விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் அறிவற்றவர்களா சதிகாரர்களா?

gajanponதமிழினவாதம் என்பது சுய நிர்ணைய உரிமைக் கோட்பாடல்ல. சுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான ஜனநாயக உரிமையாகும். அவ்வாறான ஜனநாயக உரிமை என்பது ஒரு தேசிய இனத்திற்கானது மட்டுமல்ல. உலகிலுள்ள எல்லாத் தேசிய இனங்களுக்கும் உரித்தான ஒன்றாகும். அவ்வாறான உரிமை வழங்கப்படும் போது தேசிய இனம் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாக்கெடுப்பு நடத்தி பிரிந்து செல்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்று தனியரசு அமைத்துக்கொள்ள முடியும்.

ஒரு தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோருகின்றது.

இலங்கை என்ற சிறிய நாட்டில் வடக்குக் கிழக்குப் பிரிந்து சென்றால் தமது இருப்பிற்கு ஆபத்து என சிங்கள மக்கள் மத்தியில் இலங்கை அதிகாரவர்க்கம் பிரச்சாரம் மேற்கொள்கிறது. அதனூடாக தேசிய இன முரண்பாட்டை ஆழப்படுத்தி அதனை வாக்குகளக மாற்றிக்கொள்கிறது.

ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான பிரிந்து செல்லும் உரிமையை நிராகரிக்கும் அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமே தேசியவிடுதலைப் போராட்டமாகும்.

இவ்வாறான சூழலில் வட கிழக்குத் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமை குறித்துப் பேசும் பாராளுமன்ற அரசியல் வாதிகள் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை நிராகரித்துவிட்டு தம்மை ஜனநாயகவாதிகள் என அழைத்துக்கொள்வது நயவஞ்சகத்தனம்.

இலங்கையில் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மைத் தேசிய இனமும், சிறுபான்மைத் தேசிய இனங்களான வட-கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள் என நான்கு தேசிய இனங்கள் உண்டு.

இவை அனைத்தித்தினதும் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றான பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்கும் போது மட்டுமே நாம் எமது உரிமைகள் குறித்துப் பேச முடியும்.

சிங்கள தேசிய இனத்தின் அதிகாரவர்க்கம் அப்பாவிச் சிங்கள மக்களை நச்சூட்டி வைத்திருப்பது போன்றே, தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து சுய நிர்ணைய உரிமைக் குரலெழுப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சீ.வீ.விக்னேஸ்வரன் போன்றோரும் இலங்கையில் இரண்டு தேசிய இனங்களே இருப்பதாக பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதனால் மலையக மக்களையும், முஸ்லீம் தமிழர்களையும் கருத்தியல்ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவருகின்றனர்.

வடகிழக்குத் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திலிருந்து மலையக மற்றும் முஸ்லீம் மக்களை அன்னியப்படுத்தி போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சியாகவே இது கருதப்பட வேண்டும்.

தலைவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இவர்கள் தமது அரசியல் அறியாமையின் காரணமாக இவ்வாறு கூறி வருகின்றனரா அல்லது திட்டமிட்ட செயற்பாடா என்பதில் தெளிவில்லை.

இலங்கை என்ற நாட்டினுள் நான்கு தேசங்கள் இருக்கும் போது, வட கிழக்குத் தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மட்டும் சுய நிர்ணைய உரிமை உரித்துடையவர்கள் அல்ல. ஒரு நாடு இரு தேசம் எனக் கூறிவரும் இந்த இருவரும் ஏனைய தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையை நிராகரிக்கின்றனர்.

இலங்கையிலுள்ள நான்கு தேசத்தின் மக்களும் பிரிந்து சென்று தனியரசு அமைத்துக்கொள்வதா அன்றி பிரிந்து செல்லும் உரிமையைப் பாதுகாத்துக்கொண்டு கூட்டாட்சி நடத்துவதா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். கஜேந்திரகுமாரினதும், விக்னேஸ்வரனினதும் ‘இரண்டு தேசம்’ என்ற கருத்து ஏனைய தேசிய இனங்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைத்துவிடுகிறது.

ஏனைய தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரித்தால் மட்டுமே வட கிழக்குத் தமிழர்கள் மீதான சந்தேகம் நீங்கி இலங்கை அரசிற்கு எதிரான பல மிக்க போராட்டம் தோற்றம் பெறும்.

லண்டன் சென்ற விக்னேஸ்வரன் முஸ்லீம் மக்கள் தம்முடன் ஒத்துழைப்பார்களா என்ற சந்தேகத்தை வெளியிட்டார். அவர்களது சுய நிர்ணைய உரிமையை நிராகரித்து ஒடுக்க எண்ணினால் முஸ்லீம் மக்கள் மட்டுமல்ல மலையக மக்களும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மை.

