தீராத வினைகளைத் தீர்க்கும் நீதிமன்றங்கள் (!?): இராமியா

mr_RADHAநடிகவேள் எம்.ஆர்.இராதா நடித்த இரத்தக் கண்ணீர் படத்தில்அவர் தொழுநோய்வயப்பட்டு வீதி வீதியாகப் பிச்சை கேட்டுக் கொண்டு வருவது போல் ஒரு காட்சி வரும். அதில் அவர் “தீராத வினைகளை எல்லாம் தீர்க்கும் திருமாலே” என்று பாடி, பிச்சை கேட்பார். அப்பொழுது அந்த வீட்டுக்காரர் தீராத வினைகளை எல்லாம் தீர்க்கும் திருமால் அவருடைய நோயை ஏன் தீர்க்கவில்லை என்று கேட்பார். உடனே எம்.ஆர்.இராதா ஆகா! நமது மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்களே என்று கூறிக் கொண்டே அப்படி ஒன்றும் தீராது என்றும் பிச்சை கேட்பதறகாகச் சொல்லும் பொய் என்றும் கூறுவார்.

அது போல் ஒரு நிகழ்வு மதுரையில் நடந்து உள்ளது. கடந்த 1.7.2015 முதல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக் கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று சென்னை உயர்நீதி மன்றம் ஆணையிட்டு இருக்கிறது. ஆனால் தேவைப்படும் தலைக் கவசங்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு கூட சந்தையில் கிடைக்காத பொழுது இந்த ஆணையை நடைமுறைப்படுத்துவது எப்படி என்று பாதிக்கப்படும் மக்களும், தலைக் கவசம் அணிய விருப்பம் இல்லாதோரும் கேட்கிறார்கள்.

இந்நிலையில் 9.7.2015 அன்று மதுரையில் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி, கட்டாயத் தலைக் கவச ஆணைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசம் அணியாமல் ஊர்வலம் சென்று இருக்கிறார்கள். இப்போராட்டத்தில் அவர்கள் எழுப்பி உள்ள வினாக்கள் தான் இரத்தக் கண்ணீர் திரைப்படக் காட்சியை நினைவுபடுத்தின.

தலைக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் விதியைப் பிறப்பிக்கும் நீதிமன்றம், அதை விட அதிகமாக மனித உயிர்களையும், வாழ்க்கையையும் காவு வாங்கும் மதுக் கடைகளை மூடுவற்கு ஏன் ஆணையிடவில்லை என்று அவர்கள் கேட்டு இருக்கிறார்கள். மேலும் புதிய சாலைகளை அமைக்கும் போதும் பழைய சாலைகளைப் புதுப்பிக்கும் மற்றும் பராமரிக்கும் போதும், ஒப்பந்தக்காரர்கள் அரசிடம் பெற்றுக் கொள்ளும் பணத்திற்கு ஏற்ப தரத்துடன் அமைக்காமல், குண்டும் குழியுமான சாலைகளை அமைத்து, விபத்துகள் நடப்பதற்கு வழிகோலுவதைத் தடுக்க வேண்டும் என்று ஏன் ஆணையிடவில்லை என்றும் கேட்டு இருக்கிறார்கள்.

இரத்தக் கண்ணீர் படத்தில் எம்.ஆர்.இராதா கூறியது போல் நமது மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டதாகச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஆனால் நமது சமூகத்தின் மீது கவிந்துள்ள இருளின் அடர்த்தியை நோக்குகையில், மதுரை வழக்கறிஞர்களின் ஞானோதயம் உறை ஊற்றக் கூட போதுமானது அல்ல.

முதலில், நாடாளுமன்றமும், சட்ட மன்றங்களும் இயற்றிய சட்டங்கள் சரிவர நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்று பார்க்கும் கடமை தான் நீதிமன்றங்களுக்கு உண்டே தவிர, சட்டங்களையும், விதிமுறைகளையும் இயற்றும் உரிமை நீதிமன்றங்களுக்கு இல்லை. ஆனால் நீதிமன்றங்கள் பல வேளைகளில் சட்ட விதிகளை உருவாக்கித் தீர்ப்பாக அளிக்கின்றன. இடையிடையே அப்படி செய்யக் கூடாது என்றும் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்ளவும் செய்கின்றன. ஆனால் அப்படிச் செய்வதை மட்டும் நிறுத்துவது இல்லை.

