பகடைக் காய்களாகும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள்!

jaffnamuslimsபோராட்டம் என்பது வன்முறை அல்ல. அரசபடைகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து தம்மைத் தற்காத்துகொள்வதற்காக மக்கள் நடத்தும் போராட்டங்கள் வன்முறையல்ல. அங்கு அரசே வன்முறையில் ஈடுபடுகிறது. மக்களும் அவர்களைத் தலைமைதாங்கும் கட்சியும் போராட்ட இயக்கங்களும் வன்முறையிலிருந்து தற்காத்துக்கொள்ளப் போராடுகின்றன. போராட்ட இயக்கம் ஒன்று மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும் போது அது தனது வலுவை இழந்துவிடுகிறது. அந்த வன்முறையை நியாயப்படுத்த ஒரு கூட்டம் சூழ்ந்துகொள்கின்ற போது போராட்டம் கோட்பாட்டு வலுவை இழந்துவிடுகிறது.
வன்முறை பொதுக் கோட்பாடாக முன்னிறுத்தப்படும் போது அச் சமூகம் தனது அரசியல் அறத்தைத் இழந்துவிடுகிறது.

இலங்கை அதிராகவர்க்கத்தால் நஞ்சூட்டப்பட்ட சிங்கள மக்களின் ஒரு குறித்த பெரும் பகுதி பேரினவாதத்தால் ஆட்கொள்ளப்பட்ட போது அது ஒரு சமூகமாக வலுவிழந்து போனது. உழைக்கும் சிங்கள மக்கள் தம்மீதான ஒடுக்குமுறையை உணர்ந்துகொள்ள முடியாமல் தம்மோடு இணைத்துகொள்வதற்காக பேரினவாதம் அதிகாரவர்க்கத்தால் பயன்படுத்தப்பட்டது. பெரும்பான்மை உழைக்கும் மக்களில் போலியான முகத்தையே பேரினவாதம் வெளிப்படுத்தி அவர்களை வலுவிழக்கச் செய்தது.

சிறுபான்மைத் தேசிய இனங்கள் அழித்துத் துவம்சம் செய்யப்படும் போது அதனைப் பார்த்துக்கொண்டிருந்த சிங்கள அறிவுசீவிகள் சமூகத்தை வலுவிழக்கச் செய்தனர். சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஒடுக்கப்படும் பெரும்பான்மையினர் தமது சொந்த வலுவை இழந்துபோயினர்.

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த 72 ஆயிரம் இஸ்லாமியத் தமிழர்கள் அவர்களது சொந்த நிலங்களிலிருந்து இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட போது தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மற்றுமொரு தடவை வலுவிழந்துபோனது.

ஏற்கனவே தன்னை வன்முறையாளர்களாக அறிமுகப்படுத்தியிருந்த விடுதலை இயக்கங்களில் பிரதானமானதும், எஞ்சியிருந்ததுமான புலிகள் முஸ்லீம்களை, அவர்களது சொத்துக்களைப் பறித்துக்கொண்டு வெளியேற்றியமை சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை மேலும் வலுவிழகச் செய்தது. அதற்கான தார்மீக நியாயம் கேள்விக்குள்ளானது.

யாழ்ப்பாணத்தில் பிறந்து பெரியவர்களாகி சந்ததிகளாக வாழ்ந்துவந்த முஸ்லீம்கள் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் அல்ல. அரசிற்கு எதிராக விடுதலை இயக்கங்கள் தோன்றிய போது பல முஸ்லீம் இளைஞர்கள் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டனர். சிலர் கொண்டாட்டங்களிலிருந்து விலக்கப்பட்ட ‘மாவீரர்கள்’ ஆகினர்.

பச்சிழம் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என்ற ஒருவர் மீதும் குறைந்தபட்ச மனிதாபிமானமும் காட்டப்படவில்லை. ஐந்து முச்சந்திக்கு அருகாமையில் அமைந்திருந்த் ஒஸ்மானியாக் கல்லூரியில் பல தடவைகள் இயக்கப் பிரச்சாரக் கூட்டங்க்ளைக் கேட்பதற்காக முஸ்லீம்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள். இந்தத் தடவை, புலிகள் இயக்க உத்தரவின் பேரில் அவர்கள் அங்கு வந்திருந்தார்கள்.

