40 வருட ஈழப் போராட்டத்திற்கு ஐ.நாவில் மரணச்சடங்கு!

Human-Rightsவன்னி இனப்படுகொலை நடைபெற்று ஏழு வருடங்கள் கடந்த நிலையில் ஏனைய உலக நாடுகளைப் போன்று போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படாமல், புலம்பெயர் அமைப்புக்களாலும், அரசியல் வாதிகளாலும், தமிழ் இனவாதிகளாலும் ஐ.நாவின் மூடிய அறைக்குள் ஒரு சில அதிகாரிகளின் கைகளில் போர்க்குற்ற விசாரணை என்ற தலையங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் விளை பலனாக அமெரிக்கா தனது அடியாள் அரசான இலங்கை அரசை தெற்காசியாவின் கேந்திர நாடான இலங்கையில் நிறுவிக்கொண்டது.

இதனூடாக போராட்டமும் மக்களும் காட்டிக்கொடுக்கப்பட்டனர். போராளிகளின் தியாகங்கள் மண்ணோடு மண்ணாக்கப்பட்டது. மக்களின் உரிமைப் போராட்டம் இன்று உலகின் அதிபயங்கர அரசான அமெரிக்க அரசிடமும் அதன் துணை நாடுகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாளை 29ம் திகதி ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படவுள்ளது. போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான கால அவகாசத்தை நீடிப்பதாக இந்த அறிக்கை அமைந்திருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அனைத்தும் அற்றுப்போய்விட்டன.

கடந்த ஏழு வருடங்களாக போராட்டத்தைத் தனிமைப்படுத்தி அமெரிக்கா, இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத் துணை சென்ற அரசியல் வாதிகளும், அமைப்புக்களும் இப்போது பின்வாங்க ஆரம்பித்துள்ளனர். மக்களைத் தாம் ஏமாற்றியதைக் கூட சுய விமர்சனமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்த அமைப்புக்களும் தனிநபர்களும் தமது போலித் தேசியவாதத்தைத் தமிழ் இனவாதமாக வெளிப்படுத்தி இன்னும் சில காலங்களுக்கு மக்களை ஏமாற்றுவார்கள்.

போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளதாக மக்களை ஏமாற்றிய அமைப்புக்களும் தனி நபர்களும் கட்சிகளும் நாற்பது வருடப் போராட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழித்து அதற்கு ஐ.நாவில் மரணச்சடங்கு நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
இப் பிழைப்புவாதிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும், புதிய அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைப்பதும் இன்றைய காலத்தின் அவசியமானதும் அவசரமானதுமான தேவை.