தொடரும் முள்ளிவாய்க்கால் அவல ஒலி – துணை செல்லும் புலம்பெயர் பிழைப்புவாதிகள் : இனியொரு …

mullivaikalமுள்ளிவாய்க்கால் நினைவு நாள்:மனிதகுலத்தின் ஒரு பகுதி சில மணித்துளி நேரங்களுக்குள் அழிக்கப்பட்ட நாள். மனிதகுலத்தை இருளின் விழிம்பிற்குள் இருத்திவைத்துவிட்டு உலகத்தின் அழகிய மூலை ஒன்றில் மரண ஓலங்களுக்கு மத்தியில் மனிதர்களைக் கொசுக்கள் போன்று கொன்றுபோட்ட நாள். மனித குலத்தைப் பாதுகாப்பதற்கு என்றே உலகத்தின் ஒவ்வோரு மனிதனின் உழைப்பிலும் மில்லியன்களைச் சுரண்டி உருவான நூற்றுக்கணக்கான உரிமை அமைப்புக்கள் அனைத்தும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க ஆயிரமாயிரமாய் மனித உயிர்கள் மாமிசங்களாக்கப்பட்ட நாள். குழந்தைகளும், முதியோரும், சிசுக்களைத் தாங்கிய பெண்களும், நெஞ்சுரம் மிக்க நாளைய சந்ததியும் பிணக் குவியல்களாக அழித்துப் போடப்பட்ட நாள்.

முள்ளிவாய்க்காலில் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்ட அரசியல் நியாயத்தை மட்டுமல்ல, அமைதியாய் வாழ்ந்த ஆயிரமாயிரம் மனிதர்களை மட்டுமல்ல, உலகத்தின் ஒவ்வொரு மனிதனின் உரிமையையும் அழித்துத் துவம்சம் செய்திருகிறார்கள். சிங்கள பௌத்த பேரினவாதம் உருவாக்கிய மனித மிருகங்களான ராஜபக்ச குடும்பத்தின் தலைமையில் உலகின் அனைத்துக் கொடிய ஒடுக்குமுறையாளர்களும் தமது கொலைவெறியைத் தீர்த்துக்கொண்ட நாள் மே மாதம் 18 ஆம் திகதி.

முள்ளிவாய்க்கால் மூலையில் மனிதகுலத்தின் ஒரு பகுதியை அழித்து நிர்மூலமாக்கிவிட்டு இன்னொரு பகுதி அப்பாவிச் சிங்கள மக்களுக்கு பயங்கரவாதத்தை அழித்து மக்களைப் பாதுகாத்ததாக மிருக வெறியூட்டிய நாள் மே மாதம் 18ம் திகதி.

வளம் கொழிக்கும் விளை நிலங்களோடும் அழகிய வனப்புகளோடும் அமைதியாக வாழ்ந்த மக்கள் கூட்டத்திற்கு அன்னிய ஆக்கிரமிப்பை அறிமுகம் செய்த காலனிய ஆதிக்கம் தேசிய இன ஒடுக்குமுறையை புரையோடிப்போகும் புண்ணாக விட்டுச் சென்றது. அறுபது ஆண்டுகள் சிறுகச் சிறுகச் சூறையாடப்பட்ட தமிழ்த் தேசிய இனம்த்தின் அரசியல் நியாயம் முள்ளிவாய்க்கால் கொலைக்களம் வரை அழைத்துவரப்பட்டு நந்திக் கடலில் இரத்ததமும் சதையுமாகக் கரைக்கப்பட்டு நான்கு நீண்ட வருடங்கள் கடந்துபோயின.

ஒவ்வொரு நாள் காலையும் அச்சத்துடனேயே விடியும் ஒரு தேசத்தின் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி அழித்துத்துவம்சம் செய்யப்படும் போது அவர்களின் அழிவில் பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் மரணங்களை வெற்றுச் சடங்குகளாக மாற்றியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் உட்பட அழிப்பை நடத்திய அத்தனை அதிகாரவர்க்கத்தின் கூறுகளையும் மீண்டும் இரட்சகர்களாகப் பிரகடனப்படுத்தும் இந்தக் கூட்டம் மேலும் மேலும் போராடும் உலக மக்களிடமிருந்து ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தைத் தனிமைப்படுத்தி பேரினவாதிகளுக்கு பக்கத்துணையாகியுள்ளது.

