மார்க்சிஸ்ட் எனத் தன்னை அறிமுகப்படுத்தும் கோர்பின் தொழிற்கட்சித் தலைவருக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டுவார்

jeremy-corbynபிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜெரமி கோர்பின் பெரும் வெற்றியீட்டுவார் என எதிர்வுகூறப்படுகின்றது. அவரது போட்டியாளரான ஒவன் சிமித்தை விட 24 வீதம் அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் கோர்பின் வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வருடம் நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றியீட்டியதை விட அதிகமான வாக்குகளால் கோர்பின் வெற்றிபெறுவார் என மேலும் கணிப்புக்கள் கூறுகின்றன.

மார்க்சிஸ்ட் என்றும் இடதுசாரி என்றும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அரசியலுக்கு வந்த கோர்பினின் அரசியல் வெற்றி இடதுசாரி இயக்கங்களுக்கு மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவை வெளிப்படுத்துகின்றது. பிரித்தானியாவின் அரசியல் வரலாற்றில் இதுவரை மார்க்சிஸ்ட் எனத் தன்னை அறிமுகப்படுத்திய ஒருவர் பிரதான கட்சி ஒன்றின் வேட்பாளராகவும் தலைவராகவும் இரண்டு தடவைகள் தெரிவுசெய்யப்படுவது இதற்கு முன்பதாக நடைபெற்றதில்லை.

தன்னை மீண்டும் நிலை நிறுத்திக்கொள்ள வழியற்று சேடமிழுக்கும் முதலாளித்துவ பொருளுற்பத்தியின் மீதான மக்களின் வெறுப்புணர்வு இன்று ஜெரமி கோர்பினுக்கான ஆதரவாக மாற்றமடைந்துள்ளது. முதலாளித்துவத்தின் அழிவுக் கட்டங்களில் அடிப்படை ஜனநாயகமற்ற பாசிசமாகவே அது மாற்றமடையும். இன்றைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகள் உலகின் பயங்கரவாத அரசுகளாக மாற்றமடைந்துள்ளன. உள் நாடுகள் ஒருவகையான ஜனநாயகம் மறுக்கப்பட்ட சிறைகளாகவே மாற்றமடைந்துள்ளன.

ஜெரமி கோர்பின் தன்னை மார்க்சிஸ்ட் என அழைத்துகொண்டாலும், பிரித்தானியாவில் நிலவும் சர்வாதிகார, பாசிச அதிகாரத்தை எதிர்கொள்ளும் ஜனநாயகத்திற்கான முழக்கங்களையே முன்வைக்கிறார். அவை சமூகமாற்றத்தை ஏற்படுத்தாது. மீண்டும் முதலாளித்துவ சமூக அமைப்பு முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதிலேயே முடிவுறும். ஆக, முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய அமைப்புமுறையை மாற்றியமைப்பதற்கான கட்சியை இன்று பிரதியிடும் ஜெரமி கோர்பினின் தொழிற்கட்சி வெறும் சீர்திருத்தவாதக் கட்சியே ஆயினும் புதிய அரசியல் மாற்றத்தைப் பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பதை கோர்பினின் வெற்றி படம்போட்டுக்காட்டுகிறது.

பெரும்பாலான இடதுசாரி எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும் பெரும்பாலான பின் தங்கிய சிந்தனையைக்கொன்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஜெரமி கோர்பினை எதிர்க்கின்றன. ஜெரமி கோர்பின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என 90 களிலிருந்து குரலெழுப்பி வருகின்றார். ஈராக்கிய யுத்தத்தை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவரான ரொனி பிளேயரை போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்க வேண்டும் எனக் குரலெழுப்பி வருகிறார். அகதிகளை வரவேற்க வேண்டும் எனக் கூறும் ஒரே தலைவர் கோர்பின் மட்டுமே. இவை அனைத்தையும் மீறி புலம்பெயர் தமிழ் அரசியல் குழுக்களில் பெரும்பாலானவை கோர்பினை எதிர்ப்பது அவர்களின் வர்க்க சார்பு நிலையைக் காட்டி நிற்கிறது.