இலங்கையில் இந்துத்துவா எனும் ஒரு புதுஅபாயம் : வி.இ.குகநாதன்

siva-senai-founder-at-sanatan-sanstha-foundation-programmeஇலங்கையில் தமிழர்களிடையே  இந்த மாதத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய நிகழ்வாக சிவசேனா என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டதன் மூலம் இந்துத்துவா எனும் கருத்தியலிற்கான கதவு திறக்கப்பட்டிருப்பதனைக் கூறலாம். இந்த இந்துத்துவா கருத்தியல் வெற்றி பெறுமாயின், அதுதமிழர்களின் நீண்டகால உரிமைப் போராட்டடத்தில் ஏற்படுத்தப்படப்போகும் இன்னொரு பிளவாகவும் பின்னடைவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே தமிழரின் ஒற்றுமையினைக்  குலைக்கும் சில நிகழ்வுகளை  நாம் ஏற்கனவே சந்தித்துள்ளோம்.அவையாவன

 1. விடுதலை இயக்கங்களிடையே தலமைத்துவப்போட்டியாலும், இந்திய உளவு அமைப்பின் சதிவேலைகளாலும் ஏற்பட்டபிளவு.
 2. எண்பதுகளின் இறுதியில் ஆரம்பித்து தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வலுப்பெற்ற தமிழ்-முஸ்லீம் பிளவு. (இதிலும் இலங்கை உளவுத்துறை,இஸ்ரேலிய மொசாட் போன்றவற்றின் பங்களிப்புப் பேசப்பட்டளவிற்கு இந்திய உளவுத்துறையின் பங்கு பற்றிப் பேசப்படவில்லை)
 3. நோர்வே பேச்சுவார்த்தைகளின்போது கருணா மூலம் ஏற்படுத்தப்பட்ட பிரதேசரீதியான (வடக்கு-கிழக்கு) பிளவு. இது இப்போது அடங்கியிருந்தாலும் அப்போது கணிசமானளவு சேதத்தினை ஏற்படுத்தியிருந்தது.
 4. முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பின்னராக தமிழரிடையே ஏற்பட்ட சாதிரீதியான பிளவுகள். இதன் தாக்கம் பெரியளவிற்கு வெடிக்கவில்லையாயினும் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

                        இந்தவரிசையில் இடம்பெறப்போகும் இன்னொரு பிளவாகவே     இந்த  இந்துத்துவா இறக்குமதியினைக் கருதலாம். அதாவது இன்னமும் ஒற்றுமையாகவுள்ள கிறிஸ்தவர்கள், பகுத்தறிவார்கள், முற்போக்காளர்கள், தாழ்த்தப்பட்டோர்கள் என்போரை ஏனையோரிடமிருந்து பிளவுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.   சிவசேனாவின் அமைப்பாளர்களின் கூற்றின்படியே  RSS, விஸ்வ இந்துபரிசத்,இந்திய சிவசேனா போன்ற பல இந்துத்துவா அமைப்புக்களின் பின்புலத்துடனும், கலந்துரையாடலுடனுமே இந்த அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த அபாயத்தினை விளங்கிக் கொள்வதற்கு இந்துமதத்ததினை இந்துத்துவாவிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்.

இந்துமதம்-இந்துத்துவா

இந்து என்பது ஒரு மதமா? அல்லது வாழ்க்கைமுறையா? என்ற இந்திய உயர்நீதிமன்றத்திற்கே சிக்கலான வியாக்கியானச் சிக்கலிற்குள் நாம் சிக்கிக்கொள்ளாமல், எளிமையாக இந்துமதம் என்பது  சாதரணமாக நடைமுறையிலுள்ள சைவ, வைஷ்ணவ, மற்றும் சிறுதெய்வ வழிபாட்டுமுறைகளைக் குறிக்கும் எனக் கருதுவோம்.

castsமறுபுறத்தில் இந்துத்துவா என்பது இந்துமத நம்பிக்கையினை அடிப்படையாகக்கொண்டு மதவெறியினை தூண்டி, மனிதர்களைப் பிளவுபடுத்தி ஒரு சாராரின் (பார்ப்பனிய ஆதிக்கசாதிஆதிக்கம்) ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதனை நோக்கமாகக்கொண்ட ஒரு கோட்பாட்டினைக் குறிக்கும்.  ஒப்பீட்டுரீதியில் இத்தகைய மதவெறியினை  நாம்  இஸ்லாமிய மதத்தின் ஜிகாத் அல்லது தலிபானின் கோட்பாட்டுடன் ஒற்றுமைப்படுத்தி விளங்கிக்கொள்ளலாம்.   இவ் இந்துத்துவா கருத்துக்கள் ஆரிய பார்ப்பனிய ஆக்கிரமிப்பு முதலே காணப்பட்டாலும், இக்கருத்துக்களை முதன்முதலில் ஒரு கோட்பாடாக சாவார்க்கர் என்பவரே மராத்தி என்ற புனைபெயரில் எழுதிய இந்துத்துவா என்ற நூலில் முன்வைத்திருந்தார்.  அந்த நூலில் இந்துமதத்தினையும் இந்துத்துவாவினையும் வேறுபடுத்திக் காட்டியிருந்தார். இந்துத்துவாவிற்கு அடிப்படையான சட்டமாக மனுசாத்திரம் விளங்குகிறது.   இந்துத்துவாவின் முக்கியமான நோக்கங்களாவன பின்வருமாறு