10 thoughts on “விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் அறிவற்றவர்களா சதிகாரர்களா?”

 1. தமிழ்பேசும் முஸ்லிம்களை ஒரு தேசிய இனம் என்ற வரையறைக்குள் அலகிடும் நீங்கள் தமிழ்பேசும் கிறித்தவர்களை எதிர்காலத்தில் இதற்குள் அளவிட்டாலும் வியப்படைவதற்கில்லை. இனச்சிறுபான்மையினர், மொழிச்சிறுபான்மையினர், மத சிறுபான்மையினர் ,இனக்குழுக்கள் என பல வகை வகையினங்கள் இருக்கின்றன. முதலில் தேசிய இனம் என்றால் என்ன? எப்படி அலகிடுகிறீர்கள்? அப்படி என்ன பெயர் கொடுத்துக் கொண்டாலும், இந்த வகையினங்களின் அல்லது தேசிய இனங்களின் அல்லது இன, மொழி , மதக்கூறுகளின் தலைமைகள் பெரும்பாலும் அமைகின்ற குட்டி முதலாளிய அல்லது முதலாளிய அல்லது தேசிய முதலாளிய வர்க்கத்தின் எந்தப் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்படும் எந்த தேசியவாத வேலைத்திட்டமும், இன்றைய உலகமயமாக்கலின் பொருளாதார அரசியல் நிலைமைகளின் கீழ், குறைந்த பட்சம் தாம் பிரதிநிதித்துவம் செய்வதாகக்கூறும் எந்த மக்களுக்கும் ஜனநாயக உரிமைகளை, வாழ்வுரிமைகளை,வேலைக்கான உரிமையை, இருக்கும் வேலையைக் காப்பதை, தரமான கல்வியை,உணவு, உடை, இருப்பிடத்தை,ஆரோக்கியமான வாழ்வை வழங்குவதற்கும் சரி அல்லது பாதுகாப்பதற்கும் சரி அல்லது அவற்றுக்கு உத்தரவாதம் தருவதற்கும் சரி செல்தகைமை அற்றதாகப் போய்விட்டது. நீங்கள் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உயிரையே கொடுத்தாலும் சரி முதலாளித்துவ தேசியவாத வேலைத்திட்டமே செல்லாக்காசாகி விட்டது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் மூலமாக அல்லாமல் எந்த ஒரு தேசியவாத வகையறாக்களின் வேலைத்திட்டத்தாலும் வென்றெடுக்க முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்பட அண்மையில் கிரேக்கம் வரையான நிகழ்வுகள் இதனைத்தான் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.
  -பொய்யா மொழி

 2. 1.மலையக மக்களும், முஸ்லீம் மக்களும் தமக்கு சுயநிர்ணயஉரிமையுடன் பிரிந்து செல்லும் விருப்பம் உண்டு என்பதை வெளிப்படுத்தாத நிலையில் ஏன் விக்கியினையும், கஐனையும் இதற்குள் இழுக்கிறீர்கள்
  2. மலையக மக்களும், முஸ்லீம் மக்களும் பிரிந்து செல்லக்கூடிய தொடர்ச்சியான நிலப்பரப்பினைக் கொண்டிருக்கிறார்களா
  3. வேடுவர்களும், பறங்கியர்களும் ஏன் உங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை. வெள்ளவத்தை தமிழர்களின் நிலை
  இப்படியே பிரச்சனையினை மேலும் சிக்கலாக்கி கடைசியில் வடக்கு கிழக்கு தமிழரின் பிரிந்து செல்லும் உரிமையினையும் மறுப்பதே இக்கட்டுரையாளரின் உள்நோக்கம்.

  1. தேசிய இனம் பற்றிய வரையறை புரியாமலா இவர்கள் இருவரும் “ஒருநாடு இரு தேசங்கள்” என்று சொல்கிறார்கள்?
   சிங்களவர்கள் அல்லாத அனைவரும் ஒரு தேசம் என்பதை ஒரு வாதத்திற்காகத் தன்னும் ஏற்றுக் கொண்டாலும் இவர்கள் ஒருநாடு என்று சொல்லும் போதே சுயநிர்ணய உரிமையை மறுத்து விடுகிறார்களே அதை மறந்து விட்டீர்களா?