தலைக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் விதிமுறை சாதாரணமானது. ஆனால் உயர்சாதிக் கும்பலினர் தகுதிக்கும் திறமைக்கும் மீறிய வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதற்காக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் இயற்றிய விதிமுறைகள் மிகவும் கொடூரமானவை. அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதில் வரம்பு எதுவும் இல்லாத போது, நீதிமன்றம் 50% உச்ச வரம்பு விதித்து சட்ட விதியை இயற்றி உள்ளது. மேலும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் வளர்ந்த பிரிவினர் (creamy layer) என்ற சொற்றொடரே இல்லாத போது, அக்கருத்தை நாட்டு நலனுக்கு எதிராகத் திணித்து உள்ளது.

தங்களின் உரிமைகளில் நீதிமன்றம் தலையிடுகிறதே என்று நாடாளு மன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் கவலைப்படுவது இல்லை; கவலைப்பட முடிவது இல்லை.

யார் கவலைப்படுவது இல்லை? யாரால் கவலைப்பட முடிவது இல்லை? என்று கேட்கிறீர்களா?

ஆதிக்கசாதிக் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் கவலைப்படுவது இல்லை என்பது மட்டும் அல்ல; அவர்கள் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

ஒடுக்கப்பட்ட வகுப்பு உறுப்பினர்களைப் பற்றிக் கேட்கிறீர்களா? இது போன்ற அநியாயங்களை எல்லாம் உணர்ந்து கொள்ள முடியாத “அறிவாளிகள்” மட்டுமே உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட முடியும்படியான வலைப் பின்னல் வலுவாகப் பின்னப்பட்டு இருக்கிறது. [அம்பேத்கரின் தனி வாக்காளர் தொகுதிக் கோரிக்கையைத் தன் உயிரைப் பணயம் வைத்துத் தோற்கடித்த காந்தியாருக்கு உயர்சாதிக் கும்பலினர் நன்றி சொல்ல வேண்டும்]

இந்தக் கட்டுக்காவலை மீறி, சுதந்திர உணர்வு உள்ளவர்கள் உறுப்பினர்களாக வந்தால் அவர்களை, ஆசை காட்டியும் அச்சுறுத்தியும் கட்டுக்குள் கொண்டு வர ஆதிக்க சாதியினரால் முடிகிறது. இவர்கள் தங்கள் உரிமையில் நீதிமன்றங்கள் தலையிடுகிறதே என்று கவலைப்பட முடியாதவர்கள்.

ஆசைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல், அம்பேத்கரைப் போல் துணிந்து நிற்க எத்தனை பேரால் முடியும்? அப்படி இருப்பவர்களை இருட்டடிப்பு செய்வதன் மூலமே எளிதாகச் செயலற்றவர்களாக ஆக்க முடியும். அது தான் நடந்து கொண்டு இருக்கிறது.

அப்படியானால் என்ன தான் தீர்வு என்று கேட்கிறீர்களா? இதற்கு மறைந்த குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் விடை அளித்து இருக்கிறார். மிகச் சிறிய எண்ணிக்கையில் மக்கள் மூடிய அறைக்குள் மட்டும் பேசிக் கொள்வதில் பயன் ஏதும் இல்லை. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க முனைவோரின் எண்ணிக்கையைப் பெருமளவு உயர்த்த வேண்டும். அவர்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டும். அரசு அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்க முடியாமல் போகக் கூடாது என்ற அளவில் அரசுக்கு நெருக்குதலைத் தர வேண்டும். இது தான் தீர்வு.

ஆதிக்க சாதி கும்பலினரும், ஊடகங்களும் நீதிமன்றங்கள் தான் நீதிக்கும் நியாயத்திற்கும் கடைசிப் புகலிடம் என்று உருவாக்கி வைத்து இருக்கும் மாயையை உடைத்து எறிந்து விட்டு, மக்கள் தான் மாற்றத்தின் சக்தி என்று ஜெயில் சிங் கூறியதை மனதில் கொண்டு, நம் உரிமைகளை மீட்டெடுக்க நாம் அணியமாக வேண்டும்.

இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.7.2015 இதழில் வெளி வந்துள்ளது)