பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)

himi
மகாமிதாவ ஹிம்மி

பொது பல சேனாவின் பின்புலத்தில் கோத்தாபய, அமெரிக்க அரசு, நோர்வே இணைந்த கூட்டே செயற்படுகிறது என்ற தகவல் 2013 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளியாக ஆரம்பித்திருந்தது.

பெப்ரவரி மாதம் 2013 இல் பொதுபல சேனாவின் முக்கிய துறவிகளில் ஒருவர் அந்த அமைப்பு WIF இடமிருந்தும் நோர்வேயிடமிருந்தும் பணம் பெற்றுக்கொள்வதாகக் கூறி அமைப்பிலிருந்து விலகிக்கொண்டார். பின்னதாக தான் விலகியமைக்கான காரணம் WIF மற்றும் நோர்வே ஆகியவற்றின் சந்தேகத்திற்குரிய நிதி வழங்கல் என்று மகிந்த ராஜபக்சவிற்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார். அக்கடிதத்தின் சிங்களப் பிரதி லங்காநியூஸ் என்ற இணையத்தில் வெளியானது.

தகவல் கசிய ஆரம்பித்ததும் பொதுபல சேனாவிலிருந்து வெளியேறிய மகாமிதாவ ஹிம்மி என்ற துறவியை அமைப்பின் துறவிக் குண்டர்கள் பொதுபல சேனா அலுவலகத்தில் வைத்து நையப் புடைத்தனர். தவிர, பத்து வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அவரின் கருத்திற்குப் பூட்டுப்போட்டனர்.

ஏகாதிபத்திய நாடுகள் ஆசிய நாடுகளில் மேற்கொள்ளும் அழிவுகளை மிக நேர்த்தியான திட்டமிட்டுச் செய்கின்றன. நோர்வே அரசு தாம் பொதுபல சேனா நோர்வே செல்வதற்கு வழங்கிய நிதியைத் தவிர தமக்கு எந்தத் தொடர்புகளும் இல்லை என இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் அறிக்கை விடுத்தது.பொது பல சேனா நோர்வேயின் அடியாட்படை எனத் தெரிந்தால் அதன் இருப்புக்கேள்விகுள்ளாகும் என்பது நோர்வே நாட்டிற்குத் தெரியாததல்ல.

பொதுபல சேனாவின் மத்திய குழுவில் கிரான விமலஜோதி தேரர் அதன் தலைவராகவும் ஞானசார தேரர் செயலளாராகவும் அங்கம் வகிக்கின்றனர். தவிர மத்திய குழுவில் பாகசார தேரர், நந்தா தேரர் ஆகியோர் அங்கம் வகிக்க திலந்த விதானகே தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயற்படுகிறார். நோர்வே WIF தன்னார்வ நிறுவனத்தில் இதே பதவிவகித்த விதானகே படிப்படியாக உயர்ந்து குறித்த பொதுபல சேனாவின் பதவிக்குத் தெரிவாகிறர். தான் நோர்வே நாட்டின் தன்னார்வ நிறுவனத்தில் பதவிவகித்த காலத்திலிருந்து இன்றைய பொதுபல சேனாவின் பதவி வரைக்கும் திலந்த விதானகே தனது லிங்டின்(linkdin) பகுதியில் வெளியிட்டுள்ளர்.

பொதுபல சேனாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தாக்குவதற்கு தயாராகும் திலந்த விதானகே தலைமையிலான துறவிகள்.
பொதுபல சேனாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தாக்குவதற்கு தயாராகும் திலந்த விதானகே தலைமையிலான துறவிகள்.

பொதுபல சேனா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பதாக இங்கு குறிப்பிட்ட பௌத்த துறவிகளில் பெரும்பாலானவர்கள் திலந்த விதானகேயுடன் நோர்வே நாட்டிற்குச் சென்று பேச்சுக்களில் ஈடுபட்டனர். அதுவும் நோர்வே அரச அமைப்பான சமாதானத்தை கட்டமைப்பதற்கான வள நிலையம் (Norwegian Peacebuilding Resource Centre)NOREF என்பதன் நிதியைப் பெற்றுக்கொண்டு அவர்களின் பயண ஏற்பாட்டிலேயே நோர்வே சென்றுள்ளனர். சமாதானம், பௌத்த பிக்குகள், திலந்த விதானகே என்ற சமன்பாடு பொருந்திய ஒரே இடம் பொதுபல சேனா என்ற நாசி கட்சியே.

சமாதானப் பேச்சு, உதவி என்ற தலையங்களில் உலக நாடுகளில் போராட்டங்களைச் சிதைத்து மக்களை தமது நலன்களுக்கு ஏற்பப் பந்தாடும் ‘மகத்தான’ பணியை அமெரிக்கா வழங்கியிருப்பது நோர்வே நாட்டிற்கே. இஸ்ரேலிற்கு அணுவாயுத உற்பத்திக்கான மூலப்பொருட்களை வழங்கிக்கொண்டே பலஸ்தீனத்தோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய நோர்வே நாட்டிற்கு பொது பல சேனா விவகாரம் எறும்பு கடிப்படதைப் போன்றது.