 1. பார்ப்பன முன்னுரிமை (ஆதாரம்- மனு   1:93, 1:96, 1:100,10:3,11:35)
 2. பெண்அடிமைத்தனம்  (    – மனு   9:94, 2:213-2:215, 9:14-9:17)
 3. உழைப்பாளிகளை இழிவுபடுத்தல்- உதாரணமாக விவசாயம் இழிவானது என மனு (10:84) கூறுகிறது
 4. தமிழ் உட்பட மரபுரீதியான மொழிகளை அழித்து சமஸ்கிரதத்தினை திணித்தல். (உதாரணமாக தமிழை நீசபாசை என இகழ்தல்)
 5. மரபுரீதியான பண்பாட்டினை அழித்து ஆரியப் பண்பாட்டினைத் திணித்தல். உதாரணமாக தமிழரின் பண்டைய இசைக்கருவிகளான பறை, தவில் என்பவற்றினை சாதியுடாக இழிவுபடுத்தல்.
 6. மதத்துவேசத்துடாக மதக்கலவரங்களையும், சாதிமோதல்களையும், பிரதேச வாதங்களையும் ஊக்குவித்தல்.

.                     மேற்குறித்த நோக்கங்களை அடைவதற்காக இந்துத்துவா என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு  RSS என்ற அமைப்பு முதலில் தோற்றுவிக்கப்படட்டது . பின்பு இதே நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட பல அமைப்புக்ளில் ஒன்றாகவே சிவசேனா என்ற அமைப்பு  தோற்றுவிக்கப்பட்டது.

தமிழின  எதிர்ப்புடனான  சிவசேனாவின் உதயம்:

பால் தக்ரே
பால் தக்ரே

பால்தாக்ரே என்பவரால் 1966இல் மராத்திய பிரதாசவாதம், இந்துத்துவா என்ற இரு அடிப்படைகளையும் கொண்டு சிவசேனா என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்புத் தோற்றம் பெற்றபின்னரான முதற்பலி பம்பாய் (இப்போதைய மும்பாய்) பகுதியில் வாழ்ந்த தமிழர்களே.

அப்போது பம்பாய் பகுதியில் கல்வி, தொழில் என்பவற்றில் செல்வாக்குப்பெற்றிருந்த தமிழர்களை தாக்கித்துரத்தியடித்தன் மூலமே சிவசேனா அமைப்புத் தோற்றம் பெறுகிறது. இவ்வாறான தமிழின அழிப்பினையே ஆரம்பமாகக்கொண்ட ஒரு அமைப்பின் பெயரினையே தமிழினப் பாதுகாப்பிற்கென இலங்கையில் அறிமுகப்படுத்துவது வேடிக்கையானது. இவ்வாறு பம்பாயிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட தமிழர்களில் மிகப்பெரும்பான்மையானோர்  தமிழ் இந்துக்களேயாவார்கள்.   ஆனால் இந்துத்துவா கோட்பாட்டின்படி ஆரியர்கள் மட்டுமே இந்துக்களாவார்கள்.  கோல்வாக்கர் ஆரியர் தவிர ஏனையோரினை மிலேச்சர்கள் எனக்குறிப்பிடுகிறார் (ஆதாரம்:Bunch of thoughts).  மேலும் பகவத்கீதை(18:44-18:47), மனுசாத்திரம்(10:3) என்பனவும் தமிழர்களை (பிராமணர் தவிர்ந்த ஏனைய எல்லாருமே) சூத்திரர், வைசியர் என இழிவுபடுத்துகின்றன.

இலங்கையில் சிவசேனாவின் தோற்றத்திற்கு ஆதரவா கக் கூறப்படும்காரணங்கள்:

tamil-genocideஇலங்கையில்  சிவசேனாவின்  தோற்றத்திற்கு ஆதரவான காரணங்களாக  பௌத்த பேரினவாதம், இஸ்லாமிய கிறிஸ்தவ மதமாற்றம் என்பன கூறப்படுகின்றன. இதில் முதலாவதாக பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக இந்துத்துவா அமைப்புக்கள் ஓரு துரும்பையும் அசைக்கப்போவதில்லை  (ஏனெனில் சிங்களவர்கள் ஆரியர்கள், ஏற்கனவே பார்த்தபடி தமிழர்கள் மிலேச்சர்கள்).  இதன் காரணமாகவே ஈழப்போரின்போது பல்லாயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டபோதும்சரி, பல நூற்றுக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப்பட்டபோதும் சரி இந்தியாவும், இந்துத்துவா அமைப்புக்களும் சிங்களப் பேரினவாதத்தின் பக்கமே நின்றன.