அங்கு அவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. குழந்தகளின் காதுகளிலிருந்த தங்க ஆபரணங்கள் கூடப் பறித்தெடுக்கப்பட்டன. அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு சில மணி நேரங்களே அவகாசம் வழங்கப்பட்டது.

மறு நாள் காலை அந்த நகரத்தின் ஒரு பகுதி வெறிசோடிக் கிடந்தது. முற்றத்தில் மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் காணவில்லை. தெரு நாய்கள் கூட மூலைகளுக்குள் முடங்கிக்கொண்டன.

இஸ்லாமியச் சகோதர்கள் இப்போது அங்கில்லை. சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் ஒரு தேசிய இனத்தின் ஆயுதம் தாங்கிய அமைப்பு இன்னொரு மக்கள் கூட்டத்தை சுத்திகரிப்புச் செய்திருந்தது. அது போராட்டமல்ல, வன்முறை!

இரண்டு தசாப்தங்கள் கடந்து முள்ளிவாய்க்காலின் மூலையில் அந்த இயக்கமும் மக்களும் சிங்களப் பேரினவாத கொலைக் கருவிகளால் அழிக்கப்பட போது வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் இன்னும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கவில்லை.

சிறிது சிறிதாக அரசியல் வலுவிழந்து போன புலிகள் இயக்கமும் போராட்டமும் தனிமைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டது.

அழிப்பின் பின்னான கடந்த ஆறு ஆண்டுகள் மீண்டும் போராட்டம் முளைவிட்டுவிடக் கூடாது என்பதில் ஏகாதிபத்திய நாடுகளும் இலங்கை அரசும் எச்சரிக்கையாகவுள்ளன.

போராட்டத்தின் நியாயத்தைக் குழிதோண்டிப் புதைத்து மண்ணைத் தள்ளி மூடிவிடுவதற்கு யாழ்ப்பாண முஸ்லீம்களின் வெளியேற்றமும் ஒரு காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஈழப் போராட்டம் என்பதே மக்கள் விரோதமானது என அரச அடியாட்களும், பேரினவாதத்தின் முகவர் குழுக்களும் பிரச்சரப்படுத்த முஸ்லீம்களின் வெளியேற்றமும் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. போரின் சன்னங்களைச் சுமந்துகொண்டு தடுப்புமுகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் முஸ்லீம்களைக் மீள் குடியேற்றுவது மட்டுமே இன்று முக்கியமானது என கூச்சலிட்ட அரச ஆதரவுக் கோமாளிகளின் மனிதாபிமானம் அப்பாவி முஸ்லீம்களுக்கானதல்ல.

அன்று முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டதை வரிக்கு வரி நியாயம் சொன்ன பலர் இன்று அரசின் எடுபிடிகள். டீ.பி.எஸ். ஜெயராஜ் போன்ற ஊடகவியலாளர்களுக்கு புலிகள் அழிக்கப்படுவதற்கு முதல் நாள் வரைக்கும் தெரிந்திருக்காத நியாயம் மறு நாள் பேரினவாத அரசின் நிழலில் ஞானம் பெற்றது போல உதித்துவிட்டது.

அரச ஆதரவுக் கும்பல்களின் மறுபக்கத்தில் புலிகளின் புலம்பெயர் பினாமிகள் சுய நிர்ணைய உரிமையைக்கான போராட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்க தம்மாலான அத்தனையையும் செய்யத் தயாராகவுள்ளனர். 2002 ஆம் ஆண்டில் புலிகளின் தலைவர் பிரபாகரன் முஸ்லீம்களை வெளியேற்றியமைக்காக வருத்தம் தெரிவித்திருந்தும், புலம்பெயர் பினாமிகள் தமது பிழைப்பிற்காக வெளியேற்றத்தை நியாயப்படுத்துகின்றனர். பிரபாகரனுக்கு ஒளிவட்டம்கட்டி முள்ளிவாய்க்காலில் அழித்தத்துத் துவம்சம் செய்யத அதே பினாமிகள் போராட்டத்தின் தவறுகளைச் சுய விமர்சனம் செய்யவும், கற்றுக்கொள்ளவும் மறுப்பதற்கு அவர்களின் பிழைப்புவாத நோக்கங்களே காரணம்.