இவ்வாறு பௌத்த துறவிக் குண்டர்கள் 2011 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நோர்வே நாட்டில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். திலந்த விதானகே ஆசியன் திரிபுயூன் என்ற இணையச் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் நோர்வேக்குச் சென்ற பிக்குகள் கூட்டம் சுவீடன் வழியாக பரிசிற்குச் சென்று அங்கிருந்து இலங்கை சென்றது எனக் கூறுகிறார்.

தலித் முன்னணி நபர்களுடன்..
தலித் முன்னணி நபர்களுடன்..

ஆக, நோர்வேயின் தன்னார்வ நிறுவனமான NOREF இனால் பயணம் முழுவதற்குமான பணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். திலந்த விதானகே தனது நேர்காணலின் மற்றொரு பகுதியில் நோர்வேயிலும் சுவீடனிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சந்தித்தாகக் கூறுகிறார். ஆனால் அங்கெல்லாம் எங்கே எந்தச் சந்தர்ப்பத்தில் யாரைச் சந்தித்தோம் என்ற தகவல்களை மறந்துவிட்டதாகக் கூறுகிறார்.

நோர்வேயின் பணத்தில் பாரிசிற்குச் சென்ற திலந்த விதானகே மற்றும் ஞானசார குழு அங்கு சில சந்திப்புக்களை நடத்தியதாக திலந்த ஒப்புக்கொள்கிறார். பாரிஸ் சந்திப்புக்களில் எமக்குக் கிடைக்கும் ஆதாரம் தலித் முன்னணி நபர்களுடனான சந்திப்பு. பல்வேறு இணையத் தளங்களில் ஆதாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிழல் படங்களில் தலித் முன்னணி நபர்கள் ஞானசார தேரருடன் புன்னகைபூக்க அருகருகே நிற்பதைக் காணலாம். ஆக, இலங்கை அரசுடன் ‘இணக்க’ அரசியல் நடத்தும் குழுக்கள் துறவிக் குண்டர்களின் கண்களில் பட்டுள்ளன என்பது இங்கு தெளிவாகின்றது. இதற்கு முன்பதாக நோர்வேயில் சந்தித்தவர்களின் பட்டியலில் இனப்படுகொலைக்கால சமாதானத் தூதர் எரிக் சோல்கையிமின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரச சார்புக் குழுக்கள் நோர்வேயின் வழிநடத்தலில் பொதுபல சேனாவுடன் புதிய வலையமைப்பை தோற்றுவிப்பதற்கான உரையாடலில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. பொதுபல சேனாவுடனான இச் சந்திப்புக் குறித்து தலித் முன்ணணி இன்றுவரைக்கும் மூச்சுவிடாமலிருப்பது சந்தேகங்களை உறுதிப்படுத்துகின்றது.

paris_pro_lankan_tamils
பாரிசில் நடைபெற்ற ‘இணக்க அரசியல்’ குழுக்களின் ஒன்றுகூடல்

தவிர, தெற்கு முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் அளுத்கமவில் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், புலம் பெயர் நாடுகளில் அதே அரசசார்புக் குழுக்களும், ‘இணக்க அரசியல் மேதைகளும்’ முஸ்லிம்களுக்கு ஆதரவான போராட்டங்களைக் கையகப்படுத்திக்கொண்டனர். குறிப்பாக தலித் முன்னணியின் நட்பு வடத்திற்குள் உள்ளடங்கியுள்ள நபர்களே இப் போராட்டத்தை நடத்தினர்.

இக்குழுக்களின் இடைவெட்டுப் புள்ளியில் காணப்படும் பலரை இதற்கு முன்பதாகப் பாரிசில் நடைபெற்ற தமிழர்களின் ஒன்றுகூடலிலும் காணக்கூடியதாக உள்ளது. புதிதாக முளைத்த ஜனநாயக் காளான்களுக்கும், இணக்க அரசியலுக்கும் பொது பல சேனாவிற்கும் என்ன தொடர்பு?

இலங்கைப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக இஸ்லாமியத் தமிழர்களையும், வடகிழக்குத் தமிழர்களையும் கூட்டிணைவிற்கு வரமுடியாமல் தடுக்கும் ‘இணக்க அரசியல் லிமிட்டட்’ களின் ஊடான சதி வேலை நடைபெறுகிறது எனச் சந்தேகிப்பதில் என்ன தவறிருக்க முடியும்?

இறுதிப்பகுதி அடுத்த வாரம்…

முன்னைய பகுதி:

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்

http://lankacnews.com/sinhala/wp-content/uploads/2013/05/Mahamithawa-Himi.pdf

http://www.norway.lk/News_and_events/News/Statement-regarding-the-alleged-connection-between-Bodu-Bala-Sena-and-Norway/#.U73J4fldV1Y

http://www.silumina.lk/punkalasa/20110515/_art.asp?fn=ar11051513

http://www.asiantribune.com/node/62223

https://www.linkedin.com/in/dilanthe

One thought on “பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)”

Comments are closed.