அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் இனப்படுகொலையை நடதத் துணைசென்றதன் பின்னர் இன்று போராளிகளையும் அரசியல் தொடர்புடையவர்களையும் அழித்து வருகிறது. இந்த நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கும் அவுஸ்திரேயாவிற்கும் பாதுகாப்பு அச்சுறுதல் வழங்கக் கூடியவர்கள் என்றும் பயங்கரவாதச் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என்றும் 42 அரசியல் அகதிகளை விசாரணையின்றி அவுஸ்திரேலிய அரசு அடைத்து வைத்திருக்கிறது.
புலிகளின் தலைமைமட்டத்தில் செயற்பட்ட பெரும்பாலானோர் இலங்கை அரசுடனும் ஏகாதிபத்திய அரசுகளுடனும் இணைந்து செயற்படும் நிலையில் அப்பாவிப் போராளிகள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள 42 பேரும் சிறிங்கா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அகதிகளுக்கான அந்தஸ்து என்ற நிலையை வழங்கியிருக்கின்றது. ஆனால் அதன்பின்னர் அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பானது இவர்களை அவுஸ்திரேலிய நாட்டுக்கு அல்லது சிறிலங்கா நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கருதி ஒரு மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் இவர்கள் அவுஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியவர்கள் என்ற அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டு நிரந்தரத் தடுப்புமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுள் சிலரின் தடுப்புக்காலம் ஐந்துவருடங்களை எட்டியுள்ளது.
விக்டோரியா மாநிலத்தின் மெல்பேணிலும் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் விலாவுட்டிலும் இப்போராட்டம் மாலை ஐந்து மணிக்கு இடம்பெற்றது.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளில் போர்க்குற்றம் என்ற அடிப்படையில் சில முன்னை நாள் போராளிகள் கைதாகியுள்ளனர் எனினும் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.