உலக மக்களுக்கு ஈழப் போராட்டத்தை இன்னும் வன்முறையாகவே காட்டிக்கொள்ளும் இவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனமும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளும், இலங்கை இந்திய அரசுகளும் முழுப் போராட்டத்தையும் நியாயமற்றது எனப் பிரச்சாரம் மேற்கொள்ளத் துணை செல்கின்றனர். அருவருப்பான இப் பேர்வளிகள், மக்கள் நலனில் அக்கறையற்றவர்கள். பேரினவாதத்திற்கு மறைமுகமாகச் சேவையாற்றுபவர்கள்.

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயம் உலக மக்கள் மத்தியில் இன்னும் வலுவிழந்திருப்பதற்கு இவர்கள் அனைவரும் நேரடியாகப் பங்களிக்கின்றனர். இன்று முஸ்லீம் மக்களிடம் ஒவ்வொரு மனிதனும் மன்னிபுக் கேட்பது மட்டும் போதாது, அவர்கள் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்படுவதற்காகக் குரலெழுப்ப வேண்டும். குடியேற்றப்பட்டவர்கள் மீள வழமைக்குத் திரும்புவதற்கு அரசுகள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பொதுபல சேனா போன்ற அமைப்புக்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த மண்ணில் வாழத் தலைப்படும் முஸ்லீம்களுக்குக் கிடைக்கவில்லை.

12 thoughts on “பகடைக் காய்களாகும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள்!”

 1. PART OF MINORITIES- THE THREE RELIGIONS ,OTHER THAN HINDUS AND CHRISTIANS ARE COMFORTABLE TODAY JUST BECAUSE OF DIVIDE AND RULE THEORY. TO BE MORE CAUTIOUS CONSIDERING THE FUTURE PROBABILITIES ALL HAVE TO EMBRACE ISLAM. ONLY THE RUTHLESS MUSLIM COUNTRIES COULD SEND FIGHTING WINGS W/O DISTURBING THE LOCAL MUSLIMS. OTHER WISE ALL MINORITIES MAY BEAR SIMILAR BARBARIAN ATTACKS ANY DAY.CAN’T BELIEVE ANY ONE ANY TIME. PROVEN FACTS TELL WHAT IS IN STORE FOR TOMORROW.

 2. முக்கியமான கட்டுரை
  “இன்று முஸ்லீம் மக்களிடம் ஒவ்வொரு மனிதனும் மன்னிபுக் கேட்பது மட்டும் போதாது, அவர்கள் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்படுவதற்காகக் குரலெழுப்ப வேண்டும்.”

  முன்னர் முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் படியான வேண்டுகோளை சிலர் விடுத்தபோது அதனைக் கடுமையான விமர்சித்த இனியொரு இன்று மாறியிருப்பது குறித்து சந்தோஷம்.

  தொடர்க.

  1. முஸ்லிம்களிடம் ஒவ்வொரு தமிழனும் மன்னிப்பு கேட் க வேண்டுமென்றால் அதற்கு முன்பு கிழக்கு அம்பாறை மாவட்டத்தில் சிங்களப்படைகளின் கூலிப்படையாக இயங்கிய முஸ்லிம் ஊர்காவல் படையால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்காக ஒவ்வொரு முஸ்லிம் தலைவரும் முஸ்லிமும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்பது மட்டுமல்லாது .

