செல்வந்த அடுக்கின் இலாபத்திற்கு அடிபணிய வைப்பதன் அடிப்படையில், முதலாளித்துவம், பொருளாதாரரீதியில் ஒருவரையொருவர் சார்ந்துள்ள 7 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு பூகோளமயப்பட்ட சமூகத்தின் தேவைகளை பூர்த்திச்செய்ய பொருத்தமற்றதாக உள்ளது. முதலாளித்துவம் வேரூன்றியுள்ள தேசிய-அரசு அமைப்புமுறை, சர்வதேச உழைப்பு பிரிவினை அடிப்படையில் அமைந்த உலக பொருளாதாரத்துடன் ஒத்துவர இயலாமல் நேரெதிராக நிற்கிறது.

அகதிகளை மனிதாபிமானமற்றரீதியில் கையாள்வது, மற்றும் முன்பினும் புதிய, தீர்க்கவியலாத தடைகளை உண்டாக்குவது, அரசு எந்திரத்தை பலப்படுத்துவது மற்றும் அதிகரித்துவரும் இராணுவவாதம் ஆகியவை முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத முரண்பாடுகளுக்கு ஆளும் உயரடுக்குகள் காட்டும் விடையிறுப்பாகும். அகதிகளை இழிவாக கையாள்வதென்பது மிகவும் ஆழ்ந்துபோன மனிதாபிமானமற்ற சமூக அமைப்புமுறையின் விளைபொருளாகும்.

நன்றி : wsws