அரசியல் நீக்கம் செய்யப்படும் முன்னை நாள் போராளிகளும் புதிய அரசியல் தலைமைகளும்

politicsஆயிரக்கணக்கான போராளிகள் தமது உயிரைப் பலிகொடுத்த மண்ணின் அரசியலை இன்று வாக்குப் பொறுக்கும் கட்சிகள் நிரப்பிக்கொண்டுள்ளன. சுரேஷ் பிரேமச்சந்திரனைத் தவிர ஆயுதப் போராட்ட இயக்கங்களில் ஈடுபட்ட போராளிகள் அனைவரும் வாக்குப் பொறுக்கும் கட்சிகளாலும் அதன் தலைவர்களாலும் அரசியல் நீக்கம் செய்யப்பட்டு சமூகத்தின் மத்தியில் அவலம் சூழ்ந்த வாழ்வை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். தாம் சார்ந்த சமூகத்தின் விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த போராளிகள் அனைவரும் அரசியலிலிருந்து திட்டமிட்டு அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர், சிலர் வாக்குப் பொறுக்கும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் மக்களும் போராளிகளும் தமது உயிர்களை உரமாக்கிய காலப்பகுதிகளில் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்ட ஐங்கரநேசன், விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களும், எரிந்துகொண்டிருந்த தமிழ் மண்ணிற்கு வெளியில் சுக போக வாழ்க்கை நடத்திக்கொண்டிர்ந்தவர்களும் இன்று மக்களின் தலைவர்களாக்கப்பட்டுவிட்டனர். சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் போன்ற வாழ்நாள் வாக்குப் பொறுக்கிகள் இன்று சமூகத்தை வழி நடத்துவதாக போராட்ட அரசியலை இலங்கைப் பாராளுமன்ற அரசியலை நோக்கி திட்டமிட்டுத் திசைதிருப்பியுள்ளனர்.

1986 ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த ஆயுதக் குழு ஒன்று நல்லூரில் நடைபெற்ற மக்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றின் மேல் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் நான்கு அப்பாவிகள் மரணித்துப் போயினர். அவ்வேளையில் கல்வி வியாபாரம் நடத்திக்கொண்டிருந்த ரெலோ ஆதரவாளரான ஐங்கரநேசன், மரணித்தவர்களின் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலைக்கழகத்திற்கு ஒலிபெருக்கி பொருத்திய வாகனத்தில் சென்று ‘பல்கலைக் கழகத்தை மயானகாண்டமாக்க அனுமதியோம்’ என மிரட்டினார். இன்று யாழ்ப்பாணத்தில் கடைந்தெடுத்த தேசியவாதியாக வேடமணிந்து மாவீரர் தினத்தை நடத்துகின்றார். அதே காலப்பகுதியில் போராட்ட இயக்கங்களில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட சந்தேகநபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிய சீ.வீ.விக்னேஸ்வரன் இன்று ‘மதிப்பிற்குரிய’ தேசியவாதி’. வாக்குப் பொறுக்க முன்வந்த போது, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு ஜனநாயகம் மீட்கப்பட்டுவிட்டது எனக் கூறிய விக்னேஸ்வரனைத் தேசியவாதியாக்கியாக்கியவர்களுள் சில முன்னைநாள் போராளிகளும் அடக்கம்.

இந்திய இராணுவத்தின் துணைப்படைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், மற்றொரு தேசியவாதி.

விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னர் சுத்திகரிக்கப்பட்ட போராட்ட அரசியலின் எச்ச சொச்சங்களையும் இப் பிழைப்பு வாதிகள் துடைத்தெறிய ஆரம்பித்துள்ளனர்.
இவர்களின் பின்புலத்தில் அப்பட்டமான வியாபார ஊடகங்கள் போட்டி போட்டுச் செயற்படுகின்றன. விடுதலைப் புலிகளின் முன்னை நாள் போராளிகள் சிலர், தமது பிழைப்பிற்காக இந்த வாக்குப் பொறுக்கிகளின் பின்னால் எந்த கூச்ச உணர்வுமின்றி அணிவகுத்து மரணித்துப் போன மக்களதும் போராளிகளதும் தியாகங்களைக் கொச்சைப்படுத்துகின்றனர்.

இன்று பாராளுமன்ற வாக்குப் பொறுக்கும் அரசியலை முன்வைத்து போராட்ட அரசியலின் எச்ச சொச்சங்களையும் அழித்துக்கொண்டிருக்கும் வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் பொதுவாகப் பிழைப்புவாதிகளே. இவர்களில் பொதுவாக அனைவரும் போராட்டத்திற்கும் சுய நிர்ணய உரிமைக்கும் எதிராகச் செயற்பட்டவர்களே.

இவ்வாறான அரசியல் சூழலில் தமது வியாபாரத்திற்குப் பயன்படும் வாக்குப் பொறுக்கியை முன்னிலைப்படுத்துவதே புலம்பெயர் தமிழ்த் தலைமைகளதும், வியாபார ஊடகங்களதும் அடிப்படை நோக்கம். இலங்கைப் பாராளுமன்றம் என்ற பன்றித் தொழுவத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமையை அழைத்துச் செல்வதே இவர்களின் பிழைப்புவாத அரசியலின் பின்புலம்.

One thought on “அரசியல் நீக்கம் செய்யப்படும் முன்னை நாள் போராளிகளும் புதிய அரசியல் தலைமைகளும்”

  1. ஆயுதப் போராட்ட இயக்கங்களில் ஈடுபட்ட போராளிகள் அனைவரும் அதன் தலைவர்களால் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்கள்தான். ஒரு சில அமைப்புகள் அரசியல் பேசின. அவ்வளவுதான். முக்கியமாக புலிகளில் இது நடந்தது. இன்று அவர்கள் அனைவரும் அரசியலிலிருந்து திட்டமிட்டு அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தற்செயலானது அல்ல.

Comments are closed.