மகிந்தவை ஆதரிக்கமாட்டேன் :சந்தேகத்திற்குரிய மைத்திரியின் உரை

maithreypalaமகிந்த ராஜபக்சவிற்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதியளித்த பின்னர் இன்று நாட்டுமக்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரையாற்றினார். தனது சொந்த அரசியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் பிரச்சார உரையொன்றை ஆற்றிய மைத்திரிபால சிரிசேன, ஒரு நாட்டின் தலைவரைப் போலன்றி தான் இழந்த விம்பத்தை மீட்பதற்கான சந்தர்பமாக அந்த உரையைப் பயன்படுத்திக்கொண்டார்.

ஒரு மணி நேரம் நீடித்த உரையின் சாராம்சம்:

“கடந்த ஆறுமாத காலத்தில் அரசாங்கத்தை மூழ்கும் நிலையிலுள்ள டைட்டானிக் கப்பலைப் போன்றே நகர்த்திச் சென்றேன். டைட்டானிக் கப்பல் மூழ்கியது ஆனால் நான் கவிழ்வதற்கு இடமளிக்கவில்லை. பிரதமர் ரனில் விக்ரமசிங்க மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து அரசாங்கத்கைக் கவிழ்க்க முயற்சித்தார்கள். அவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் தேசியப் பட்டியல் ஊடாக மகிந்த ராஜபக்சவை பாராளுமன்ற உறுப்பினராக்கி பின்னர் பிரதமராக்க முயற்சித்தார்கள்.

அதனால் பாராளுமன்றைத்தைக் கலைத்து தேர்தலை அறிவித்தேன். இவ்வாறு அவர்களது நோக்கம் அனைத்தையும் தோற்கடித்து எனது கடமையை நான் நிறைவேற்றியுள்ளேன். எதிர்காலத்திலும் நான் அதனை நிறைவேற்றுவேன். இனிவரும் தேர்தல் நடவடிக்கைகளில் மகிந்த ராஜபக்சவுடன் எனக்கு எவ்வித தொடர்புகளும் இருக்காது.

கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் மகிந்த மீதிருந்த எதிர்ப்பு எனக்கு இன்னும் இருக்கிறது. மகிந்த ராஜபக்சவை நான் ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன். ஐகிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் மகிந்தவை விட அனுபவம் மிக்க பலர் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளனர். அவர்களில் ஒருவரைப் பிரதமர் வேட்பாளாராக நியமிக்க முடியும்.

மகிந்த ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்தில் எதிர்காலத்தில் யாரும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் சந்தர்ப்பம் இல்லாவாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தவணைகளை அதிகரித்துக்கொண்டு சென்றார். இப்போதும் பிரதமராகத் தகமையுள்ள மூத்த உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பத்தை நிராகரிக்கின்றார். இத் தேர்தல் காலப்பகுதியில் மிகவும் நடு நிலையாக இருந்தே செயற்படுவேன்.

மகிந்தவிற்கு நியமனம் வழங்கபடுவதை நான் விரும்பவில்லை. கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி தோல்வியடைந்தைப் போன்று மகிந்த மீண்டும் தோல்வியடைவார். அது மகிந்தவின் குற்றமல்ல, ஜே.ஆர்.ஜெயவர்தனவால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறையின் தவறாகும்.

கடந்த இரண்டு வாரங்களாகப் பலர் காட்டிக் கொடுத்தவன், துரோகி என என்னை விமர்சித்தனர். விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்.கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் இது சாத்தியமற்றதாகவே காணப்பட்டது. கடந்த 8ம் திகதி மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலான பாராளுமன்றம் ஒன்றை அமைப்பதே எனது நோக்கம்.”

மகிந்தவிற்கு நியமனம் வழங்கியது தொடர்பகக் கூறிய மைத்திரிபால, சுதந்திரக் கட்சியில் பெரும்பாலனவர்கள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கட்சியின் பிழவு அழிவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கிறார்.

இரண்டுவாரங்களாக நிலைமைகளை அவதானித்த மைத்திரிபால இன்று ஆற்றிய உரை தனது சொந்த நடவடிக்கைகளைப் பற்றியது. மூழ்கும் டைட்டானிக் கப்பலைக் காப்பாற்றிய மைத்திரிபால சிரிசேன மகிந்தவிற்கு நியமனம் வழங்கியது தொடர்பாக ஏற்றுக்கொள்ளத் தக்க காரணங்களைக் கூறவில்லை. மைத்திரி கூறும் காரணங்கள் சந்தேகத்திற்குரியவை.

தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதற்கும் எவ்வாறு மைத்திரிபல செயற்படுகிறார் என்ற ஆய்வு, மைத்திரிபாலவின் இன்றைய உரைக்கு முன்னரே இனியொருவில் வெளியாகியிருந்தது.

மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா, அரசியல் பொறியில் அகப்படுவாரா? :வியாசன்