‘மார்க்சிஸ்ட்’ ஜெரமி கோபினின் வரலாறுகாணாத வெற்றி -தொழிற்கட்சியின் புதிய தலைவர்

corbynjஐரோப்பாவில் மார்சியம் செத்துப்போய்விட்டதா? பாசிசமும், நிறவாதமும் மட்டுமே மக்களின் வாழ்கையை ஆக்கிரமித்துள்ளதா?? அனைத்தையும் பொய் என நிறுவியுள்ளார் ஜெரமி கோபின். கடந்த 32 வருடங்களாக பாராளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினராகவிருந்து தனது சொந்தக் கட்சியையே எதிர்த்துப் போரிட்ட ஜெரமி கோபின் இன்று தொழிற்கட்சி புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தான் ஒரு மார்க்சிஸ்ட் என வெளிப்படையாகக் கூறிய கோபின் அண்ணளவாக 60 வீதமான வாக்குகளைப் பெற்று தொழிற்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்கள் மத்தியில் மாற்றுத் தலைமை இல்லாமையே அவர்கள் பாசிஸ்டுகளின் பக்கமும் நிறவாதிகளின் பக்கமும் சார்ந்து செல்கிறார்கள் என்பதை ஜெரமி கோபினின் தெரிவு தெரிவிக்கிறது.

பல்தேசிய வர்த்தக ஊடகங்கள் தெரிவித்தது போல மக்கள் மார்கியத்தையும் இடதுசாரியத்தையும் வெறுக்கவில்லை; ஊடகங்கள் ஊழையிட்டது போல மக்கள் வியாபார உலகத்தையே விரும்புகிறார்கள் என்பது பொய்யாகியுள்ளது.

கோபினின் வரலாறு காணாத வெற்றி சமூக மாற்றத்தை ஏற்படுத்தாது. தற்காலிக சமரசம் ஒன்றை மட்டுமே ஏற்படுத்தும்.

பிரித்தானிய உளவுத்துறை கோபினைப் பின் தொடர்கிறதா என்று கேட்கப்படதற்கு கேள்விக்கு அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

ஜெரமி கோபின் அதிகாரவர்க்கத்திற்கும் சமூக சமரசத்தை ஏற்படுத்துவதற்குத் தேவை என்பதை இவை உணர்த்துகின்றன. குறிப்பாக ஸ்கொட்லாந்தில் தோன்றியுள்ள இடது சாரி அரசியல் போக்கை கையாள ஜெரமி கோபினை அதிகாரவர்க்கம் எதிர்பார்க்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நடப்பிலுள்ள நவ தாராளவாத முதலாளித்துவ அமைப்பிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அன்டி பேர்னம் ஜெரமி கோபினுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜெரமி கோபின் 60 வீதமான வாக்குகளையும் அன்டி பேர்னம் 19 வீதமான வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதுவரை ஐரோப்பிய நாடுகளின் முன்வைக்கப்படும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிக்கும் கோபின் மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறுகிறார். 66 வயதான கோபின் இளைய சமூகத்தின் ஆதரவைப்பெற்ற தலைவர் எனக் கூறப்படுகின்றது. 76 வீதமான உறுப்பினர்கள் வாக்களித்த தொழிற்கட்சித் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரும் கட்சித் தேர்தல் எனக் கூறப்படுகின்றது.

நேட்டோவிலிருந்து பிரித்தானியாவை வெளியேற்ற வேண்டும் என வரலாற்றில் முதல் தடவையகக் கூறிப் பிரச்சாரம் மேற்கொண்டார். சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் பிரித்தானியா யுத்தத்தத் தலையீடுகளை மேற்கொள்ளக் கூடாது என்கிறார். அரசின் சிக்கன நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்கிறார். கல்வி முழுமையாக இலவசமாக்கப்பட வேண்டும் என்கிறார். தனது கட்சியின் முன்னைநாள் தலைவரும் முன்னைநாள் பிரதமருமான ரொனி பிளேர் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்.

ஐரோப்பிய அரசியல் கட்சிகளின் சட்டத்திட்டங்கள் அனைத்தையும் உடைத்து புதிய வழியைத் துணிந்து முன்வைத்த ஜெரமி கோபின், ஐரோப்பாவின் அரசியல் காட்சியை நேரெதிராக மாற்றியுள்ளார்.

ஜெரமி கோபினுக்கு வாக்களித்தால் பெரும் அழிவுகள் ஏற்படும் என ரொனி பிளேர் மூன்று தடவைகள் அறிக்கைவிடுத்தார்.

முன்னைய தொழிற்கட்சி அரசில் அமைச்சர்களாகவிருந்த பலர் பின்வரிசை உறுப்பினர்களாக மாறப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

சிலர் கட்சியில் தமது பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.
ஆரம்பத்தில் 25 வீதமான வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் 60 வீதமான வாக்குகள் கோபினுக்குக் கிடைத்துள்ளது. அதனை அவரே எதிர்பார்க்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கோபினின் ஆதரவாளரும் முன்னை நாள் லண்டன் மேயருமான கென் லிவிங்ஸ்டன், கோபினின் வெற்றியை சிறிதளவாவது எதிர்பார்க்கவில்லை என்கிறார். இரண்டாவது சுற்றிலேயே போட்டியை விட்டு வெளியேறிவிடுவார் என எதிர்பார்த்தாகக் கூறுகிறார்.