மதிப்புக்குரிய நித்தியானந்தன் அவர்களுக்கு : அசோக் யோகன்

nithiலண்டனில் நடந்த புத்தக நிகழ்வில் , ‘பொதுவெளியில்’ அரசியல் அற்ற, மலினத்தனமான வார்த்தைப் பிரயோகங்களினால் என்னை நீங்கள் இகழ்ந்துரைத்துள்ளீர்கள்.

இச் செயல், எனக்கு வேதனை அளிப்பதன் நிமித்தம், இந்த பகிரங்க கடிதத்தை உங்களுக்கு எழுதவேண்டி ஏற்பட்டது. மன்னிக்கவும்.

நாங்கள் ; நாம் வாழும், இந்த ஐரோப்பிய சூழலில் உள்ள சில முதலாளித்துவ ஜனநாயகப் பண்புகளைக்கூட,
இன்றுவரை ,நாம் கற்றுக்கொள்ள மறந்துவிடுகின்றோம். இன்னும் எமது நிலமானிய சிந்தனைகளோடே இங்கும் வாழ முயல்கின்றோம்.

எவ்வாறு எதிர் நபர் மீது எதிர்வினை ஆற்றுவது, உரையாடல்களைத் தொடர்வது, எத்தகை வார்த்தைப் பிரயோகங்களை தவிர்ப்பது, கருத்துரிமைச் சுதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றெல்லாம் நாம் அக்கறை கொள்வதே இல்லை.

இன்னும் நாம் மற்றவர்களை புண்படச் செய்யும், அவமானமுறச் செய்யும் ,அவதூறு செய்யும் கொடுந்தமிழ் நிந்தனைச் சொற்களையே, குடும்பத்திலும், பொதுவெளியிலும் உபயோகப்படுத்துகின்றோம்.

எமது கல்வி இவற்றை வெற்றிகொள்ள முடியவில்லை. எமது ஆங்கிலப் புலமை, ‘பாலியல் நிந்தனைச் சொற்களை ‘ஆங்கிலத்தில் திறம்பட உரைத்து ,மற்றவர் மனதை புண்படுத்த மாத்திரமே எமக்கு உபயோகமாகி நிற்கின்றது.

யோசித்துப்பாருங்கள் :

கைலாசபதி
கைலாசபதி

உங்கள் வாழ்க்கையில் எத்தனை பேரை நீங்கள் இழிவுபடுத்தியுள்ளீர்கள்- அவமானப்படுத்தியுள்ளீர்கள்.
பேராசிரியர் கைலாசபதி, சிவத்தம்பி, சிவசேகரம் ,சேரன், யமுனா ராஜேந்திரன், ஓவியர் கிருஸ்ணராஜா, லண்டன் அவைக்காற்றுக்கழகம் பலேந்திரா, சரிநிகர் பத்திரிகை நண்பர்கள், கி.பி.அரவிந்தன், (அவர் காலமான பிற்பாடு சமீபத்தில் அவரைப் பற்றி) இப்போது இவ் வரிசையில் நாங்கள்…. (இப் பட்டியல் முழுமை அல்ல)

அவதூறு செய்யும், அவமானப்படுத்தும் விடயங்களில் நீங்கள் புத்திசாலியாகவும், சாதுரியமாகவும் நடந்துகொள்வீர்கள். இவைகள் எதனையும் எழுத்தில் வைக்க மாட்டீர்கள். கூட்டங்கள், சந்திப்புக்கள் உரையாடல், நிகழ்வுகள் போன்ற பொது வெளிகளை “அழகாக ” பயன்படுத்திக் கொள்வீர்கள். இதற்காக உங்கள் திறமையை பாராட்டியே தீரவேண்டும்.

எமது விடுதலை அமைப்புக்களிடையில் ஒற்றுமை – ஒருமைப்பாடு நிலவிய ஆரம்ப காலங்களில் ,இயக்க முரண்பாடுகளை கூர்மைப்படுத்தியதில், உங்களின் பங்களிப்பு மிகையானது என்றால், அக் கூற்றில் பிழையில்லை என்பதை, நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகின்றேன் !

சுந்தரம் படுகொலையில் இருந்து நாம் இதனை தொடங்கலாம்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்க தோழிகளை “செந்தோழிகள்” என இச் சொல்லை நக்கல் தனமானதாக, இழிவுச் சொல்லாக ஆக்கிய பெருமை உங்களையே சாரும் என்பதில் பொய் இருக்க முடியுமா?

நீங்கள் எப்பொழுதும், எக்காலத்திலும் அரசியல் கோட்பாடு சார்ந்த விமர்சனங்களை வைத்த வரலாறு எம் மத்தியில் இல்லை.

நீங்கள் விரைவில் புத்தக நிகழ்வுக்கு ஒன்றுக்கு பாரீஸ் வருவதாக அறிந்தேன். லண்டன் புத்தக நிகழ்வில் நீங்கள் என்மீது வைத்த கருத்துக்களை இங்கும் வைப்பீர்கள் என எதிர்பார்கின்றேன். நானும் இப் புத்தக நிகழ்வில் சமூகம் அளிக்கின்றேன்.

இதில் சம்பந்தப்பட்ட நாங்கள் இருவரும் நேரில் சந்திப்பதன் நிமித்தம் இச் சந்திப்பை ஆரோக்கியமான உரையாடலாக மாற்ற முடியுமென நினைக்கிறேன்.

என் மீது எதன் அடிப்படையில் ,இவ்வாறான இழிவான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்தீர்கள் என்பதை நீங்கள் தெளிவுபடுத்துவீர்கள் என நம்புகின்றேன்.

என் பக்கத்தில் இருந்து முரண்பாடுகளை கூர்மைப்படுத்தக்கூடிய எத்தகைய சொற் பிரயோகங்களும் உபயோகிக்கப்பட மாட்டாதென்பதையும், தனிநபர் தாக்குதல் எதுவும் நடைபெறாது என்பதையும், என் உரையாடல், அரசியல் கோட்பாட்டு தளம் ஒன்றை நோக்கியே நகரும் என்ற உத்தரவாதத்தையும் நான் உங்களுக்கு வழங்குகின்றேன்.
உங்களைப் பொறுத்தவரை “அனைத்துச் சுதந்திரங்களும் உங்களுக்கே.”

உங்களின் புத்தக நிகழ்வு என்பதால், தீர்மானிக்கும் உரிமை உங்களானது. உங்களிடமிருந்து சாதமான
பதிலை எதிர்பார்க்கின்றேன்.

அன்புடன் அசோக்.
28.05.2015.