 3. பொய்யா மொழி,
  இலங்கை நான்கு தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதை போலி இடது சாரிகள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் பிரிந்து செல்லும் உரிமைய அங்கீகரிக்கவில்லை. நாங்கள் பிரிந்து செல்லும் உரிமைதான் சுய நிர்ணைய உரிமை என்கிறோம். தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் தமக்கென தனியான மத்தியத்துவப்படுத்தப்பட்ட சந்தையைக் கொண்ட தேசிய இனத்திற்கான ஆரம்பக் கட்டத்திலிருப்பவர்கள். உலகமயமாதல் என்பதன் முன்றாமுலக முகவர் நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்ப்பு முறை முற்றாக அழியவில்லை. ஆக, தேசிய இனங்கள் தமது முழுமையான வளர்ச்சியைப் பெறவில்லை. அதனாலேயே சாதிய முரண்பாடுகள், பிரதேச முரண்பாடுகள் போன்றன காணப்படுகின்றன. நிலபிரபுத்துவம் முடிகிற புள்ளியில் முதலாளித்துவம் வந்து உட்கார்ந்து விடுவதில்லை. அது ஒரு வளர்ச்சிப் போக்கு. மூன்றாமுலக நாடுகளில் அது தடைப்படுத்தப்பட்டுள்ளது. இத் தடைக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு வரலாற்றில் முற்போக்குப் பாத்திரம் உண்டு,தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக அமையும் போது அதற்கான போராட்டமும் தேவை, அது எப்படி வெற்றியை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பது விவாத்திற்குரிய வேலைத்திட்டம். அது முதலாளித்துவ வேலைத்திட்டமாக இருக்க முடியாது.

 4. சுமேரியன்.
  //மலையக மக்களும், முஸ்லீம் மக்களும் தமக்கு சுயநிர்ணயஉரிமையுடன் பிரிந்து செல்லும் விருப்பம் உண்டு என்பதை வெளிப்படுத்தாத நிலையில் ஏன் விக்கியினையும், கஐனையும் இதற்குள் இழுக்கிறீர்கள்//
  இங்கு ஒரு ஜனநாயகவாதியின் முதல் கடமை எனையவர்களின் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வதே. அதற்குப் பதிலாக சிங்களவர்கள், மலையகமக்கள், முஸ்லீம்கள் ஆகியோரை ஒரு கூடைக்குள்ளும், வடகிழக்குத் தமிழர்களை மற்றொரு கூடைக்குள்ளும் அடக்கி சிங்கள அதிகாரவர்க்கதுடன் மலையக முஸ்லிம் மக்களை இணைத்து சிங்கள அரசை இவர்கள் இருவரும் பலப்படுத்துகின்றனர். மலையக மக்கள் மத்தியிலிருந்தே முதல் தடவையாக மண்ணுக்கான போராட்டமும், தத்துவார்த்த அடிப்படையில் தாம் தனியான தேசிய இனம் என்ற குரல்களும் எழுந்தன. தமிழ்ப் பாராளுமன்ற அதிகாரவர்க்கம் வட கிழக்குத் தமிழர்களைப் போல மலையக மக்களையும் ஏமாற்றி வருகிறது…
  // மலையக மக்களும், முஸ்லீம் மக்களும் பிரிந்து செல்லக்கூடிய தொடர்ச்சியான நிலப்பரப்பினைக் கொண்டிருக்கிறார்களா//
  மலையக மக்கள் தொடர்ச்சியான நிலப்பரப்பினைக் கொண்டிருக்கிறார்கள். முன்னைய பதிலில் குறிப்பிட்டது போல தேசிய இனங்கள் ஒரு அரசின் எல்லைக் உட்டபட்ட தொடர்புடைய நிலப்பரப்பை சந்தையை நோக்க்கி மத்தியத்துவப்படுத்தத்தக்க வகையில் கொண்டிருப்பது அவர்கள் தனியான அரசு அமைக்கப் போதுமானதாகும். சோவியத் ஒன்றியத்தில் இவ்வாறு தேசிய இனங்களாக வளரும் நிலையிலுள்ள தேசிய இனங்கள் அரசால் விசேட சலுககைகள் வழங்கப்பட்டு வளர்ச்சியை ஊக்கப்படுத்திய முன்னுதாரணங்கள் உண்டு.
  //வேடுவர்களும், பறங்கியர்களும் ஏன் உங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை. வெள்ளவத்தை தமிழர்களின் நிலை இப்படியே பிரச்சனையினை மேலும் சிக்கலாக்கி கடைசியில் வடக்கு கிழக்கு தமிழரின் பிரிந்து செல்லும் உரிமையினையும் மறுப்பதே இக்கட்டுரையாளரின் உள்நோக்கம்.//

