கிளிநொச்சியின் தாதா சிறீதரன் எம்.பி கனகபுரத்தில் மாவீரர் தின நிகழ்வில் வேட்டியுடன் விளக்கேற்றிய அவலம் மரணித்தவர்களை மீண்டும் கொலை செய்ததாக இருந்தது! விதவைகளுக்கு புலம்பெயர் நாடுகளிலிருந்து நிதி வழங்க முற்பட்ட சிறிய குழு ஒன்றிடமே 20 வீதத்தை தரகுப் பணமாகக் கேட்ட சிறீதரன் எம்.பியும் அவரது அடியாள் குழுக்களும் சுருட்டும் பணத்தை சிறீதரன் ஏற்றிய நெருப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு புறத்தில் இலங்கை அரசபடைகளின் நண்பன், மறுபுறத்தில் வாக்குப் பொறுக்குவதற்காக மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் தேசியவாதி என்ற முகங்களைக் கொண்ட சிறீதரன் போன்றவர்கள் தீபம் ஏற்றும் போது இலங்கை அரசே மாவீரர் தினத்தை ஒழுங்குபடுத்தினாலும் வியப்பில்லை.
சமூக வலைத் தளங்களில் சிறீதரனைத் திட்டும் பதிவுகள் கலர்கலராக வந்து போயின. அவர்களில் பலர் புலம்பெயர் மாபியாக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருபவர்கள் என்பதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. தமது சக போராளிகளைப் பணத்திற்காகத் திட்டமிட்டு அழித்த புலம்பெயர் குழுக்களுக்கள் என்று தெரிந்துகொண்டும் மூச்சுக்கூட விடாமல் மௌனம் சாதித்துவிட்டு, சிறீதரனை மட்டும் எதிர்க்கும் இவர்களின் நேர்மை சந்தேகத்திற்குரியது! தாம் சார்ந்த குழுக்களுக்காகவும் தமது எதிர்கால அரசியல் சுகபோகங்களுக்காகவும் சிறீதரனை எதிர்ப்பவர்களுக்கும் சிறீதரனுக்கும் பெரிதான வேறுபாடுகள் கிடையாது.
நேர்மையான எதிர்கால சந்தி ஒன்றின் தோற்றத்திற்கு, புலம்பெயர் பிழைப்புவாதிகள் எவ்வளவு தடையாக இருக்கிறார்களோ, சிறீதரன் போன்ற வாக்குப் பொறுக்கிகள் எவ்வளவு தடையாக இருக்கிறர்களோ அவ்வளவிற்கு பக்கச் சார்பாக ஒட்டிக்கொள்வோரும் தடையாகவிருக்கிறார்கள்.
இதுவரைக்கும் புலம்பெயர் நாடுகளில் சேகரிக்கப்பட்ட யுத்தகால அவசர நிதி தொடர்பாகவும், ரீசீசீ போன்ற அமைப்புக்களின் சொத்துக்கள் தொடர்பாகவும் மூச்சுவிடக்கூட திரணியற்ற கோழைகளுக்கு சிறீதரன் குறித்துப் பேச எந்தத் தகுதியும் கிடையாது.
சிறீதரன் போன்றவர்கள் நேர்மையற்ற சமூகத்தின் ஒரு முனை என்றால், அதன் மறு முனையில் அவரை தமது சுய இலாபங்களுக்காக எதிர்ப்பவர்கள் குந்தியிருக்கிறார்கள். அநாகரீகமான, அவமானகரமான சமூகத்தின் குறியீடுகளான ஒரு கூட்டம் தம்மை முன்னோடிகளாகக் காட்டிக்கொள்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை வழிபாட்டில் ஒற்றைப் பரிமாண சிந்தனை தோற்றிவித்த மனித மாதிரிகள் பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டத்திற்காக அரசியல் மயப்படுத்தபடும் போது பிழைப்புவாதிகளுக்கு எதிரான புதிய சமூகமாக மேலெழும் சந்தர்ப்பத்தை இல்லாதொழிப்பதே அதிகாரவர்க்கத்தின் இன்றைய நோக்கம். இலங்கை அரசு தடுப்பு முகாம்களில் அடைத்துவைத்திருந்த போராளிகளை சமூகத்துடன் இணைப்பதாகக் கூறி அரசியல் நீக்கம் செய்த பின்னர், அவர்களைப் பழமைவாதச் சிந்தனையிலிருந்து விடுவித்து முற்போக்கு அரசியலில் இணைத்துக்கொள்வது முன்னேறிய சிந்தனை கொண்ட சமுகப்பிரிவின் கடமை.