இலவச மருத்துவக் கல்வியை அழிக்க முயலும் ‘நல்லாட்சி’ அரசிற்கு எதிராக யாழ். மருத்துவபீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

fom_jaffnaஉலக நாணய நிதியத்தின் கடன் வழங்கும் நிபந்தனைகளில் இலவசக் கல்வியை அழிப்பதும் ஒன்று. இலங்கையின் நீண்டகால இலவச மருத்துவக் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை 1983 ஆம் ஆண்டு ஜே,ஆர்..ஜெயவர்தன ஜனாதிபதியாக பதவி வகித்த போது மேற்கொள்ளப்பட்டது. தமிழ்- சிங்கள மாணவர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்களால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. ஏகாதிபத்திய அடியாள் அரசான மைத்திரி – ரனில் அரசு மீண்டும் இலவசக் கல்வியை அழிக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட ஆரம்பித்துள்ளது. நல்லாட்சி என்ற தலையங்கத்தில் இலங்கை முழுவதையும் அன்னிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் இலங்கை அரசின் பல் வேறு செயற்பாடுகளில் இதுவும் ஒன்று.

தனியார் பல்கலைக் கழகத்திற்கான அனுமதி வழக்கப்படுவது எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் 13.01.2016 மாபெரும் ஆர்ப்பாட்டப் போரணி ஒன்றினை நடத்தியுள்ளனர்.

மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 7 பிரிவுகளை சேர்ந்த 600 மாணவர்கள் இவ்வார்ப்பாட்டப் போரணியில் கலந்து கொண்டுள்ளனர். என்று ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மருத்துவ பீட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்:

தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. இச்செயற்பாடானது யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துப பீட மாணவர்களை பெரிதும் பாதிக்கும் அதே வேளை வைத்திய துறையில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையினை நலிவடையச் செய்யும்.

இது மட்டுமல்லாமல் இதுவரை காலமும் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசாங்க வைத்திய சாலைகளில் பயிற்சிக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

இதே போன்று தனியார் துறைகளில் பயிலுபவர்களுக்கும் அரசாங்க வைத்தியசாலையில் பயிற்சிக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் துறைக்குள் உள்ளீர்க்கப்படுபவர்கள் பொதுப் பரீட்சை இல்லாமல் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் வெறுமனே 2 சி எஸ் சித்தி பெற்றவர்கள் கூட தனியார் துறைக்குள் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் 3 பி பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.

இனிவரும் காலங்களில் பணம் உள்ளவர்கள் இலகுவாக கல்வியினை தொடர்ந்து செல்லாம் என்ற நிலை உருவாக்கப்படப் போகின்றது.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியானது அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் அதே வேளை, வைத்திய சேவையில் மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பும் இல்லாமல் ஆக்கப்படவுள்ளது.

இதனால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பெரும்பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே மாபெரும் போராட்டத்தினை நடத்தியிருக்கின்றோம்;

அதே வேளை கொழும்பு பல்கலைகழக மாணவர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மலாப் தனியார் மருத்துவக் கல்லூரிக்கான இலங்கை அரசின் அங்கீகாரம் தொடர்பாக இரண்டு பல்கலைக்கழக மாணவர்களதும் ஆர்ப்பாட்டங்கள் இன்றை அவசர தேவைகளுள் ஒன்று.

தமிழர்களின் கல்வியிலும் கலாச்சாரத்திலும் அக்கறை கொண்டதாக புலம்பெயர் நாடுகளை நோக்கி தேவாரம் பாடும் தேசியவாதிகளும், தமிழர்களின் வாக்குகளைப் பொறுக்கிய தேசியக் கூட்டமைப்பும் எங்கே?