புலம்பெயர் போலித் தேசியவாத அமைப்புகள் ராஜபக்சவை ஏன் ஆதரிக்கின்றன?

rajapaksa90 களுக்குப் பிந்திய காலத்தில் புலிகளில் இணைந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்தில் கீழணிகளிலுள்ளவர்களே. வசதிபடைத்தவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று தமது வாழ்க்கையை வளம்படுத்திக்கொண்டனர். இன்று தமிழ்த் தேசியம் பேசி வாக்குப் பொறுக்கும் பிரதானிகள் பலர் கொழும்பின் உயர்குடிகளைச் சார்ந்தவர்கள்.

சுமந்திரன் என்ற கொழும்பு உயர்குடி அரசியல்வாதியின் ஆளுமைக்குள்ளேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. பேரினவாத ஒடுக்குமுறையைச் சந்தித்திராத சுமந்திரன் போன்றவர்கள் யாழ்ப்பாணம் வரை சென்று அரசியல் பேசுவது தமது வர்க்க நலன்களுக்காக மட்டுமே.

இதன் மறுபக்கத்தில் கொழும்பைச் சார்ந்த பணக்காரர்களில் ஒருவரும் கொழும்பு உயர்குடிகளைச் சார்ந்த பணக்காரருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வாக்குக் கேட்கிறார்.

இவர்கள் தமது சொத்துக்களின் ஒரு சிறிய பகுதியையாவது மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தியதில்லை. மக்கள் நலன் சாராத இக் கும்பல்கள் மக்களின் கண்ணீரையும் அவலங்களையும் விற்பனை செய்து வாக்குப் பொறுக்க முயல்கின்றனர்.

ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தின் ஊடாக சமஷ்டி அமைப்பைப் பெற்றுவிடுவோம் என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு; அதனூடாக கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஒரு நாடு இருதேசம் பெற்றுவிடுவதாகக் கூறுகிறது.

புலம்பெயர் நாடுகளில் புலிகளின் அழிவிற்குக் காரணமாக இருந்தவர்களும், புலிகள் அமைப்பின் பெருந்தொகைப் பணத்தைச் சுருட்டிக்கொண்டவர்களும் இன்று கஜேந்திரகுமாரை ஆதரிக்கின்றனர்.

கொழும்பு உயர்குடிகளின் அரசியல் இலங்கைப் பேரினவாதக் கட்சிகளின் முரண்பாடுகளுக்கு ஏற்றவாறே அசைகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அடியாள் படை போன்றே ஒவ்வொரு வெளிப்படையான சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் மகிந்தவின் ஆதரவு தளத்தை வலுப்படுத்தும் நோக்கிலேயே செயற்பட்டுவருகிறார். மகிந்த ஆட்சிக்கு வந்தால் தமிழ்த் தேசியத்தை உரத்துப் பேசி தமது வியாபாரத்தை மேலும் உறுதிப்படுத்தலாம் என்பதே கஜேந்திரகுமார் கருதுகிறார். மக்களின் அன்றாட வாழ்வாதரப் பிரச்சனைகளிலிருந்து முற்றாக ஒதுங்கியிருக்கும் கஜேந்திரகுமரின் அரசியலின் அடித்தளம், போர்க்குற்ற விசாரணை என்பது மட்டுமே.

ரனில் ஆட்சியமைத்தால் மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் அவருக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசியம் பேசுவதற்கான இடைவெளி கிடைக்காது.. இதனால் மகிந்தவின் மீள் வரவு என்பது மட்டுமே புலம்பெயர் தம்ழ்த் தேசியத்தை முன்னோக்கி நகர்த்தும் என்பதால் புலம்பெயர் போலித் தமிழ்த் தேசியவாதிகளும் கஜேந்திரகுமாருக்கு ஆதரவளிக்கின்றனர்.

மகிந்தவை ஆட்சியிலேற்றும் நோக்கத்தில் ஜனாதிபத் தேர்தல் மற்றும் மாகாண சபைத்தேர்தல் ஆகியவற்றை கஜேந்திரகுமார் புறக்கணிக்கக் கோரினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யூ.என்.பி அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல தடவைகள் வெளிப்படையாகவே ஆதரித்திருக்கிறது. 2010 ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு யூ.என்.பி மற்றும் சரத் பொன்சேகாவுடன் இணைந்திருந்தது. யூ.என்.பி மேடையிலேயே சம்பந்தன் சிங்கக்கொடி காட்டினார்.