   கிழக்கு அம்பாறையில் தமிழ் கிராமங்கள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் துரத்தப்பட்டுமுள்ளதோடு மட்டுமல்லாது அந்த தமிழ் கிராமங்கள் அனைத்தும் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன . இந்த கிராமங்களிலிருந்து முஸ்லிமகள் வெளியேற்றப்பட்டு அந்த கிராமங்களில் தமிழ் மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும் . யாழில் முஸ்லிகள் இன்று ஒரளாவாது மீள் குடியேற்றபட்டுள்ளார்கள் .
   ஆனால் கிழக்கில் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் தமிழ்க் மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்பட்டவேயில்லை என்பதை வோட்டர் போன்ற அவசரக்குடுக்கைகளுக்கு இடித்துரைக்க விரும்புகிறேன்

 3. தடுப்பு முகாம்களில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்காக முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்றப்படக் கூடாது என்று கருதினால் அதைப் போன்ற கோமாளித் தனம் வேறு இல்லை.

  1. NO SUCH DIVIDING TACTICS COULD BREAK THE BOND AS EXPECTED BY THE BLACK-SHEEP WHO SERVE THE INTERESTS OF THE RUTHLESS BARBARIANS WHO HAD FINISHED ALL THESE MINORITIES SYSTEMATICALLY. NOW THE BEST THING IS TO EMBRACE ISLAM TO BE SECURITY-ORIENTED AND EVEN BEYOND THAT OF FULL LIBERTY.ASSURED BY THE RUTHLESS MUSLIM COUNTRIES.

  2. முஸ்லிம்களை யாழில் இன்னமும் அரசு குடியேற்றாமல் இருக்கிறதென்பதற்காக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கூடாதென கோருவதும் கோமாளித்தனத்தை விட மோசமானதுதான்.

 4. ஒவ்வொரு தமிழனும் மன்னிப்பு கேட்பது சரி இத்தனை வருடங்களாக மீளக் குடியேற விடாமல் அரசியல் செய்து வரும் அயோக்கியத் தலைவர்களை என்ன கேட்கிறீர்கள்? இத்தனை வருடமாய் சுமந்திரன் அரேபியாவிலா இருந்தார்?

 5. அமிர்தலிங்கம் மற்றும் சகாக்கள் தமது சுயநல அரசியலுக்கு போராளிகளை (பிரபாகரன், உமாமகேசுவரன்….) பயன் படுத்தினார்கள். அன்றைய சந்தர்ப்பவாத மிதவாத தமிழ் தலைமைகளின் தோல்வி ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்தது. இந்த ஆயுத போராட்ட எழுச்சியில் ஆலால சுந்தரம், தர்மலிங்கம் பின்னர் அதன் தலைவரான அமுதலிங்கம் போன்றோர் பலியாகினர். இன்று முழு போக்கிரித்தனமான அரசியல் செய்யும் சுமந்திரன், சம்பந்தர், மாவை மற்றும் அவர்களின் , அவர்களை போன்றோரின் தற்குறிகளும் செய்யும் போக்கிரித் தனங்களும் யாரைப் பலி கொள்ளப் போகிறதோ தெரியவில்லை!

  ஒரு மக்கள் கூட்டத்தை யாழில் இருந்து 24 மணித்தியாலத்தில் வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பே மாற்றுக் கருத்து எதுவும் என்னிடமில்லை. ஆனால் தமிழர்களின் களவாணித் தலைவராக வர துடிக்கும் சுமந்திரன்!, சிங்கள தேசம் செய்த இனச் சுத்திகரிப்பை மறைக்க சமன் செய்யும் கோட்பாடு ஒன்றை இந்திய இலங்கை நிகழ்ச்சி நிரலுடன் சேர்ந்து பரப்ப முயல்கிறார்.

  நிற்க கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் விடுதலை அமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அச்ரப்ப் மற்றும் கிஸ்புல்லாஹ் போன்றோரின் வழி நடத்தலில் வகைதொகையற்று தமிழர் கொன்று ஒழிக்கப் பட்டனர் பல தமிழ் கிராமங்கள் கபளீகரம் செய்யப் பட்டனர்.