மேலும் இந்துத்துவாவின்படி புத்த சமயமும் இந்தியாவில் தோன்றியதால் அதுவும் இந்துமதத்தின் ஒரு பகுதியேயாகும். மற்றைய நோக்கமான sivasena-protestமதமாற்றத்தினைப் பொறுத்தவரையில் இந்துக்கள் மதம் மாறுவதற்கான முக்கியமான காரணமாக உள்ளது சாதி வேறுபாடேயாகும். இந்த சாதிமுறையானது இந்துக்களை வெளியேற்றுவதுடன் பிற மதத்தினரின் உள்வரவினையும் தடுக்கிறது. அதாவது பிற மதத்திலிருந்து ஒருவர் உள்வருவதாயின் அவரினை எந்தச்சாதியில் வைப்பது என்ற சிக்கல் இந்துமதத்திற்கு மட்டமே உள்ளது. எனவே மதமாற்றத்தினைத் தடுக்கவேண்டுமாயின் சாதி ஒழிக்கப்படவேண்டும். இந்த சாதி ஒழிப்பினை இந்துத்துவா ஒரு போதும் அனுமதிக்காது. ஏற்கனவே தீண்டாமை ஒழிப்பிற்கு ஆதரவாகச் செயற்பட்ட நந்தன், வள்ளலார் ஆகியோரை எரித்தும், காந்தியினைச் சுட்டும் இந்துத்துவா கொன்றுவிட்டது.

எனவே சாதிவேறுபாடுகளினடிப்படையில் மதமாற்ற அதிகரிப்பிற்கே இந்துத்துவா வழிகோலும் என்பது தெளிவானது.    இங்கு இதுவரை ஏற்கனவே பார்த்தபடி சிவசேனாவினால்  இலங்கையில் தமிழரிற்கோ அல்லது இந்துக்களோ நன்மை எதுவுமேயில்லை மாறாக பிளவுகள், கலவரங்கள் மூலம் தீமைகளே அதிகம். வேண்டுமானால் அமைப்பாளர்களிற்கு பெயரும், இந்தியாவிலிருந்து பணமும் கிடைக்கலாம்.

                 தமிழ் தேசியக் கூட்டமைப்பு , தமிழ் தேசிய மக்கள் முன்னனி , தமிழ் மக்கள் பேரவை , தமிழ் தேசிய ஊடகங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் என்பன இவ்வாறான ஒரு ஆபத்துவந்தபோதும் மௌனமாகவிருப்பது அவர்களின் அரசியல் விழிப்புணர்வு வக்குரோத்து நிலமையினையே எடுத்துக்காட்டுகிறது. தமிழ் மக்களாவது விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும். அல்லது மக்களை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது ஏனெனில் இன்று ஆண்டவர்களையே காப்பாற்ற தலிபான்,ஐ.எஸ் (IS),பொதுபலசேனா, ஆர்.எஸ்.எஸ்(RSS), சிவசேனா போன்ற அமைப்புக்களே தேவைப்படுகின்றன.

3 thoughts on “இலங்கையில் இந்துத்துவா எனும் ஒரு புதுஅபாயம் : வி.இ.குகநாதன்”

 1. ஐ.நா வில் அமெரிக்கத்தீர்மானத்தில் இனப்பிரச்சனையினை மதப்பிரச்சனையாகச் சுருக்கிறது என்று கூச்சல் போட்ட புலம்பெயர் அமைப்புக்கள் எல்லாம் இன்று தமிழரில் ஒரு சாராரே அவ்வாறு மதப்பிரச்சனையாக்க முயலும்போது நித்திரை கொள்கின்றனவா?

 2. மறவன்புலவு சச்சியை எல்லாம் ஸீரியஸாக எடுத்து அவரது செயல்பாடுகளை ஐ.நாவின் செயற்பாடுகளுக்கு இணை வைத்து பேசும் உமது அறியாமையை என்னவென்பது ?

  1. சிவசேனா அமைப்பாளர்களில் யோகேஸ்வரன் த.தே.கூ அமைப்பின் MP, சச்சிதானந்தம் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர். எனவே இவர்கள் இனப்பிரச்சனையினை மதப்பிரச்சனையாக்குவதானது தமிழரின் செயற்பாடாகவே பார்க்கப்படும். எனவேதான் இதுவும் முக்கியமானது.

Comments are closed.