மனித கவனயீனங்கள் உண்டுபண்ணும் விபத்துக்கள் பலியெடுக்கும் அப்பாவி உயிர்கள்: செங்கோடன்

accidentsஉலகெங்கிலும் வருடாந்தம் நிகழும் வீதி விபத்துக்களில் சிக்கி மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். இலாப நோக்கு கருதியும், அரசியல் இலாபம் கருதியும் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்படும் தேவையற்ற யுத்தங்களில், வருடாந்தம் மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும், புரட்சியாளர்களும் தடுக்க தவறுவதை போன்று, மனித கவனயீனங்களால் ஏற்படும் கொடூர விபத்துக்களில், மில்லியன் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாவதை, அரசுகளும் மக்களும் தடுக்க தவறிவருகின்றனர். இக்கட்டுரை கடந்த வருடம் இலங்கையில் நடந்த கொடூர விபத்துக்கள் பற்றியும் அவற்றை தடுக்க எடுக்கவேண்டிய சில நடைமுறைகள் பற்றியும் ஆராய்ந்து நிற்கிறது.

கடந்த ஆண்டு இலங்கையில், முப்பத்திஐயாயிரத்திற்கும் அதிகமான விபத்துக்கள் நடந்ததாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றில் ஆறாயிரத்துக்கும் அதிகமானவை அதிகோரமானவை என ஊடகங்களிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்ட இலங்கை பொலிஸ் திணைக்கள ஊடகப்பேச்சாளர், அவற்றால் இரண்டாயிரத்து முந்நூறுக்கும் அதிகமான அப்பாவி மக்களின் உயிர்கள் பலி கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 2013ம் ஆண்டினை விட 2014ம் ஆண்டில் நடந்த விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும், விபத்துக்களால், 2013ம் ஆண்டில் பலியான மக்களின் எண்ணிக்கையிலும், 2014ம் ஆண்டில் பலியான மக்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாக தெரிவித்த அஜித் ரோகண, மேலும் மனித கவனயீனங்களே விபத்துக்கள் நிகழ முக்கிய காரணியாக அமைகின்றது எனவும் தெரிவித்ததாக டெய்லி நியூஸ் இணைய செய்திசேவை செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குலக நாடுகளில் மூன்றாம் உலக நாடுகளை விட அதிக வேகமாக வாகனங்களை செலுத்துகின்ற போதிலும் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பமானது மிக அரிதாகவே காணப்படுகிறது. மேற்குலக நாடுகளில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்கள், வேக தடுப்பு முறைகள், வாகன தரிப்பிட முறைகள், முறையான வீதி பாதுகாப்பு ஒழுங்கு முறைகள், பாதுகாப்பு கடவைகள், வீதி குறியீட்டு அட்டைகள், முறையான விழிப்புணர்வு ஆகியன விபத்துக்களில் மக்கள் சிக்காமல் இயன்ற அளவு தடுத்துவருகிறது. ஆனால் இலங்கை போன்ற மூன்றாம் உலகநாடுகளில், வாகன ஓட்டுனர்களுக்கு வீதி ஒழுங்குகள் பற்றிய போதிய அளவு விழிப்புணர்வு இன்மை, அவை பற்றிய செயன்முறையுடன் கூடிய கல்வி அறிவின்மை, வீதி ஒழுங்குகளை, சட்டங்களை ( குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுதல், தொலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டுதல், முறையான சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனத்தை ஓட்டுதல், நித்திரை களைப்புடன் வாகனத்தை ஓட்டுதல், பயணிகள் மற்றும் ஓட்டுனர் இருக்கை பட்டி அணியாது வாகனத்தில் செல்தல், வாகன உதிரிப்பாகங்கள் முறையாக வேலை செய்கின்றதா என பரிசோதனை செய்யாது இருத்தல்) பின்பற்றாமை, வீதிகளில் பயணம் செய்யும் போது வாகன சாரதிகள் களைப்படையும் இடத்தோ, வாகனங்கள் பழுதடையும் இடத்தோ சாரதிகள் வீதியில் செல்லும் மற்றைய வாகனங்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் தரித்து நிற்பதற்கோ, பழுதடைந்தவற்றை உடனேயே அவ்விடத்தில் இருந்து அகற்றி திருத்தும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு, போதிய வசதிகள் இன்மை மற்றும் முறையான காப்புறுதி செயற்திட்டம் இன்மை, அரச அதிகாரிகளின் மற்றும் வீதி பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அசமந்த போக்கு தன்மை மற்றும் ஊழல் ஆகியன நாளாந்தம் வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்ல மிக முக்கிய காரணிகளாக அமைகின்றன.