  முஸ்லிம்களின் மத நிறுவனங்கள் தமிழினப் படுகொலையை நெறிப் படுத்தினர் என்பதுக்கு நான் வாழும் நேரடிச் சாட்சி . 1985 இன் நடு பாகம் மட்டக்களப்பில் மஞ்சன் தொடுவா, ஆரையம்பதி, ஏறாவூரை அண்டிய தமிழ் கிராமங்ககள் மற்றும் அம்பாறையில் காரைதீவு கிராமத்தில் நடந்த குடுப் படுகொலைகள் சொத்து அழிப்பு என்பவற்றுக்கு காத்தான் குடியில் உள்ள பிரதான பள்ளிவாயல் மற்றும் கடற்கரை பள்ளிவாயல் உட்பட அனைத்து பள்ளி வாயால் களிலும் பகிரங்கமாக குண்டர்கள் திரட்டப் பட்டார்கள் முஸ்லிம்களையும் முஸ்லிம் கிராமத்தையும் பாது காக்க வாருங்கள் என பள்ளிவாசல்களே ஒலிபெருக்கி மூலமாக வேண்டுதல் விடுத்தன பின்னர் அதிரடிப் படையின் உதவியுடன் பாதுகாப்பாகச் சென்று படுகொலைகளையும் சொத்தளிப்பையும் செய்தன. 1990 களின் பின்னர் முஸ்லிம் களால் செய்யப் பட்ட கூடு கிராம அழிப்புகள் என்னில் அடங்காதவை. இப்போது ரிசாத் பதியுதீன் செய்வது மீள் குடியேற்றம் அல்ல அதுவும் மிக நுட்ப்பமான இன அழிப்பே. இடம் பெயர்ந்த இடம் பெயர்விக்கப் பட்ட அனைத்து முஸ்லிம்களும் குடியேற்றப் படவேண்டும், இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எமது வளங்களை அழித்து மாவட்ட காணிப் பகிர்வு விகிதங்களை தாண்டி 10 ஏக்கர் 20 ஏக்கர் என நிலா ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதும். யனாதிபதியிடம் சென்று தமிழர் முழு நிலங்களையும் அபகரித்து விட்டார்கள் என்றும் இடம் பெயர்ந்த முஸ்லிகளை தமிழர்கள் உதாசீனம் செய்வதாகவும் இடம் பெயர்ந்த முஸ்லிம்களிடம் காணி குறித்த ஆதாரங்கள் ஏதும் இல்லை, அவர்கள் வாழ்ந்த இடங்களிலே மாத்திரம் குடிஎற்றுவதாகவும் முழு பொய்யை இனவாத நெடியோடும் இனச் சுத்திகரிப்பு நோக்கோடும் சொல்லுவது மிகவும் கேடானது. மனம் வருந்தக் கூடியது.

  எதுவானாலும் ரிசாட்டின் மீள் குடியேற்றத்தில் இடம் பெயர்விக்கப் பட்ட முஸ்லிம்கள் சரியான பயனைப் பெறவேண்டும் என மனதார விரும்ப்புகின்றேன்.

  சரியான பயன் என்பதில் பிழையான எத்தனங்கள் உள்நுழையாமல் இருப்பது இரு சமூகங்களுக்கும் தேவையானது.

  எஸ். ஜி. ராகவன்

 6. தமிழின வெறியும்- வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் விவகாரமும்:

  அண்மைக்காலமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் விவகாரத்தினை நியாயப்படுத்தி சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
  1.” அவர்களின் பாதுகாப்பினை முன்நிறுத்தியே வெளியேற்றம்”
  .பதில்- புலிகளை மீறி யாரும் வடக்கில் முஸ்லீம்களை தாக்கமாட்டார்கள், அவ்வாறு யாராவது செய்தாலும் பாதுகாக்க வேண்டியது புலிகளின் பொறுப்பே.
  2.”பள்ளிகளில் வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன”.
  பதில்- இது உண்மையா என்பதே சந்தேகம். அவ்வாறு உண்மை என்று வைத்தாலும் சில வாள்கள் மட்டும் வைத்திருத்தல் நவீன துப்பாக்கிகள், பீரங்கிகளை கொண்ட உலகிலேயே பலம்வாய்ந்த புலிகள் இயக்கத்திற்கு ஒரு பொருட்டல்ல.
  3.” முஸ்லீம்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படவில்லை”.
  பதில்- உண்மையில் அவர்களிடமிருந்து 500ரூபா பணம், ஒரு மாற்றுடை தவிர எல்லாமே பறிக்கப்பட்டன. சிறுமிகளிடம் காதிலிருந்த தோடுகள் கூட கழட்டி எடுக்கப்பட்டன.
  4.” முஸ்லீம்கள் யாரும் கொல்லப்படவில்லை”.
  பதில்-பல கோடிஸ்வர முஸ்லீம்கள் வடக்கிலேயே தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டனர். சிலர் கப்பப்பணம் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர், மற்றும் சிலர் இறுதிவரை விடுவிக்கப்படவில்லை.
  5. “கிழக்கில் முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் தமிழர்களை கொன்றனர். அதற்கு பழிக்குப்பழி”.
  பதில்- கிழக்கில் தமிழரிறற்கு எதிரான வன்முறைகள் சில அரச புலனாய்வு அமைப்புக்களால்முஸ்லீம்பெயரில் மேற்கொள்ளப்பட்டன, ஏனைய பல மதவெறிபிடித்த முஸ்லீம் ஆயுதக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது உண்மை. ஆனால் அதற்கு அந்த முஸ்லீம் குழுக்களே பொறுப்பு.
  அப்பாவி முஸ்லீம்கள் அல்ல. கிழக்கில் அப்பாவி முஸ்லீம்கள் புலிகளாலும் , மற்றைய தமிழ் இயக்கங்களாலும் முன்னரும் கொல்லப்பட்டனர்.
  6.” முஸ்லீம்கள் வந்தேறு குடிகள்”.
  பதில்- அவ்வாறு பார்த்தால் உலகம் முழுக்க பழங்குடி மக்களிற்கே சொந்தம். இலங்கை இயக்கர், நாகரிறகே சொந்தம். புலம்பெயர் நாடுகளி்ல் தமிழர் இருக்கமுடியாது.
  எனவே அப்பாவி முஸ்லீம்கள் வெளியேற்றம் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இதற்காக 2002 இல் புலிகளின் தலைவர் வருத்தத்தினை தமிழிலும், பாலா அண்ணா மன்னிப்பினை ஆங்கிலத்திலும் தெரிவித்துவிட்டார்கள். இன்றும் எம்மிலுள்ள இனவெறிபிடித்த சிலரிற்கு இது விளங்கவில்லை.

 7. சுமேரியன்! அவர்களின் விமர்சனத்துக்கு எனது எதிர் விமர்சனம்

  விமர்சனம்

  கிழக்கில் முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் தமிழர்களை கொன்றனர். அதற்கு பழிக்குப்பழி”.
  பதில்- கிழக்கில் தமிழரிற்கு எதிரான வன்முறைகள் சில அரச புலனாய்வு அமைப்புக்களால்முஸ்லீம்பெயரில் மேற்கொள்ளப்பட்டன, ஏனைய பல மதவெறிபிடித்த முஸ்லீம் ஆயுதக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது உண்மை. ஆனால் அதற்கு அந்த முஸ்லீம் குழுக்களே பொறுப்பு.
  எதிர்விமர்சனம்
  என்ன சொல்ல வருகின்றீர்கள் முஸ்லிம்கள் தரப்பில் தமிழ் மக்கள் மீது மேல் கொண்ட படுகொலைகள் வன்முறைகள் முஸ்லிம் சமூகம் பொறுப்புச் சொல்லவும் முடியாது மன்னிப்பும் கேட்க முடியாது அது குறித்து கவலை படவும் முடியாது. ஆனால் தமிழ் தரப்புகளால் முஸ்லிம்கள் மீது மேல் கொள்ளப் பட்ட வன்முறைகளுக்கு தமிழர்கள் வெட்கித் தலை குனிந்து மன்னிப்பு கோரவேண்டும் என்கிறீர்களா? இரண்டுமே இனவன்முறைதான். என்பதை சொல்ல எந்த இனவெறி தங்கைகளை தடுக்கிறது?

  வடக்கில் இடம்பெயர்விக்கப் பட்ட முஸ்லிம்களை குடியேற்றத்துக்கு எந்த தமிழ் தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலர் தமது கபட நோக்கம் கருதி வடமாகாண சபையும் தமிழ் கூட்டமைப்பும் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் குடியேற்றத்துக்கு எதிராக இருப்பதாக அபத்தமான குற்றச் சாட்டை முன்வைக்கிறார்கள்.