  ஐ.நா வில் தேசிய இனங்களின் வரை முறையிலிருந்து ஏர்னட்ஸ்ட் கெல்னரின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இனங்கள் தொடர்பான துறைசார் ஆய்வுகளிலிருந்து, மார்க்ஸ்-ஸ்டாலினிலில் ஆரம்பித்து இது தொடட்பான பல விவாதங்கள் நடத்தப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும் கருத்து ஒன்று உண்டு. தேசிய இனங்கள் ஒரு வரலற்றுக் கட்டத்திற்குரிய மக்கள் கூட்டம். சந்தைப் பொருளாதாரமும் முதலாளித்துவமும் தோன்றிய வேளையில் ஒரு சந்தையை நோக்கி மத்தியத்துவப்படுத்தப்பட்ட குறிப்பான மக்கள் கூட்டமே அது. வேடர்களும் பறங்கியர்களும் அவ்வாறில்லை. ஐயர்லாந்துக் காரர்கள் பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்ல முற்பட்ட போது பிரித்தானிய அரசு நீங்கள் கூறுவதைப் போன்று பேசியே அவர்களை ஒடுக்கியது. இலங்கை நான்கு தேசிய இனங்களைக் கொண்ட நாடு, அவர்கள் அனைவருக்கும் பிரிந்து செல்லும் உரிம வழங்கப்பட வேண்டும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களான பூவீகத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள் தமது பிரிந்து செல்லும் உரிமைக்காக அரசிற்கு எதிராக இணைந்து போராட வேண்டும், அதனை நிராகரித்தால் அரசு அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும், கடந்தகால அனுபவமும் அதுவே.

  1. வேடரும் பறங்கியரும் தேசிய சிறுபான்மை இனங்கள். (இதனையும் சிறுபான்மையாக உள்ள தேசிய இனங்களையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.)

 5. இவர்களின் அறியாமை தான் இதற்குக் காரணம். உண்மையச் சொன்னால் எற்றுக்கொள்வ்திலிருக்கும் ஈகோ பிரச்சனை தான் அதனை இறுங்குப் பிடியாகப் பிடிப்பதன் காரணம். இதைவிட வேண்டுமென்றே இலங்கை அரசாங்கத்தின் ஆட்களாக இவர்கள் இதைச் செய்யவில்லை.

  1. அதாவது தாங்களும் சரியானதைச் சொல்ல மாட்டார்கள் மற்றவர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என்கிறீர்கள். இவர்கள் தமிழ் மக்களின் தலைவர்களாக இருக்கத் தகுதியுடையவர்கள் தானா?

 6. இலங்கையில் 4 தேசிய இனங்கள் இருப்பது சரியான வரையறையாகும்.
  ஆனால் நான்கு தேசங்கள் என்று வரையறுப்பது என்பது வேறு
  தனித்தேசங்களாக வளரக் கூடியவை என்று வரையறுப்பது வேறானதாகும்.
  தமிழ் தேசம் மலையக – முஸ்லீம் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமையை
  அங்கீகரித்துச் செல்கின்ற போது அவைகள் தமிழ் தேசத்துடன்
  இணைந்திடும் ஜனநாயக வடிவத்தை உருவாக்கிக் கொள்ளவதும்
  ஜனநாயக உரிமை கொண்டிருப்பதும் ஆகும்.

  ; இங்கு முஸ்லீம்- மலையகம் தேசிய இனங்கள் தமிழ் தேசத்துடன்
  இணைப்பிற்கு இடையூறாக இருப்பது சுரண்டும் வர்க்கம்- நிலமானிய-
  வர்ணாசிரமச் சிந்தனையாகும்.
  இங்கு ஜனநாயகம் என்பது தேசிய இனங்களின் இணைவுடன்
  கூடியதாகும்.
  தேசங்களாக பரிணமித்து விட்;டது என்ற அடிப்படை தவறானதாகும்.

  1. இலங்கைவேலன் ,

   இலங்கை மட்டுமல்ல இன்னும் பல மூன்றாமுலக நாடுகளில் தேசிய இனங்கள் இன்னும் வளரும் நிலையிலேயே உள்ளன என்பது உண்மை. அதனைத்தான் தேசிய இனங்கள் நிலப்பிரப்புத்துவம் முடிகிற இடத்தில் ஆரம்பிப்பதில்லை. அது ஒரு வளர்ச்சிப் போக்கு. அது காலனியாதிக்கத்தால் தடைப்பட்டுள்ளது. புதிய மறைமுகக் காலனிகளாக நீண்டகாலம் நிலைத்திருப்பதால் அதற்குரிய மக்கள் கூட்டம் முதலாளித்துவக் காலத்திற்குரிய மக்கள் கூட்டமான தேசிய இனங்களின் முழுமைபெற்ற நிலைகளில் காணப்படுவதில்லை. தேசிய சிறுபான்மைக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் இடைப்பட்ட சமூகமாகவே தோன்றும்; சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளின் அடிப்படையில் அவை தேசிய இனங்களாக வளர்ச்சிபெறுவது முற்போக்கான ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாத்திரத்தை வகிக்கும். ஆக காலனியாதிக்கத்திற்குப் பின்னான காலப்பகுதியிலுள்ள தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிப்பது அவசியமானது. அவை தேசங்களாகப் பிரிந்து செல்வதா இல்லையா என்பதை அக்காலத்திற்குரிய புறச் சூழலே தீர்மானிக்கும்.

Comments are closed.