புலம்பெயர் போலித் தேசியவாதிகளுக்குப் போதிக்கும் தமிழினியின் இறுதிக் காலங்கள்

tamiliniஒரு சமூகம் மாற்றத்திற்கு உள்ளாவதைப் புற நிலை யதார்த்தமே தீர்மனிக்கின்றது. தற்காலிகமாக அந்த மாற்றத்தைப் பின்போடலாம், அதனைத் தடுத்து நிறுத்திவிட முடியாது! தனி மனித வழிபாடு, ஏனையவர்கள் மீதான வன்மம், வியாபார வெறி, அதிகார ஆசை, புகழ்ச்சியின் நெகிழ்ச்சி போன்ற அத்தனை அருவருப்புக்களையும் தனது முன்முகமாகக் காட்டிக்கொண்ட சமூகத்தின் சந்தர்ப்பவாதிகள் மத்தியில் மாற்றம் சாத்தியமானது என்பதற்கான எமது காலத்தின் முன்னுதாரணம் தமிழினியா என்பது முழுமையான தெளிவில்லை.

கடந்துபோனவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு தமிழினியின் மாற்றம் புலம்பெயர் போலித் தேசியவாதிகளுக்கு நிறையவே போதிக்கிறது.

சமூகத்தில் ஒரு மனிதனின் மாற்றத்தை அவனது வாழ்வே தீர்மானிக்கிறது. போராட்டம் தோற்றுப் போனது என்பதற்காக அதன் நியாயத்தையே நிராகரிக்கின்றவர்கள் மத்தியில் தமிழினியின் தனித்துவம் மதிப்பிற்குரியது.

உலக மக்களின் ஒரு பகுதி இரத்தத்தால் குளிப்பாட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் மரணங்களுக்கு தான் வரித்துக்கொண்ட அரசியல் வழிமுறையும் ஒரு காரணம் என்பதைத் தமிழினி சுய விமர்சனத்திற்கு உட்படுத்த நீண்ட முதிர்ச்சி தேவைப்பட்டிருக்கும். அந்த முதிர்ச்சியை நோக்கிய வளர்ச்சியை தமிழினியின் எழுத்துக்கள் புலப்படுத்தின. மாற்றத்திற்கான நகர்வு புதியவற்றின் தேடலாக வெளிவந்தன.

இங்கெல்லாம் அதிகாரத்தின் படிகளிலிருந்து இறங்கி மக்களின் வாசல்படிகளை நோக்கித் தமிழினி செல்வதைக் காணலாம்.

நடந்தவை அனைத்தும் நல்லவையே, நடக்கப் போவதும் அதுவே என பிற்போக்கு கறைபடிந்த அடிப்படைவாத மதங்கள் போன்று புலம்பெயர் நாடுகளிலிருந்து தேசியத்தின் பெயரால் எதிர்காலத்தை இருட்டறைகளில் பூட்டிவைத்திருக்கும் ஒரு கூட்டம் அந்த மாற்றத்தைத் தடுப்பதில் பலனடைந்துகொண்டிருக்கிறது.

குழந்தைகளை அள்ளிப் பலிகொடுங்கள் என்று கூச்சலிட்டுக் கும்மாளமடித்த அதே புலம்பெயர் குழுக்கள் இன்னும் இறுமாப்புடன் தமிழினியின் இழப்பையும் பயன்படுத்தத் தயாராகிவிட்டன.

புற உலகின் யதார்த்தத்திலிருந்து அன்னியமான ஒற்றைப் பரிமாணச் சிந்தனையிலிருந்து வெளியேறிய தமிழினி என்ற முன்னை நாள் போராளியின் வளர்ச்சி ஒப்பு நோக்கில் குறித்துக் காட்டத்தக்கது. தமிழினியின் படிமுறை வளர்ச்சியில் சுய நிர்ணைய உரிமைக்கான போராடம் இனவாதம் அல்ல என்ற போக்கு வெளித்தெரிய ஆரம்பித்திருந்தது. காலச் சுவட்டில் வெளியான கட்டுரையை குறித்து சமூக வலைத்தளம் ஒன்றில் தமிழினியின் கருத்து கீழே தரப்படுகிறது:

“சமாதானம் நிலவிய காலகட்டத்தில் ஒருநாள் எமது அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு தமிழ்செல்வன் அவர்கள் என்னை அழைத்து தமிழகத்திலிருந்து பெண் பத்திரிகையாளர்கள்,எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகளைக் கொண்ட ஒரு அணி வந்துள்ளதாகவும் அவர்களை சந்திக்கும்படியும் கூறினார். அதற்கமைய நானும் எமது அணிகளில் இருந்த எழுத்தாளர்கள் கவிஞர்களைக் கொண்ட தோழிகளின் அணியுடன் அவர்களை சந்தித்தேன். அந்த சந்திப்புக்காக வந்திருந்தவர்களில் ஒருவர்தான் தோழி பிரேமா ரேவதி.
பின்னாளில் நான் சிறையிலிருந்த போது அவருடைய கடிதம் காலச்சுவட்டில் வெளிவந்ததை அறிந்தேன். 2013 விடுதலை செய்யப்பட்டதன் பின் வாசித்தேன். அந்த காலத்தின் நீட்சி அந்த கடிதத்திலிருந்த வார்த்தைகளை மெய்யாக்கியிருந்தது. துணிச்சலான தோழி பிரேமா ரேவதி ”நலமா தமிழினி? எனக் கேட்டிருந்தீர்கள் மன்னிக்கவும் தோழியே இன்னும் இருக்கிறேன் நலம் என்ற வார்த்தையை மட்டும் நழுவ விட்டு விட்டேன்.
//புலிகளின் வீரவரலாறு, புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் அந்த காம்பவுண்டுகளில் துயிலும் மாவீரர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப்படுத்திவிட முடியாது. ஒரு இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது. பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்க வேண்டி வந்த புலிப்படையணிகளை, சாதிய நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் உள்ள ஈழத்தில் இருந்து போர்முனை சென்ற சூரியப் புதல்விகளான புலிகளின் பெண்கள் படையணிகளை வெறும் ‘பயங்கரவாதிகள்’ எனப் புறந்தள்ளிவிட முடியாது.//”

-வியாசன்

One thought on “புலம்பெயர் போலித் தேசியவாதிகளுக்குப் போதிக்கும் தமிழினியின் இறுதிக் காலங்கள்”

  1. “தமிழினி” தமிழர்களுக்கு முன்மாதிரியாக இருந்த பெண். பாரதி கண்ட புதுமைப் பெண். அவரை பற்றி பேச, அவர் செய்த தியாகங்களை பற்றி சொல்ல வார்த்தைகள் கிடையாது எனலாம். அவர் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம். – சு. துளசிதாஸ், மலேசியா

Comments are closed.