போராட விளையும் மக்களையும் புதிய போராட்ட உக்திகளைத் திட்டமிடும் இன்னொரு சந்ததியையும் அநாவசியமான நம்பிக்கைகளை வழங்கி வீட்டில் முடங்கியிருக்கச் சொல்கிறார்கள். இன்னும் அமரிக்காவும், ஐரோப்பாவும் இந்தியாவும் தேவையானால் சீனாவும் வந்து காப்பாறும் என இந்தப் பிழைப்புவாதிகள் மக்களின் இயல்பான போராட்டங்களை மழுங்கடிக்கும் அதேகணத்தில் வடக்கிலும் கிழக்கிலும் மக்களின் நிலங்கள் எந்த எதிர்ப்புமின்றி பேரினவாதிகளால் அபகரிக்கப்படுகின்றது.

mullivaikal-shellingசிங்கள மக்கள் மத்தியிலிருந்து தோன்றிய மனிதாபிமானிகளையும் ஜனநாயாக சக்திகளையும் சிதைப்பதற்காக சுயநிர்ணய உரிமை என்பதே இனவாதம் என்று கூறும் ஏகாதிபத்தியங்களின் தொங்கு தசைகள் முறுக்கேற்றப்பட்டு முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மனித மிருகங்கள் மனித குலத்தின் ஒரு பகுதியை தமது இரத்தப்பசிக்கு இரையாக்கிக் கொண்டு ஒருலட்சம் மனித உயிர்களை அவலங்களோடு கொன்று போட்டுவிட்டு இன்றும் பயங்கரவாதத்தை அழித்தோம் என மார்தட்டி நடப்பதற்கு இவர்கள் அனைவரும் பொறுப்பாளர்கள்

அழிக்கப்படும் மக்களைப் பாதுகாக்க புலம்பெயர் பிழைப்புவாதிகள் யாரும் வரமாட்டார்கள் என்று மக்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள், அமரிக்காவும் இந்தியாவும் இன்ன பிற ஏகபோக அரசுகளும் அழிப்பதற்கு மட்டும்தான் வருவார்கள் என்று மக்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள், தமிழ் நாட்டின் சினிமாக் கும்பல்களும், இனவாத அரசியல் திருடர்களும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் மட்டுமே அவர்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என மக்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள். இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது என்று உணர்ந்துகொண்ட புலம்பெயர் பிழைப்பு வாதிகள் தம்மை நிர்வாணமாகக் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஊழல் பேர்வளி ஐங்கரநேசனோடும், தனது ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியான சுன்னாகத்தை அழிக்கத் துணை சென்ற வினேஸ்வரனையும் நம்பியிருக்கும் அவலநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம், மாவீரர் நிகழ்வு, வட்டுக்கோட்டைத் தீர்மான வருடாந்த நிகழ்வு என்று நினைவு தினங்களை நடத்தி புலம்பெயர் குழுக்கள் வயிற்றுப்பிழைப்பு நடத்திக்கொள்வார்கள். அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் தமது அடையாளத்தையும் பிழைப்பையும் உறுதிசெய்துகொள்ளும்.

புலம்பெயர் ஏமாற்றுக்காரர்களிலும் உள்ளூர் அரசியல் வாதிகளிலும் நம்பிக்கையிழந்துவரும் நிலையில், ஈழத்தில் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் புதிய வழிகளில் திட்டமிடப்படும். புதிய உத்வேகத்தோடு மேலெழும். உலக மக்கள் முன்னைப் போலன்றி புதிய, ஜனநாயக முற்போக்கு சக்திகளின் போராட்டமாக சுய நிர்னய உரிமைக்கான போராட்டமாக மக்களின் போராட்டங்களை திரும்பிப்பார்பார்கள்.

அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுடனும், இலங்கை சோவனிச அரச அதிகாரத்துடனும் சமரசம் செய்துகொள்ளும் புலம்பெயர் ஒட்டுக்குழுக்கள் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் மக்கள் கூட்டத்தால் அன்னியப்படுத்தப்படுவார்கள். அரசியல் நீக்கம் செய்யப்படுவார்கள்.