  இடம்பெயர்விக்கப் பட்ட முஸ்லிம்கள் குறித்து புலிகள் உள்ளிட்ட பெரும்பாலான தமிழ் தரப்புகள் மன்னிப்பு கூறிவிட்டன. ஆனால் இன்றுவரை கிழக்கில் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப் பட்ட தமிழ் மக்களின் கிராமங்கள் மற்றும் காணிகள் குறித்து எந்த முஸ்லிம் தரப்பும் மன்னிப்பு கோரவும் இல்லை அந்த கிரமாங்களை திருப்பி கொடுக்க குரல் கொடுக்கவும் இல்லை.

  இப்போது சுமந்திரனின் உள்நோக்கம் குறித்த கருத்து குறித்து தான் பேசப் படவேண்டும். தமிழர் மீது ராஜபக்சே அரசு மேல் கொண்ட கூட்டுப் படுகொலை மீதான விசாரணைகள் திசை திருப்பப்பட்டு அனைத்து குற்றங்களையும் தமிழர் மீதே போட்டு தமிழர்களின் மீதான இன அடக்குமுறைகளை நியாப் படுத்தும் அதனை ஊக்குவிக்கும் சிங்கள இந்திய கூட்டுக் களவாணிகளின் கீழ்த்தரமான விசுவாசி சுமந்திரனின் சமச் சீரற்ற கருத்துப் பகிர்வின் உள்நோக்கம் குறித்து ஆராய்தலே தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை பயக்கும்.

  S.G.Rgavan. (Canada)

  1. 1.கிழக்கில் நடந்த வன்முறைகளிற்கு அப்பாவி முஸ்லீம்கள் பொறுப்பாக முடியாது என்பதே எனது கருத்து. மேலும் முஸ்லீம் ஆயுதக்குழுக்களை முஸ்லீம் மக்கள் தமது ஏகபிரதிநிதிகளாக ஏற்பதாக சொல்லவில்லை.
   2. தமிழ்- முஸ்லீம் சிக்கலில் 1915 கலவரத்தின்போது நாம் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை பக்கம் நிற்காமல் ஒடுக்கிய சிங்களப் பேரினவாதத்துடன் கைகோர்த்து நின்றது நாம்.
   3.சுமந்திரனைப்பற்றி எனது பதிவில் ஒன்றுமே கூறவில்லையே. இப்போது இப்பிரச்சனை பெரிதும் பேசப்படுவது 25 ஆண்டுப்பூர்த்தி (30-10-2015)ஆனதே தவிர சுமந்திரன் கூற்றல்ல. சுமந்திரனோ அல்லது கயேந்திரகுமாரோ தமிழர்களில் ஒரு பகுதியினரை சாதி, பால் கருதி தமிழர்களே ஒடுக்குவது பற்றி கதைப்பதே இல்லை, இந்த நிலையில் முஸ்லீம்களிற்காக எப்படி சுயநலமில்லாமல் செயற்படுவார்கள்.
   4. முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் பற்றி கதைப்பது வேறு ,செயற்படுவது வேறு. வடமாகாண சபை இதுவரை முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக உருப்படியாக செய்தது என்ன
   நீதி என்பது எல்லோரிற்கும் பொதுவானது, எமக்கானது மட்டுமானதல்ல.

 8. வடமாகாண சபை இதுவரை முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக உருப்படியாக செய்தது என்ன???? ………???

  அவர்கள் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் குறித்து செய்தததும் செய்யப் போவதும் என்ன???………..??? ஒன்றும் இல்லை …… என்பதுதானே பதில்!………

  அவர்களால் மீள் குடியேறும் மக்களுக்கு சீனியும் தேயிலையும் பருப்பும் வாங்கி குடுக்கும் அதிகாரத்தில் ஆவது இருக்கிறார்களா?………………….. அவர்களிடம் தான் கேட்டுப் பார்க்கவேண்டும்.

Comments are closed.