ஏறத்தாழ 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் விலங்குகள் போல எந்த உரிமையுமற்று கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் நாடு முழுவதும் தங்க வைக்கைப்பட்டுள்ளனர். ஏனைய நாடுகளில் அகதி உரிமை நிராகரிக்கப்பட்ட ஒருவருக்குக் கிடைக்கும் அடிப்படை உரிமைகள் கூட இந்த அகதிகளுக்குக் கிடைப்பதில்லை. இந்திய அரசும் அதன் தமிழ் நாட்டு ஏவலாளிகளும் மேற்கொண்டுவரும் சதி நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த ஈழ அகதி முகாம்கள் என்ற விலங்குப் பண்ணைகள். 1983 ஆம் ஆண்டு இலங்கை பேரினவாத அரச அதிகாரத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலையின் போதே தமிழ் நாட்டை நோக்கி முதல் தடவையாக ஆயிரக்கணக்கில் அகதிகள் படையெடுத்தனர்.
இலங்கை அரசைக் கையாள்வதற்கான ஒரு ஆயுதமாக அன்றைய இந்திராகாந்தி இந்திய அரசு அகதிகள் பிரச்சனையைக் கையாள ஆரம்பித்தது. தொடர்ச்சியாக நடைபெற்ற பேரினவாத ஒடுக்குமுறைகள் ஈழ அகதிகளை தமிழ் நாட்டை நோக்கி சாரிசாரியாக அனுப்பி வைத்தது.
ஏற்கனவே அகதி முகாம்கள் விலங்குப்பண்ணைகள் போன்று நடத்தப்படுகின்ற அதே வேளை ‘புலிகள்’ என்றும் புரட்சிக்காரர்கள் என்றும் சந்தேகிக்கப்படுகின்ற ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
முகாம்களில் இல்லாமல் வெளியில் தங்கியிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அருகாமை போலீசு நிலையத்தில் ஆஜராகி, தமது முகவரியைப் பதிய வேண்டும் என்றும், இவ்வாறு செய்யத் தவறுபவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, பின்னர் கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் 25.9.92 அன்று ஜெயலலிதா அரசு உத்தரவிட்டது. இவ்வாறு போலீசு நிலையத்தில் பதிவு செய்து பதிவு எண் பெறாதவர்கள் யாரும், வேறு நாடுகளுக்கு செல்லவும் இயலாது என்றும் இந்த உத்தரவு கூறியது.
அகதி முகாமில் உள்ள குழந்தைகள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு சத்துணவு வழங்கி வந்த தன்னார்வ நிறுவனங்களும், இலவச மருத்துவ சேவை, இலவச பாடப் புத்தகங்கள், கல்விப் பயிற்சி, சுயதொழில்களில் பயிற்றுவித்தல் போன்றவற்றை செய்து வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அகதி முகாம்களுக்குள் நுழையக்கூடாது என்ற உத்தரவை 2.5.93 அன்று ‘ஈழத் தாய்’ ஜெயலலிதா அரசு அரசு பிறப்பித்தது.
முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகள் வேலைக்குச் செல்வதென்றால் காலை 8மணிக்குச் சென்று, மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. முகாம்களில் உள்ளவர்களை வேறு முகாம்களில் உள்ள அவர்களது உறவினர்கள் யாரும் சந்திக்க வேண்டுமென்றால், தாசில்தார் மற்றும் கியூ பிரிவு போலீசின் எழுத்து பூர்வமான அனுமதியைப் பெறவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1991-96 காலத்திலான ‘சீமானின் ஈழத் தாய்’ ஜெயாவின் ஆட்சிதான் இந்தக் கணம் வரை தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், உரிமை பறிப்புகள் அனைத்துக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அதுதான் ஈழ அகதிகள் அனைவரையும் குற்றவாளிகளாகக் கருதி நடத்துவது என்பது அரசு நிர்வாகத்தின் இயல்பான நடைமுறையாகவே மாற்றப்பட்டு இன்று வரை தொடர்கிறது.
1996 – இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஈழ அகதிகளுக்கு மறுக்கப்பட்ட சில சலுகைகளை வழங்கிய போதிலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட போலீசு அடக்குமுறைகள், கண்காணிப்புகள் எதையும் அகற்றவில்லை. குறைக்கவுமில்லை. பார்ப்பன பாசிச அரசியலின் தாக்குதலால் நிலைகுலைந்து போன கருணாநிதி, “தான் ஈழ ஆதரவாளர் அல்ல” என்று நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் சந்திரிகா தொடங்கிய மூன்றாவது ஈழப்போரின் போது, கடற்கரையோரம் மிதவைச் சோதனைச் சாவடிகள் அமைத்து அகதிகள் தடுக்கப்பட்டனர். அகதிகளின் மீது அனுதாபம் கொண்டு அவர்களை அழைத்து வரும் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
இவ்வாறு தொடர்ச்சியாக ஈழ அகதிகள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்படுவதை இந்தியாவிலிருந்து ஈழம் பிடித்துத் தருவோம் என்ற கூச்சலிடும் அமைப்புக்கள் கண்டுகொள்வதில்லை. தமது முற்றத்திலேயே மனித குலத்தின் மீது நடத்தப்படும் மிருகத்தனமான தாக்குதல்களைக் கண்டுகொள்ளாத ஈழ ஆதரவாளர்களான சீமான், வை.கோ, நெடுமாறன் போன்ற வகயறாக்கள் கடல்கடந்து சென்று ஈழம் பிடித்துத் தருவதாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஈழ மக்களின் கண்ணீரையும் அவலங்களையும் வாக்குகளாகவும், சொத்துகளாகவும் மாற்றிக்கொள்ளும் ஈழ ஆதரவாளர்கள் போலி நம்பிக்கைகளை வழங்கி ஈழ மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தைப் பல ஆண்டுகள் பின் தள்ளினர்.
இன்று மற்றொரு ஈழ அகதி தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. வழமை போல ஈழ ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் போலிகள் ஆங்காங்கே முகம்காட்டி தமது இருப்பை உறுதி செய்துகொள்வார்கள்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அகதிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன் இன்று முகாமிற்கு சென்றுள்ளார்.
அப்போது ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவிச்சந்திரன் அங்கு வந்துள்ளார்.
தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவிச்சந்திரன் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அகதிகள் வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களை தடுக்க வந்த போலீசார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். தையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என்று கூறி, ரவிச்சந்திரன் உடலை எடுக்க மறுத்து, இலங்கை அகதிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழின உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் என்ற தலையங்களில் உலாவும் அரசியல் வியாபாரிகள் தம்மை தேர்தலில் பேரம் பேசும் கருவிகளாக வளர்த்துக்கொண்டுள்ளனர். தவிர சீமான் போன்ற வியாபாரிகளின் பார்வை இப்போது புலம்பெயர் நாடுகளை நோக்கியும் திரும்பியுள்ளது. ராஜபக்சவுடன் நேரடி வியாபாரத்தில் ஈடுபட்ட லைக்காவின் செல்லப்பிள்ளையான சீமான் தென்னிந்தியத் தேர்தலில் இன்று முக்கிய ஈழ ஆதரவு வேட்பாளர். வைக்கோ தனது தமிழ் உணர்வு வியாபாரத்தை விரிவு படுத்துகிறார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்டு ஏழு வருடங்கள் முடிவடைகிறது. அப்பட்டமான களியாட்டமாக மாறிவிட்ட நினைவு தின நிகழ்வுகளைத் தவிர வாழ்விழந்த ஏழை அகதிகளின் வாழ்விலும், ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்விலும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.