மனித கவனயீனங்களால் நாளாந்தம் நடந்தேறும் வீதி விபத்துக்களால் இலங்கையில் மட்டும் அல்லாது உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகின்றன. ஆனால் அவற்றை, மனிதர்களுக்கு போதிய அளவு விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும் ( ஊருக்கு ஊர், நகரத்திற்கு நகரம், பாடசாலைகள், அரச அலுவலகங்கள், வங்கிகள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு கழகங்கள், சாரதிகளிற்கான அமைப்பு, வழிபாட்டுத்தளங்கள் ஆகியவற்றில் விபத்துக்கள் பற்றியும் அவை உண்டுபண்ணும் தாக்கங்கள் பற்றியும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம். ), முறையான செயன்முறைக்கல்வி மூலமும் ( சாரதிகளுக்கு பரீட்சை, மற்றும் செயன்முறை பரீட்சை நடத்தி சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படுகின்ற போதும், வீதி குறியீடுகள் மற்றும் வாகனத்தை செலுத்தும் முறைகள் பற்றிய போதிய அளவு செயன்முறை அறிவு அவர்களுக்கு போதிய அளவு உரிய முறையில் வழங்கப்படுவதில்லை. அவற்றை வழங்க அரசும் உரிய அதிகாரிகளும் அதன் முக்கியத்துவம் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ), தவறிழைக்கும் சாரதிகளுக்கு அவர்கள் விடும் சிறு தவறும் ஏற்படுத்தும் விபத்துக்களின் தாக்கத்தை உணரும் வகையிலான தண்டனைகளை வழங்கியும் ( உடனுக்குடன் சாரதி அனுமதி பத்திரத்தை போதுமான கால அளவிற்கு இரத்து செய்தல்), அதேபோல் தவறிழைக்கும், ஊழல் செய்யும் அரச அதிகாரிகள் மற்றும் வீதி பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அவர்கள் செய்யும் தவறுகளின் கடும் பின்விளைவுகளை உணரும் வகையில் கடும் தண்டனைகளை வழங்கியும் ( போதிய பயிற்சி பெற்ற, துடிப்பு மிக்க, கடமை உணர்வுள்ள வீதி பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பணிக்கு அமர்துவதன் மூலம் இதனை தடுத்து நிறுத்த முடியும். ), வீதி பாதுகாப்பு கருவிகளை நவீன மயப்படுத்துவதன் மூலமும் ( மூன்றாம் உலக நாடுகள் தமக்கு போதிய வசதியில்லாதவிடத்து பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் நவீனமயப்படுத்தப்பட்ட வீதி பாதுகாப்பு கருவிகளை செய்ய முயற்சிக்கலாம். ), வைத்தியசாலைகளில் தரமுயர்த்தப்பட்ட, இருபத்துநான்கு மணிநேரமும் இயங்கும் வீதி விபத்து சேவையை செயற்படுத்துவதன் மூலமும், காப்புறுதி நிறுவனங்கள், வாகனங்கள் பழுதடையும் இடத்து அவற்றை உடனுக்குடன் மற்றைய வாகனங்களிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்விடத்தில் இருந்து அகற்றி திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் முலமும் ( இவற்றை காப்புறுதி நிறுவனங்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் செய்வதே கிடையாது. இதனால் பல அப்பாவி உயிர்கள் தினமும் பலியாகின்றன. உரிய அரச அதிகாரிகள் அந்தந்த காப்புறுதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ), பார ஊர்திகளின் சாரதிகள் மற்றைய வாகனங்களின் சாரதிகள் களைப்படைந்தால் தரித்து நின்று இளைப்பாறுவதற்கு பாதையின் இருமருங்கிலும் தரிப்பிடங்களை அமைப்பதன் மூலமும், ( சாரதிகள் தாம் களைப்படையும் இடத்து, நேரத்தை மீதப்படுத்த மற்றும் பணம் உழைப்பதை மட்டும் கருத்தில் கொண்டு இயங்காமல், தம்முடன் பயணம் செய்யும் மற்றைய உயிர்களின் பெறுமதி அறிந்து ஓய்வெடுத்தபின் பயணத்தை தொடரவேண்டும். ) தடுத்து நிறுத்த முடியும்.

நோயாளிகளை பொறுப்புடனும் பொறுமையுடனும் சிகிச்சையளித்து காக்க வேண்டிது மருத்துவரின் முக்கிய கடமை என்பது போல், தம்முடன் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிகளின் உயிரையும் பொறுப்புடனும் பொறுமையுடனும் காக்க வேண்டியது ஒவ்வொரு சாரதியினதும் வீதி பாதுகாப்பு உத்தியோகத்தர்களினதும் மிக முக்கிய கடமையாகும் என உணர்ந்து செயற்படவேண்டும்.ஒவ்வொரு மனிதர் விடும் சிறு தவறும் இன்னொரு உயிரை குடிக்கும். அவற்றை உணர்ந்து மனிதர்கள் அனைவரும் செயற்படவேண்டும்.