ஆக, கஜேந்திரகுமார் கட்சியும் கூட்டமைப்பும் இரண்டு பேரினவதக் கட்சிகளின் உள்ளூர் வால்களே தவிர வேறில்லை.

சுய நிர்ணைய உரிமைக்காக மக்கள் போராடிய வரலாறுகள் உலகம் முழுவதும் பரந்துகிடக்கிறது. சுய நிர்ணைய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்துசென்று தனியரசு அமைத்துக்கொள்வதற்கான உரிமையாகும். அதனை இனவாதமக்கி அழித்த கஜேந்திரகுமார், சம்பந்தன் போன்ற அரசியல்வாதிகள் மீண்டும் பாராளுமன்றத்திற்குச் சென்று சுய நிர்ணைய உரிமை பெற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றுகின்றனர். பாரளுமன்றத்தில் நம்பிக்கை வைக்கக் கோரும் இக்கும்பல்களின் பின்னால் அழிவு சக்திகளே உள்ளன.

ரனில் மைத்திரி ஆட்சிக்கு வந்தபின்னர் முடங்கியிருந்த தமிழ்த் தேசிய வியாபாரம் புலம்பெயர் நாடுகளில் இப்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மகிந்த ஆட்சியமைத்தால் வியாபாரம் விருத்தியடையும் என்பதே இவர்களின் கணக்கு.

இந்த நிலையில் இலங்கையின் ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பாராளுமன்ற வழிமுறையில் நம்பிக்க்கை இல்லை என்றும் தேதலைப் புறகணித்தால் மட்டுமே உலகம் தமிழ்ப் பேசும் மக்களைத் திரும்பிப்பார்க்கும். உரிமை கிடைத்தால் வாக்களிப்பிலும் நம்பிக்கை ஏற்படும் என மக்கள் கூறுவதற்கு ஒரே சந்தர்ப்பம் தேர்தலைப் புறக்கணிப்பது மட்டுமே.

புலம்பெயர் போலி தமிழ்த் தேசிய அமைப்புக்கள் மகிந்தவை ஏன் ஆதரிக்கின்றன என்ற ஆய்வு பல வருடங்களின் முன்னர் இன்யொருவில் பதியப்பட்டது:

ராஜபக்சவின் தமிழ் நண்பர்கள் : சபா நாவலன்

2 thoughts on “புலம்பெயர் போலித் தேசியவாத அமைப்புகள் ராஜபக்சவை ஏன் ஆதரிக்கின்றன?”

  1. நன்றாக ஆரம்பித்த கட்டுரை கடைசியில் சறுக்கி விட்டது.
    தமிழ் மக்கள் அளவிற்கு வேறுயாராவது தேர்தல்களைப் பகிஷ்கரித்திருப்பார்களா என்பது ஐயமே. எனினும் உலகம் திரும்பிப் பார்க்கவில்லை.
    இந்தமுறை தேசிய அரசு என்ற கோஷம் இருக்கிறது. அது மட்டுமே ஏதாவது பேரம் பேசுதல் நடைபெறும். இல்லாவிட்டால் மறுபடி நேர்மை துவைத்துக் காயவிடப்படும். முறுபடி துரோகி தியாகி காட்டிக் கொடுப்பு என்ற வசனங்களுடன் கஜனும்வித்தியாதரனும் சில வேளைகளில் வித்தியும் அடுத்த தேர்தலிற்குத் தம்மைத் தயார் செய்யத் தொடங்குவார்கள்.

  2. தெற்கில் நிலையான அரசு அமையாதபேரம் பேசுதலில் விடத்து அதனைப் பயன்படுத்தி பேரம் பேசுதலில் ஈடுபட தேர்தலில் வாக்களிப்பதே வழி.
    தேர்தலைப்பகிஷ்கரிப்பதாயின் ஆயுதப் போராட்டத்தை மீளத் தொடங்க வேண்டும். அதுவுமில்லை இதுவுமில்லை என்பது எமது மக்களை நாமே செல்லாக் காசாக்கும் வழி.

Comments are closed.