கடந்த 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் போக்குக் காட்டி அதையே ஒரு அரசியலாக செய்து வந்தார். இப்போது அவர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ரஜினி ஜனவரியில் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்ற பெயரிலும் இப்போ இல்லேண்ணா எப்பவும் இல்லை என்ற பெயரிலும் இரண்டு ஹேஷ்டேகுகளை அறிமுகம் செய்துள்ள ரஜினியின் ட்விட்டர் ஐடியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் “வெளிப்படையான நேர்மையான ஊழலற்ற ஆன்மீக அரசியல் வெற்றி பெறும் என்றும் ஜனவரியில் கட்சி துவங்குகிறேன் என்றும் அறிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பை பாஜகவினர் வரவேற்று வருகிறார்கள். பாஜக கொள்கை முகவரும், துக்ளக் ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி. பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பாஜகவினர் ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்று தொலைக்காட்சி ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.